Friday, June 25, 2010

ஆற்காட்டாரை காணவில்லை.

காலை மிகச்சரியாக ஆறு மணிக்கு வருகை தந்திருந்த ஆற்காட்டாரை இரண்டு நாட்களாக காணவில்லை. இரண்டு
 மணி நேர அதிகாரபூர்வ மின்வெட்டும் அதிகாரபூர்வமற்ற அவ்வப்போது  நிகழும்  மின்சார வெட்டும் இரண்டு நாட்களாக இல்லை. காற்றாடி மின்சாரம் கூடுதலாய்   கிடைத்தது என்று
சொல்ல எந்த புயலும் அடிக்கவில்லை. நான் சொல்வது
வேலூர் நிலவரம் மட்டுமே. மற்ற ஊர்கள் பற்றி தெரியாது.
இதுவும் எத்தனை நாள் நீடிக்குமோ என்ற அச்சமும் உள்ளது.
 செம்மொழி மாநாடு நடக்கும்வரை தமிழின் ஆட்சி.
மாநாட்டிற்குப் பின்பு மீண்டும்   ஆற்காட்டார் அராஜகம்
 தொடங்கி விடும் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

தமிழக அரசு நினைத்தால் பன்னாட்டு கம்பெனிகள் போல மக்களுக்கும்    தடையில்லா மின்சாரம்     வழங்க  முடியும் என்பது தெளிவாகி விட்டது. 
லாவணி பாடுவதை விட்டுவிட்டு  இப்போது 
செய்வதை எப்போதும்   செய்யலாமே !

Thursday, June 24, 2010

ஒபாமாவிற்கு தெரியுது, மன்மோகனுக்கு தெரியல

பன்னாட்டுக் கம்பெனிகளின் தலைமை பீடமாக உள்ள
 அமெரிக்காவில்   ஒபாமா அங்கே உள்ள இன்சூரன்ஸ்
 கம்பெனிகளை எல்லாம் மருத்துவக்  காப்பீட்டு
பிரிமியத்தை உயர்த்தினால் நடப்பதே வேறு என்று
 மிரட்டுகிறார்.  சொந்த நாட்டு கம்பெனிகளாக இருந்தாலும்
மக்களை கொள்ளையடிப்பதில் ஒரு அளவு வேண்டும்
 என அவர் விரும்புகிறார் போலும். தன் நாட்டு
கம்பெனிகளின் யோக்கியதையும் அவருக்கு
 தெரிந்துள்ளது. அதனால்தான் அவ்வப்போது
 எச்சரிக்கை கொடுக்கிறார்.

ஆனால் இவர்கள் எல்லாம் இந்தியாவில் அதிகமாக
 ஊடுருவி இந்திய மக்களை கொள்ளையடிக்க அதிகம்
 ஆசைப்படுவது நம்ம நாட்டு பொருளாதார மேதை
 மன்மோகன்சிங். எல்லாம் தெரிஞ்ச நம்ம பிரதமர்
பன்னாட்டுக் கம்பெனிகளின் தில்லுமுல்லு பத்தி
 எப்போதான் தெரிஞ்சுக்கப் போறார்?

Saturday, June 19, 2010

இரவல் பேச்சாளர்கள்

முன்பு படித்த ஒரு துணுக்கு நினைவிற்கு வருகிறது. ஒரு அமைச்சர்   தன்னுடைய  செயலாளரிடம்   ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு பதினைந்து நிமிடங்களுக்கான உரையை தயார் செய்து தரச்சொல்லி இருக்கிறார். செயலாளரும் அப்படியே  அளித்துள்ளார். ஆனால் கூட்டத்தில் பேசுகையில் அமைச்சருக்கு நாற்பத்தி ஐந்து
நிமிடங்கள் ஆகி விட்டது. பின்பு  செயலாளரை சத்தம் போட்டார். அவர் நிதானமாக சொன்னார். உங்கள் உரைக்கு நான் மொத்தம் மூன்று பிரதிகள்   எடுத்துக் கொடுத்திருந்தேன். 

(இதற்கும் கயல்விழி அழகிரி கூட்டம் குறித்த இன்றைய 
ஜுனியர் விகடன் செய்திக்கும்   சத்தியமாக எந்த
 தொடர்பும் கிடையாது). 

Thursday, June 17, 2010

தோழர் சரோஜ் சவுத்ரி நினைவு நாள்.



