Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Sunday, April 23, 2023

ஆட்டுக்காரனை அசிங்கப்படுத்துதா விகடன்?

 


உண்மையான கர்னாடக சிங்கம் வந்தது என்று சொல்வதன் மூலம் ஆட்டுக்காரன் ஒரு டுபாக்கூர் கர்னாடக சிங்கம் என்று சொல்லி அசிங்கப் படுத்துகிறதா விகடன்?

Thursday, September 24, 2020

பழசு எப்படியோ! புதுசு பொருத்தமாகவே

 பழைய படம், புதிய ஜோக்

 கீழேயுள்ளவை ஒரு தோழர் வாட்ஸப்பில் அனுப்பி வைத்தது.

 


ஆனந்த விகடனின் பழைய அட்டைப் பட ஜோக்குகளை இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல மாற்றியுள்ளார்கள்.

 அதனை ஆனந்த விகடனே செய்ததா இல்லை வேறு யாராவது செய்தார்களா என்று தெரியவில்லை.

 இந்த இரட்டை கொடுந்துயர் காலத்தில் (கொரோனா காலம் + மோடி காலம்) கொஞ்சமாவது இளைப்பாறிக் கொள்ள இவை உதவும்.


























Sunday, August 16, 2020

விகடனும் பயப்படுமில்ல !!!!

 

எழுத்தாளர் வினாயக முருகன், சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து  ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதிலே சில பகுதிகள் எடிட் செய்யப்பட்டுவிட்டது என்று அந்த பகுதிகளை முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்த விகடன் கட்டுரையோடு ஒப்பிட்டு பார்த்தேன்.

ஆனந்த விகடன் கட்டுரையில் நீக்கப்பட்டிருந்த பகுதிகள் இவைதான்.

இதுபோன்ற விஷமற்ற ஜந்துக்களை பகிர்பவர்கள் ஒருபக்கம் என்றால் சீன விமானநிலையத்தை காட்டி அதை குஜராத் பேருந்துநிலையம் என்று சொல்பவர்கள். ஒரு வெள்ளைப்பலகையில் இரண்டும் இரண்டும் ஆறு என்று ஏதாவது பொய் பித்தலாட்ட கணக்கை எழுதி அதை வீடியோவாக எடுத்துப்போட்டு அவதூறு செய்பவர்கள் என்று இன்னொருப்பக்கம். இரண்டாவது வகையினர்தான் இப்போது சமூக ஊடகங்களை முழுவதும் ஆக்கிரமித்து நடப்பு தகவல்களை மட்டுமல்ல எழுதப்பட்ட வரலாற்றையே கூட மாற்றும் அளவுக்கு ஆபத்தாக பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக ஜோதிகா பள்ளிக்கூடம்,கோவில் பற்றிய கருத்துக்கு ஒருத்தர் வந்து இப்படி பின்னூட்டமிடுவார். கோவிலை மட்டும் சொல்றீங்க. ஏன் மசூதி, சர்ச் பற்றி சொல்லமாட்டேங்கறீங்க.

ஒரு வரலாற்று நிகழ்வை எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் மீண்டும் ஓர் ஆதாரமற்ற பொய்ச்செய்தியை தூக்கிக்கொண்டு வந்து கேள்விகேட்பார்கள். பெரியார் ஒரு சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார் என்று அடம்பிடிப்பார்கள். அப்போது மணியம்மை வயது இருபத்தேழு என்றாலும் ஒத்துக்கொள்வார்கள். ஓஹோ அப்படியா என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். பிறகு சிலமாதங்களில் மீண்டும் வந்து அதே கேள்வியை கேட்பார்கள்.

ஆக மொத்தம் பார்த்தால் அவர்கள் நீக்கியது எல்லாமே சங்கிகளை அம்பலப்படுத்தி எழுதப்பட்டவைதான். அதிலே போர்ட் தாஸ் பற்றி வேறு உள்ளது. 

