Showing posts with label நிர்மலா சீத்தாராமன். Show all posts
Showing posts with label நிர்மலா சீத்தாராமன். Show all posts

Thursday, March 27, 2025

பைக், விஸ்கி இப்போ பேட்டரி . . .

 


சாம்சங்கிற்கு சுங்க வரி மோசடிக்காக 5000 கோடி அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக நேற்று எழுதினேன். அது அமலாகுமா என்ற ஐயத்தையும் தெரிவித்திருந்தேன்.

ஏன்?

அபராத செய்தி வந்த அதே நாள் நிர்மலா அம்மையார் தயாள குணத்தோடு அறிவித்த சலுகைகள் பற்றிய அறிவிப்பும் வந்திருந்தது.

மோடி அமெரிக்கா செல்லும் முன்பு ட்ரம்பிற்கான பரிசாக "ஹார்லி டேவிட்சன்" பைக்கிற்கும் போர்பன் விஸ்கிக்கும் (இந்த போர்பன் விஸ்கி குறித்து சமீபத்தில் கேட்ட ஒரு தகவலை தனி பதிவாக எழுதுகிறேன்)  இறக்குமதி வரியை குறைத்தார்.

ட்ரம்பிற்கு இதெல்லாம் திருப்தியளிக்கவில்லை.

அதனால்  எலக்ட்ரிக்  வாகனத்திற்கான பேட்டரி, மொபைல் பேட்டரி ஆகையவை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் உட்பட 35 பொருட்களின் சுங்க வரியை குறைத்துள்ளார் நிர்மலா அம்மையார். அவர் நேற்று முன் தினம் அறிவித்தார். நாளை அமெரிக்காவிலிருந்து ஒரு குழு சுங்கவரி குறித்து விவாதிக்க வருகிறது. அம்மையார் அறிவிப்பிற்கும் அமெரிக்க குழு வருவதற்கும் சம்பந்தமில்லையாம்.

35 பொருட்களின் சுங்க வரியை குறைத்த நிர்மலா அம்மையார், சாம்சங்கும் அம்பானியும் அபராதம் கட்ட விடுவாரா? எந்த பொருட்களை இறக்குமதி செய்ததில் பிரச்சினையோ அவற்றுக்கான சுங்கவரியை முன் தேதியிட்டு அகற்றி விட மாட்டாரா!

அப்படி செய்தால் என்ன செய்யும் சுங்கத் துறை?

அப்படி நடக்காது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?


Wednesday, February 19, 2025

ஆளில்லா கடையிலா மோடி டீ விற்கிறார்?

 


 

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்துவோம் என்று நிர்மலா அம்மையார் அறிவித்தது தொடர்பாக சில நாட்கள் முன்பு எழுதியிருந்தேன்.

 இதனை 74 % ஆக உயர்த்திய போது எழுதிய பதிவை கீழே மீண்டும் பகிர்ந்துள்ளேன்.

 அதனை முழுமையாக படியுங்கள். பழைய பதிவு நீல நிறத்தில் உள்ளது.  இப்போது பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.

மோடிஜி ஆளில்லா கடையில் யாருக்காக ?

 


இன்சூரன்ஸ் துறையில் அன்னிய  நேரடி முதலீட்டு வரம்பை 49 % லிருந்து 74 % ஆக உயர்த்தப் போவதாக மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அது அவசியமா என்று பார்ப்பதற்கு முன்பாக இரண்டு சம்பவங்களை நினைவு கூர்வது அவசியம்.

