Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Sunday, December 18, 2022

இலக்கியத்தில இதெல்லாம் சாதாரணமப்பா . . .

 


புளிச்ச மாவு ஆஜான், சாரு நிவேதிதாவுக்கு இன்று விஷ்ணுபுரம் விருது கொடுப்பதை முன்னிட்டு

ஆஜானைப் பற்றி சாரு அன்போடு எழுதிய ஒரு கட்டுரையை எழுத்தாளர் வினாயக முருகன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆஜான் புகழ் பரப்பும் அக்கட்டுரையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆஜானின் லேட்டஸ்ட் பொய் மற்றும் வன்மம் குறித்த இன்னொரு பதிவு வேறு ட்ராப்டிலேயே உள்ளது. 

மம்மி ரிடர்ன்ஸ் 3 : சாரு நிவேதிதா
கெடுவான் கேடு நினைப்பான் என்று எழுதியிருந்தேன். அதன் பலனை ஐந்தே நாட்களில் ஜெயமோகன் அனுபவித்ததை நீங்கள் அறிவீர்கள்.
ஜெயமோகன் இணைய தளத்தில் எழுதியிருந்ததை ஆனந்த விகடன் மறு பிரசுரம் செய்தது. இதற்காக விகடனைக் கண்டித்தும், ஜெயமோகனுக்கு ஆதரவாகவும் சிலர் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றனர். இவர்களில் யாரும் ஜெயமோகன் தனது சக எழுத்தாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியபோது தமது சுண்டு விரலைக் கூட உயர்த்தாதவர்கள் என்பது கவனிக்கத் தக்கது. அவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் அக்கடிதத்தில் எனது 30 ஆண்டுக் கால நண்பரான நாஞ்சில் நாடனின் பெயரும் இருக்கக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந் தேன். ஏனென்றால், ஜெயமோகன் என்னைப் பற்றிச் செய்திருந்த அவதூறுகளால் நான் அடைந்த உடல் மற்றும் மன நலக் கேடுகளைப் பற்றி அவ்வப்போது அவருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். அச் சமயத்தில் அவரும் மிகுந்த துயரத்தில்தான் இருந்தார். ஆம்ஸ்டர்டாம் சென்றிருந்த அவரது இளைய சகோதரருக்கு (வயது 45) மாரடைப்பு வந்து ஆபத்தான கட்டத்தில் இருந்தார். இது பற்றி ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தன. நாஞ்சில் நாடனுக்கு மிகப் பெரிய பலமாகவும், உறுதுணையாகவும் இருந்தவர் அவரது இளைய சகோதரர். ஆனால் இரண்டொரு தினங்களில் அவர் ஆம்ஸ்டர்டாமிலேயே இறந்து போன செய்தி கிடைத்தது.
இது பற்றி எனக்கு ஏராளமான குழப்பங்களும் மன உளைச்சலும் ஏற்பட்டது. என்னுடைய நண்பர் ஒருவர் லண்டனில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். இப்போது சென்னையில் குடியேறி விட்டார். அவர் வயது 40க்குள் இருக்கும். அவர் சொன்னார், இந்தியா வந்த பிறகுதான் அவர் வயதுக்கும் கீழானவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதாக.
இது ஏன் ? வெளி நாட்டினர்தான் அதிக அளவில் மாமிசமும், மிருக கொழுப்பினாலான சீஸும் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் இந்தியர் அளவுக்கு மாரடைப்பினால் பாதிக்கப் படுவதில்லை. அப்படியே வந்தாலும் 60 வயதுக்கு மேல்தான் வருகிறது.
மேலும், நம்மவர்கள் குளிர் நாடுகளுக்கு குளிர்காலத்தில் செல்லும்போது அவர்களுக்கு மாரடைப்பு வருவது ஏன் ? மாஸ்கோவில் மாரடைப்பு வந்து காலமான இயக்குனர் ஜீவா ஒரு சமீபத்திய உதாரணம். இப்போது நாஞ்சில் நாடனின் தம்பி. இதற்கிடையில் அவர் மது அருந்தும் பழக்கமோ, புகைப் பழக்கமோ இல்லாதவர்.
இது நடந்து சரியாக ஒரு வாரம் கழித்து ஒரு நாள் அதிகாலையில் நாஞ்சில் நாடனிடமிருந்து இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது. “ என் மனைவியின் தம்பி ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட்டான். வயது 40. “
அன்றைய தினம் மதியம் நானும், நிக்கியும், மகாதேவனும் பார்க் ஷெரட்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நான் வழக்கம் போல் கோக். நிக்கி இப்போது பகலில் மது அருந்துவதை விட்டு விட்டதால் அவர் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மகாதேவன் ரமனோவ் வோட்கா.
அப்போது மகாதேவன் ஒரு செய்தியைச் சொன்னார். அவரது உறவினர் ஒருவர் சாலை விபத்தில் இறந்து விட்டதாக. வயது இறந்த ஊர் போன்ற விபரங்களெல்லாம் நாஞ்சில் நாடன் சொன்னதை ஒத்திருக்கவே, அது பற்றிக் கேட்டபோது தான் தெரிந்தது – நாஞ்சிலும் மகாதேவனும் நெருங்கிய உறவினர்கள் என்பது.
விபத்தில் இறந்தவர் மோட்டார் பைக்கில் இரவு பதினோரு மணிக்கு மேல் லேசாக மது அருந்தி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு பால் வேன் அடித்து விட்டதாகச் சொன்னார் மகாதேவன். அநேகமாக ஹெல்மெட்டும் அணிந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன். இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகள் மக்களின் அஜாக்கிரதையினால் நிகழ்பவை என்பது என் கருத்து.
அன்றைய தினம் தான் விகடனுக்குக் கண்டனக் கடிதம் நாஞ்சில் நாடன் கையெழுத்துடன் வெளியாகியிருந்தது. மிகுந்த விசனத்துடன் நாஞ்சிலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் :
” இத்தனை துர் மரணங்களுக்கிடையில் ஜெயமோகனுக்கு ஆதரவாக கையெழுத்திட்டது எப்படி ? என்னை அவர் ‘ annihilate ‘ செய்ய முயற்சிப்பது பற்றியெல்லாம் உங்களுக்குக் கவலையே இல்லையா ? “
இதற்கு நாஞ்சில் அனுப்பிய குறுஞ்செய்தி : “ நான் இது பற்றியெல்லாம் யோசிக்கும் நிலையிலேயே இல்லை. “
இப்போது புரிகிறதா ஜெயமோகனின் கள்ளத்தனம்? எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம். சாலைகளில் விபத்து ஏற்படுவதைப் பார்த்திருப்பீர்கள். லாரிக்கு அடியில் இரு சக்கர வாகனத்தினூடே நசுங்கிக் கிடப்பான் ஒருவன். நீங்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று அவன் கையில் சற்று முன்பு நீங்கள் பார்த்த மோதிரமும், கைக்கடியாரமும் காணாமல் போயிருக்கும்.
