Showing posts with label குடியரசுத்தலைவர். Show all posts
Showing posts with label குடியரசுத்தலைவர். Show all posts

Saturday, March 24, 2018

அசிங்கம் ஜனாதிபதிக்குத்தான்


அரவிந்த் கேஜ்ரிவாலை அசிங்கப்படுத்த நினைத்தது மோடி அரசு. 

அதற்காக அதன் எடுபிடி தேர்தல் ஆணையத்தை ஏவி விட்டது. ஆம் ஆத்மி கட்சியின் இருபது எம்.எல்.ஏ க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அனுப்புகிறார்.

பதவி நீக்கம் செய்வது முறையல்ல. எங்களுக்கு கொடுக்கப் பட்டது பொறுப்பு மட்டுமே தவிர அது ஒன்றும் ஆதாயம் தரும் பதவி அல்ல என்று முறையிட்டனர் அவர்கள். எங்களது தரப்பு வாதங்களை தலைமை தேர்தல் ஆணையர் செவி மடுக்கவே இல்லை. எனவே அவரது பரிந்துரையை ஏற்கக் கூடாது என்று குடியரசுத்தலைவரிடமும் சொல்ல முயற்சித்தார்கள்.

தன்னை குடியரசுத்தலைவராக்கியதற்கான விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் இருந்த அவரோ நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு  இருபது எம்.எல்.ஏ க்களின் பதவியை பறித்தார்.

இதோ, இப்போது டெல்லி உயர்நீதி மன்றம் அந்த உத்தரவு சட்ட விரோதம் என்று சொல்லி பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்கி விட்டது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஜனாதிபதி எடுத்த முதல் முக்கியமான முடிவே சட்ட விரோதம், ஜனநாயக விரோதம் என்றாகி விட்டது.

மோடி வகையறாக்களுக்கு வெட்கம், மான, ரோஷம், சூடு, சொரணை என்று எதுவும் எப்போதும் கிடையாது. எத்தனை பெரிய அசிங்கத்தையும் துடைத்துப் போட்டு விட்டு மீண்டும் அசிங்கப்பட தயாராகி விடுவார்கள்.

ஆனால் ஜனாதிபதி என்பவர் நாட்டின் முதல் குடிமகன்.

இவர்களின் ஆத்திரத்தில் அவசரத்தில் மதியிழந்து செய்த நடவடிக்கையால் அசிங்கப்பட்டது என்னமோ அவர்தான். 

இப்படி ஒரு இழிவு அவசியமா அவருக்கு?

திரு கே.ஆர்.நாராயணன் போல நல்ல ஜனாதிபதியாக செயல்பட இனிமேலாவது அவர் முயற்சிக்க வேண்டும்.


Friday, July 21, 2017

காந்தி சொன்னதுதான் - ஒன்னுமில்ல



இரண்டு தோழர்கள் இன்பாக்ஸில்  கேட்டார்கள்.

அலுவலகத்தில் இரண்டு தோழர்கள் நேரில் கேட்டார்கள்.

ராம் கோவிந்த் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

இந்தியா விடுதலை பெற்ற முதல் நாளான 15 ஆகஸ்ட் 1947 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு மகாத்மா காந்தி அளித்த பதிலையே அவர்களுக்குச் சொன்னேன்

"ஒன்னுமில்ல"

Monday, July 17, 2017

மீரா குமார் வென்றால் நல்லது




இந்த பதிவை எழுதும் வேளையில் குடியரசுத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் முடிந்துள்ளது.

வாக்குப் பதிவு விபரங்கள் முழுமையாக நாளை காலையில் தெரிந்து விடும். யாரெல்லாம் வாக்களித்தார்கள், யாரெல்லாம் ஒதுங்கி நின்றார்கள் என்ற விபரமும் தெரிந்து விடும். வாக்களிக்காதவர்கள் இரண்டு வகைப்படும். யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் ஒரு வகை. வாக்களிக்க சோம்பல்பட்டு வீட்டிலேயே இருப்பவர்கள். இவர்களே தேர்தல் மூலம் பொறுப்புக்கு வந்தவர்கள் என்பதுதான் கொடுமை. நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் எத்தனை பேர் செல்லாத ஓட்டுக்கள் போட்டார்கள் என்ற விபரம் விரைவில் தெரிந்து விடும்.

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

இது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவிதானே! யாராக இருந்தால் என்ன?

இப்படி பல குரல்கள் ஒலிக்கிறது.

ஆம். பல ஜனாதிபதிகள் இப்பதவியை அப்படி ஒரு அலங்கார பொம்மையாக மாற்றி விட்டு போயுள்ளனர். அரசியல் சாசனமும் குடியரசுத்தலைவருக்கு அவ்வளவு அதிகாரங்களைத் தரவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரத்தை வழங்கி உள்ளது.

ஆனால் குடியரசுத்தலைவர் பதவி என்பது வெறும் அலங்கார பொம்மை மட்டுமல்ல.

அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பு குடியரசுத்தலைவருடையதுதான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஜனநாயகப்பாதையிலிருந்து பிறழ்கிற போது தட்டிக் கேட்டு தடம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை குடியரசுத்தலைவருடையதுதான்.
அவரச நிலைக்காலத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் அக்கடமையிலிருந்து விலகியவராக திரு ஃப்க்ருதீன் அலி அகமது காட்சியளிக்க, பீகார் அரசை கவிழ்க்கும் முடிவை நிராகரித்ததன் மூலம் கடமையை சரியாக நிறைவேற்றியவராக திரு கே.ஆர்.நாராயணன் உயர்ந்து நிற்கிறார். குஜராத் பற்றி எரிந்த நேரத்தில் மத்தியரசை தட்டிக் கேட்டவரும் அவர்தான்.

மத்தியரசு என்ன சொன்னாலும் தலையாட்டக்கூடிய ஒரு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் ஆபத்தானது. அதிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஊறிப் போன ராம் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்படுவது மிகவும் அபாயகரமானது.

ஏற்கனவே மத்தியரசு வெறி பிடித்து அலைகிறது. ஆட்சியைத் தக்க வைக்க எந்த அளவிற்கும் கீழிறங்க தயாராக உள்ளது. தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுனர்கள் மூலமாக குதிரை பேர மோசடிகள் செய்து வருகின்றவர்கள். அவர்களின் கைப்பாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

வாய்ப்பு குறைவு என்று புள்ளிவிபரங்கள் சொன்னாலும்

மனம் என்னமோ சுயேட்சையாக செயல்படக்கூடிய திருமதி மீரா குமார் வெல்ல வேண்டும் என்றே விரும்புகிறது,

ஏனென்றால் இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரச் சூழலில் அதுதான் நாட்டிற்கு நல்லது.