இன்று அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர்  தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் பதினோராவது நினைவு நாள். இருபத்தி ஒன்பது ஆண்டுகள் பொதுச்செயலாளராகவும் ஆறு ஆண்டுகள் துணைத்தலைவராகவும் இரண்டாண்டுகள் தலைவராகவும் சங்கத்தை வழி நடத்திய ஒப்பற்ற தலைவர். சி.ஐ.டி.யு சங்கத்தின் அகில இந்திய பொருளாளராகவும் செயல்பட்டவர்.


எல்.ஐ.சி நிறுவனத்தின் துவக்கக் காலத்தில், நிர்வாகமும் அரசாங்கமும்  மூர்க்கத்தனமாக தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருந்த அக்காலத்தில்,  தகவல்  தொடர்பு, போக்குவரத்து வசதிகள் வளர்ச்சியடையாத அக்காலகட்டத்தில்  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை ஒரு வலிமையான அமைப்பாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.


சமூகம், பொருளாதாரம், மார்க்சியம், அனைத்து வித கலை வடிவங்கள் என அனைத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட அவரது அறிவாற்றல் நம்மை பிரமிக்க வைக்கும். ஆங்கிலம் மீதான அவரது ஆளுமைக்கு அவரது கட்டுரைகளும் சுற்றறிக்கைகளுமே சான்று. 

1990 ல் கட்டாக்கில் எங்களது அகில இந்திய மாநாடு நடந்தது. மாநாடு
முடிந்த மறுநாள் கோனார்க்கில் இருந்த சூரியன் கோயில்
 சென்றிருந்தோம்.  அங்கே வந்திருந்த தோழர் சரோஜ் அங்கே இருந்த
சிற்பங்களையும் உலகின் பல்வேறு சிறப்பு மிக்க சிற்பங்கள் பற்றியும்  நவீன சிற்பங்கள் பற்றியும் விளக்க விளக்க ' இந்த மனிதனுக்கு தெரியாத விஷயமே கிடையாதா" என்ற பிரமிப்பு
ஏற்பட்டதை மறக்கவே முடியாது.


படியுங்கள்,  தொடர்ந்து படியுங்கள்      என்பதே  அவர் அனைவருக்கும் 
 கூறும் அறிவுரை. அவர் இறுதியாக பங்கேற்ற ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டிலும் இந்த வாசகங்களோடுதான் அவர் உரை நிறைவு பெற்றது.


வியட்நாம் புரட்சி குறித்து 1975 ல் அவர் எழுதிய கட்டுரையின் கடைசி பத்திகளின் தமிழாக்கம் கீழே  


" பொருளாதார நெருக்கடி உள்நாட்டில் முற்றிய சூழலில் வியட்நாமில் அள்ளி அள்ளி இறைக்க இனியும் நிதி வழங்க  முடியாது
என அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது. மூன்றே வாரங்களில் பொம்மைக் கோபுரம் தரை மட்டமானது. அமெரிக்க டாலர்களாலும் அமெரிக்க வீரர்களாலும் கட்டப்பட்டிருந்த மணற்கோபுரம்தானே அந்த வியட்நாம் அரசு? 


விடுதலைக்காகவும்   சோசலிசத்திற்காகவும்  இப்புவியில் வியட்நாம் மக்கள் போல யாருமே போராடவில்லை. உலகின் வேறு எந்தப் பகுதி மக்களும் வியட்நாம் மக்களைப் போல கொடிய காட்டுமிராண்டித்தனத்திற்கு   உட்பட்டதில்லை.    முப்பது     நீண்ட  நெடிய  வருடங்கள்  தொடர்ச்சியாய் அயராது போராடியதில்லை.
 மன உறுதி,  பொறுமை, சவால்களை எதிர்கொள்ளல், தியாகம்  இவற்றில்  எல்லாம் வியட்நாம் மக்களை விஞ்சிடவே முடியாது.