ஜெயமோகன் நாஞ்சில் நாடனின் விஷயத்தில் செய்திருப்பதும் இதேதான். ஒருவர் தன் இளவயது தம்பியையும், தன் இளவயது மைத்துனனையும் ஒரே வார கால இடைவெளியில் மிக குரூரமான முறையில் இழந்து தன் சுய நினைவிலேயே இல்லாமல் ஆழ்ந்த துக்கத்தில் கிடக்கும் போது அவருடைய பெயரை கண்டனக் கடிதத்தில் பயன்படுத்திக் கொள்ளும் நபரை என்னவென்று சொல்லுவது ? அதற்குத்தான் அந்த கைக்கடிகாரம், மோதிரம் உதாரணத்தைக் கூறினேன்.
களவாணித்தனம் செய்யும்போது மற்றவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வது ஜெயமோகனுக்கு இது ஒன்றும் புதிதல்ல . ஏற்கனவே பலமுறை அவர் இப்படிச் செய்து இருக்கிறார் . மனுஷ்ய புத்திரனை நொண்டி நாய் என்று திட்டி கதை எழுதும் போது அவர் தன் பெயரில் எழுதவில்லை ; வேறொரு நபரின் பெயரையே பயன்படுத்திக் கொண்டார். மனோரமா மலரிலிருந்து இசை கட்டுரையைத் திருடி எழுதிய போது தன் மனைவியின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டார்.
மேலும், நாஞ்சில் நாடன் சற்று வெகுளியான மனிதர் என்பதால் அவருடைய பெயரை இதுபோல் வேறொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தியவர் இந்த ஜெயமோகன்.
இதன் விபரம் அறிய நாம் சற்றுப் பின்னே போக வேண்டும்.
” R.P. ராஜ நாயஹம் சுமார் 25 ஆண்டுகளாக எனது நண்பர். அவர் எழுதி காலச்சுவடுவில் வெளியான “ ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை “ என்ற அவரது கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன்.
சொல் புதிது 8ல் சாரு நிவேதிதாவுக்கு எச்சரிக்கை செய்து ‘ சாரு தொடங்க வேண்டிய புள்ளி தளைய சிங்கத்தின் ‘ தொழுகை ‘ கதைதான். ஆனால் அபாயமிருக்கிறது. தளையசிங்கம் அவசரமாக அடித்துக் கொல்லபட்டார் என்று ஜெயமோகன் எழுதியதை படித்தபோது அதிர்ச்சி ஏற்பட்டது. 1971ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கு நன்னீர் கேட்டு போராட்டம் நடத்தியதற்காக போலீஸாரால் தளையசிங்கம் தாக்கப்பட்டார். 1972ம் ஆண்டு ‘ மெய்யுள் ‘ என்ற கருத்தாக்கத்தை நிறுவுகிறார். 1973ம் ஆண்டு சில மாதங்கள் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகி மரணமடைகிறார். இது தளையசிங்கத்தின் ‘ பிரபஞ்சயதார்த்தம்‘ என் ற கட்டுரையில் சுந்தரராமசாமி நமக்குத் தரும் தகவல். 22.02.2001 அன்று திருச்சி வந்திருந்த சுந்தரராமசாமி அவர்களிடன் நான் நேரில் இதுபற்றிக் கேட்டபோது தளையசிங்கத்தின் சகோதரர் மு.பொன்னம்பலம் கொடுத்த தகவலைத்தான் எழுதியதாக கூறுகிறார். இந்த விபரங்களைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு நான் கடிதம் எழுதுகிறேன். அதில் தளையசிங்கம் பாலியல் கதைகளுக்காக அடித்துக் கொல்லப்பட்டார் என்ற தொனியும் அவருடைய விமர்சனத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி எழுதுகிறேன். ஜெயமோகன் இதற்கு ஐந்து பக்கத்துக்கு பதில் எழுதுகிறார். என்னுடைய கடிதம் சொல் புதிது 9-ல் விளக்கங்களுடன் பிரசுரிக்கபட இருப்பதாக அதில் குறிப்பிடுகிறார்.
சொல் புதிது 9-ல் தளையசிங்கம் பற்றிய என் கடிதம் மிகவும் சுருக்கப்பட்டு எழுத்துப் பிழைகளுடன் (தலையசிங்கம்) ஒரு பாமரனின் கடிதம் போல் பிரசுரிக்கப்பட்டு விளக்கம் அடுத்த இதழில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தளைய சிங்கத்தின் தொழுகை, கோட்டை கதை நகல்களும் தளையசிங்கத்தின் கருத்துகளும் ஜெயமோகனின் நெடுங்கட்டுரை ஒன்றும் கொரியரில் அனுப்பபட்டு கிடைக்கிறது. கதைகள் பேராசிரியர் பூர்ணசந்திரனிடம் ‘புது யுகம் பிறக்கிறது ’ கேட்டு வாங்கிப் பெற்று ஏற்கனவே படித்திருக்கிறேன். போர்ப்பறை, மெய்யுள், முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி ஆகிய நூல்களையும் பல ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்கிறேன். என்றாலும் அனுப்பப்பட்டவைகளைக் கற்றுத் தேர்கிறேன். ஜெயமோகனின் நெடுங்கட்டுரை நிறைய ஜார்கன்ஸ், மேற்கோள்கள், தான் படித்த பல விஷயங்களின் சாரம் எல்லாமாகச் சேர்ந்து தளையசிங்கம் பெயரை எடுத்து விட்டு நீட்சே, ஹெகல், சார்த்தர், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ என்று யார் பெயரைப் போட்டாலும் பொருந்த்தக் கூடிய அளவுக்கு ” க்ராஃட்மேன்ஷிப் ” . தளையசிங்கம் பற்றிய சுந்தரராமசாமியின் கட்டுரை பற்றி ‘ இலக்கிய வம்புகளின் அடிப்படையில் மதிப்பிடும் முயற்சி ‘ என்றும் ‘ செயற்கை இறுக்கம் நிறைந்த நடை ‘ என்றும் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். “
மேற்கொண்டு R.P. ராஜ நாயஹகத்தின் கட்டுரை ஊட்டியில் தளையசிங்கம் கருத்தரங்கில் நடந்த பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்கிறது.
விஷயத்தின் ஆதிமூலம் என்னவென்றால் ஜெயமோகன் என்னையும், மு. தளையசிஙக்த்தையும் ஒப்பிட்டு நான் மு.த. மாதிரி எழுதினால் அடித்துக் கொல்லப்படுவேன் என்று சாடையாக எழுதியதுதான். ஜெயமோகன் கூறுவது போல் மு.த. அடித்துக் கொல்லப்படவில்லை என்பதை ராஜநாயஹம் தொடர்ந்து சில கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் மூலம் நிரூபித்ததும் தனது அடியாள் கோஷ்டி மூலமாக ராஜ நாயஹத்தை அவதூறு செய்து அடக்கிவிட்டு தான் சொன்ன பொய்யையும் மூடி மறைத்து விட்டார். ஆனால் விவாதத்தின் எந்த இடத்திலும் இவ்விவாதத்தின் அடி ஆதாரமான என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் ஜெ.
