Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, August 29, 2025

புத்தக விழாவிற்கு செல்லாமலேயே நல்ல வேட்டை

 


புத்தக விழாவிற்கு செல்லாமலேயே நல்ல வேட்டை

சென்னை புத்தக விழா தொடங்க இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன. ஆனால் அதற்கு முன்பே வழக்கமாக சென்னை புத்தக விழாவில் வாங்கும் அளவிற்கு புத்தகங்கள் வந்து குவிந்துள்ளன.

எல்லாம் பணி ஓய்வை முன்னிட்டு தோழர்கள் அளித்த அன்புப் பரிசுகள். 

பணி ஓய்வு நாளுக்கு சில நாட்கள் முன்பாகவே ஒரு அலுவலக வேலையாக வேலூர் வந்திருந்த ஒரு தோழர் அளித்த கடுகு எழுதிய "கமலாவும் நானும்" நூல்தான் முதல் வரவு. முதல் போணி மிகவும் ராசியாக அமைந்து விட்டது. 


எங்கள் கோட்டத் தோழர்கள், பிற கோட்டத் தோழர்கள், ஓய்வூதியர்கள், பிற சங்கத் தோழர்கள் என ஏராளமான நூல்கள் வந்து குவிந்தன.  

அதனை பட்டியலிட்டு அதற்கான இடத்தை கண்டுபிடித்து அடுக்கி வைக்கும் வேலை இன்றுதான் முடிந்தது.

சேலத்தில் நடந்த தென் மண்டல மாநாட்டில் இரண்டு நூல்கள் வாங்கினேன். எங்கள் கோட்ட மாநாட்டிலும் ஒன்று வாங்கினேன். முன்னாள் எல்.டி.டி.இ போராளி சாத்திரி எழுதிய ஆயுத எழுத்து 2 ம் பாகத்தை வரவழைக்க பாரதி புத்தகாலயம் தோழர் சிராஜுதீன் அவர்களிடம் பேசிய போது முன்பதிவு செய்திருந்த "சே குவாரா" நூல்கள் வரவில்லை என்பதை குறிப்பிட அவர் அதையும் அனுப்பி வைத்தார்.




பட்டியல் இங்கே . . .


விபத்து நடந்து வீட்டில் சிகிச்சையில் இருந்த போது பார்க்க வந்த தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர்கள் தோழர் கே.சுவாமிநாதன் அளித்த நூல், தோழர் டி.செந்தில்குமார் அளித்த இரு நூல்கள், எங்கள் கோட்டப் பொறுப்பாளர்கள் தோழர்கள் கே.வேலாயுதம், தோழர் ப.முத்துக்குமரன் அளித்த நூல்கள் தனி. அவற்றை படித்து முடித்த காரணத்தால் பட்டியலில் இல்லை.

புகைப்படத்தை பார்த்தால் ஒன்று தெரியும். ஒரே நூலை மூவர் அளித்துள்ளனர்.  நல்ல வேளையாக மூன்று நூல்கள் மட்டும்தான் ஏற்கனவே படித்தவை. மற்றவை எல்லாம் இது வரை படிக்காத நூல்கள்தான். அனைத்து விதமான நூல்களும் வந்துள்ளன.

இத்தனை அன்பிற்கும் எப்படி நன்றி சொல்ல! 

அனைத்தையும் படித்து முடிப்பதன் மூலம்தான் . . .

பிகு: பட்டியலில் இல்லாத "சந்திரஹாசம்" நூலின் படம் ஏன் இங்கே என்ற கேள்வி எழலாம். பணி ஓய்வுக்குப் பிறகு சேலத்தில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டிற்குச் சென்ற போது முதல் நூலை படித்து முடித்து விட்டேன். அதற்குப் பிறகு ஒரு பெரிய தொய்வு, சோர்வு, சுணக்கம் எல்லாம். அதனால் வேகமான ஒரு நூலை படிப்போம் என்று அதனை எடுத்து ஒரே நாளில் படித்து முடித்தேன். அதன் பிறகு மீண்டும் பழைய வாசிப்பு வேகம் வர மூன்று நாட்களில் இரண்டு நூல்களை முடித்து விட்டேன். 

ஆமாம் தோழர் சு.வெ, சந்திரஹாசம் இரண்டாம் பாகம் என்ன ஆனது?


Wednesday, August 27, 2025

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல் திருமணம் புதிதல்ல . . .

 


காதல் திருமணங்களை எங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்திக் கொள்ளலாம் என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் சொன்னது முதல் பலரும் பதறிக் கொண்டிருக்கிறார்கள். 

திருமண மண்டபம் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னது போல மார்க்சிஸ்ட் கட்சியின் எதிரிகள் வழக்கம் போல திசை திருப்பி மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள். காதல் திருமணம் நடத்த எங்களின் ஆதரவு முழுமையாக இருக்கும் என்பதுதான் தோழர் பெ.சண்முகம் சொன்னதன் அர்த்தம்  என்பது அவர்களுக்கு புரியும் என்பதுதான் அர்த்தம்.

காதல் திருமணங்களை, ஜாதி, மத மறுப்புத் திருமணங்களை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலரும்  செய்துள்ளனர், நடத்தியும் வைத்துள்ளனர். கட்சி மாநாடுகளில் திருமணம் நடந்துள்ளது. ஏன் வெண்மணி நினைவு நாளில் வெண்மணி தியாகிகள் அஞ்சலிக் கூட்டத்திலே கூட திருமணம் நடந்துள்ளது.

ஜாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவாக நின்றதால் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்தை சில ஜாதிய சகதிகள் அடித்து நொற்க்கினார்கள். 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு திருமணம் நினைவுக்கு வந்தது, கசப்பான மனிதர்களையும் சேர்த்து. ஒரு காதல் ஜோடிக்கு அவசர திருமணம் செய்ய சில கோயில்களில் விசாரிக்கிறோம். அவர்கள் சொன்ன விதிகளை பின்பற்றினால் நாங்கள் நினைத்த காலத்திற்குள் திருமணம் செய்ய இயலாது.

கட்சி அலுவலகம் சென்று யோசிப்போம் என்று கட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது எனக்கு தோன்றிய யோசனைதான் ஏன் இன்றைக்கே கட்சி அலுவலகத்திலேயே திருமணம் செய்யக்கூடாது என்பது. 

அன்று ஞாயிற்றுக் கிழமை. மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மதிய உணவுக்காக செயற்குழுத் தோழர்கள் இறங்கி வந்த போது அந்த யோசனையை சொன்ன போது அப்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஆர்.புருஷோத்தமன், நாங்கள் முதலில் சாப்பிட்டு வருகிறோம். பிறகு பேசிக் கொள்வோம் என்றார்.

