Wednesday, December 31, 2014

இவனெல்லாம் எதுக்கு தண்டமா உயிரோட இருக்கான்?

இன்று காலை ஹிந்து இதழில் வந்த செய்தியின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.

 

சோறு போடும் விவசாயி செத்தால் சாகட்டும் என்று அலட்சியமாகவும் அராஜகமாகவும் கூறும் இவனை மக்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு வேறு அனுப்பியுள்ளார்கள். 

 இவனெல்லாம் எதுக்கு தண்டமா உயிரோட இருக்கான்?

இதுதான் பாஜக. பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே

Tuesday, December 30, 2014

கேபி அவர்களின் நினைவாக, அவரது படக்காட்சிகள்

 http://www.thehindu.com/multimedia/dynamic/00619/BALACHANDER_619054f.jpg

மறைந்த திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும்  விதமாக அவரது படக்காட்சிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன். 
உணர்ச்சிமயமான காட்சிகள் என்பதுதான் அவரது சிறப்பம்சம். எனவே பெரும்பாலான பதிவுகளை அந்த அடிப்படையிலேயே அமைத்துள்ளேன்

ரஜனி, கமல், சுஜாதா என மூவரின் நடிப்பாற்றலையும் வெளிக் கொணர்ந்தது  அவர்கள்

தான் அறிமுகம் செய்த நாயகன் பந்தயக்குதிரையாக மாறுவார் என்பதை கேபியே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

படத்தின் துவக்கத்திலேயே இப்படி ஒரு காட்சியா?


அலையின் கொந்தளிப்பை விட இந்த மனிதனின் மனதில் கொந்தளிப்பு அதிகம்.

இப்படிப் பட்ட சேவைதான் ஆதர்ஸம் 

கதாநாயகனுக்கான இலக்கணத்தை அடித்து நொறுக்கிய ஒரு காவியம் 

ரொம்பவே சீரியசா போனதால கடைசியா ஒரு காமெடி சீன் பாருங்க 

தமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய இழப்பு திரு கே.பி

 

Monday, December 29, 2014

கேரட் தேங்காய் அல்வா, கடலை சுண்டல்



பால் அதிகமாக இருந்ததால் கேரட் கீர் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டேன். அதன் தயாரிப்பை முன்பே எழுதியுள்ளதால் மீண்டும் இங்கே எழுதவில்லை. கேரட்டை வேக வைத்து சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்ததும்தான் பாலின் அளவிற்கு மிகவும் அதிகமாக தயாரித்தது புரிந்தது. ஆகவே அந்த கலவையை வீணடிக்க வேண்டாம் என்பதற்காக மீதமிருந்த கலவையில் தேங்காயை துறுவலையும் சேர்த்து கொஞ்ச நேரம் மிக்ஸியில் ஓட விட்டு எடுத்து வைத்துக் கொண்டேன். அடுப்பில் சர்க்கரை பாகு வைத்து இந்த கலவையை போட்டு நெய் விட்டு நன்கு கிளறினால் கேரட் தேங்காய் அல்வா தயார்.

ஒரு இனிப்பும் கீரும் செய்து விட்டு காரம் இல்லையென்றால் எப்படி? அதையும் விடுவதாக இல்லை. வேர்கடலையை குக்கரில் வேக வைத்துக் கொண்டேன். ஒரு வாணலியில் எண்னெய் ஊற்றி கடுகை வெடிக்க வைத்து பாதி உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி உப்பு சேர்த்துக் கொண்ட பிறகு வேக வைத்த கடலையையும் சேர்த்து கிளறினேன். இதோடு மல்லி கடலைப் பருப்பு தூள் (எங்கள் வீட்டில் எப்போதும் தயாராக இருக்கும்) யும் சேர்த்து நன்றாக கிளறி. அதனுடைய வாசனை போன உடன் தேங்காய் துறுவலையும் தூவி ஒரு இரண்டு நிமிடம் கிளறி எடுத்தால் நிலக்கடலை சுண்டலும் தயாராகி விட்டது.


பார்ப்பதற்கு மட்டுமல்ல, சுவையும் நன்றாக இருந்தது.

பின் குறிப்பு : ஒரு தொழில் ரகசியம் சொல்கிறேன். யாருக்கும் சொல்லாதீர்கள். கேரட் தேங்காய் கேக் செய்யத்தான் முயற்சி செய்தேன். ஆனால் அது கேக்காக வரவேயில்லை. அதனால் அல்வா என்று பெயர் சூட்டி விட்டேன்.