 சம்பவம் 1 : இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணைய மசோதா (அப்போது வெறும் கட்டுப்பாடுதான் வளர்ச்சி இல்லை)  26.08.1997 அன்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்கிறார். இன்சூரன்ஸ்துறையில்  தனியார் துறையை அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு திருத்தம் கொண்டு வர அத்திருத்தம் தோற்கடிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகள் இருக்கலாமே தவிர அன்னிய மூலதனமோ, அன்னிய கம்பெனிகளோ அனுமதிக்கப்படக்க் கூடாது என்ற திருத்தத்தை பாஜக உறுப்பினர் ஒருவர் கொண்டு வருகிறார். இடதுசாரிகள் அந்த திருத்தத்தை ஆதரிப்பதாகச் சொல்கின்றனர். அப்படியானால் அந்த திருத்தம் வெற்றி பெறும் என்பதை உணர்ந்த அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஐ.ஆர்.ஏ மசோதாவை திரும்பப் பெறுகிறார். இன்சூரன்ஸ் துறையில் அன்னியக் கம்பெனிகளை வர விடாமல் தடுத்தவர்கள் நாங்கள்தான் என்று பாஜகவினர் கொஞ்ச நாள் பெருமை பேசிக் கொண்டிருந்தார்கள்.

 சம்பவம் 2 : வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 26 % அன்னிய நேரடி முதலீட்டோடு தனியார் நிறுவனங்களை இன்சூரன்ஸ் துறையில் அனுமதிக்கும்  இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காணைய மசோதாவை 28.10.1999 அன்று பாஜக அரசு மக்களவையில் அறிமுகம் செய்கிறது. அன்றைய தினம் இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய மக்களிடம் நாம் பெற்ற 1,50,54,577 கையெழுத்துக்கள் கொண்ட படிவங்கள் அன்றைய  மக்களவைத் தலைவர் திரு ஜி.எம்.சி.பாலயோகி அவர்களிடம் அளிக்கப்படுகிறது. அதே நாள் புதுடெல்லியில் பாஜகவின் குரு பீடமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவான ஸ்வதேசி ஜக்ரான் மஞ்ச், அதன் தலைவரான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமையில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஒரு தர்ணா போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு பிரிவு அன்னிய மூலதனத்தை அனுமதிக்கும் மசோதாவை அறிமுகம் செய்கிறது. இன்னொரு பிரிவோ அதற்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. பாரதியார் சொன்ன “நடிப்புச் சுதேசிகள்” என்ற வாசகம் இவர்களைத் தவிர வேறு யாருக்கு பொருந்தும்?

 அன்னிய மூலதனமே கூடாது என்று திருத்தம் கொண்டு வந்தவர்கள் அவர்களின் ஆட்சியில் முதலில் 26 % அன்னிய மூலதனத்தை அனுமதித்தார்கள். அதையும் அவர்களே எதிர்ப்பதாக வேறு ஒரு நாடகத்தையும் நடத்தினார்கள்.

 மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றி 49 % வரை அன்னிய நேரடி முதலீட்டிற்கு ரத்தினக் கம்பளம் விரித்தனர்.

 இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதனம் வந்தால் கட்டமைப்புத் தேவைகளுக்கான நிதி கொட்டிக் கொண்டே இருக்கும் என்று சொன்னார்கள், சொல்கிறார்கள், சொல்வார்கள். கட்டமைப்புத் தேவைகளுக்கான முதலீடுகள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரும் என்பது அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் சொன்ன உறுதிமொழி. அப்படிப் பார்த்தால் இந்த இருபது வருடங்களில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் முப்பது லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால் அதிலே நூற்றில் ஒரு பங்காவது வந்ததா என்றால் அது சந்தேகமே!

 அன்னிய மூலதன வரம்பை 49 % லிருந்து 75 % ஆக உயர்த்த துடிக்கிறார்களே, இப்போது எத்தனை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் 49 % அன்னிய நேரடி மூலதனம் உள்ளது?