பிறகு அவர் இருவரிடமும் "நீங்கள் இருவரும் மேஜர்தானே, இங்கே இன்றே திருமணம் செய்து கொள்ள விருப்பம்தானே, உங்களை யாரும் நிர்ப்பந்திக்கவில்லையல்லவா?" என்றெல்லாம் கேட்டு பதில்களில் திருப்தி அடைந்த பிறகு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இருவரின் கிளைச் செயலாளர்களுக்கும் தகவல் கூறுமாறு எங்கள் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளரும் அன்றைய மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் ஆர்.ஜெகதீசன் சொன்னார்.

உடனடியாக என்னுடைய டி.வி.எஸ் பிப்டியில் சென்று புத்தாடைகள், மாலைகள், தங்கத்தாலி, இனிப்புக்கள் எல்லாம் வாங்கி வந்தோம். முன்னாள் எம்.எல்.ஏ வும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான தோழர் கே.ஆர்.சுந்தரம் அவர்களின் தலைமையில் திருமணம் நடந்தது. 

அப்போதே ஒரு நெருடல். இறுதியில் நன்றி சொன்ன மணமகன், அங்கே இருந்தவர்கள், எட்டிப் பார்த்தவர்கள் என அத்தனை பேருக்கும் நன்றி சொன்னாரே தவிர, திருமணம் நடத்த ஆலோசனை சொன்ன, அனைத்து பொருட்களையும் அலைந்து திரிந்து வாங்கி வந்த என் பெயரை மட்டும் ஞாபகமாக தவிர்த்து விட்டார்.

அவர் பின்னாளில் சங்கத்திற்கு ஏராளமான பிரச்சினைகளை கொடுத்து விட்டு சங்கத்திலிருந்தும், கட்சியிலிருந்தும் முதலில் விலகிப் போனார். பின்பு எல்.ஐ.சி யிலிருந்தே ஓடிப் போய் விட்டார்.

துரோகம் அன்று எனக்கு புதிதாக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு அது அதிர்ச்சியாய் இருந்திருக்காது. எத்தனை துரோகிகளை இந்த நூறாண்டு காலத்தில் பார்த்திருக்கும்!

பிகு: பாஜக அலுவலகங்களுக்கு வாருங்கள் என்று ஆட்டுக்காரனும் அழைத்துள்ளாரே என்று யாராவது நினைக்கலாம். அது தனி பதிவாக எழுத வேண்டிய ஒன்று.

பிகு 2 : மேலே உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தின் புகைப்படம். 


Tuesday, August 5, 2025

நன்றி சொல்லும் நேரம் இது . . .

 



பணி ஓய்வு நாள் வந்து அதன் பின்னும் நான்கு நாட்கள் கடந்து விட்டது. 31.007.2025 அன்று பணி ஓய்வு. அதன் பின்பு 02.08.2025, 03.08.2025 ஆகிய நாட்கள் கோட்டச்சங்கத்தின் 38 வது பொது மாநாடு. கொஞ்சம் ஓய்விற்குப் பிறகு இன்றுதான் வலைப்பக்கத்திற்கு வர அவகாசம் கிடைத்தது. 

வேறு எதுவும் இங்கே எழுதப் போவதில்லை.

நன்றி நவில்வது மட்டுமே நோக்கம்.

வாட்ஸப் மூலமாக,
முகநூல் மூலமாக,
தொலை பேசி மூலமாக
வாழ்த்து தெரிவித்த
நேரடியாக இருக்கைக்கும் வீட்டிற்கும்
பின்பு அலுவலகத்தில் நடந்த,
சங்கம் சார்பாக மண்டபத்தில் நடந்த
பணி நிறைவு பாராட்டு விழாக்களில் கலந்து கொண்ட, பங்கேற்று வாழ்த்திய
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், தோழர்கள்
எல்.ஐ.சி அதிகாரிகள், ஊழியர்கள்,
தோழமைச்சங்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள்,

நண்பர்கள், உறவினர்கள்,

பணி நிறைவு பாராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய வேலூர் கோட்டச்சங்கப் பொறுப்பாளர்கள், அவர்களை வழிநடத்திய இளம் தலைவர்கள் தோழர் எஸ்.பழனிராஜ், பொதுச்செயலாளர், தோழர் பி.எஸ்.பாலாஜி, தலைவர் ஆகியோருக்கு வார்த்தைகளால் எப்படி நன்றி தெரிவிப்பேன்! இனி வரும் காலமும் நான் எப்போதும் போல உங்களுடன் இணைந்தே செயல்படுவேன் என்பதைத் தவிர!!

அனைத்தையும் தாண்டி  திருமணமான நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை என் பயணத்தில் துணை நின்று மன ரீதியாக, பொருளாதார ரீதியாக எனக்கு கை கொடுத்தவர். என்னுடன் நேரடியாக மோத முடியாத கோழைகளால் மன வலியும் காயங்களும் பெற்றவர்.  அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு எனக்கு பக்க பலமாக இருந்த அவரின்றி நான் இல்லை. எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து தாயுமானவனாக திகழும் என் மகன். இவர்கள் இருவருக்கும் எந்நாளும் நான் என்ன நன்றி சொல்ல முடியும்! என் அன்பை பகிர்ந்து கொள்வதைத் தவிர!

எல்.ஐ.சி பணியிலிருந்துதான் ஓய்வு. மக்களுக்கான பொது வாழ்க்கையில் இருந்து அல்ல என்று பணி நிறைவு பாராடு விழாவில் வாழ்த்திய பல தலைவர்கள், தோழர்கள் கூறினார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வண்ணம் செயல்படுவதுதான் அவர்களுக்கு நான் செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்கும். 

என அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி நிறைவு செய்கிறேன்.

 


Thursday, July 31, 2025

விடை பெறும் வேளை இது



வாழ்க்கைப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். முப்பத்தி ஒன்பது வருடம், மூன்றரை வருடங்கள் பணி செய்து இன்று எல்.ஐ.சி நிறுவனப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். 