ொதுவாகவே தமிழ்ச் சமூகம் சராசரிகளைக் ( mediocre ) கொண்டாடும் ஒரு சமூகம். இதற்குத் தமிழ் எழுத்தாளர்களும் விதி விலக்கு அல்ல. உதாரணமாக, சராசரி எழுத்தாளர்களான தி.ஜானகிராமன், புதுமைப் பித்தன், சுந்தர ராமசாமி போன்றவர்களைத்தான் இவர்கள் கொண்டாடுவார்கள்; மெளனி, நகுலன், பா. சிங்காரம், அசோகமித்திரன் போன்றவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஈழத்து தமிழ் எழுத்தாளர்களை அணுகும்போதும் இதே நிலைதான். ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரை மு.தளையசிங்கம் ஒரு சராசரி. அவ்ரை விட ‘எஸ்.பொ ’ வின் ஆரம்பகாலத்து எழுத்துக்கள் மிக வீரியமானவை. ‘ ? ‘ என்ற அவருடைய நாவலும் அதில் ஒன்று. மு. தளையசிங்கத்தின் மேற்படி ‘ தொழுகை ’ கதை என் பார்வைக்கு வந்தது. என் சுண்டு விரல் நகத்தின் விளிம்பைக் கூட அந்தக் கதையால் தொட்டுவிட முடியாது. சந்தேகமிருப்பவர்கள் என்னுடைய ‘ கர்னாடக முரசும் நவீன இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் ’ , ‘ the joker was here’ , நேநோ, மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் போன்ற சிறுகதைகளை வாசித்துப் பார்க்கலாம்.
இது ஒரு பக்கமிருக்க, மேற்படி குற்றாலம் கருத்தரங்கு பற்றி ராஜ நாயஹம் எழுதிய கட்டுரை காலச்சுவடுக்கு அனுப்பி வைக்கப் பட்ட போது, நடந்த சம்பவங்கள் பற்றி அப்போது காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்ய புத்திரன் காலச்சுவடில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
‘ ராஜ நாயஹத்தின் கட்டுரை காலச்சுவடிற்கு வந்த ஓரிரு தினங்களில் பல தொலைபேசி அழைப்புகள் . வெகு ஜன் ஊடகங்களில் ஒரு செய்தியைக் கொல்வதற்கான முயற்சிகள் பற் றி எனக்குத் தெரியும். என்னுடைய பத்தாண்டு காலக் காலச்சுவடு ஆசிரியர் பொறுப்பில் ஒரு இலக்கியக் கூட்டம் பற்றிய பதிவு, தபாலில் வந்து சேர்ந்தவுடனயே அதைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சி என்பது புது அனுபவம் “
ஜெயமோகன் பற்றி மனுஷ்ய புத்திரன் அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடுவதாவது;
‘ ஜெயமோகனுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது ஒரு விதத்தில் இலக்கியத்தில் தார்மீக நியதிகளை மீட்பதற்கான செயல்பாடே ஆகும் ’ ‘ ஜெயமோகனின் செயல்பாடு ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியின் செயல்பாடுகளை விடக் கீழானது. 50 ஆண்டுகால நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வளவு நேர்மைக் குறைவாக ஒரு நபர் செயல்பட்டதில்லை ‘
மேற்படி தளையசிங்கம், குற்றாலம் கருத்தரங்கம் குறித்து நடந்த ஏகப்பட்ட விவாதங்களில் கலந்து கொண்ட நாஞ்சில் நாடன் திண்ணை இணைய இதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இது பற்றி 11.07.2004 அன்று திருப்பூரில் வைத்து நாஞ்சிலிடம் ராஜ நாயஹம் நேரடியாகக் கேட்டபோது, ” திண்ணைக்கு நான் அனுப்பிய கட்டுரையை ஜெயமோகன் திருத்தி எழுதினான். அதற்கு என்னிடம் ஒப்புதல் கடிதம் கேட்டான். நான் தர மறுத்து விட்டேன். இதனால் அவனோடு ஆறுமாதம் நான் பேசவில்லை. என்னை மன்னிச்சிக்கங்க. “ என்று சொல்லியிருக்கிறார் நாஞ்சில் நாடன். இப்போது 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாஞ்சில் நாடன் இதே ரீதியான பதிலைத்தான் என்னிடம் கூறுகிறார். ஆனால் இப்போதைய நிலை முன்னைவிட மிக மோசமானது. ஒரே வாரத்தில் இரண்டு குரூரமான மரணங்கள்.
சரி, தன்னுடைய பெயரை இவ்வளவு அருவருப்பான முறையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள ஜெயமோகனை நாஞ்சில் நாடன் ஏன் அனுமதிக்கிறார் ?
இப்பிரச்ச்னை பற்றி திண்ணைக்கு காலச்சுவடு கண்ணன் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி :
“ ஆர்.பி. ராஜ நாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன் “
வழக்கம்போல் ஜெயமோகன் இதற்கு எந்தப் பதிலும் எழுதவில்லை.
மு.தளையசிங்கத்தையும், என்னையும் ஒப்பிட்டு ஜெயமோகன் சொல் புதிதுவில் எழுதிய விவகாரம் நான்கு வருடங்களாக எங்கெங்கோ திசை மாறி, உரு மாறி, எந்த இடத்திலும் என் பெயர் பிரஸ்தாபிக்கப்படாமல் கடைசியில் மனுஷ்ய புத்திரனை ‘நொண்டி நாய் ’ என விளித்து கதை எழுதியதோடு ‘ஜெர்க் ’ ஆகி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் நடந்த மற்றொரு விஷயமும் சுவாரசியமானது. மேற்படி தளையசிங்கம் சம்பந்தமான ஊட்டி கருத்தரங்கம் ஊட்டியிலுள்ள ஒரு இந்துத் துறவிகள் மடத்தில் நடந்ததால்தான் மனுஷ்ய புத்திரன் தன்னைத் தாக்குகிறார்; ஏனென்றால் அவர் ஒரு முஸ்லீம் என்று எழுதினார் ஜெயமோகன்.
மிக மோசமான ஒரு முட்டாள்கூட மனுஷ்யபுத்திரனை முஸ்லீம் என்று தாக்க மாட்டான். அவரைத் தாக்க வேண்டுமானால் ஒருவருக்கு கிடைக்ககூடிய ஆயுதம் அவர் ஒரு காஃபிர்; ஒரு இந்துத்துவ சாயல் கொண்டவர் என்பதாகத்தான் இருக்குமே ஒழிய அவர் எந்தக் காலத்திலும் சிறிதளவு கூட இஸ்லாமிய அடையாளம் இல்லாதிருப்பவர். சமீபத்தில் கூட அவருடைய சென்னை இல்லத்தில் ஒரு விஷேசத்திற்குச் சென்றிருந்தபோது ஃபாத்திஹாவுக்குப் பதிலாக ÿ வைஷ்ணவப் பெண் ஒருவர் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலிருந்தே ஒரு பாசுரத்தைப் பாடிக்கொண்டிருந்தைக் கேட்டேன் ( இந்த டிப்ஸ் எல்லாம் இனியாவது மனுஷ்ய புத்திரனைத் தாக்க நினைப்பவர்கள் இப்படி படு முட்டாள்தனமாக செயல்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால் தான் தருகிறேன்)