 ஐ.ஆர்.டி.ஏ வின் 2018-2019 ஆண்டறிக்கை உண்மையைச் சொல்கிறது. மொத்தமுள்ள 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது.  ஏகான், அவியா லைப், பார்தி ஏஎக்ஃஎஸ், ஆதித்ய பிர்லா சன்லைஃப், டிஹெச்எப்எல் பரமெரிக்கா, எடெல்வாய்சின் டோக்யோ, ரிலையன்ஸ் நிப்பான், டாடா ஏ.ஐ.ஏ ஆகிய  எட்டு நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய முதலீடு உள்ளது. ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனம் 26 % லிருந்து 49 % க்குள் உள்ளது. ஐந்து நிறுவனங்களில் 26 % க்கும் குறைவாகத்தான் உள்ளது. அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த மூலதனமே 27,515.75 கோடி ரூபாய்தான். அதில் அன்னிய மூலதனம் 9,764,20 கோடி ரூபாய்தான். அது வெறும் 35.49 % மட்டுமே.

 பொது இன்சூரன்ஸ் துறையில் நிலைமை இன்னும் மோசம். மொத்தமுள்ள 21 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களில் அன்னிய மூலதனமே கிடையாது. ஐந்து நிறுவனங்களில் மட்டுமே 49 % அன்னிய மூலதனம் உள்ளது. 21 கம்பெனிகளின் மொத்த மூலதனமான 9570.88 கோடியில் அன்னிய மூலதனம் வெறும் 2,895.99 கோடி ரூபாய் மட்டுமே. 29.79 % தான்.

 அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்தும் சட்டத் திருத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வந்தாலும் அது 15 ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் 16 பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும் தேவைப்படவே இல்லை. இந்த தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் அன்னிய மூலதனம் தேவைப்படவே இல்லை என்பதுதானே யதார்த்தம்! அன்னிய மூலதன அளவு குறைவாக இருந்தும் அவர்கள் வணிகம் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்!

 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் 49 % வரம்பையே பயன்படுத்தாத நிலையில் 74 % ஆக உயர்த்த வேண்டிய அவசியம் ஏன்? ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துகிறது என்ற கேள்வி மனதுக்குள் எழும்.

 நரியின் பார்வை இரையின் மீதுதான் என்பதை மறந்து விடக் கூடாது. பல இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இந்தியக் கம்பெனிகளின் பங்குதாரர்களாக இருப்பது என்பது வேப்பங்காயாக கசக்கக் கூடியது. 100 % மூலதனத்தோடுதான் செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் மாறாத உறுதியோடு இந்தியாவில் கடை விரிக்காத அன்னியக் கம்பெனிகள் இருக்கிறார்கள்.

 இங்கிலாந்தின் லாயிட்ஸ் நிறுவனம் 100 % முதலீட்டில் மட்டுமே வருவது என்று பிடிவாதமாக உள்ளது. அதே போல உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான வாரண் பஃபெட்டின் நிறுவனமாக ஜென் ரீ நிறுவனத்தையும் சொல்லலாம். இவை இன்று இந்தியாவில் மறு இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்படுகிறதே தவிர நேரடி இன்சூரன்ஸ் வணிகத்திற்கு வரவில்லை.

 நேரடியாக 100 % அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகவே இப்போது அன்னிய மூலதன வரம்பை 74 % ஆக உயர்த்தியுள்ளது. அரசின் இறுதி இலக்கு என்பது 100 % தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 அது மட்டுமல்ல, பென்ஷன் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அரசுக்கு உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் உயர்த்தினால் அங்கேயும் உயர்த்துவது மிகவும் எளிதாகி விடும்.

 பென்ஷன் நிதியை நிர்வகிப்பவர்களாக இன்று ஏழு நிறுவங்கள் உள்ளன. அவர்கள் நிர்வகிக்கும் தொகை 2018 ல் 2,34,579 கோடி ரூபாயாக இருந்தது 2019 ல் 3,18,214 கோடி ரூபாயாக 36 % அதிகரித்துள்ளது. இந்த தொகை அன்னியக் கம்பெனிகளின் கண்களை உறுத்துகிறது.