முப்பது ஆண்டுகளாக வியட்நாம் மக்கள் தங்கள்  தாய் மண்ணை 
ரத்தத்தால் நனைத்து  வந்தனர். அவர்கள் வாழ்வில்  ஒரு புதிய 
அத்தியாயம் துவங்கியுள்ளது. ஒரு புதிய வியட்நாமை ஹோசிமின்  கனவு கண்ட  ஒரு புதிய உலகைப் படைக்கும்  பணியிலே ஈடுபட்டு  வருகின்றனர். இவ்வுலகிலே குழந்தைகள் பிச்சை எடுப்பதற்குப் பதிலாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  பெண்கள், கைப்பிடி  உணவிற்காக  தங்கள் உடம்பை விற்பதற்குப் பதிலாக ஆண்களோடு  
இணைந்து அணைகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள்  கட்டமைக்கும்  பணியில் ஈடுபட்டிருப்பார்கள். 


வாலிபர்கள்,   திருடர்களாக,  அடியாட்களாக,   பெண் தரகர்களாக   இருப்பதற்குப் பதிலாக தேச நிர்மாணத்திற்கான  உழைப்பை  அளிப்பார்கள்.  தங்களின் வாழ்வின்  இறுதிக்காலத்தில் டையம்*     மற்றும்  தையூ* வின் நாட்களைப் பற்றியும்  தேச விடுதலைக்காக தாங்கள் 
போராடியது பற்றியும்  அனைத்து மக்களின்  வாழ்நிலையும்  தங்களின் 
வாழ்க்கைக் காலத்திலேயே எவ்வாறு  மாறியது  என்றும்  அசை  போட்டுக் கொண்டிருப்பார்கள். 
(டையம், தையூ - அமெரிக்காவின் தலையாட்டி பொம்மைகளாய் வியட்நாமில்  கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்கள்)
 அங்கே புதியதோர் சோஷலிச உலகம் படைக்கப் படுகிறபோது  வாழ்வு  
தூரத்து தொடுவானம் ஆயிரம் வானவில்களால் வரையப்பட்டது போல 
அழகாக இருக்கும்.ரோஜாவின் இதழ்கள் மேல் விழுந்த பனித்துளி காலைக்கதிரவனின்  ரேகைகள் பட்டு மின்னுவது போல் இனிமையாக இருக்கும்.


நாமும் அத்தகைய வாழ்வை விரும்புவதால் வியட்நாமின் வரலாறு நம்மைப் போன்ற   உலகெங்கிலும் உள்ள    உழைப்பாளி  மக்களுக்கு எழுச்சி தருகிறது. நாம் நேசிக்கிற, போராடி அடைய விரும்புகிற வாழ்வு அவர்கள் கைவசம் வந்து விட்டது. அதுதான் வியட்நாம் நமக்கு உணர்த்துகிற அர்த்தம்.  வியட்நாமிற்கு நம் செவ்வணக்கம்.

தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களுக்கு செவ்வணக்கம்.

Tuesday, June 15, 2010

மறைக்க மறைக்க மேலெழும்பும் உண்மைகள்

மறைக்க மறைக்க மேலெழும்பும் உண்மைகள்
காங்கிரஸ் கட்சியும் மத்தியஅரசும் மண்ணை அள்ளி அள்ளி போடப் போட புதுப் புது எலும்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கிறது. அர்ஜுன் சிங்கை பலிகடாவாக்கி ராஜீவ் காந்தியின் செயல்பாடு பற்றி யாரும் பேசக்கூடாது என முயற்சிக்கிறது காங்கிரஸ் கட்சி. ராஜீவ் காந்திக்கு தெரியாமல் வாரன் ஆண்டர்சனை அர்ஜுன் சிங்கால் அமெரிக்காவிற்கு அனுப்பிவிட முடியுமா?
ராஜீவ் காந்தி என்ன மன்மோகன்சிங் போல டம்மி பீஸா என்ன? இறந்து போய் விட்டதால் அவரது அராஜகம் எல்லாம் மறந்து போய் விடுமா என்ன?  சர்வசாதாரணமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் ஏ.பி. வெங்கடேஸ்வரனை தூக்கிஎறிந்தவர்தானே  அவர்?  கொடூரமாகக் கொல்லப்பட்டதால் தியாகியாகி விட்டார். அவருக்குத் தெரியாமலேயே  ஆண்டர்சனை அமேரிக்கா அனுப்பி விட்டார்கள் என்பதெல்லாம் மக்களை    முட்டாளாக்கும் முயற்சி.

இன்று வந்துள்ள புதிய செய்தி அவரது அம்மா இந்திரா காந்தியை நோக்கியும்    குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவிலேயே காலாவதியான தொழில்  நுட்பத்துடன் கூடிய யுனியன் கார்பைட்    ஆலைக்கான அனுமதி அவசர நிலை   கொண்டுவரப்பட்ட மூன்று மாதங்களிலேயே தரப்பட்டுள்ளது என்பதுதான் அச்செய்தி.