16.07.1986 அன்று பயிற்சி உதவியாளராக பணியில் சேர்ந்து உயர் நிலை உதவியாளராக ஓய்வு பெறுகிறேன். சங்கப்பணி என்ற திசை வழியில் பயணம் அமைந்ததால் பதவி உயர்வுகளை நாடவில்லை. திருமணம் ஆன போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு என்னால்  அவரால் மாறுதல் பெற இயலவில்லை. இருவரும் ஒன்றாக பணியாற்ற வாய்ப்பு இருந்த வேலூருக்கு என்னால் உதவியாளராக மாறுதல் பெற இயலாது. உயர்நிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றால்தான் சாத்தியம் என்பதால் அந்த பதவி உயர்வு பெற்றேன். என் மனைவி ஏன் நெய்வேலி வர வேண்டும்? நான் ஏன் அவர் பணியாற்றிய கும்பகோணத்திற்கு சென்றிருக்கக் கூடாது> இந்த சிந்தனை நீண்ட காலத்திற்கு பிறகே வந்தது. ஆணாதிக்க் சிந்தனையின் வெளிப்பாடுதான் மனைவியை மாறுதல் நாட வைத்தது என சுய விமர்சனமாக ஏற்றுக் கொள்கிறேன்.

எல்.ஐ.சி பணி மூலம் என்ன பெற்றேன்?

மிக முக்கியமானது சமூக அந்தஸ்து. கல்லூரி தேர்வு முடிவு வந்த ஆறாவது மாதத்திலேயே வேலையில் சேர்ந்து விட்டேன். பார்வைகளே சொன்னது வித்தியாசத்தை. வேலைக்கு செல்பவன் என்று கிடைக்கும் மரியாதையை விட எல்.ஐ.சி வேலை எனும் போது ஒரு படி மேலேதான்.

பொருளாதார தன்னிறைவு  என்பது பொருளாதார வளம் என்ற அளவிற்கு முன்னேற்றம் கிடைத்தது. ஓய்வு பெற்ற பிறகும் வாழ்க்கையை எடுத்துச் செல்லும் வாய்ப்பை, நம்பிக்கையை எல்.ஐ.சி அளித்துள்ளது.

முன்பெல்லாம் பல நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பற்றி மகாத்மா காந்தி சொன்னதை எழுதி வைத்திருப்பார்கள். அதை வாசகமாக பார்க்காமல் வாழ்க்கை முறையாக பார்க்கும் ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எல்.ஐ.சி. இங்கே கற்றுக் கொண்ட பொறுப்புணர்வு வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

எல்.ஐ.சி எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வாய்ப்பு எல்.ஐ.சி க்கு முன்பே தோன்றி எல்.ஐ.சி தோன்ற காரணமாக இருந்த எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். 

எல்.ஐ.சி பற்றி நான் முன்னர் சொன்னது அனைத்தின் பின்னணியிலும் எங்கள் ஏ.ஐ.ஐ.இ.ஏ உள்ளது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம். இனி அவசரம் அவசரமாக ஓடி பத்து மணிக்கு ரேகை வைக்க அவசியம் கிடையாதல்லவா!

இன்று நான் பெற்ற எல்லாமே பொருளாதார வளம், ஞாஅம், மிகப் பெரும் அனுபவம், புரிதல், தோழர்கள் பட்டாளம் என எல்லாமே எங்கள் சங்கம் தந்ததுதான். எந்த சவாலாக இருந்தாலும் சந்திக்கும் உறுதியும் கூட.

02.05.2025 அன்று நடந்த மோசமான சாலை விபத்தில் இரண்டு இடங்களில் எலும்பு  முறிந்து அறுவை சிகிச்சைநடந்த வேளையில் இந்த நாளில் பணியில் மீண்டும் சேர்ந்து ஓய்வு பெறுவேனா அல்லது ஸ்டெர்ச்சர் அல்லது வீக் சேரில் கடைசி நாள் மட்டும் வந்து செல்வேனா என்ற கேள்வி இருந்தது. 

கடந்த மாதமே பணியில் இணைய முடிந்ததென்றால் அதற்கு சங்கம் ஊட்டி வளர்த்த உறுதிதான் காரணம்.

இரண்டாவது இன்னிங்ஸில் என்ன செய்யப் போகிறேன்.

களத்திற்குச் செல்ல உடல்நிலை உடனடியாக அனுமதிக்காது. அதனால் நிலுவையில் உள்ள எழுத்துப் பணிகளுக்கு முன்னுரிமை.

இங்கே வந்து போகும் நேரமும் அதிகமாகும், இயல்பாகவே . . .


Saturday, July 12, 2025

நெகிழ்வும் நிறைவும் அளித்த வேலை நிறுத்தம்

 










09.07.2025 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தம் என் வாழ்வில் மிக முக்கியமான வேலை நிறுத்தமாக அமைந்தது.

முதலில் 20.05.2025 என்றுதான் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான தயாரிப்பு பணிகளும் துவங்கியிருந்தது.

இந்த நிலையில்தான் 02.05.2025 அன்று காலையில் அலுவலகம் செய்கையில் ஒரு வேன் என் ஸ்கூட்டரின் பின் பக்கத்தில் மோத   சாலையில் சறுக்கிக் கொண்டே சென்றேன். பேண்ட் இரு இடங்களில் கிழிந்து தொங்கியது. இடுப்பிலும் கழுத்திலும் கடுமையான வலி. முழங்காலில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. எழுந்து நிற்கவே முடியவில்லை. எனக்கு பின்னால் வந்து கொண்டிருந்த எங்கள் கோட்ட அலுவலகக்கிளைத் தலைவர் தோழர் ஜெயகாந்தம் தகவல் சொல்ல மற்ற தோழர்கள் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

இடுப்பிலும் கழுத்தெலும்பிலும் ப்ளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி அதன் படியே 03.05.2025 அன்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

மறுநாள் காலையில் முதலில் வந்த ஆர்தோ மறுத்துவரிடம் 20  தேதி வேலை நிறுத்தம் உள்ளது. அன்று நான் அலுவலகம் சென்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும். அதற்கேற்றார்போல என் சிகிச்சையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல  அவர் புன்னகைத்து விட்டு போய் விட்டார்.

உடலின் இரண்டு பக்கங்களிலும் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் குறைந்த பட்சம் ஆறு வாரங்கள் படுக்கையில்தான் இருக்க வேண்டும், அது வரை நிற்பதோ, உட்கார்வதோ வாய்ப்பில்லை என்று சொன்னபோதுதான் முந்தைய டாக்டரின் புன்னகைக்கான அர்த்தம் புரிந்தது.

பணிக்காலத்தின்  இறுதி வேலை நிறுத்தத்தில் நேரடியாக பங்கேற்க முடியாது  என்பது  மிகப் பெரிய ரணமாக இருந்தது. 

இந்த சூழலில்தான் வந்தது அந்த நற்செய்தி.