இந்த தளையசிங்கம் – ஜெயமோகனின் விவகாரம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ராஜ நாயஹம் “ பிரச்சனை உங்களை முன் வைத்து ஆரம்பித்திருக்க நீங்கள் ஏன் வாயே திறக்க மாட்டேன் என்கிறீர்கள்? “ என்று கேட்டார்.
ராஜ நாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம்தான் கேட்பது வழக்கம். ஆனால் அவர் எதுவும் எழுதுவதில்லை. அப்படியிருக்கும்போது ஏன் இந்த எலிகளோடு பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதே அவருடைய மேற்படி கேள்விக்கு என் பதிலாக இருந்தது.
“ எலிகளோடு போட்டியிட்டால் நீ அந்தப் பந்தயத்தில் வெற்றியே அடைந்தாலும் எலிப் பந்தயத்தில் கலந்து கொண்டவன் என்ற பெயரே உனக்குக் கிடைத்து நீயும் ஒரு எலியாகவே அடையாளம் காணப்படுவாய் “ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நான் எலிகளோடு பந்தயம் கட்ட விரும்பவில்லை. எனவேதான் இப்பிரச்சனையில் 5 ஆண்டுகளாக நான் வாய் திறக்கவில்லை.
இப்போது (இலக்கியத் தொடர்பான கடிதங்களைப் பிரசுரிப்பதில் தவறில்லை என்பதால்) இது தொடர்பாக ஜெயமோகன் ராஜ நாயஹத்துக்கு எழுதிய கடிதத்தை தருகிறேன்.
R. P. ராஜ நாயஹத்திற்கு ஜெயமோகன் எழுதிய கடிதம்
தக்கலைதபால் முத்திரை 28.02.2002
அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. சொல் 10 இதழ் அச்சில் உள்ளது.
மு. தளையசிங்கம் குறித்த என் கருத்தை சற்று பிழையாக புரிந்து கொண்டு விட்டீர்கள். அது என் தவறுதான்.
நான் எழுதியது இதுதான். ‘ கலக ’ ‘ பாலிய ’ எழுத்துக்களை ஒரு சவாலாக நம் சமூகம் நினைப்பது இல்லை. கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகங்கள் போன்றதல்ல இந்து சமூகம். கருத்தியல் கலகங்களை ‘விழுங்கி ’ செரித்துக்கொள்வதை ஒரு கலையாக 2000 வருடங்களாக அது பயின்றுள்ளது. சாங்கிய ரிஷியான காலர் பிராமணர்களால் கபிலவஸ்துவில் குளிக்கும் படித்துறையில் கல் எறிந்து கொல்லப்பட்டார். பிறகு கிருஷ்ணரே, ” முன்பிறப்பில் நான் கபிலன் “ என்று கூறினார். விஷ்ணுபுரம் நாவலில் முக்கிய விவாதமே இந்த கருத்துப்பயணம் குறித்து தான்.
சாருவின் கலகம் போன்றவற்றை பொறுக்கி, கிறுக்கு என்று கூறி சமூகம் ரசிக்க ஆரம்பித்து விடும். ஓர் எல்லையில் ஞானியாகவும் ஆக்கலாம்.
பாலியல் எழுத்து இங்கு கலகமே அல்ல. கலகம் வேறு வகையானது. அதற்குப் பின்னால் ஒரு ஆய்வுப் பார்வை உண்டு. அப்பார்வை மூலம் அது மைய நரம்புகளை தொட்டு எழுப்பும். அப்போது சமூகத்திற்கு வலிக்கும். பெரியார் தமிழகத்தில் மதிக்கப் பட்டார், ரசிக்கப் பட்டார். அயோத்திதாசப் பண்டிதர் மறக்கடிக்கப்பட்டார்.
அதாவது சாரு குரைக்கும் நாய். அது கடிக்காது என அனைவருக்கும் தெரியும். தளையசிஙக்ம் கடித்த நாய். இதுவே வித்தியாசம். சாரு ஒருபோதும், மிக எளிய முறையில் கூட, தன் எல்லைகளை மீறியவரல்ல. வெறும் கவன ஈர்ப்பு மட்டுமே அவரது இலக்கு.
மு.த. ‘பாலியல் ’ கதைகளை மட்டும் எழுதியவரல்ல. அவரது பல கதைகளில் பாலியல் இருந்தாலும் அவற்றின் ‘கலகம் ’ பாலியல் இல்லை. உதாரணமாக கோட்டை கதை கற்பு என்ற கருதுகோளை நிராகரிக்கிறது. அதிரடியாக அல்ல; நம்பும்படியாக, கலைப்பூர்வமாக. தொழுகை கதையில் ஓதுவாரான சைவப்பிள்ளையின் காதல் மனைவி – அவர் மீது மிகுந்த பிரியம் உடைய நிலையிலும் – காம உந்துதலுக்கு உட்பட்டு ‘ கரிய சானானுடன் ‘ உறவு கொள்கிறாள். பக்கத்து அறையில் அவளது குழந்தைகள் தூங்க. ஒலிப்பெருக்கியில் கணவனின் குரலில் கோயிலில் திருப்பாவை ஒலிக்க அவள் அவன் ஆண்குறியில் சிவலிங்கத்தைக் காண்பதாக எழுதுகிறார் மு.த. ஈழத்து வெள்ளாள / சைவ சூழலில் இது எங்கே போய் தைக்கும் என்று ஊகிக்கலாம். இதையே safe ஆகவும் எழுதலாம் – சாரு போல. கதா பாத்திரங்களுக்கு சமூக குழும அடையாளங்கள் இல்லாமல், மத சாதி விஷயஙகளை தொடாமல் எழுதலாம். சாரு sensitive ஆன விஷயங்களை தொடுவதே இல்லை என்பதைக் கவனிக்கவும். இங்கு தேவர் தலித் மோதல்கள் நடந்தபோது ஒருவர் கூட அவ்விஷயத்தை கதைக் கருவுக்குள் கொண்டுவரவில்லை. சொந்த ஜாதியை விமரிசித்து எழுதுவது ஓரளவுக்கு பிராமணர்களும் தலித்துகளும் மட்டும்தான். இங்கு கலகம் என்பதே இல்லை. கலகபாவனைகள் மட்டுமே உள்ளன. கலகம் ஒரு போதும் ‘முற்போக்காக ’ இருக்காது. அது ஆதிக்க அதிகாரத்தை எதிர்க்கும். அதே சமயம் அறிவுலகில் உருவாக்கப்படும் முற்போக்கு பாவனைகளையும், கெடுபிடிகளையும் எதிர்க்கும். இங்கே நம் கலகக்காரர்கள் ஒரு போதும் politically correct ஆன விஷயங்களை எதிர்ப்பதில்லை. மீண்டும் மு.த. விஷயம். வெறுமே எழுதிமட்டுமிருந்தால் ஒருவேளை ஈழத்து வெள்ளாள உலகம் அவரை வசைபாடி மட்டும் நிறுத்தியிருக்கும். ஆனால் தளையசிங்கம் கடிக்கவும் முற்பட்டார். தலித்துகள் பொதுக் குடி நீர் எடுக்கவும் ஆலயப் பிரவேசம் செய்யவும் நேரடியாகப் போராடினார். இவை குறித்து கனடா என். கெ. மகாலிங்கம் ( தளையசிங்கத்தின் இளைய தோழர்) என்னிடம் நிறையப் பேசியுள்ளார் (மு.பொன்னம்பலம் இக்காலத்தில் கொழும்பில் மாணவர்) வேளாளர்கள் தளைய சிங்கத்தை அவர் வேலை செய்த பள்ளிக்கு வந்து மிரட்டினார்கள். ஒரு போலீஸ் அதிகாரிக்கு பணம் தந்து அவரை கைது செய்து அடித்துக் கொல்லச்சொன்னார்கள். அவ்வதிகாரியே நேரில் வந்து விலக சொலலியும் மு.த. விலகவில்லை ( அப்போது மகாலிங்கம் உடனிருந்தார்) விளைவாக கைது செய்யப்பட்டு இரு நாட்கள் மிக கடுமையாக தாக்கப்பட்டார். காவல் நிலையத்திலேயே உடல் நலம் குன்றி அங்கிருந்தேஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டு படுத்த படுக்கையாகி மீளாமலேயே மரணமடைந்தார். ( சிறு நீரகம் உடைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது )
நான் ‘கொல்லப்பட்டார் ’ என்று எழுதியது இக்காரணத்திலேயே. இவ்விஷயம் இன்று பரவலாகவே பேசப்படுவது தான். பாலியல் எழுதியமைக்காக அவர் கொல்லப்படவில்லை. உண்மையான கலகத்தை செய்தமைக்காகவே கொல்லப்பட்டார். இதைத் தான் நான் கூறினேன். கலகம் என்று பேசுபவர்கள் உண்மையான கலகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். சாரு ’ வின் கதைகளுக்கும் தொழுகைக்கும் இடையேயான வித்தியாசம் இங்கு கலகம் உண்மையானது, உண்மையிலேயே தாக்கக் கூடியது என்பது தான்.
உங்கள் கடிதத்தை பிரசுரிக்கிறோம் – விளக்கத்துடன்.
பிரியத்துடன்
ஜெயமோகன்.
கலகத்தை ஒரு சமூகம் எப்போதுமே கொன்றுதான் போடும் என்பது நிச்சயமில்லை. பினோசெத்தின் சர்வாதிகாரம் பல கலகக்காரர்களை கொன்று போட்டது. ஆஸ்கார் ஒயிட்டை சிறையில் தள்ளி சித்ரவதை செய்து கொன்று போட்ட ஐரோப்பிய சமூகம் இரண்டு நூற்றாண்டுகள் சென்று எல்ஃப்ரீட் ஜெலினெக்குக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவித்தது.
பெரியாரை தமிழ்ச் சமூகம் கெளரவித்தது; ஆனால் ஏற்றுக் கொள்ளவில்லை. என் விஷயத்தில் தமிழ்ச் சமூகம் இன்னும் என்னை வாசிக்கவே ஆரம்பிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வாசித்த பிறகுதான் அது என்னை என்ன செய்யும் என்று பார்க்க முடியும். அதுவரை எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அவ்வப்போது இந்த எலிகளுக்கு பதில் சொல்லியபடி.
* * *
“மிக எளிய முறையில் கூட சாரு தனது எல்லைகளை மீறியவரல்ல ” என்ற ஜெயமோகனின் கருத்துக்குப் பதில் கூற வேண்டுமானால் நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றையே எழுத வேண்டியிருக்கும். எனது புதினங்கள் யாவும் சுயசரிதைத் தன்மை வாய்ந்தவை என்பதால் அதை நுண்ணுணர்வு கொண்ட வாசகர் யாருமே புரிந்து கொள்ளலாம்.
தனிப்பட்ட வாழ்விலிருந்தே நம்முடைய கலகம் ஆரம்பிக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான். எல்லோரும் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று தங்களுடைய ரத்த பந்த வாரிசுகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது நான் அவந்திகாவோடு குழந்தையே பெற்றுக் கொள்ளாமல், அவளுடைய குழந்தையையே என் குழந்தையாக ஏற்று வளர்த்தேன். இரண்டு தினங்களுக்கு முன்பு கூட (அன்று அவனுடைய பிறந்த நாள்) எங்கோ நடுக்கடலில் நின்று கொண்டிருக்கும் கப்பலிலிருந்து தன்னுடைய கேப்டனின் தொலைபேசியிலிருந்து என்னை அவசரமாக அழைத்து “எப்படி இருக்கிறீர்கள்? “ என்று கேட்டான். ( அதற்கு முன்பே இரண்டு மூன்று முறை வீட்டுக்கு அழைத்த போது நான் கிடைத்திருக்கவில்லை) அந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் – உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். அந்த வார்த்தைகளின் பொருளை உணர்ந்த போது என் கண்கள் கலங்கின.
காலம் காலமாக நமது சரீர ரீதியாக ஓடி வரும் பரம்பரை ரத்த சம்பந்தத்தை உதறி எறிவதே கலகத்தின் முதல் படி. இப்படி நூற்றுக்கணக்கான படிகளைக் கடந்து வந்தவன் நான். ஆனால் ஜெயமோகன் போன்ற அசடுகளுக்கு கலகம் என்றால் என்ன தெரியுமா ? கலகக்காரன் சமூகத்தால் அடித்துக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்களை ஜெய மோகன் கலகக்காரன் என்று ஏற்றுக்கொள்வார்.
இதைத்தான் ‘கொலை வெறி ’ என்கிறேன். ஜெயமோகனால் நான் கலகக்காரன் என்று மெச்சப்பட வேண்டுமானால் நான் கொல்லப்பட வேண்டும் !.
வேண்டாம். உயிரை விலையாகக் கொடுத்து ஜெயமோகனிடமிருந்து அந்தப் பட்டம் வேண்டாம். அதற்கும், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் குண்டடிபட்டுச் செத்துப் போகும் வீரர்களின் மனைவிகளுக்கு ஆண்டு தோறும் ராஷ்டிரபதி அளிக்கும் மெடல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இப்படி நான் ஒரு மெடலாக மாற வேண்டும் என்பது தான் ஜெயமோகனின் ஆசை. ( ஜெ. தான் ராஷ்டிரபதி )
இந்த ஆசையில் தான் அவர் மு.தளையசிங்கத்தை ‘ அடித்துக் கொல்லப்பட்டதாக ’ புருடா விடுகிறார்; இதே ஆசையில் இவர் உயிர்மையில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒரு ஐரோப்பிய எழுத்தாளரை பற்றிக் குறிப்பிடும் போது அவர் தற்கொலை செய்து கொண்டதாக எழுதினார். உண்மையில் அவர் இயற்கை மரணம் எய்தியவர்தான்.
ஜெயமோகனின் ‘கலக ’ மெடல் கிடைக்க வேண்டுமானால் ஒரு எழுத்தாளன் ஒன்று, அடித்துக் கொல்லப் பட வேண்டும்; அல்லது, தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் எனக்கு ஒரு அசிங்கமான ஆங்கிலக் கெட்ட வார்த்தைதான் ஞாபகம் வருகிறது.
* * *
மேலும், எழுத்தை கலகம், பாலியல் என்றெல்லாம் வகைப்படுத்துவதே மிகவும் அசட்டுத்தனமானது. மார்க்கேஸ், போர்ஹேஸ் போன்றவர்களிடம் என்ன கலகம் இருக்கிறது? இலக்கியத்தில் இதெல்லாம் சில கூறுகள். அவ்வளவுதான்.
* * *
கட்டுரை ரொம்பவும் சீரியஸ் தொனியில் போய் விட்டது. மன்னிக்கவும். மேற்படி ஊட்டி கருத்தரங்கிற்கு அடுத்த படியாக குற்றாலத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் ஜெய்மோகன் சில நண்பர்களிடம் கேட்ட ஒரு கேள்வி : “ கிரிக்கெட் மைதானத்தின் நடுவே ஏன் ஒரு இடத்தில் மட்டும் புல் வளர்க்காமல் வெள்ளையாக விட்டு வைத்திருக்கிறார்கள் ? “
இப்படிப்பட்ட ஆட்கள்தான் தமிழ் சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
* * *