ஒரு பழைய கவிதை நினைவுக்கு வருகிறது.

ஒரு குடும்பம்
தன சொத்துக்களை
தேசத்திற்கு அளித்து விட்டு
தேசத்தையே
தனது சொத்தாக்கிக் கொண்டது.

அக்கவிதையை இப்போது மாற்றிட வேண்டும்.

ஒரு குடும்பம்
தேசத்திற்காக
தங்கள் உயிர்களை அளித்ததாக
சொல்லிக்கொண்டே
தேசத்தையே
சுடுகாடாக மாற்றி விட்டது.

Friday, June 11, 2010

கதவை உடை, கால்பந்து பார்ப்போம்





கதவை உடை, கால்பந்து பார்ப்போம்

தொண்ணூறாம்   ஆண்டு  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நேரம் நான் எல்.ஐ.சி நெய்வேலி கிளையில் பணியாற்றி வந்தேன். அப்போது எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பில் நான்கு பேர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தது. ஒருவர் கிளை மேலாளர்.  அவர் வீட்டிற்குச்சென்று டி.வி   பார்ப்பதில் 
சில சங்கடங்கள் உண்டு. அடுத்து ஒரு மூத்த பெண் தோழர் வீடு. ஆனால் ஒய்வு பெற்ற அரசு அதிகாரியான அவரது கணவரை வழியில் எங்காவது பார்த்தாலே ஒரு பெரிய வணக்கம் சொல்லி விட்டு தப்பி விடுவோம். அவ்வளவு பெரிய அறுவை மன்னர். அங்கே சென்று மாட்டிக் கொள்ள முடியுமா? வாய்ப்பே இல்லை. இன்னொரு தோழர் அப்போதுதான் திருமணமானவர். அங்கே செல்வது அவ்வளவு நாகரிகமாக இருக்காது.

எஞ்சியது என் வீடு மட்டும்தான். அப்போது என் பெற்றோரும் டெல்லி, ஹரித்வார், காசி என வெளியூர் சென்றிருந்தால் விளையாட்டு  ரசிகர்களுக்கு என் வீடுதான் சரணாலயம். தோழர்களோடு   நேரத்தை செலவிடுவதை விட ஒரு கிளைச்செயலாளருக்கும் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!

அன்று பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே இரண்டாம்
சுற்றுப்போட்டி. அனைவருக்குமே மாரடோனாதான் நாயகன். ஒன்பது
மணிக்குப் போட்டி. அனைவரும் வேகவேகமாக சாப்பிட்டு போட்டியைப் பார்க்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊழியர் குடியிருப்புக்களுக்கு ஆட்டோமேடிக் பூட்டுக்களை
அமைத்திருந்தார்கள். சாவியை கையில் வைத்துக் கொள்ளாமல்
கதவு மூடிக்கொன்டால் உள்ளே ஆட்கள் இருந்தால் தப்பிக்கலாம்.
இல்லையென்றால் சிக்கல்தான். காற்று வேகமாக அடித்தால்
கதவு மூடிக்கொள்ளும் அபாயம் எப்போதும் உண்டு.

எட்டரை மணிக்கு அந்த விபரீதம் என் வீட்டிலும் நிகழ்ந்தே விட்டது.
கதவை திறந்து வைத்து விட்டு யாருடனோ வெளியே நின்று பேசிக்
கொண்டிருக்கையில் காற்று அடிக்க கதவு மூடிக்கொண்டது. ஒரு பெரிய குச்சி கொண்டு ஜன்னல் வழியாக சாவியை எடுக்க முயல
அது இன்னும் அதிக தூரத்திற்குச்சென்று விட்டது.

பூட்டு ரிப்பேர் செய்பவரை அழைத்து வரலாமா என்ற என் குரல்
எனக்கே கேட்பதற்கு முன்பு எங்கிருந்தோ சுத்தியலும் மற்ற உபகரணங்களும் வந்து சேர்ந்தது.பூட்டு உடைக்கப்பட்டது, கதவும்
கூட கொஞ்சம் உடைந்து போனது. எல்லாம் நாளைக்கு சரி செய்து
கொள்ளலாம் என்று உள்ளே நுழைந்தார்கள். தொலைக்காட்சியைப்
போட்டார்கள். மாரடோனா முகம் திரையில் தோன்றியது. விசில்
அடிக்காத குறை மட்டும்தான். மற்றபடி எந்த  ஆரவாரத்திற்கும்
குறைவில்லை.