எல்லையில் உருவான பதற்றத்தின் காரணமாக வேலை நிறுத்தத்தை 09.07.2025 அன்று ஒத்தி வைத்த நற்செய்தி.

வாக்கர் துணை கொண்டு மெதுவாக நடக்கலாம் என்று ஜூன் மத்தியில் மருத்துவர் அனுமதி கொடுக்க அலுவலகம் செல்ல தொடங்கினேன். அதனால் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிளாட்டினம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள முடிந்தது. பிளாட்டினம் ஆண்டு இலச்சினையை வெளியிடும் நல் வாய்ப்பையும் எங்கள் கோட்டத் தலைவர்கள் அளித்தார்கள்.




ஒரு  வழியாக வந்தது 09.07.2025. அன்றைக்கு ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தோழர்களின் எண்ணிக்கை சிறப்பாகவே இருந்தது. பணிக்காலத்தின் இறுதி வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதன் மூலமாக ஒரு விசுவாசமான உறுப்பினராக  உழைக்கும் வர்க்கக் கடமையை நிறைவேற்றிய நிறைவு கிடைத்தது. பறி போயிருக்க வேண்டிய வாய்ப்பு மீண்டும் கிடைத்ததில் நெகிழ்ச்சியும் கிடைத்தது. பணிக்காலத்தின் இறுதி வேலை நிறுத்தத்தில் நான் பங்கேற்ற அதே நாளில் மே மாத துவக்கத்தில் பணியில் சேர்ந்து தன் பணிக்காலத்தின் முதல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற இளைய தோழர் டி.அஜித் குமாரை( மறைந்த எங்கள் தோழர் டி.தேவராஜ் அவர்களின் மகன்) ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அடுத்த தலைமுறை தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சி.


பிகு: மேலே உள்ள படங்கள் எங்கள் வேலூர் கோட்டத்தின் பல்வேறு கிளைகளில் நடந்த வேலை நிறுத்தக் கூட்டங்களின் போது எடுக்கப்பட்டது. உள்ளூர் தோழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் உணர்வை வெளிப்படுத்த அர்க்கோணம், ஆரணி, குடியாத்தம்,  ராணிப்பேட்டை கிளைத் தோழர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தத் தயங்கவில்லை. ஆறாவது புகைப்படம் எங்கள் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பொறுப்பாளர்கள். ஏழாவது புகைப்படம் எங்கள் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.பழனிராஜ். எட்டாவது புகைப்படம் பணிக்காலத்தில் இறுதி வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற நான். 

பிகு: இன்னமும் "வாக்கர்" துணையுடன்தான் நடை. இயல்பு வாழ்க்கை திரும்பும் நாள் இன்னும் கண்ணில் தென் படவில்லை.




Wednesday, July 9, 2025

இன்று ஏன் வேலை நிறுத்தம்?

 


கிட்டத்தட்ட இருபது கோடிக்கும் மேற்ப்ட்ட தொழிலாளர்கள் இன்று நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் முதலில் 20.05.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது.

மோடியின் உளவுத்துறை கோட்டை விட்டதாலோ அல்லது அரசு அலட்சியம் செய்ததாலோ நிகழ்ந்த பஹல்காம் படுகொலைகள், அதற்கு பிந்தைய நிகழ்வுகள் காரணமாக 20.05.2025 க்கு பதிலாக 09.07.2025 என்று மாற்றி வைக்கப்பட்டது. தேதி மாறியதால் தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ந்தேன். ஏன் என்பதை பின்னொரு நாளில் எழுதுகிறேன்.

20.05.2025 அன்று நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்தத்தை முன்னிட்டு "காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதிய தலையங்கத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்,

இந்த தேதிகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலையில் எழுதுகிறேன்.



அகில  இந்திய வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் உழைப்பாளி வர்க்கம்

 

மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது கார்ப்பரேட் ஆதரவு செயல்திட்டத்தை வேகமாக அமலாக்க முயற்சிக்கிறது. இதனை முறியடிக்க இந்திய உழைப்பாளி வர்க்கமும் கடுமையான போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.  விரிவான போராட்ட வியூகத்தை வடிவமைக்க 18.03.2025 அன்று புதுடெல்லியில் “தொழிலாளர்களின் தேசிய மாநாடு” நடைபெற்றது. மத்தியத் தொழிற்சங்கங்கள், துறைவாரி அகில இந்திய சங்கங்கள்,  கூட்டமைப்புக்கள் என இந்திய தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படும் பாரதீய மஸ்தூர் சங் (BMS) மட்டும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் வி.ரமேஷ், பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றன்ர்.

 

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமானது. இது இந்திய நிலைமையையும் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களையும் ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கையும் விரிவாக எடுத்துரைத்திருந்தது. 2017-2018 லிருந்த ஊதியங்கள் 2023-2024 ல் குறைந்துள்ளது. ஆண் தினக்கூலி ஊழியரின் ஊதியம் ரூபாய் 203 லிருந்து 242 ரூபாயாகவும் பெண் ஊழியரின் ஊதியம் ரூபாய் 128 லிருந்து ரூபாய் 159 ஆகவும் உள்ளது. அதே நேரம் கார்ப்பரேட்டுகளின் லாபமோ 22.3 % உயர்வை கண்டுள்ளது.  இந்திய மக்கட்தொகையில் 5 % பேரிடம் 70 % செல்வம் குவிந்துள்ள நிலையில் மக்கட்தொகையின் அடிமட்டத்தில் உள்ள 50 % பேரிடமோ வெறும் 3 % செல்வமே உள்ளது. ஐரோப்பிய கோடீஸ்வர்களை விட பெரிய செல்வந்தர்களாக இந்திய கோடீஸ்வரர்கள் உள்ளனர்.  இந்திய ஏழைகளில் 90 சதவிகிதத்தினர் சர்வதேச அளவில் வரையறை செய்யப்பட்டதை விடவும் வறுமையான நிலையில் உள்ளனர்.

 

இப்படிப்பட்ட சூழலில் மத்தியரசு தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான பணி நேரம், கூட்டு பேர உரிமை, குறைந்த பட்ச ஊதியம், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட போராட்ட வடிவங்கள் அனைத்தையும் பறிக்க முயல்கிறது. அரசியல் சாசனம் அளித்திட்ட கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளை கார்ப்பரேட் நலனுக்காக UAPA, PMLA, புதிதாக மாற்றப்பட்ட குற்றவியல் சட்டம் BNS ஆகியவை மூலமாக ஒடுக்குவதன் நீட்சியாகவே தொழிலாளர் சட்ட தொகுப்புக்களையும் அமல்படுத்த அரசு முயல்கிறது.

