கோபத்தோடு முந்தைய பதிவை எழுதி விட்டு பின்னூட்டம் இருக்கிறதா, எவ்வளவு
பார்வைகள் முந்தைய நாளில் இருந்தது என்ற விபரங்களைப் பார்த்தால் ஒரு இனிய தகவல்
காத்துக் கொண்டிருந்தது.
ஆம்.
வலைப்பக்கத்தின் பார்வைகள், அதாவது Hits பத்து லட்சம் என்ற எண்ணிக்கையை
கடந்துள்ளது. மனதிற்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது.
2009 ல் வலைப்பக்கம் துவங்கினாலும் 2010 மத்தியிலிருந்துதான் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன். அப்போது தொடங்கிய பயணம் இதுவரை நிற்காமல்
தொடர்கிறது. வெளியூர் பயணங்களின் போது பதிவுகள் எழுதியிருந்தாலும் வெளியிட முடியாத
நிலை இருந்தது. ஸ்மார்ட் போன் வந்த பின்பு அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. அந்த
மாதிரி சமயங்களுக்காக சில புகைப்படங்கள், புத்தக விமர்சனங்கள் ஆகியவை ட்ராப்டில்
தயாராகவே இருக்கும்.
இத்தனை நாள் வலைப்பக்க அனுபவத்தில் கற்றுக் கொண்ட ஒரு முக்கியமான ரகசியம்
ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் வைக்கும் தலைப்புதான் உங்கள் பதிவை படிக்க
தூண்டுகிறது. ஈர்க்கும் தலைப்பு இல்லாவிடில் முக்கியமான விஷயங்கள்
எழுதியிருந்தாலும் அவை கண்டுகொள்ளப்படாத அபாயம் உண்டு.
ஆயிரம் பதிவுகளை எழுதிய போது இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையில் பார்வைகள்
இருந்தது. பதிவுகள் இரண்டாயிரத்தைத் தொட்ட போது ஐந்து லட்சம் என்று பார்வைகள்
அதிகரித்தது. மூவாயிரமாவது பதிவை நெருங்குகையில் பத்து லட்சம் என்ற மைல்கல்
எட்டப்பட்டுள்ளது.
அன்றாட நிகழ்வுகளை இடதுசாரிப் பார்வையுடன் எழுதுவது என்பது முன்னுரிமையாக இருந்தது. அவ்வப்போது சற்று இளைப்பாற இசை, சமையல் என்றும் செல்வேன். இன்றைக்கு மதவெறி மூலம் நாட்டை நாசமாக்கும் சங் பரிவாரக் கும்பலின்
மோசடிகளை, பொய்களை அம்பலப்படுத்துவதே பிரதான பணியாக இருக்கிறது.
அந்த பணியை மேலும் வேகப்படுத்த “பத்து லட்சம் பார்வைகள்” என்ற எண்ணிக்கை
உண்மையிலேயே உற்சாகப்படுத்துகிறது. ஒரு சில அனானிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. கரப்பான்பூச்சி, கொசுக்களோடுதானே வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.
ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
சரியான பாதை எது என்பதை வழி காட்டிய எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இல்லாவிடில் நானும்
இல்லை, என் எழுத்துக்களும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு
செய்யும் தருணம் இதுதான்.