மேலே உள்ள படம்தான் அந்த சொதப்பலுக்கான சாட்சி. இருப்பினும் விடுவதாக இல்லை. அது கேக்காக வரும் வரை விடுவதாக இல்லை. முயற்சிகள் தொடரும்.

ஜில்லுனு ஒரு பஜ்ஜி, சூடா ஒரு ஜூஸ்




தனியார் நிறுவனங்கள்தான் சிறப்பான சேவை செய்யும், அவர்களிடம்தான் அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் தனியாருக்கு நிகர் யாரும் கிடையாது என்றெல்லாம் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

நெருங்கிய உறவினர்களோடு என் மகன் ஹைதராபாத் சென்றிருந்தான். நேற்று மாலை 4.40 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து இண்டிகோ விமானத்தில்  சென்னை திரும்ப வேண்டும். 2.30 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தை அடைந்து செக் இன் செய்து, பேக்கேஜ் எல்லாம் ஒப்படைத்து செக்யூரிட்டி சோதனை முடிந்து உள்ளே போனதும் நான்கு மணி நேர தாமதம் என்று அப்போதுதான் அறிவித்தார்களாம்.

பயணம் செய்பவர்களின் அலைபேசி எண்கள் அவர்கள் வசம் உள்ள போது நான்கு மணி நேர தாமதம் என்ற தகவலை சொல்லியிருந்தால் நிதானமாக வந்திருப்போமே என்ற கேள்விக்கு பதில் சொல்லவே யாரும் தயாராக இல்லை. துபாயிலிருந்து வர வேண்டிய அந்த விமானம் ஐந்து மணி வரை துபாயிலிருந்து புறப்படவேயில்லை. தாமதத்திற்கான காரணமும் சொல்லப் படவில்லை. செக்யூரிட்டி சோதனை முடிந்து விட்டதால் வெளியேயும் செல்ல முடியவில்லை. விமான நிலையத்திற்குள்ளே திரிவதைத் தவிர நேரத்தைப் போக்க வேறு எந்த வழியும் இல்லை.

இறுதியில் பத்து மணிக்கு விமானம் வந்து பத்தரை மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பனிரெண்டு மணிக்கு மேல் சென்னை வந்தடைந்திருக்கிறது. இத்தனை மணி நேரம் பயணிகளை காத்திருக்க வைத்துள்ளேமே என்ற குற்ற உணர்ச்சி கூட கொஞ்சமும் இல்லாமல்தான் இண்டிகோ நிறுவனம் நடந்து கொண்டிருக்கிறது.

சரி இப்படி காக்க வைத்தார்களே, ஏதாவது உணவாவது கொடுத்தார்களா என்று கேட்ட போது என் மகன் சொன்னான். ஐந்து மணிக்கு ஜில்லுனு ஒரு பஜ்ஜியும் சூடாக ஒரு ஜூசும் கொடுத்தார்கள், கூடவே இரண்டு வருடத்துக்கு முன்னாடி தயார் செய்தது போல காய்ந்து போன ஒரு பிரட் சாண்ட்விச். அவ்வளவுதான். இரவு உணவு கூட எதுவும் தரவில்லை.

இதுதான் தனியார் நிறுவனங்களின் பொறுப்புணர்வு, வாடிக்கையாளர் சேவையின் லட்சணம்.

Sunday, December 28, 2014

இன்னும் ஒரு விமானத்தை காணோம்

விமானங்கள் காணாமல் போவது தொடர்கதையாகிறதே!
 


இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் இப்போது காணவில்லை.

செய்தியின் இணைப்பு  இங்கே 

இவர்களாவது நல்லபடியாக திரும்பட்டும்.

 

Saturday, December 27, 2014

சீனியர்களை ஓரம் கட்டிய ஜூனியர் சாமியார்



ரிமோட்டில் சேனல்களை மாற்றிக் கொண்டே வந்த போது ஒரு லோக்கல் சேனலில் கண்ணில் பட்டது  இந்தக் காட்சி. 

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு வேலூர் பொற்கோயில் சாமியார், ரத்னகிரி முருகன் கோயில் சாமியார், கலவையில் உள்ள சச்சிதானந்த சாமியார் இவர்களைத் தவிர எனக்கு யார் என்று தெரியாத ஒரு ஜடாமுடி சாமியார் ஆகியோர் உள்ளே நுழைகின்றனர்.