 

தொழிலாளர்கள் கூட்டாகவோ, தங்கள் தொழிற்சங்கங்கள் மூலமாகவோ தங்களின் குறைகளை பதிவு செய்வது கூட புதிய குற்றவியல் சட்டம் பாரதீய நியாய சன்ஹிதாவின்  111 ம் பிரிவின் படி குற்றச்செயலாக கருதப்பட்டு காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறது. பிணையில் வெளி வர இயலாத படி தொழிலாளர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் ஒடுக்க முயல்கின்றனர். தொழிலாளர்கள் வாயிற்கூட்டம் நடத்துவது, பிரசுரங்களை அளிப்பது போன்ற நடவடிக்கைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்லாது அரசுத்துறைகளும் கூட எடுக்கத் துவங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலைமையை எந்த ஒரு தொழிலாளியாலோ தொழிற்சங்கத்தாலோ ஏற்றுக் கொள்ள முடியாது.

விதி மீறலுக்காக சிறைத் தண்டனை அளிக்க வேண்டிய நடவடிக்கைகளில் 180 மீறல்களுக்கு இரண்டாண்டுகள் முன்பாகவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பட்டியலில் இன்னும் 100 நீக்கப்பட்டுள்ளது. “இடையூறின்றி தொழில் செய்ய உதவுவது” என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு கருணை மழை பொழியும்  அரசுதான் தொழிலாளர்களை மட்டும் ஒடுக்க முயல்கிறது.

 

இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாடு ஜாதி, மத, இனம், மொழி கடந்து உழைக்கும் மக்களுடைய ஒற்றுமையை கட்டுவதும் அதை பாதுகாப்பதும் மிகவும் முக்கியம் என்ற புரிதலோடு  பல கோரிக்கைகளை வடிவமைத்து அவற்றை வென்றெடுக்க போராட்ட வியூகங்களையும் வகுத்துள்ளது.

 

இன்சூரன்ஸ், வங்கி, துறைமுகம், ரயில்வே, அஞ்சல், ராணுவ தளவாட உற்பத்தி, போன்ற அனைத்துத் துறைகளிலும் தனியார்மயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % உயர்த்துவதை கைவிட வேண்டும், பாலிசிகள், முகவாண்மையை வேறு நிறுவனத்திற்கு மாற்றும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும், தேசிய பணமயமாக்கல் திட்டம் கைவிடப் பட வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கை.

 

குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 26,000 ஆக உயர்த்தப்பட்டு விலைவாசி புள்ளியுடன் இணைக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட கால வேலைத் திட்டம் (Fixed Term Employment Scheme), அக்னிபாத் திட்டம் ஆகியவை நிறுத்தப்பட்டு ஒப்பந்த முறை தொழிலாளர் திட்டம் அகற்றப்பட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், தேசிய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் ஆகியவை கைவிடப்பட்டு வரையறுக்கப்பட்ட பலனை உறுதி செய்யும் பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். குறைந்த பட்ச பென்ஷன் ரூபாய் 9,000 வழங்கப்பட வேண்டும்.

 

அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமலாக்கப்பட வேண்டும், மகாத்மா காந்தி வேலை உறுதிச்சட்டத்தின் படி வேலை நாட்கள் ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்தப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு முறையாக செய்யப்பட வேண்டும்.

 

விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் திரும்பப் பெற விவசாயிகள் சட்டத்தை வேறு பெயரில் வேறு வடிவில் திணிக்கும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

 

ஆண்டாண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை, அடிப்படை ஜனநாயக உரிமைகளை கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காக பறிக்க கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் நலச்சட்டங்களின் தொகுப்பை அமலாக்கக் கூடாது.

 

இந்த கோரிக்கைகளை முன் வைத்து வரும் 20.05.2025 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்துவது என்றும் தேசிய மாநாடு முடிவெடுத்தது.

 

20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை வெற்றி பெறச் செய்ய, மாவட்ட, மாநில கருத்தரங்குகள் நடத்துவது, மக்களிடத்தில் விழிப்புணர்வை உருவாக்க பிரசுரங்களை அளிப்பது, வாயிற்கூட்டங்கள் நடத்துவது, பிரச்சார இயக்கங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் மாநாடு முடிவு செய்துள்ளது.

 

தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட் முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மத்தியரசும் எண்ணற்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

"தாக்குண்டால் புழுக்கள் கூட தரை விட்டுத்துள்ளும்! கழுகு தூக்கிடும் குஞ்சு காக்க துடித்தெழும் கோழி, சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட எதிர்த்து நிற்கும்.சாக்கடை கொசுக்களா நாம்? சரித்திரத்தின் சக்கரங்கள்” 

என்ற தணிகைச் செல்வன் கவிதை வரிகளுக்கேற்ப தாக்குதல்களை முறியடிக்க உழைப்பாளி மக்கள் களம் காண வேண்டிய தருணம் இது.  மத்தியரசின் தாக்குதல்களை சந்திக்க உழைப்பாளி மக்கள் தயாராகி விட்டார்கள் என்ற எச்சரிக்கை மணியை ஒலிக்கும் தருணம்தான் 20, மே, 2025 ஒரு நாள் வேலை நிறுத்தம்.

 “கோடிக்கால் பூதமடா, தொழிலாளி கோபத்தின் ரூபமடா” என்பதை அரசும் முதலாளிகளும் புரிந்து கொள்ளும் வண்ணம் 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம் அமையட்டும், பங்கேற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் காண்பித்துள்ள உறுதி சிறப்பானது. நல்லதொரு மாற்றத்திற்கான துவக்கமாக, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் வெளிப்பாடாக, 20.05.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெற்றி பெற அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றுவோம்.    

Tuesday, July 1, 2025

எங்களுக்கு வயது 75

 


இன்று எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு பிறந்த நாள். 74 வருடங்களை நிறைவு செய்து 75 வது வயதில் அடியெடுத்து வைக்கிறது.

ஒரு மாபெரும் நதியின் துவக்கம் சின்னஞ்சிறு ஓடையாகத்தான் இருக்கும் என்பது எங்களது சங்கத்திற்கும் பொருந்தும். 01.07.1951 அன்று மும்பை தாதரில் ஒரு சின்னஞ்சிறிய அரங்கில் தோன்றிய சங்கம் ஒரு சாதனை வரலாற்றுக்கு சொந்தமான அமைப்பாக திகழ்கிறது.