அந்தப்போட்டி விறுவிறுப்பாக இருந்ததும் அர்ஜென்டினா ஒரு கோல்
அடித்து வெற்றி பெற்றதும் ஒரு சின்ன ஆறுதல். ( கடைசியில் அந்தக்
கதவை சரி செய்ய மூன்று நாட்கள் ஆனது.)









Thursday, June 10, 2010

வழி மறித்த உளவுத்துறை

வழி மறித்த உளவுத்துறை
அது 1998 ம் ஆண்டு. ஹைதராபாத்தில் எங்கள் 
சங்கத்தின் அகில இந்திய மாநாடு. மாநாட்டின்
 இறுதி நாளில்    மாநாடு  முடிய     மதியம் மூன்று 
மணிக்கு மேலாகி விட்டது. அதற்குப்  பின்பு  மதிய உணவை முடிக்கையில் மாலை
 நான்கு மணி.   ஹைதராபாத் வரை வந்து
சார்மினார் பகுதியில் வளையல்
வாங்காவிட்டால் குடும்பத்தில் குழப்பம்
 வரும் என்று சில தோழர்கள் சொல்ல
 எங்கள் கோட்டத்திலிருந்து வந்த ஒரே
மகளிர் தோழரும் வழிமொழிய
ஆட்டோக்கள் பிடித்து சார்மினார்
சென்றோம். மாலை ஆறு முப்பதிற்கு
 எங்கள் ட்ரெய்ன். அவசரம்
அவசரமாக வாங்க வேண்டியதை
 எல்லாம் வாங்கி தங்குமிடத்திற்கு
வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு
 செகந்தராபாத் ரயில் நிலையம்
விரைகிறோம். பெண் தோழர் தங்கியிருந்த
 வேறு இடத்திலிருந்து அவருடைய
பொருட்களோடு வர ஒரு தோழரை
அனுப்பி விட்டோம்.

நாங்கள் ரயில் நிலையம் வருகையில்
 பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தது.
 மற்றவர்கள் அனைவரும் சென்னை
 செல்ல நான் மட்டும் என் அக்கா
வீட்டிற்குச்செல்ல விஜயவாடா
 செல்ல வேண்டும். 

ரயில் புறப்பட்டு விட்டது, இரு தோழர்கள்
மட்டும் வந்து சேரவில்லை.  பதட்டம் 
அதிகரித்துக்கொண்டே இருந்தது. ட்ரெய்ன்
 வேகம் எடுப்பதற்கு முன் வந்து
சேர்ந்தார்கள். ஏதோ ஒரு  பெட்டியில்
 அவர்களை   ஏற்றி  விட்டேன். அவர்கள்
 வந்த ஆட்டோவிற்கு பணம்
தரவில்லை என்றும் என்னைக்
 கொடுக்கச்சொல்லி விட்டு அவர்கள்
சென்று விட்டனர்.

அந்த ஆட்டோ தொழிலாளியின் முகத்தை
 நினைவில் கொண்டு வந்து
 செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு
 வெளியில் சுற்றி சுற்றி தேடிக்
 கொண்டிருந்தேன். இத்தேடல் அரை மணி
 நேரத்திற்கும் மேல் நீடித்தபோது
 திடீரென ஒரு கரம் வழி மறித்து
 அதிகாரத்தோடு யார் நீ என
ஆங்கிலத்தில்  கேட்டது. அதே திமிரோடு
 அதே கேள்வியை நானும் கேட்டேன்.
 அந்த உருவம் ஒரு அடையாள
அட்டையை நீட்டியது. ஆந்திர மாநில
உளவுத்துறையின் டி.எஸ். பி அவர்.
நான் யாரென்றும்  ரயில் நிலையத்திற்கு
 வெளியே அலைந்ததன் காரணத்தையும்
 விளக்கிய பின் அவர் ஒரு தகவலை 
 சொன்னார்.

