நாற்காலி பறிபோன சூழலில் ரகுவரன் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து "ஒன்று நாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இருக்க வேண்டும். நம் இருவரைத் தவிர மூன்றாவதாக இன்னொரு ஆள் வரக்கூடாது" என்பார்.
திமுக, அதிமுக மட்டுமே மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த காட்சி மாறுவதற்கான நம்பிக்கை ரேகை மெல்லமாக தென்படுகிறது. மக்களுக்கான பிரச்சினைகளுக்காக பல போராட்டங்களில் ஒன்றாக களம் கண்ட நான்கு கட்சிகள் பின்பு மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்தது. ஒரு பொதுத்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க முடிவெடுக்கிறது.
ஊழல்களில் ஊறிப் போன, குட்டி முதலாளித்துவ கட்சிகளாக மாறி இருக்கிற இரு கழகங்களின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வராமல் இருக்க வியூகம் அமைக்கிறது. தேமுதிக வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்கிறது மக்கள் நலக்கூட்டணி.
தேமுதிக வை தங்கள் வசம் இணைக்க வேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்த திமுகவால் இதனை ஏற்கவே முடியவில்லை. பழம் நழுவி தங்களிடம் வந்து விடும் என்று கண்டிருந்த கனவு கானல் நீராகிப் போய் விட்டது. தாங்கள் சுவைக்கத் துடித்த பழம் என்பதால் பழத்தை பழிக்க முடியவில்லை. இப்பழம் புளிக்கும் என்று நரியாய் ஓலமிட முடியவில்லை. அதன் ருசி தெரிந்ததால்தானே இத்தனை காலம் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்!
அதனால் பழம் எங்கே சென்றதோ, அவர்களை சபிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆபாச வார்த்தைகளில் அர்ச்சிக்க தொடங்கி விட்டார்கள். கம்யூனிஸ்டுகளை வளரவிடாமல் பார்த்துக் கொண்டேன் என்று சொன்னவரின் கட்சியினர், இன்று கம்யூனிஸ்டுகள் தடம் மாறலாமா என்று கேட்கிறார்கள். இப்போது செல்வதுதான் சரியான பாதை என்று சொன்னால் பதில் கிடையாது, வருவது எசப்பாட்டுதான்.
ஆளும் கட்சியின் பி அணி என்று ஒரு கோயபல்ஸ் பொய்யை கூச்சமே இல்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆளுகிற ஜெயலலிதா மீது இவர்கள் வெண்சாமரம் வீசுவது போல மென்மையாய் விமர்சனங்களை முன்வைக்க, கடும் புயலாய் கண்டன இயக்கங்களை நடத்தி வந்தது, வருவது மக்கள் நலக் கூட்டணி என்ற சிறு உண்மை இவர்களின் கருப்புக் கண்ணாடிக்கு தெரியவே இல்லை.
ஊழலில் ஒன்று
அதிகார துஷ்பிரயோகத்தில் ஒன்று
மத்தியரசுக்கு நடைபாவாடை பிரிப்பதில் ஒன்று
பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் ஒன்று
ஏழை மக்கள் பிரச்சினைகளில் காட்டும் அலட்சியத்தில் ஒன்று
ஜாதிய ஆணவத்திற்கு இசைந்து போவதிலும் ஒன்று
என திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
வாக்காளர்களுக்கு காசு கொடுத்து வளைக்கப்பார்ப்பத்திலும் இரு கழகங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
ஆளும் கட்சி மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என்று அதிகாரப் பசியோடு நம்பிக் கொண்டிருந்த உடன்பிறப்புக்கள் தங்களின் கற்பனைக் கோட்டை சரிவதைக் கண்டு சமூக வலைத்தளங்களில் ஆபாசக் கூச்சலிடுகின்றனர். அவர்கள் கட்டவிழுத்து விடும் பொய் மூட்டைகளும் நாகரீகமற்ற வார்த்தைகளும் அவர்களின் தரம் தாழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
தேர்தல் சமயத்தில் கூட ஜெயலலிதாவை எதிர்க்க திராணியற்றவர்கள் என்பதையும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அதுவே அவர்களை மக்களிடத்திலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மாற்றம் நிகழும்.
மாற்றத்திற்கான விதை மக்கள் நலக்கூட்டணி உருவாக்கியது.