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதன் பொருள் என்பது ஒன்றுதான். இந்திய மக்களின் உள்நாட்டு சேமிப்பில் ஒரு பகுதிதான் இன்சூரன்ஸ் பிரிமியமாக மாறுகிறது. அப்படிப்பட்ட உள்நாட்டு சேமிப்பின் மீதான கட்டுப்பாடு அன்னிய மூலதனத்தின் கைகளுக்குச் செல்லும். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும். அதனால்தான் இதை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. தேசத்தை நிஜமாக நேசிக்கிற ஒவ்வொருவரும் கண்டிப்பாக எதிர்த்திட வேண்டும்.

 முடிப்பதற்கு முன்பாக

 உலகப் பொருளாதார நெருக்கடி வந்த போது அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய வங்கிகள் திவாலாகின. அந்நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் இன்சூரன்ஸ் க்ரூப் (ஏ.ஐ.ஜி) திவாலின் விளிம்புக்குச் சென்றது. அரசு ஏராளமான நிதி கொடுத்து அந்த நிறுவனத்தை மீட்டது. வணிகத்தில் அரசுக்கு வேலை இல்லை (Government has no business in business) என்று எப்போதும் உபதேசித்துக் கொண்டிருக்கிற யாரும் ஒரு வணிக நிறுவனத்தை பாதுகாக்க ஏன் வரி செலுத்துவோர் பணத்தை விரயம் செய்கிறது என்று கேட்கவே இல்லை.

 ஏ.ஐ.ஜி யும் டாடாவும் இணைந்து டாடா ஏ.ஐ.ஜி என்ற பெயரில் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். ஏ.ஐ.ஜி தடம் புரண்ட போது அன்றைய ஐ.ஆர்.டி.ஏ தலைவர் விவேக் நாராயணன் “டாடா ஏ.ஐ.ஜி நிறுவனத்தில் 24 % மட்டுமே ஏ.ஐ.ஜி யிடம் உள்ளது. மீதமுள்ள 76 % டாடாவிடமே உள்ளதால் பாலிசிதாரர் யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று அறிக்கை அளித்தார். ரத்தன் டாடா முழுப் பக்க விளம்பரங்களை பல நாளிதழ்களில் பல நாட்கள் அளித்தார்.

 24 %  மட்டுமே  அன்னிய மூலதனம் இருந்ததால் கவலைப்படாதீர்கள் என்று சொல்ல முடிந்தது. அன்னிய மூலதனம் 74 % ஆக உயர்ந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பார்த்தால் அச்சம் வரவில்லையா?

 தன்னுடைய சேமிப்புக்கு என்ன ஆகும் என்ற அச்சத்தோடு ஒரு பாலிசிதாரர் வாழ்ந்திட வேண்டுமா?

 அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

 நான்கு வருடத்திற்கு முன்பு சொன்னதுதான். நிலைமையில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டும்தான் 74 % அன்னிய மூலதனம் உள்ளது. ஒட்டு மொத்தமாக 32 % அன்னிய முதலீடுதான் உள்ளது. அப்படியென்றால் ஆளில்லா கடையில் மோடி டீ விற்கிறாரா?

 இல்லை.

 பழைய பதிவில் சொன்னதை மறுபடியும் படியுங்கள்,

 “வந்தால் தனியாத்தான் வருவோம்” சில வெளிநாட்டு நிறுவனங்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்காக 100 % அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான முதல் கட்டமாகத்தான் 74 % ஆக உயர்த்தியுள்ளார்கள் என்று எழுதியிருந்தேன்.

 இப்போது அதுதான் நடந்துள்ளது.

 100 % அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுவதால் சில நிறுவனங்கள் இப்போது வரும்.

 இதன் மூலம் இப்போதுள்ள தனியார் நிறுவனங்களிலும் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

 எப்படி?

 விரைவில்  விரிவாக பார்ப்போம்.

பிகு : பழைய பதிவில் விவேக்கின் படத்தை பயன்படுத்தியதால் இப்போதைய பதிவில் "தெறி" திரைப்படத்தின் கடைசிக் காட்சியை பயன்படுத்தியுள்ளேன் . . .