நியூஸ் 18 நிகழ்வுகளைப் பார்த்த ஆனந்த விகடனுக்கு பயம் வராதா என்ன?

வானளாவிய அதிகாரம் கொண்ட பி.ஹெச்.பாண்டியனுக்கெல்லாம் அஞ்சாத விகடன் டுபாக்கூர் மாரிதாஸுக்கெல்லாம் பயப்படுவது காலக் கொடுமை. 

Saturday, May 23, 2020

ஆ.வி முதலாளிக்கு சமர்ப்பணம்



இந்த வருடம் புத்தக விழாவில் வாங்கிய "சினிமா சந்தையில் 30 ஆண்டுகள்" என்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூலில் விகடன் குழும நிறுவனர் திரு எஸ்.எஸ்.வாசன் அவர்களைப் பற்றி கவியரசு எழுதியிருந்ததை படித்தது நினைவுக்கு வந்தது. 

அதனை இன்றைய முதலாளி பா.சீனிவாசனுக்கு சமர்ப்பிக்கிறேன்.














விகடன் - மதன் கடிதமும் நீக்கமும்


விகடன் பற்றிய நேற்றைய பதிவை படித்து விட்டு ஒரு தோழர், மதன் பிரச்சினை என்ன என்று கேட்டார். அனாமதேயமாகவும் ஒருவர் கேட்டிருந்தார்.

அந்த பிரச்சினை நினைவில் இருந்தாலும் மதனின் கடிதமும் அதற்கு ஆசிரியர் ரா.கண்ணன் அளித்த பதிலும் வார்த்தைக்கு வார்த்தை நினைவில் இல்லை.

இணையத்தில் தேடினேன். கூகுளாரின் உதவியோடு அது கிடைத்தது.

அது இங்கே

விகடன் நிர்வாகத்துக்கும் மதனுக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார். ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. 

கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர். இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது. 

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்: 

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்? 

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு! 

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது. 

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 

"பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை. 

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது! 

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும். முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன். ...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் 

தனது கடிதத்தில். மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்... இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது... 

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. 'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை. அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது. நடுநிலை இல்லை...

 இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான். எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.

ம்ம்ம்ம், எப்படி இருந்த விகடன் இப்படி ஆயிடுச்சே!

தகவலுக்கு நன்றி tamil.oneindia.com தளம்

Friday, May 22, 2020

விகடன் கெத்து எங்கே போச்சு?

கொரோனாவை பயன்படுத்தி 176 பேரை விகடன் குழுமம் வீட்டிற்கு அனுப்பிய செய்தி வருத்தமளித்தது என்றால் அங்கே பணியாற்றியவரின் கடிதம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

விகடனின் நீண்ட கால ஆசிரியர் மதன், தான் எழுதி வந்த கேள்வி பதில் பகுதியில் ஜெ வின் படத்தை வெளியிட்டதால், ஜெயா டி.வி யில் தான் நடத்தும் நிகழ்ச்சிக்கு பாதிப்பு வரும், எனவே ஒரு விளக்கச் செய்தி வெளியிட வேண்டும் என்று சொன்னதற்கு

"இனிமேல் உங்கள் எழுத்தே விகடனுக்கு அவசியமில்லை" என்று ஊடக அறம் பேசிய ஆனந்த விகடனா இப்படி மதத்தை பார்க்கிறது என்ற அதிர்ச்சி இது. 

அன்று மதனிடம் காண்பித்த கெத்து இப்போது எங்கே போனது?

எஸ்.எஸ்.வாசன், எஸ். பாலசுப்ரமணியன் காலத்தை நினைவு கொள்கிறேன். வானளவு அதிகாரம் கொண்ட சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனை எதிர் கொண்ட பத்திரிக்கை, ஏன் இன்று சங்கிகளுக்கு நடுங்குகிறது?

நிர்வாகம் கை மாறி, ஆசிரியரும் மாறிய காரணத்தாலா?

