Showing posts with label அரசியல் மேற்கு வங்கம். Show all posts
Showing posts with label அரசியல் மேற்கு வங்கம். Show all posts

Friday, February 2, 2024

தவெக : இப்படித்தான் சிவாஜியும் . . .

 



வார இதழ்கள் வாங்குவதை நிறுத்தி இரண்டாண்டுகளுக்கு மேலாகிறது. அதனால் ஜூனியர் விகடன் இதழ் நடிகர் விஜயை உசுப்பேற்றி விட்டதா என்று தெரியாது.

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனை உசுப்பேற்றியதில் அந்த இதழிற்கு ஒரு பங்கு உண்டு. எம்.ஜி.ஆர் இறந்த பின்னர் அதிமுக ஜெ.ஜா என்று இரண்டாக பிரிந்தது. சட்டசபையில் ஒரு பெரும் கலவரமே நடந்தது. ஜெ.ஜா இருவருக்குமே ஆதரவில்லை என்ற நிலையை ராஜீவ் காந்தி எடுத்ததால் ஆட்சி கவிழ்ந்து சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

 ராஜீவ் காந்தியின் நிலைப்பாட்டைக் கண்டித்து சிவாஜி கணேசன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களில் ஐவரும் அவரோடு வெளியேறினார்கள். அவர்களில் ஒருவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்று நினைவு, தென் காசி எம்.எல்.ஏ வெங்கடரமணன் என்பவரும் ஒருவர் என்று நினைவு.

 ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வராகும் அளவிற்கு ஆதரவிருப்பதாக அளந்து விட அவரும் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியை பரப்ப “என் தமிழ், என் மக்கள்” என்றொரு படமும் நடித்து வெளியிட்டார்.  அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட அந்த படம் படு மொக்கையாகி மூன்றாம் நாளே பெட்டிக்குள் முடங்கி விட்டது. பொள்ளாச்சியில் அந்த படத்தை நான் முதல் நாளே பார்த்தேன் என்பதும் அந்த மாலைக் காட்சியில் ஒரு ஐம்பது பேர் இருந்திருந்தால் அதிகம்.

 “என் தமிழ், என் மக்கள்” திரைப்படத்துக்கு ஏற்பட்ட கதிதான் தமிழக முன்னேற்ற முன்னணிக்கும் நேர்ந்தது. (என் மண், என் மக்கள் என்று சீன் போடுபவர் நிலைமை இன்னும் மோசமாகும் என்று யாரய்யா அங்கே சொல்வது?)

 ஜானகி ராமச்சந்திரனோடு கூட்டணி வைத்துக் கொண்டு போட்டியிட்ட அவரது கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் பரிதாபமாக தோற்றுப் போனார்கள். அநேகமாக சிவாஜியைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தார்கள்.  ஜானகி ராமச்சந்திரனே ஆண்டிப்பட்டியில் தோற்றுப் போனார். அவரது அணியில் வானளாவிய அதிகாரம் படைத்த பி.ஹெச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்.

 பாவம் சிவாஜி, அவரே திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளரிடம் தோற்றுப்போனார். ஜாதி ஓட்டை மனதில் கொண்டுதான் அவர் அங்கே போட்டியிட்டார். நான் படித்த திருக்காட்டுப்ப்பள்ளி திருவையாறு தொகுதிக்குள்தான் வருகிறது. என் நண்பர்களிடம் பின்னாளில் இது பற்றி கேட்ட போது அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

 திருவையாறு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தது பிரபுதான். அவர் வாக்காளர்களுக்கு பத்து ரூபாய் கொடுத்துள்ளார். தமிழ்நாடு முழுதும் பிரச்சாரம் செய்து விட்டு கடைசி இரண்டு நாட்கள்தான் சிவாஜி அங்கே போயுள்ளார். மகனே பத்து ரூபாய் கொடுத்தால் அப்பா இன்னும் அதிகமாக தருவார் என்று ஆவலோடு காத்திருந்த வாக்காளர்களை ஐந்து ரூபாய் கொடுத்து ஏமாற்றியதால் கடுப்பாகி விட்டனர் என்று நண்பர்கள் சொன்னார்கள்.

 எது எப்படியோ, ஒரே தேர்தலோடு தமிழக முன்னேற்ற முன்னணி முடிவுக்கு வந்தது.  டி.ராஜேந்தர், பாக்கியராஜ், கார்த்திக் கட்சிகளைப் பற்றியெல்லாம் எழுத என்ன இருக்கிறது! சரத்குமார் இன்னும் முதலமைச்சர் கனவோடு ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் விஜய் புதிதாக இணைகிறார். அவ்வளவுதான் . . .

 பிகு: ஜூவி உசுப்பேற்றி நாசமாகப் போன இன்னொருவர் பற்றியும் எழுத வேண்டும்.

 யார் அவர்?

 பொருத்திருங்கள்.

Saturday, December 17, 2011

மாற்றத்தின் பரிசு மரணம்!

   


மம்தாவின் பரிசு - சாராய சாவுகள் 


முப்பத்தி நான்கு வருட இடது முன்னணி ஆட்சியை
தோற்கடித்த மேற்கு வங்க மக்களுக்கு மம்தா அரசு
அளிக்கும் தொடர் பரிசுகள் - மரணம்தாம்.


முதலில் குழந்தைகள் மடிந்தார்கள்.


பின்பு இந்த ஆட்சி வர அடிப்படைக் காரணமாக
இருந்த  மாவோயிஸ்டுகளின் தலைவர் 
கிஷன்ஜியைக் கொன்று  தனது நன்றியை
காணிக்கையாக்கினார் மம்தா,


பின்பு மருத்துவமனை தீ விபத்தில் 
நோயாளிகள் மரணம். 


இப்போது கள்ளச்சாராய சாவுகள். 
முந்தைய   மருத்துவமனை சம்பவங்கள்
எதிர்பாராத நிகழ்வுகளாக இருந்திருக்கலாம்.   


ஆனால் மேற்கு வங்கத்தில் மம்தா 
ஆட்சி வந்த பிறகு திரினாமுல் கட்சியினரின்
முக்கிய தொழிலாக கள்ளச்சாராயம் 
மாறிப்போனது. 


அதற்கு விலையாக இதோ கிட்டத்தட்ட
இருநூறு பேர் இறந்து போய்விட்டனர்.


வேறு கட்சி ஆட்சியாக வரிந்து கட்டி
எழுதும் ஊடகங்கள் அவர்களின் 
தேவதையாக உள்ளதால் மம்தாதீதி 
பற்றி மவுனமாக உள்ளனர். 


ஆனால் வங்க மக்கள் அவரை 
மரண தேவதையாக பார்க்கத்
தொடங்கி விட்டனர்.