Monday, September 28, 2020

ஆஜான் ரோலில் சாரு . . .

 


வழக்கமாக கலை, இலக்கியத்துறையைச் சேர்ந்த எந்த ஒரு ஆளுமை காலமானாலும் அவரை எப்படி புளிச்ச மாவு அசிங்கப்படுத்தப் போகிறதோ அல்லது அவரை முன் வைத்து எத்தனை பேரை இழிவுபடுத்தப் போகிறதோ என்ற அச்சமும் கலக்கமும் வரும்.

நல்ல வேளையாக எஸ்.பி.பி க்கு அவரது படத்தைப் போட்டு அஞ்சலி என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டு விட்டார். பிறகு ஒரு இரண்டு நாள் கழித்து எஸ்.பி.பி பாடிய முதல் மலையாளப் பாட்டின் வரிகளையும் தமிழ் அர்த்தத்தையும் போட்டு அமைதியாக இருந்து விட்டார்.

திரைத்துறையோடு வில்லங்கம் செய்ய ஆஜான் விரும்ப மாட்டார் என்பது வைரமுத்து சர்ச்சையில் அடித்த பல்டியிலேயே புரிந்தது. 

என்ன இருந்தாலும் துட்டு முக்கியமல்லவா! ஐந்து நட்சத்திர விடுதி வசதி இன்னும் முக்கியமல்லவா! அதனால் ஆஜான் உஷாராக இருந்து விட்டார். 

ஆனால் அந்த ரோலை சாநி எனப்படும் சாரு நிவேதிதா எடுத்துக் கொண்டு விட்டார். 

ஜெமோவால் பேச முடியாத சந்தர்ப்பங்களில் அவர் குரலாக சாநி இருந்திருக்கிறார். 

எஸ்.பி.பி இறந்து போனதற்கு எழுத்தாளர்கள் ஏனய்யா உருகி உருகி எழுதுகிறீர்கள்? என்பதுதான் அவரது பிரச்சினையாம். 

சாநியின் பொறுமல் கீழே உள்ளது.


என் குழப்பம் சந்தேகம் எல்லாம் என்னவென்றால், ஒரு பக்கம் புதுமைப்பித்தன் பாரதி என்று உச்சத்தில் நிற்கிறீர்கள்.  இன்னொரு பக்கம் சினிமா பாட்டு என்ற மட்டரகப் பொழுதுபோக்கில் கிடக்கிறீர்கள்.  கிடங்கள்.  ஆட்சேபணையே இல்லை.  நானும் அவ்வப்போது கிடப்பேன்.  ஆனால் இதுவே சுவாசம் என்கிறீர்கள்.  என் உயிரே போய் விட்டது என்கிறீர்கள்.  என் வாழ்க்கையே போய் விட்டது என்கிறீர்கள்.  என் ஆன்மாவே கரைந்து விட்டது என்கிறீர்கள்.

எழவு வீட்டில் ஏகடியம் பேசக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் தெரியாதவன் அல்ல நான்.  ஆனால் ஒரு பாடகரின் மறைவை  உங்கள் சொந்த துக்கமாக மாற்றுவது எது?  சொல்லுங்கள்.  நானும் உங்கள் துக்கத்தோடு சேர்ந்து கொள்கிறேன்.  பாமரர்களைப் போலவே காமன்மேன்களைப் போலவே உங்களுக்கும் சினிமாதான் உயிர்மூச்சு.  சினிமாதான் உங்கள் மதம்.  கலை உன்னதம் என்று சொல்வதெல்லாம் வெறும் பகட்டு.  உங்களையும் பாமரரையும் பிரிப்பது கலை ரசனை அல்ல. 