இந்தியாவின் முதன்மையான தொழிற்சங்கமாக கட்டமைத்த தியாகிகள், தலைவர்கள், தோழர்கள் அனைவருக்கும் செவ்வணக்கம்.

எங்கள் வாழ்வும் வளமும் எப்போதும் எங்கள் சங்கமே என்ற புரிதலோடு அதனை கண்ணின் மணி போல காத்து மேலும் முன்னேற்றுவோம் என்று உறுதியேற்கிறோம்.


Wednesday, April 30, 2025

பாமக அராஜகக்கும்பலிடமிருந்து உயிர் தப்பிய அந்த நாள்

  

2013 ல் நடந்த சம்பவத்தை முகநூல் நினைவு படுத்தியது. வாழ்வில் மறக்க முடியாத ஒரு திகில் நாள் இது. அப்போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 மரம் வெட்டிகளாக இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் குடிசை கொளுத்திகளாக வளர்ச்சியடைந்துள்ளனர்.

 அக்கட்சியின் நடவடிக்கைகளுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் தைலாபுரம் தோட்டத்து வாசலில் உள்ள மூன்று தலைவர்களின் சிலைகள் இருப்பதுதான் உருத்தலாகவே உள்ளது.

 அன்றைய அகில இந்திய இணைச்செயலாளரும் மத்திய மண்டல பொதுச்செயலாளருமான தோழர் பி.சன்யால் முகநூலில் இட்ட பதிவின் மொழியாக்கத்தை படித்து  பதறிப் போய் தொலைபேசியில் அழைத்து பேசியதும் இப்போது நினைவுக்கு வந்தது, வேறு சில கசப்பான சம்பவங்களும் கூட. . .

 


 

 

Wednesday, May 1, 2013

பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்

நேற்று காலை நன்றாகவே தொடங்கியது. மாலையில் கடலூரில்   இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும்  முடிவிற்காக பொதுக் கூட்டம். திருவண்ணாமலையிலும்  திருக்கோயிலூரிலும் இரண்டு முன்னணி தோழர்களின் பணி நிறைவு.  இன்னும் ஒரு கிளையில் தோழர்களோடு பேச வேண்டிய அவசியம்  இருந்தது.

திருவண்ணாமலையிலும் திருக்கோயிலூரிலும் ஓய்வு பெற்ற  தோழர்களை வாழ்த்தி சங்கத்தின் சார்பில் கௌரவித்து விட்டு இன்னொரு கிளையிலும் பணி முடித்து விட்டு கடலூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக ஐந்தரை மணிக்கு வந்தேன். காவலர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என்னவென்று  விசாரித்தால் மருத்துவரை கைது செய்ததால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு என்றார்கள்.

கூட்டம் சிறப்பாகவே நடந்து முடிந்தது. வேலூர் திரும்ப வேண்டும்.  என்னுடைய சொந்த வாகனத்தில் ஒரு டிரைவரோடு வந்திருந்தேன்.
புதுச்சேரி, திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு சாலை
நன்றாக உள்ளதால் அந்த வழியில் திரும்ப முடிவு செய்தோம்.

புதுச்சேரியிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு  எந்த பிரச்சினையும் இல்லை. மருத்துவரின் தைலாபுரம்  தோட்டம் நெருங்கும் போது பார்த்தால் சாலையில் ஏதோ  எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் வேகத்தை குறைத்து அருகில் நெருங்கினால் ஒரு இருபது வாலிபர்கள் இருப்பார்கள். அவர்கள் எனது காரின் மீது கல்லெறியத் தொடங்கினார்கள்.
தூரம் ஒரு முப்பது நாற்பது அடிதான் இருக்கும். ஒருவன் ஒரு  பெரிய பாறையை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.  இருள் நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை வாழ்வில் என்னால் என்றும் மறக்க முடியாது. மற்றவர்களும் காரை நோக்கி ஓடி வந்தார்கள். அங்கே எரிந்து  கொண்டிருந்தது ஒரு இரு சக்கர வாகனம்.


டிரைவர் திரு வெங்கடேஷ் சமயோசிதமாக ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாலே ஓட்டி வந்தார். நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ரிவர்ஸ் கியர். நல்ல வேளையாக பின்னால் வேறு எந்த வாகனமும் வரவில்லை. ஒரு அரை கிலோ மீட்டர் சென்ற பின்பு மயிலம் செல்வதற்கான மாற்றுப் பாதை வந்தது.

பாதையின் துவக்கத்தில் இருந்த கிராமத்திலோ திருவிழா நடந்து கொண்டிருந்தது. வாண வேடிக்கை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து கொண்டிருந்த அராஜகத்தின் நிழல் அந்த கிராமத்தின் மீது படியவில்லை.

மயிலம் வழியாக திண்டிவனம் வந்தால் மேம்பாலம் அருகே ஒரு போர் நடந்ததன்  அடையாளங்களாக கற்களும் கண்ணாடி துகள்களும் சாலையெங்கும் கிடந்தன. காவலர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் திண்டிவனம் பஜாரில் எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை. பதினோரு மணிக்குக் கூட காய்கறி கடைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

சரி இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்தால்  செய்யாறு தாண்டியவுடன் சாலையில் ஒரு இடத்தில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. பாமக காரர்கள் வழக்கம் போல் மரத்தை வெட்டி சாலையை அடைத்திருந்தார்கள். காவல்துறைக்கு தகவல்  வந்திருந்ததால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வழி உருவாக்கிக் கொடுத்தார்கள். 

ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை. ஒரு பத்து கிலோமீட்டர் கடந்திருப்போம். ஆற்காடிற்கு இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள் முன்பாக மரம் வெட்டிகள் மீண்டும் கைவரிசையை காண்பித்து விட்டார்கள். ஒரே ஒரு கான்ஸ்டபிள் இருந்தார். இப்போதான் சார் வெட்டிட்டு ஓடிட்டாங்க, நான் யதேச்சையா வீடு திரும்பும் போது பார்த்தேன். ஸ்டேசனுக்கு சொல்லியிருக்கேன். ஜேசிபி வர நேரமாகும். வேறு வழியில் போயிடுங்க என்று வழிகாட்ட ஒரு பத்து கிலோ மீட்டர் சுற்றி ஆற்காடு சாலையையே மீண்டும் பிடித்தோம்

சென்னை- பெங்களூர் நாற்கர சாலையை அடைந்ததும்தான் இனி  சிக்கல் கிடையாது என்று நம்பிக்கை வந்தது. மரம் வெட்டிகளுக்கு வாய்ப்பு தராமல் சாலை அமைக்கும்போதே எல்லா மரங்களையும் அரசே வெட்டி விட்டது.