எது எப்படியோ விகடனின் போக்கு, அது பணி நீக்கமாக இருந்தாலும் சரி, பத்திரிக்கையாளரின் மதத்தை வைத்தே வாசகர்கள், கட்டுரையை எடை போடுவார்கள் என்ற சிந்தனையாக இருந்தாலும் சரி, இரண்டுமே தவறு.

விகடன் விருது பெற்ற பலர் அதனை திரும்ப அளித்துள்ளனர். இந்த எதிர்வினையைக் கண்டாவது விகடன் தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளட்டும். 


Ilyas Muhammed Raffiudeen பதிவு
நான் கடந்த மார்ச் மாதம் விகடன் நிறுவனத்தின் பணிகளில் இருந்து விலகினேன். அதற்கான காரணத்தை, கடிதமாக விகடன் குழுமத்தின் ஆசிரியர் ச.அறிவழகனுக்கும், அதன் நகலை நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசனுக்கும் அனுப்பியிருந்தேன்.

தற்போது அதனைப் பொதுவெளியில் வெளியிடுகிறேன்.
------------------------------------
வணக்கம் சார்,
கடந்த மார்ச் 16 அன்று, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட எனது பணி விலகல் தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் அளித்த பதில் கடிதத்தின்படி, கடந்த ஏப்ரல் 15 அன்று விகடன் குழுமத்தின் பணிகளில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். ஊடகத்துறையில் எனது முதல் அனுபவமாக அமைந்தது விகடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு அனுபவங்களை இந்தப் பணியில் கற்றுக் கொண்டேன். விகடன் குழுமத்தின் ஊழியராக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்திருந்த போதும், இந்த நிறுவனத்திற்கும் எனக்குமான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு, சுட்டி விகடன் இதழின் ‘பேனா பிடிக்கலாம்; பின்னி எடுக்கலாம்’ திட்டத்தின் கீழ் சுட்டி ஸ்டாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு, நான் முயன்றும் என்னால் இந்தத் திட்டத்தில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது இருந்தே ஊடகத்துறை மீதான ஈர்ப்பினால், எனது இளங்கலை, முதுகலை ஆகியப் பட்டப்படிப்புகளில் இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 2018ஆம் ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்திலும், அதன்பிறகு விகடன் ஊழியராகவும் பணிபுரிந்தேன். ஊடகத்துறை மீதும், இதழியல் மீதும் எனது சிறுவயதிலேயே ஈர்ப்பை உருவாக்கிய விகடன் குழுமத்தில் பணியாற்றியது என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது. தற்போது மிகுந்த மன வருத்தத்துடன் நான் மிகவும் நேசித்த ஊடகத்துறையை விட்டும், அதுகுறித்த விதையை என்னுள் விதைத்த நிறுவனத்தை விட்டும் வெளியேறுகிறேன்.

எனது பணிவிலகல் தொடர்பாகத் தங்களிடம் பேசிய போது, Freelance செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள். அதை நானும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். அதன்பிறகு, நீங்கள் சொன்னவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘ர.முகமது இல்யாஸ்’ என்ற எனது பெயரை, கட்டுரைகளில் இடம்பெறச் செய்தால் ’வாசகர்கள் முன்முடிவோடு கட்டுரையை அணுகக் கூடும்; பி.ஜே.பிக்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உங்கள் பெயரை வைத்து முடிவு செய்துவிடுவார்கள்’ என்று கூறினீர்கள். மேலும், எனது பெயருடன், மற்றொரு நிருபரின் பெயரையும் சுட்டிக்காட்டி, அவரது கட்டுரைகளுக்கும் இந்தப் பிரச்னை பொருந்தும் என்றும் நீங்கள் சொன்னது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் ஏப்ரல் 15 அன்று பணியில் இருந்து விலகும் போது, தங்களிடம் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். எனினும், கொரோனா லாக்டௌன் பிரச்னையால் அது நடைபெறவில்லை. அதனால் எனது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிறேன்.