தி. ஜானகிராமனோ, எம்.வி. வெங்கட்ராமோ, க.நா.சு.வோ, ஆதவனோ, ந. பிச்சமூர்த்தியோ, கு.ப. ராஜகோபாலனோ, சுந்தர ராமசாமியோ, புதுமைப்பித்தனோ யாருமே இப்படி வெகுஜன ரசனை சார்ந்த, பாமர ரசனை சார்ந்த பிரமுகர்கள் காலமாகும்போது இப்படி “என் உயிர் போச்சே” என அழுததில்லையே?  ஆனானப்பட்ட காந்திக்கே அவர்கள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே?  காரணம், அப்போது தி. ஜானகிராமனின் ரசனை அரியக்குடி ராமானுஜ அய்யங்காராக  இருந்தது.  சினிமாவின் டம்குடப்பாவாக இல்லை.  

நான் புகார் சொல்லியிருப்பது எழுத்தாளர்களை.  ஒரு சினிமா பாடகர் இறந்து போனால் அதற்கு இலக்கியவாதி கவிதை எழுதுகிறார்.  சிற்பி சிற்பம் உருவாக்குகிறார்.  ஓவியர் ஓவியம் திட்டுகிறார்.  அப்படியானால் நீங்கள் ஏன் ஐயா பாப்லோ நெரூதா, பாரதி என்றெல்லாம் சொல்கிறீர்கள்?  பட்டுக்கோட்டை பிரபாகர் வழியில் எழுத வேண்டியதுதானே?  `கலையில் மேன்மையானது என்று இல்லையா?  எப்போதும் சினிமா பாட்டுதானா? 

என் புகார் அத்தனையும் எழுத்தில் உன்னதத்தைத் தேடி இசையில் டம்குடப்பாவோடு உட்கார்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான எழுத்தாளர்கள் மீதுதான்.

ஒற்றை வாசகத்தில் சொல்ல வேண்டுமென்றால்

ஏராளமான மக்கள் நேசிக்கும் ஒரு கலைஞன் மீதான பொறாமையில் சர்ச்சையை உருவாக்கி ஒளி வட்டத்தை தன் மீது பாய்ச்ச முயலும் மட்டமான தந்திரம். 

ஆமாம். காமன் மேனை நீங்கள் என்ன ஒசத்தி? ரெண்டு கொம்பு முளைத்திருக்கிறதா அல்லது குறைந்த பட்சம் வாலாவது இருக்கிறதா?

சென்னை புத்தக விழாவிலேயே இவரை யாரும் சீண்டவில்லை என்பதற்கு நேரடி சாட்சியம் நான். 

இந்த படித்தால் அந்த சம்பவம்  என்னவென்று உங்களுக்கு தெரியும்.

இந்த மாதிரியே எழுதிக் கொண்டிருந்தால் மேலே சொன்ன சம்பவம் நடந்ததற்கு இரண்டு  வருடங்கள் முன்பு சென்னை புத்தக விழாவில் நடந்ததாக இவர் கதை விட்ட சம்பவத்தை  காமன் மேன்கள் யாராவது செய்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.




Thursday, September 25, 2014

இது நியாயமில்லை கமலஹாசன்

அன்பான கமலஹாசன்,
 
உங்கள் மீது சாரு நிவேதிதா எவ்வளவு அன்பும் மதிப்பும்  வைத்துள்ளார். சர்வதேச இலக்கியவாதியான, இலக்கியத்திற்கான, அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு உலகிலேயே தகுதி வாய்ந்த ஒரே எழுத்தாளரான அவர் உங்களை தனக்கு நிகராக கருதும் பாக்கியத்தை உங்களுக்கு மனமுவந்து அளித்துள்ளார் என்பதை அவரது கடிதத்தின் இந்த பகுதிகளை படித்தால் உங்களுக்கே புரியும்.


//அந்தக் கூட்டத்தில் நீங்களும் டி.எம். கிருஷ்ணாவும் பேசப் போகிறீர்கள் என்று அழைப்பிதழில் பார்த்து எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.  ஏனென்றால், நான் உங்கள் இரண்டு பேரிடத்திலும் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவன்.  உங்கள் மீது அதீதமாகவே.//

// மகாநதி பற்றிய அந்தக் கட்டுரையை நீங்கள் கணையாழியில் வெளிவந்த போதே படித்திருக்கலாம்.  அந்தக் கட்டுரை பிரமாதமாக இருந்தது என்று நீங்கள் சொன்னதாக ஒருமுறை உங்கள் நண்பரும் என் நண்பருமான புவியரசு என்னிடம் சொன்னார்.//

// உங்கள் படங்களையெல்லாம் அநேகமாக நான் சிலாகித்தே எழுதி வந்தேன்.  குறிப்பாக, அன்பே சிவம்.  உங்கள் படங்களில் நான் விமர்சித்து எழுதியது குருதிப் புனல், தசாவதாரம்.  மற்ற எல்லா படங்களையும் பாராட்டியே எழுதினேன், சதி லீலாவதி உட்பட//

//  என் அளவுக்கு உங்களைப் பாராட்டி எழுதியவர்கள் தமிழில் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.//  

 // தமிழ்நாட்டில் Grantaவை சிரத்தையாகப் படிக்கும் ஒரு சிலருள் நாம் இருவரும் அடக்கம் என்று நினைக்கிறேன்.//  

//இந்த வகையில் உங்களை என்றுமே என்னுடைய நட்பு மாடத்தில் வைத்திருந்தேன். இப்போதும் வைத்திருக்கிறேன்.//

.//  இவ்வளவு படித்த ஒரு மனிதரை நான் சந்தித்ததே இல்லை என்பது மதன் உங்களைப் பற்றி அடிக்கடி சொல்லும் வார்த்தை//

.// படிப்பின் மீது மிகுந்த passion உள்ள ஒருவர், படிப்பின் மீதி தீராக் காதல் கொண்ட ஒருவர் தான் இப்படிப் படிக்க முடியும்; கமல் அப்படிப்பட்டவர்//

//அநேகமாக Alejandro Jodorowsky-யின் படங்களைப் பார்த்தவர்கள் தமிழ்நாட்டில் இரண்டு பேர் தான் இருப்பார்கள் என்பது என் யூகம்.  அதில் நீங்கள் ஒருவர்.//
  
// குடும்பம், குழந்தை குட்டி பற்றி உங்கள் கருத்தை ஏற்கக் கூடிய ஒரு நண்பர் உங்கள் நண்பர் குழுவில் உண்டா?  ஆனால் குடும்பம் பற்றி உங்கள் கருத்து எதுவோ அதுவேதான் என் கருத்தும்.  அந்தக் கருத்தின்படி தான் நான் வாழ்ந்தும் வருகிறேன்.  மத்திய வர்க்கத்துக்கு உரிய எந்த சமூக நடைமுறைகளையும் என் வாழ்வில் நான் பின்பற்றுவதில்லை.  உங்களைப் போலவேதான்.//

//இந்த நூற்றுக்குத் தொண்ணூற்று ஐந்துக்கு இன்னொரு உதாரணம், செக்ஸ் தொழிலை தொழிலாக அங்கீகரிப்பது பற்றியது.  இதிலும் நாம் ஒத்த கருத்து உடையவர்களே//
 

//என்ன நடக்கிறது என்று தெரியாமல், உங்கள் பின்னாலிருந்து ஒருவர் சாருவைத் தெரியாதா என்று கேட்க, இன்னொருவர் இரண்டு இண்டர்நேஷனல் ஸ்டார்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாதா என்று குரல் கொடுத்தார்//.  