பொற்கோயில் சாமியாருக்கு முன்னே தட்டுக்களை நீட்ட அவர் அதிலிருந்த மாலைகளை எடுத்து அவரே போட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு மாலையை கையிலெடுத்தவர் அதை கழுத்து வரைக்கும் எடுத்துச் சென்று ஏனோ வேண்டாமென்று திருப்பிக் கொடுத்து விட்டு முழுவதும் ரோஜாப் பூக்களால் கட்டப் பட்ட மாலையை போட்டுக் கொள்கிறார். மற்ற சாமியார்களின் பார்வையில் ஏக்கம் தெரிகிறது.

அடுத்து ஒவ்வொரு சன்னதியாக போகிறார்கள். எல்லா இடங்களிலும் பொற்கோயில் சாமியாருக்கே முதல் மரியாதை. ஏதோ ஒரு சன்னதியில் பொற்கோயில் சாமியாருக்கு ஒன்று, இரண்டு என எலுமிச்சை மாலைகளை போட்டு, மூன்றாவது மாலையை போடும் முன்பாக கலவை சச்சிதானந்த சாமியார் அதனைப் பறித்து அந்த ஜடாமுடி  சாமியாருக்கு போட வைத்து விடுகிறார்.

ரத்னகிரி முருகன் கோயில் சாமியாரும் கலவை சச்சிதானந்த சாமியாரும்தான் வேலூர் மாவட்டத்தில் ரொம்பவுமே சீனியரானவர்கள். பொற்கோயில் சாமியார் ஆன்மீக வணிகத்திற்கு வந்து பத்து பதினைந்து ஆண்டுகள்தான் ஆகியிருக்கும்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை மோடி ஓவர் டேக் செய்தது போல இவரும் மற்றவர்களை ஓவர் டேக் செய்து விட்டார். பாவம் இவர் முன்னே செல்ல மற்றவர்கள் பின் தொடர்கின்றனர்.

காரணம் என்ன தெரியுமா?

காசு, துட்டு, மணி, பணம், பணம்
 

காவி பயங்கரவாதிகளின் ஆட்சித் திமிர்




மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற திமிர், அந்த திமிரைத் தவிர வேறு எதுவும்  திரு பெருமாள் முருகனின் "மாதொரு பாகன்" நாவலை எரித்ததற்கும் அவரது படத்தை இழிவு படுத்தியதற்கும் காரணமில்லை. நான்கு  வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு நாவலை இன்று திடீர் சர்ச்சையாக மாற்றுவதன் காரணம் என்ன? 

அக்கதையினை நான் படிக்கவில்லை. ஆனால் அக்கதை பற்றி ஏராளமானவர்கள் எழுதியதைப் படிக்கையில் தவறொன்றும் இருப்பதாக தோன்றவில்லை. கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருந்ததில்லையா? இல்லை இருப்பதில்லையா? எத்தனை மூடப் பழக்கங்கள் இன்னும்  தொடர்கிறதே? உயர்சாதியினர் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது தாழ்த்தப்பட்டவர்கள் படுத்து உரள வேண்டும் என்ற அசிங்கம் இப்போதும் கர்னாடகக் கோயில் ஒன்றில் உள்ளதே!

கடவுள் என்ற பெயரில் நீங்கள் கட்டுக்கதைகள் கட்டியுள்ளீர்கள். அவற்றில் இல்லாத அசிங்கங்களா?

புராணங்கள் படி பார்த்தால் இந்திரனை விட மிகப் பெரிய அயோக்கியன் யாரும் இருக்க முடியாது. ஆனால் சமஸ்கிருத மந்திரங்கள் இன்னும் இந்திரனைப் போற்றிக் கொண்டிருக்கிறதே! அதை யார் கொளுத்துவது?

இது ஒரு சம்பவம் மட்டுமா?

பெரியாரை செருப்பால் அடிப்போம் என்று சொன்ன ஹெச்.ராஜா, "பெரியாரும் அண்ணாவும் தமிழகத்தில் பிறந்தது தவறு" என்று மீண்டும் தனது திமிரை வெளிப்படுத்தியதைப் பார்க்கிறோம்.

அமீர் கான் படத்தை தடைசெய்ய  வேண்டும்  என்று ஒரு கோஷ்டி புறப்பட்டுள்ளது.

ராமரின் பிள்ளையா இல்லை முறை தவறி பிறந்தவரா என்று ஒரு பெண் சாமியார் கேட்கிறார்.

ஐந்து லட்சம், இரண்டு லட்சம் என்று விலை நிர்ணயம் செய்து மத மாற்றம் செய்யத் துடிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர் நாடாளுமன்றம் வர மாட்டார். வந்தாலும் வாயில் கொழுக்கட்டை வைத்திருப்பார். பதில் சொல்ல மாட்டார்.

நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற திமிர், திமிர் மட்டுமே. அந்த கொழுப்போடுதான் காவிக்கூட்டத்தின் ஒவ்வொருவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் அராஜகத்திற்கு எதிராக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்.
 

 

Friday, December 26, 2014

களத்தில் ஒரு காதல் கல்யாணம்







வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த இந்த வருடமும் சென்று வந்தேன். எங்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் நடைபெற்ற வெண்மணி சங்கம நிகழ்வில் இந்தாண்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.வெண்மணி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருகிற உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. வெண்மணி நினைவிடத்தில் இருந்து எங்கள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலையை அடைவது அவ்வளவு சிரமமாக இருந்தது. மானுட வெள்ளத்திலே நீந்திக் கொண்டுதான் வர வேண்டியிருந்தது.

வழக்கமாக கட்சி சார்பில் செய்யப்படும் நினைவஞ்சலிக் கூட்டத்தைத் தவிர நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் “சுய மரியாதை மாநாடு” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் தோழர் கலி.பூங்குன்றன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

அம்மாநாட்டில் ஒரு சிறப்பான சம்பவமும் நிகழ்ந்த்து.

சுதந்திர குமார் – சுகந்தி என்ற இரு தோழர்களின் சாதி மறுப்பு, காதல் திருமணம் அம்மேடையில் சுய மரியாதை முறைப்படி நடந்த்து. உறுதி மொழியேற்ற பின் கதராடைகளை மாற்றிக் கொண்டு திருமணம் நடந்த்து.

ஒரு போர்க்களத்தில் முக்கியமான ஒரு தினத்தில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மத்தியில் திருமணம். நல்லதொரு வாய்ப்பைப் பெற்ற அத்தம்பதியினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பொய் சாட்சி சொன்னவருக்கு பாரத ரத்னா




பாரத ரத்னா விருது என்பதை ஒழித்து விட்டாலே நன்றாக இருக்கும். தகுதியற்றவர்களுக்கு வழங்கப் படுவதும் அதை விமர்சித்து பதிவு எழுதுவதும் எரிச்சலாக இருக்கிறது.

வாஜ்பாயின் நல்லாட்சி பற்றி சில தினங்கள் முன்பாக விரிவாக எழுதி விட்டேன். இணைப்பை இங்கே அளித்துள்ளேன். ஒரு ஆட்சியாளராக எந்த விதத்திலும் பாரத ரத்னா விருதிற்கு தகுதியற்றவர் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை.

ஒரு வேளை சுதந்திரப் போராட்ட வீரராக இருந்திருக்கக் கூடுமோ என்று யாருக்காவது மனதின் ஓரத்தில் சந்தேகம் ஒட்டிக் கொண்டிருந்தால் அதை சர்ப் போட்டு அகற்றி விடுங்கள். ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் வாஜ்பாய் செய்த துரோகத்தின் கறையை சர்ப், ரின், ஏரியல், நிர்மா என்று எந்த சோப்பு போட்டாலும் நீக்க முடியாது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ல் உச்சத்தில் இருந்த நேரம் பட்டேஷ்வர் என்ற இடத்தில் அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏழு பேரை பிரிட்டிஷ் போலீசிற்கு காட்டிக் கொடுத்தவர் வாஜ்பாய். அவர்கள் வன்முறையில் இறங்கினார்கள் என்று நீதி மன்றத்தில் பொய் சாட்சி சொல்லி அவர்களுக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவரும் வாஜ்பாய்.

தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவருக்கு தேசத்தின் உயர்ந்த விருது என்பது எவ்வளவு பெரிய அநியாயம்! அராஜகம்.

வாழும் நாளெல்லாம் முஸ்லீம்களுக்கு எதிராக நச்சை உமிழ்ந்து கொண்டிருந்த மதன் மோகன் மாளவியா, இறந்து போய் அறுபத்தி எட்டு வருடங்களுக்குப் பிறகு பாரத ரத்னா கொடுப்பதற்கும் கோட்சேவிற்கு சிலை வைப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. வரலாற்றை திருத்த முயலும் தில்லுமுல்லு இது.

பின் குறிப்பு

வாஜ்பாய் பொய்சாட்சி சொன்னதற்கான ஆவணங்களை அம்பலப் படுத்தியவர், தற்போது பாரதீய ஜனதாவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் தரகர் சுப்ரமணிய சுவாமிதான்.