பாமக காரர்களுக்கு சில கேள்விகள்.

கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவது என்ன போராட்ட வடிவம்?

மரக்காணம் கலவரங்கள், தர்மபுரி கலவரங்களுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். தைலாபுரம் தோட்டத்தின் வாசலில் கலவரம் நடத்த மற்ற கட்சிக்காரர்களுக்கோ, ஜாதிக்காரர்களுக்கோ தைரியம் உள்ளதா என்ன?

மரம் வெட்டி என்றால் கோபம் வருகிறது. இப்படி மரத்தை வெட்டி
போக்குவரத்தை தடை செய்பவர்களை வேறு எப்படி அழைப்பது?

உங்கள் குடும்பத்தவர்களே உயிர் போகும் நிலையில்  ஆம்புலன்ஸில் சென்றாலும் இப்படித்தான் வழியை அடைப்பீர்களா? உங்கள் ஐயாவும் சின்னய்யாவும் உயிர் காக்கும் மருத்துவத்தை படித்தார்களா? அல்லது உயிரெடுக்கும் படிப்பா?

குடிக்கக் கற்றுக் கொடுத்து இளைய சமுதாயத்தை கழகங்கள் சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்த என்ன யோக்கியதை உங்களுக்கு
உள்ளது? ஜாதிய வெறியையும் வன்முறைக் கலாச்சாரத்தையும்
கற்றுக் கொடுத்து சீரழிப்பது நீங்கள் அல்லவா?

அசம்பாவிதம் எதுவுன் நிகழாததால் என்னால் இப்படி பதிவு  எழுதி கேள்வி கேட்க முடிகிறது. திகிலான அனுபவம் என்று  சொல்ல முடிகிறது.

ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?????????

 

Wednesday, April 16, 2025

எரிக்கப்பட்ட “ராமையாவின் குடிசை” மீண்டும்.


 



 மதுரையில் நிறைவுற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற அனுபவம் குறித்து     என்ற பதிவில் ஏற்கனவே எழுதியிருந்தேன்.

 அந்த பதிவில் குறிப்பிட்டபடி  ஒரு முக்கியமான அம்சத்தை இப்பதிவில் எழுதுகிறேன்.

 கீழத்தஞ்சை மாவட்டம், வெண்மணியில் முதியவர்களும், பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர், கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வெறி பிடித்த மிருகத்தின் தலைமையில் குழுமியிருந்த பண்ணையார்கள் மற்றும் அவர்களின் அடியாட்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ராமையா என்பவரின் குடிசைக்குள் அடைக்கலம் புகுகின்றனர்.

 அந்த கொலைகாரக்கூட்டம் அந்த குடிசையை தீ வைத்து கொளுத்துகிறது. உள்ளே இருந்த அனைவரும் கருகி இறக்கிறார்கள். தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு தாய் அக்குழந்தையை வெளியே வீச, அக்குழந்தையை வெட்டி மீண்டும் தீக்குள் போட்டார்கள் தீயவர்கள். குஜராத் கலவரத்தின் போது வயிற்றுக்குள் இருந்த  சிசுவை வெளியே எடுத்து தீயில் போட்ட கொடூரத்திற்கு இவர்கள்தான் முன்னோடிகள்.

 எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசையை மதுரை மாநாட்டு கண்காட்சியில் வடிவமைத்து நம் உள்ளத்தை பதற வைத்திருந்தார்கள். எரிந்து போன குடிசை, கருகிக் கிடக்கும் உடல்கள், அடங்காத புகை என்று அன்றைய துயரத்தை  உணரக்கூடிய விதத்தில் அமைத்திருந்தார்கள்.



 அந்த தியாகிகளின் நினைவைப் போற்றுகிற வகையில்தான் தியாகிகள் ஸ்தூபியும் அமைந்திருந்தது.



 இந்த இரண்டு கலைப்படைப்புக்களை மட்டுமல்ல

 பிரதிநிதிகள் மாநாட்டு மேடையில் கம்பீரமாக இருந்த காரல் மார்க்ஸையும் உருவாக்கிய படைப்பாளி சிற்பி தோழர் கா.பிரபாகரன்.





 தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் மேலும் பல சிறந்த படைப்புக்களை அவர் உருவாக்குவார்.

 2022 ல் நாங்கள் வேலூரில் தென் மண்டல மாநாடு நடத்திய போது தியாகிகள் சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் அவர்தான். இப்போது அந்த தியாகிகள் சின்னம் வெண்மணி புதிய நினைவகத்தில் கம்பீரமாக உள்ளது. (முதலில் உள்ள புகைப்படத்தில் அச்சின்னத்தோடு இந்த ஆண்டு வெண்மணிக்கு சென்ற வேலூர் கோட்டத் தோழர்கள் உள்ளோம்)

 நமக்கு பழக்கமானவர் செய்த படைப்பு என்று வருகிற போது மனதுக்குள் அது ஒரு தனி மகிழ்ச்சிதான்.

40 - கணக்கில் வராததையும் கணக்கில் கொண்டு . . .

 


இன்று எல்.ஐ.சி பணியில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன்.

16.04.1986 அன்று சென்னை உனைட்டெட் இந்தியா கட்டிடத்தில் எங்களுக்கான 15 நாட்கள் பயிற்சி வகுப்பில் இணைந்தேன். அப்போதெல்லாம் மூன்று மாதம் பயிற்சிக் காலம், மூன்று மாதம் தகுதி காண் பருவம். பயிற்சிக் காலம் பணிக்காலமாக கணக்கில் எடுக்கப் படாது. 1990 க்குப் பிறகு பயிற்சிக்காலம் என்று தனியாக கிடையாது. தகுதி காண் பருவம் ஆறு மாதங்களாகி விட்டது. 

எல்.ஐ.சி கணக்கில் சேர்க்காவிட்டாலும் நான் இணைந்தது இந்த நாள்தானே! அதனால் அதனை கணக்கில் கொண்டால் இந்த நாளில் நாற்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். நாற்பதாவது ஆண்டை நிறைவு செய்ய முடியாது. ஏனென்றால் 3107.2025 அன்று பணி நிறைவு.

இந்த நாற்பது ஆண்டு கால அனுபவங்களை நினைத்துப் பார்த்து நல்ல, சவாலான அனுபவங்களை பின்னர் பகிர்ந்து கொள்வேன்.