Thursday, February 6, 2025

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு

 


ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருக்கும் போது இன்சூரன்ஸ்துறையில் 26 % சதவிகித அன்னிய முதலீட்டுடன்  தனியாரை அனுமதிக்க மசோதா கொண்டு வந்தார். இடதுசாரிகள் தனியார் மயம் என்பதை எதிர்த்தார்கள். பாஜக பிறகு அன்னிய மூலதனம் கூடாது என்று ஒரு திருத்தம் கொண்டு வர அதனை இடதுசாரிகள் ஆதரிக்க மசோதா தோற்றுப் போகும் என்பதால் குஜ்ரால் அதனை திரும்பப் பெற்றார்.

 பிறகு வாஜ்பாய் பிரதமராகும் போது தனியார்மயத்தை அனுமதிக்க 49 % அன்னிய முதலீட்டோடு ஐ.ஆர்.டி.ஏ மசோதாவை கொண்டு வந்தார். எங்கள் சங்கம், இடதுசாரிகள் நாடாளுமன்றக்குழுக்களில் கடுமையாக எதிர்த்த பின்னணியில் அன்னிய முதலீட்டை 26 % ஆக குறைத்தார்கள்.

 பின்பு  ப.சிதம்பரம் அதனை 49 % ஆக உயர்த்த நினைத்தாலும் அது நடக்கவில்லை. இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்பு. அப்போது நாடாளுமன்ற நிதியமைச்சக  நிலைக்குழுவும் அன்னிய மூலதன அளவை உயர்த்துவதை எதிர்த்து பரிந்துரை அளித்தது. அப்போது நிலைக்குழுவின் தலைவராக இருந்தவர் வாஜ்பாய் காலத்தில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பாஜக காரர் என்பது   சுவாரஸ்யமானது.

 பின்பு மோடி  பிரதமரானவுடன் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு முதலில் 49 % ஆக உயர்த்தப்பட்டது. அப்போது நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் எல்லாம் மதிக்கப்படவே இல்லை. பிறகு 74 % ஆகவும் உயர்த்தப்பட்டது.

 அப்போது எழுதிய பதிவை தனியாக மீள் பதிவு செய்கிறேன்.

 இந்த பதிவின் நோக்கம் வேறு.

 அன்னிய நேரடி முதலீட்டை 74 % ஆக உயர்த்திய போது அன்னியக் கம்பெனிகளின் மூலதனம் அதிகமானாலும் கூட நிறுவனத்தின் கட்டுப்பாடு இந்திய நிர்வாகத்திடம்தான் இருக்கும் என்று நிர்மலா அம்மையார் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருந்தார்.  இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று உறுதியளித்தார்.

 இதோ இப்போது 100 % அன்னிய முதலீட்டை அனுமதிப்போம் என்று நிர்மலா அம்மையார் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். 100 % அன்னிய முதலீடு என்றால் அப்போது இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாடு எங்கே இருக்கும்? இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாடு இல்லையென்றால் அச்சப்படாமல் இருக்க முடியுமா?

 கமலஹாசன் வேண்டுமானால் “என்னடி மீனாச்சி, சொன்னது என்னாச்சி? நேற்றோடு  நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு” என்று பாடலாம். நாம் அந்த மாதிரி சொல்ல முடியாதல்லவா! அதனால் இவ்வாறு சொல்கிறேன்.

 “என்னங்க நிர்மலா,  இந்திய நிர்வாகம் இருக்கும் என்று நீங்க சொன்னது என்னாச்சி? நேற்றோடு நீங்க சொன்ன வார்த்தை எப்பவும் போல காற்றோட போயாச்சு”

Sunday, February 2, 2025

12 லட்சம் என்று ஏமாற்றாதீர்

 


பொதுவாகவே பட்ஜெட் என்பது  ஒரு ஏமாற்று வேலைதான். அதனால்தான் பட்ஜெட் தயாரிப்பின் முதல் சடங்காக "அல்வா தயாரிப்பது" என்று வைத்துள்ளார்கள். 

இந்த வருடம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்ற மோசடியான தோற்றம் தரப்பட்டுள்ளது.