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் 
வெடிகுண்டு இருப்பதாக ஒரு 
புரளி வந்ததால் ஐம்பதிற்கும் மேற்பட்ட
 காவலர்கள் மப்டியில்  உள்ளதாகவும் 
அங்கே, இங்கே என அலைந்து
 கொண்டிருந்த என் மீது சந்தேகம் 
ஏற்பட்டதாகவும் கூறிய அவர்
என்னுடைய ட்ரெய்ன்  வரும்வரை 
ஒரே இடத்தில் அமர்ந்து 
கொள்ளுமாறும் கூறினார்.
எட்டு மணி முதல் பத்து மணி வரை
 அசைவே இல்லாமல் அமர்ந்து
விட்டு என்னுடைய வண்டி வந்ததும் 
புறப்பட்டேன். 

ரயில் நிலையங்களில் புகை பிடிக்கக்
கூடாது என்ற சட்டம் அப்போது
இல்லாதது நேரத்தைப் போக்க
 உதவியது. அந்த ஆட்டோ
தொழிலாளிக்கு பணம் தரவில்லை
 என்பது மட்டும் இன்றுவரை மனதை
 உறுத்திக் கொண்டே உள்ளது.



 ௦  

Wednesday, June 9, 2010

முதல் கவிதை

முதல் கவிதை

மதுரையில் கல்லூரியில் படித்த காலம், சென்னைப்
பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ தேர்விற்குக் கடைசி
நிமிடத்தில் பணம் கட்டி ஹால் டிக்கெட் எப்போது
வரும் என்று தவிப்போடு ஒவ்வொரு நாளும்
காத்திருந்த      நேரம்  அது.  அந்தத் தேர்வின் மூலமாகவே
சென்னைப்பட்டினத்தை முதல் முறையாக பார்க்கத்
துடித்த பட்டிக்காட்டு மனோபாவத்தில் இருந்த
அந்த நாளில் கவிதை ஒன்று தோன்றியது.

ஞாயிற்றுக் கிழமை

வழிதோறும் விழிவைத்து
வராத கடிதத்திற்கு
ஏங்கி விடும்
ஏக்கப் பெருமூச்சு
இல்லாத ஒரே நாள்

கல்கியில் மாணவர் பக்கத்தில் பிரசுரித்து பத்து ரூபாய்
 பணம் வேறு அனுப்பி விட்டார்கள். ஆனால் ஒரு
 வில்லங்கமும் கூடவே வந்து சேர்ந்து விட்டது. கவிதைக்குப்
 பக்கத்தில் ஒரு பெண்ணின் நெடிய கண்களின் படத்தினை
 வேறு போட்டு விட்டார்கள். ஆகவே நான் எப்படிப்பட்ட
 கடிதத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் என்ற கேள்வி,
 விசாரணைக் கமிஷன்கள்  எல்லாமே வேறு
வந்து விட்டது. கவிதை மீதான ஆர்வமும்
 வடிந்து விட்டது.

Monday, June 7, 2010

அயோக்கியத்தனம் என்பது மென்மையான வார்த்தை






அயோக்கியத்தனம் என்பது மென்மையான வார்த்தை

நெஞ்சு பொறுக்கவில்லை இந்த நிலை கெட்ட    தீர்ப்பை    படிக்கையிலே. 25 வருடங்கள் கடந்த பின்பு இப்படி ஒரு தீர்ப்பு! போபால் விஷ வாயு விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைட் கம்பெனிக்கு வெறும் ஐந்து லட்சம் ருபாய் அபராதம், எட்டு பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை. அந்தப் பட்டியலில் அமெரிக்க முதலாளி வாரன் ஆண்டர்சன் பெயரே இல்லை. அந்த நீதிபதி  மன்மோகனை விட மிகப்பெரிய அமெரிக்க விசுவாசி போலும்.  அந்த எட்டு பெரும் கூட இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் பிணையில் வெளியே வந்து விட்டனர்.

