வாகனம் ஓட்டுகையில் அலைபேசி பேசும் வழக்கம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பெருமாள் கோயிலில் ஒரு கருத்தரங்கம் முடிந்து திரும்பி வரும் வழியில் வாலாஜாபாத்தில் ஒரு இளைஞன் பைக் ஓட்டிக் கொண்டு போனும் பேசிக் கொண்டு வந்தான். ஒற்றைக் கை சவாரிதான். அவன் கையிலிருந்து போன் தவறி விழ, அதைப் பிடிப்பதற்கான முயற்சியில் பேலன்ஸ் தடுமாறி அப்படியே பைக்கோடு கீழே விழுந்தான். எங்கள் காரை ஓட்டி வந்த தோழர் மெதுவான வேகத்திலேயே ஓட்டி வந்ததால் பிரேக் போட்டு நிறுத்தி விட்டார். வேகமாய் வந்திருந்தால் அந்த இளைஞன் மீது மோதுவது தவிர்க்க இயலாததாகி இருக்கும்.
பதினைந்து நாட்கள் முன்பாகக் கூட வேலூரிலும் இதே போன்ற காட்சியை கொஞ்சம் தொலைவில் இருந்தபடி காண நேரிட்டது.
நேற்று மீண்டும்.
சாகசக்காரர்களே, நீங்கள் மட்டும் விழுந்து அடி பட்டுக் கொண்டால் பரவாயில்லை. உங்கள் தவறால் மற்றவர்களின் உயிருக்கும் அல்லவா ஆபத்து வருகிறது?
வாகனத்தில் போகும் போது தொலைபேசியை தவிர்க்க முடியாத அளவிற்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் பேசுபவராகக் கூட இருக்கலாம்
அல்லது இந்தியா பாகிஸ்தான் மத்தியில் அமைதியை உருவாக்க மோடியோடோ அல்லது நவாஸ் ஷெரீபோடோ கூட பேசிக் கொண்டிருப்பீர்கள்
இந்த ஒற்றைக் கை சவாரிக்கு பதிலாக ப்ளூ டூத், ஹெட் போன் ஆகியவற்றையாவது பயன்படுத்தித் தொலையுங்களேன்.