உங்கள் வாதப்படி, முஸ்லிம் பெயரில் நான் எழுதும் கட்டுரைகளில் வாசகர்கள் ‘பி.ஜே.பி எதிர்ப்புக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்தால், இந்துப் பெயரில் பிறர் எழுதும் கட்டுரைகளை வாசகர்கள் ‘பி.ஜே.பி ஆதரவுக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்வார்களா என்று தெரியவில்லை. பி.ஜே.பியின் 40 ஆண்டு குறித்து கடந்த ஏப்ரல் 6 அன்று, நான் எழுதிய கட்டுரையில் எனது பெயரைச் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருந்தார்கள். எனது கட்டுரைகளில் இந்தியா மதப் பெரும்பான்மைவாதத்தை நோக்கி நகர்வதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதில் இருந்து எனது பெயரை நீக்கி, பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவாக செயல்படவே விரும்புகிறீர்கள். தங்களைப் போன்ற நீண்ட கால அனுபவம் ஏதும் எனக்கு இல்லையென்ற போதும், இதுதான் நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் நடுநிலைமையா என்று கேட்கத் தோன்றுகிறது.

நடுநிலைமை குறித்தும் எனது கட்டுரைகளில் தங்களுக்கு விமர்சனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனக் குழு தொடர்பாக ஜூ.விக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தப் பிரச்னை வெளிப்பட்டது. “The job of the newspaper is to comfort the afflicted and afflict the comfortable” என்ற இதழியல் தொடர்பான பிரபல வாசகத்தை, முதுகலைப் பட்டப்படிப்பின் போது, எனது ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தனர். என்னால் இயன்ற வரை, அதன்படி செயல்படுகிறேன். சர்வ வல்லமை பொருந்திய, நிறுவனமயமாக்கப்பட்ட அரசுக் கட்டமைப்பையும், உதிரிகளாகப் எந்த நிறுவனப் பிடிப்பும் இல்லாமல், பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கும் எளிய மக்களையும் என்னால் ஒரே தராசு கொண்டு அணுக முடியவில்லை. பாதிக்கப்பட்டவனிடமும், பாதிப்பை ஏற்படுத்தியவனிடமும்  கருத்து கேட்டு பதிவுசெய்வது மட்டுமே இதழியல் என்று  நான் கற்றுக்கொள்ளவில்லை.

நான் மேலே குறிப்பிட்டவற்றுள், தங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம்; இவை மிகச் சாதாரண ஒன்றாகத் தோன்றலாம். எனினும், இது என்னுடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு. ஒரு மனிதனாக, சக ஊழியனாகத் தங்களுடன் நான் பணியாற்றிய போதும், எனது மதிப்பு என்பது முதலில் எனது கருத்தாகவும், பிறகு எனது பெயராகவும், எனது பெயரில் இருக்கும் சிறுபான்மை மத அடையாளமாகவும் சுருக்கப்பட்ட பிறகு என்னால் இங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. பிற ஊடகங்களிலும், எனக்கு இதே பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்தத் துறையை விட்டு தற்போது தற்காலிகமாக விலகுகிறேன். நான் கற்றுக்கொண்ட இதழியல் பண்புகளை எனது தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளேன்.

தங்களுக்குக் கீழ் பணியாற்றியதில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். பணியில் சேர்ந்த முதல் நாளில், நான் வேலை செய்த முதல் கட்டுரை infograph ஒன்றை அச்சிடச் செய்து, அதில் நீங்கள் செய்து தந்த பிழைதிருத்தங்களை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பதையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

இதழியல் துறை பெரும்பான்மைவாதத்திற்குப் பலியாகியுள்ளது.
எனது பணிவிலகல் அதற்கு ஓர் சான்று.

மிகுந்த மன வருத்ததுடன்,
ர. முகமது இல்யாஸ்.
(இது மட்டுமே எனது பெயர்; எனக்கு வேறு புனைப்பெயர்கள் கிடையாது)
20/04/2020

Ilyas Muhammed Raffiudeen