15 ,000  பேர் உயிரைக்குடித்து பல லட்சம் மக்களை முடமாக்கி இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப்பின்னும் இன்னமும் நடைப்பிணமாய்  அலைய விட்டுள்ளது யூனியன் கார்பைட் கம்பெனி. அதற்கு இன்று பரிசு கொடுத்துள்ளது போபால் நீதிமன்றம். நீதியின் பெயரால், சட்டத்தின் பெயரால் புரிந்துள்ள
 அராஜகம் இது. எங்களுக்கு நியாயம் வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட மக்களின் 
குரல் எப்படி மத்தியஅரசின் செவிகளை எட்டவில்லையோ அது போல் நீதி மன்றத்தின்
 காதுகளுக்கும்  கேட்கவில்லை. கண்கள் மறைக்கப்பட்ட நீதி தேவதையின் செவிகளும் அடைக்கப்பட்டிருந்ததோ, அதனால்தான் சாமானிய மக்களின் மரண ஓலம் கேட்கவில்லையோ!  470 மில்லியன் டாலர் வாங்கி அத்தோடு கைகழுவிக் கொண்ட மத்தியரசு அதனையும் கூட பாதிக்கப்பட்ட ஆறு லட்சம் மக்களுக்கு முறையாக அளிக்கவில்லை. இந்தப் பணத்தில் எத்தனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் தங்களது எதிர்காலத் தலைமுறையின் வளமான வாழ்வை உறுதி செய்து கொண்டார்களோ?

இதனை அயோக்கியத்தனம் என்றோ மோசடி என்றோ அழைப்பது மென்மையாகவே இருக்கும். இந்த தீர்ப்பிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் என்பது அவசியம்.

இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. போபால் லட்சணமே இப்படி என்றால் நாளை அணு விபத்து ஏற்பட்டால்?

இப்படி யாரும் கேட்கக்கூடாது என்பதற்காகவே அணுசக்தி பொறுப்பு மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது மத்தியரசு. என்னவொரு தொலைநோக்குப் பார்வை!  திட்டமிட்ட படுகொலை நிகழ்த்த துடிக்கிறது அரசு,

அய்யா  கோடீஸ்வர எம்.பிக்களே, ஒரு    வேளை   உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அன்று ஒரு நாள் மட்டுமாவது நாடாளுமன்றம் போய் எதிர்த்து ஒட்டு போடுங்களேன்! இந்த வேண்டுகோளைக்கூட  அண்ணன் அழகிரியிடம் முன்வைக்க பயமாயுள்ளது.



  


இதயமற்ற கயவனுக்கு எங்கிருந்து வந்தது நெஞ்சு வலி?

அதிகார துஷ்பிரயோகம் செய்து ஒரு பெண்ணை மரணத்திற்குத் துரத்திய
கயவன், ஒரு குடுமபத்தின் நிம்மதியைக் கெடுத்த படுபாவி ரத்தோருக்கு 
சிறை தண்டனை அதிகமான பின்புதான் நெஞ்சு வலி வந்ததாம்! ஏன் எல்லா 
பெரிய மனிதர்களுக்கும் சிறைக்குப் போகும் நேரத்தில் மட்டும் நெஞ்சு வலி
வந்து விடுகிறது? கிட்னியோ மூளையோ பாதிக்காதா? எங்கே வலி என்று
சொல்லுகிறார்களோ அங்கே ஒரு ஆபரேஷன் செய்து விட்டால் அடங்கிப்
போய்விடுவார்கள்...

Sunday, June 6, 2010

ஓராண்டு கொண்டாட்டம் நடத்தி மதிப்பெண் பட்டியல் வெளியிட்டுள்ளார் மன்மோகன்சிங். நாம் என்ன மதிப்பெண் தரலாம்?


ஓராண்டில் என்ன செய்துள்ளார் மன்மோகன்சிங்?


விலைவாசி குறையவில்லை, அதிகமாகிக்கொண்டேதான் போகிறது, பெட்ரோல் டீசல் கேஸ் விலை வேறு இனி உயர்ந்து கொண்டே இருக்கப்போகிறது,
தேசத்தின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்கள் விலை போய்க்கொண்டே 
இருக்கிறது.
மகளிர் மசோதா சொதப்பல் தொடர்ந்து கொண்டே உள்ளது,
மாவோயிஸ்டுகள் வன்முறை நிகழ்ந்து கொண்டே உள்ளது, ஆதரிக்கும் மம்தாவும்
ஆட்சியில்தான் இருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம், ஐ.பி.எல், ஆந்திரா, கர்நாடகா சுரங்கங்கள் என தொட்டதில் எல்லாம்
ஊழல் நாற்றம், 
அதிகப்பிரசங்கியாய்  அலட்சியமாய் அமைச்சர்கள் 
அமெரிக்க காலடியே சரணம் என்று ஒரு ஆட்சி!
பூஜ்ஜியத்தை தவிர வேறு என்ன தர முடியும்?