//அச்சகத்திலிருந்து வந்ததுமே அச்சு வாசனை போவதற்கு முன்பே உங்களுடைய நூலகத்துக்குத் தமிழ் நூல்கள் வந்து விடுகின்றன என்பதால் நான் எழுதிய ராஸ லீலா என்ற நாவலை நீங்கள் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்//.  

 அன்புடன் கை கொடுக்கும் ஒருவனை நாலு பார் பார்க்க அவமதிப்பதையா?  அந்த அளவு வெறுக்கத்தக்கவனா நான்?  நேர்மையாக வாழ்வது அவ்வளவு பெரிய குற்றமா?  

//நான் உங்களுடைய படத்தை மட்டுமா விமர்சித்தேன்?  எந்திரனை விமர்சிக்கவில்லையா?//

//நேர்மையாக வாழ்வதால் இன்று நான் ஒரு தீண்டத்தகாதவனைப் போல் நடத்தப்படுகிறேன்.  அந்த அவமரியாதையை நான் எல்லா விழாக்களிலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. //

// என்னைப் போன்ற எழுத்தாளனின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உண்மையில் என்னைப் போன்ற ஒரு transgressive எழுத்தாளனை உங்களைப் போன்ற பிரபலங்கள்தான் ஆதரிக்க வேண்டும்.  அன்பு பாராட்ட வேண்டும்.  ஆனால் தமிழ்நாட்டில் கிடைப்பது கன்னத்தில் அறை. ஏன் இவ்வளவு வருந்தி வருந்தி எதை எதையோ தொட்டுத் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், லௌகீக வாழ்வுக்காக வாசகர்களிடம் பிச்சையும் எடுத்துக் கொண்டு, உங்களைப் போன்றவர்களின் துவேஷத்தையும் சம்பாதித்துக் கொண்டு வாழும் சூழல் சமயங்களில் மன உளைச்சலைத் தருகிறது.//

// நீங்கள் சர்வதேச இலக்கியத்தையும் சினிமாவையும் கற்றவர்.  அந்த ஒரே காரணம்தான்.//

படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் ரஜனிகாந்திடம் சொன்ன டயலாக்கை பிறகு படிக்காதவன் படத்தில் ஆர்த்தி தனுஷிடம் சொல்வார்.

"நீ ரொம்ப கொடுத்து வச்சவன், எனக்கே உன்னை பிடிச்சுருக்கு"

அது போல சாரு நிவேதிதாவிற்கே உங்களை பிடித்திருக்கிறதென்றால் வாழ்க்கையில் உங்களுக்கு வேறு ஏதாவது கொடுப்பினை வேண்டுமா என்ன?

ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் கமல்?

 "இந்த உலகின் அத்தனை அன்பும் கண்களில் பொங்க அவர்  உங்களுக்குக் கை கொடுத்தார். .  நீங்களோ ஒருக்கணம் ஆளவந்தானாகவே மாறி முகத்தைச் சுளித்தபடி கை நீட்டி விட்டு ஆளவந்தான் மாதிரியே இறுக்கமான பாவனையுடன் தலையை இடது பக்கமும் வலது பக்கமும் ரோபோ மாதிரி திருப்பியபடி சென்று விட்டீர்கள்." 

 உங்களைப் பற்றி பாராட்டி எத்தனை கட்டுரைகள் எழுதியிருப்பார் அவர்?  "அதெல்லாம் குப்பை.  ஆனால் குருதிப் புனலையும் தசாவதாரத்தையும் விமர்சித்து எழுதியதை மட்டுமே உங்கள் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருப்பீர்களா கமல்" என்று கேட்கும்படி செய்து விட்டீர்களே?


ஆனாலும் எவ்வளவு பெருந்தன்மையோடு அவர் எழுதியதை படித்தீர்கள் அல்லவா? 
 
// தவிர்க்க முடியாமல் எங்காவது தங்களைச் சந்தித்தால் மீண்டும் தங்களிடம் வந்து இந்த உலகத்தின் அன்பையெல்லாம் கண்களில் தாங்கி உங்களுக்குக் கை குலுக்குவேன்.  அப்போதும் நீங்கள் முறைத்துக் கொண்டு போனால் இதுபோல் கடிதம் எழுத மாட்டேன்.  அவ்வளவுதான்.  மற்றபடி உங்கள் மீதான என் அன்பும் நட்புணர்வும் போகாது.//  

எழுத்தாளனுக்கும் நடிகனுக்கும் உள்ள வித்தியாசத்தை எவ்வளவு அழகாக அவர் சொல்லியுள்ளார் என்பதை கவனித்தீர்களா?

//மேலும், மை டியர் கமல், எம்.கே.டி.யை விடவா ஒரு சூப்பர் ஸ்டார் வந்து விடப் போகிறார்?  அவர் பெயர் இன்று யாருக்காவது தெரியுமா?  மக்கள் தங்களை சந்தோஷப்படுத்துபவர்களை சீக்கிரம் மறந்து விடுகிறார்கள்.  ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எழுத்தாணி பிடித்தவனை மக்கள் மறப்பதில்லை.  அவன் அந்த மக்களுடைய நினைவிலி மனதில் சென்று தங்கி விடுகிறான்.  அந்த மனம் அந்த நினைவை தலைமுறை தலைமுறையாக தனது சந்ததிகளுக்குக் கடத்திக் கொண்டே இருக்கிறது.//

நீங்கள் செய்தது நியாயமில்லை கமல். நீங்கள் பாட்டுக்கு கை கொடுத்து விட்டுப் போயிருக்கலாம். 

உலகின் மிக நீண்ட நெகிழ்ச்சி மிக்க கடிதம், அதற்கான அவர் ரசிகர்கள், உங்கள் ரசிகர்கள் எதிர்வினைகள் என்று நடைபெற்று வரும் இணைய யுத்தம் எல்லாமே  இல்லாமல் போய் நாங்களெல்லாம் தப்பித்திருப்போம். ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா என்பது போல ஒரு கைகுலுக்கலுக்கு   எவ்வளவு பெரிய சண்டை என்று எதிர்கால சமுதாயம்
அதிர்ச்சியோடு கேட்பதையும் தவிர்த்திருக்கலாம். 

அடுத்த முறையாவது ஒழிகிறத் என்று கை கொடுத்து தொலைத்து விடுங்கள். எல்லோரும் உருப்படியாக வேறு ஏதாவது எழுதுவார்கள்.