சமூகத்தில் ஒரு மதிப்பும் பொருளாதார தன்னிறைவும் எல்.ஐ.சி யால்தான் கிடைத்தது என்பதை பதிவு செய்கிறேன். அதன் பின்புலமாக இருந்தது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான் என்பதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

முதல் நாள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது.

அலுவலக பயிற்சி வகுப்பு சுய அறிமுகம், அதிகாரிகளின் வாழ்த்துரை (முதுநிலை கோட்ட மேலாளருக்கு அன்றுதான் பதவி உயர்வு ஆணை வந்திருந்ததால் அவருக்கான வாழ்த்துரை), எல்.ஐ.சி பற்றிய அறிமுகம் என்று கழிந்தது.

மாலையில்தான் முக்கியமான சம்பவம்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறிமுகக் கூட்டம். மகத்தான் தலைவரும் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா அவர்களின் கம்பீரமான உரை சங்கத்தை நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான துவக்கப்புள்ளி. 




எப்படி மறக்க இயலும் இந்நாளை !!!

Saturday, April 12, 2025

மதுரைச் செங்கடலின் சிறு துளியாய் . . .

 


மதுரையில் சிவப்பாய், பிரம்மாண்டமாய்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

 மாநாட்டின் நிறைவு நாளான 06.04.2025 ஞாயிறன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்றிருந்தோம்.

 காலையில் 7 மணிக்கு வேலூரில் புறப்பட்ட நாங்கள் மதியம் 2.30 மணிக்கெல்லாம்  மதுரை சென்று விட்டோம். பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்ற தமுக்கம் மைதானத்திற்குத்தான் முதலில் சென்றோம்.

 நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்த காரல் மார்க்ஸிற்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதும் ஒரு நோக்கம். கிட்டத்தட்ட ஐநூறு தோழர்களுக்கு மேல் வரிசையில் காத்திருந்த காரணத்தால் அது இயலவில்லை. 



கலை நிகழ்ச்சிகளுக்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மார்க்ஸுடனும் வள்ளுவரோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தோம்.




 மிகவும் சிறப்பான தகவல்களோடு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்த்தது தமுக்கம் சென்றதை நிறைவாக்கியது. தியாகிகள் ஸ்தூபி மற்றும் ராமையாவின் குடிசை பற்றி தனியாக எழுத வேண்டும்.

 அங்கிருந்து பொதுக்கூட்ட மைதானம் வந்தடைந்தோம்.  மதுரை முழுதும் செங்கொடிகளால், செந்தோரணங்களால் சிவந்து போயிருந்தது.

 இதற்கு முன்பாக கோவையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம், கோவை, சென்னை, நாகை ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநில மாநாட்டு பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த முறை மதுரையில் திரண்ட தோழர்கள் அளவிற்கு இதற்கு முன் எந்த இடத்திலும் நான் பார்க்கவில்லை.  தோழர்களின் மானுட சமுத்திரமாகவே பொதுக்கூட்ட மைதானம் நிரம்பி  வழிந்தது.










 நாங்கள் சென்ற நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. குமரி முரசு கலைக்குழுவின் ஆட்டக்கலைகள் அதிரடியாய் அமைந்திருந்தது. காம்ரேட் கேங்க்ஸ்டா குழுவின் ரேப் நடனம் ஏனோ என்னை கவரவில்லை (வயதானதன் அறிகுறியோ?) புதுகை பூபாளம் எப்போதும் போல கலக்கினார்கள்.

 மாநிலச்செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களின் தலைமையுரை, மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் வரவேற்புரை, சிறிது நேரமானாலும் எழுச்சியுடன் பேசிய மூத்த தலைவர் தோழர் பிருந்தா காரத்,  கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயனின் ஆழமான உரை  வரை அரங்கில் இருந்தோம்.  தோழர் பினராயி ஆங்கிலத்தை விட மலையாளத்தில் பேசியிருந்தால் இன்னும் கெத்தாகவும் கம்பீரமாகவும் இருந்திருக்கும் என்று எங்களுக்கு முன் வரிசையில் இருந்த கேரளத் தோழர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழாக்கத்தில் கூட சில சொதப்பல்கள் இருந்தது.

 எட்டு மணிக்கு புறப்படுவது என்பதுதான் திட்டம். மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு பாதைக:ள் அடைக்கப் பட்டுள்ளதால் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வர இயலாமல் பல வாகனங்கள் தவிப்பதால் அவர்கள் வர காவல் துறை ஒத்துழைக்க வேண்டும் என்று தோழர் சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுக்க எங்களுக்கு கொஞ்சம் அச்சம் வந்தது. புதிதாக அரசியல் தலைமைக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே புறப்பட்டு விட்டோம்.

 மிகப் பெரிய சவாலான காலகட்டத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பேற்றுள்ள தோழர் எம்.ஏ.பேபி அவர்களுக்கும் அரசியல் தலைமைக்குழுவிற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தோழர் உ.வாசுகி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். எங்கள் சங்கத்தின் மேற்கு மண்டல பொதுச்செயலாளரான குஜராத்தைச் சேர்ந்த தோழர் ஹெச்.ஐ.பட் மத்தியக்குழு உறுப்பினராக தேர்ந்த்டுக்கப்பட்டுள்ளார்.  அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




 பொதுக்கூட்டம் முடியும் வரையில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தம் உண்டு. நாங்கள் செல்ல வேண்டிய மேலூர் சாலை அடைக்கப் பட்டிருந்தது. ஒரு மகளிர் போக்குவரத்து துணை ஆய்வாளர், வேறு ஒரு வழியை மிகவும் நிதானமாக,  ஒரு குழந்தைக்கு சொல்வது போல அவ்வளவு தெளிவாக சொன்னார். அந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் அல்ல, போக்குவரத்தே இல்லை. இருந்தும் வீடு வந்து சேர்ந்த போது காலை 3.45 மணி. வழக்கமாக அந்நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மேனகா காந்தியின் நண்பர்கள் அன்று என்னமோ வெறியோடு துரத்தினார்கள், ஜனநாயகத்தை அழிக்க முயலும் மோடி அரசின் வேகத்தோடு . . .

 மதுரையில் சங்கமித்த மாபெரும் செங்கடலின் சிறு துளியாக நாமும் இருந்தோம் என்ற மன நிறைவுடன் வீட்டிற்குள்ளே நுழைந்தேன், பாதுகாப்பாக. . .செங்கொடியின் கீழ் இந்திய ஜனநாயகமும் பாதுகாப்பாக இருக்கும் என்று மதுரை செங்கடல் தந்த நம்பிக்கையோடு . . .