நாம் வாங்கும் ஊதியத்தில் 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாதோ, அதற்கு மேல் வாங்கும் தொகைக்குத்தான் வரியோ என்று அப்பாவித்தனமாக நினைத்தவர்கள் சிலர்.

ஆனால் நிர்மலா சீத்தாராமன் ஒன்று அவ்வளவு நல்லவர் கிடையாது.

12 லட்சம் ரூபாய் ஊதியம் வாங்குபவர்களுக்குத்தான் வரி கிடையாது. ஸ்டாண்டர்ட் டிடெக்சன் என்று அளிக்கப்படும் 75,000 யும் சேர்த்து அதற்கு மேல் ஊதியம் வாங்கினால் கண்டிப்பாக வரி உண்டு.

அதனால் வேண்டுமானால் ஒன்று செய்யலாம். 

அரசிடமோ நிர்வாகத்திடமோ சொல்லி மாத ஊதியத்தை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளலாம்.

ஊதிய உயர்வு கொடுக்கத்தான் நிர்வாகத்திற்கு பிடிக்காது. அதனால் இந்த கோரிக்கை மகிழ்ச்சியோடு ஏற்கப்படும்.

அதனால் வருமான வரி பிடித்தத்தை தவிர்த்து விட்டதாக மகிழ்ச்சி அடைகிறீர்களா?

அப்படியெல்லாம் அவசரப்பட்டு மகிழ்ச்சியடையாதீர்கள்.

முன்னமே சொன்னது போல நிர்மலா அம்மையார் ஒன்றும் அவ்வளவு நல்லவரில்லை.

ஜி.எஸ்.டி யை ஏற்றி அந்த பணத்தை பறித்து விடுவார்.

Friday, January 31, 2025

நீங்க என்ன புரோக்கரா மோடி?

 


இந்தியாவை வ;ல்லரசாக்கும்படி இந்த வருட பட்ஜெட் இருக்கும் என்று சொல்கிற மோடி, ஏழை நடுத்தர மக்களுக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியிடம் பிரார்த்திக் கொள்வதாகவும் சொல்கிறார்.

 


அதற்கு என்ன பொருள்?

 ஏழை, நடுத்தர மக்கள் பயனடைவது போல  பட்ஜெட்டில் எதுவும் இருக்கப் போவதில்லை என்று அர்த்தம்.

 மக்களுக்கு செல்வம் வேண்டுமானால் லட்சுமியிடம் பிரார்த்தனை செய்தால்தான் நடக்கும், அரசின் கொள்கைகளால் எந்த பிரயோச்சனமும் கிடையாது என்றால் அவர்களே நேரடியாக பிரார்த்தனை செய்து கொள்வார்கள், நடுவில் உமக்கு எதற்கு புரோக்கர் வேலை? போய் வழக்கம் போல அதானி, அம்பானிக்கு முறைவாசல் செய்து அவர்கள் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கிக் கொள்ளவும்.

Tuesday, January 7, 2025

மீம் போட்டால் வரி ?????

 



 சமீபத்தில் நிர்மலா அம்மையாரை நக்கலடித்து சில மீம்கள் பார்த்தேன். யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 




இப்படியே போனால் மீம் போடுபவர்களுக்கும் அம்மையார் புதிய வரி போட்டுவிடுவார். ஜாக்கிரதை.

Monday, November 18, 2024

படையப்பா நீலாம்பரியும் நிர்மலா சீத்தாராமனும்

 


படையப்பா நீலாம்பரி போல ஆணவம் மிக்கவர் நிர்மலா சீத்தாராமன் என்று இந்த பதிவில் எழுதப் போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது நீலாம்பரி, படையப்பாவிற்கு செய்த சம்பவம் போல நிர்மலா அம்மையாருக்கு நடந்தது என்பதை சொல்லத்தான்.

 சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆர்.எஸ்.எஸ்.ரெவிக்கு  உட்கார நாற்காலி கொடுத்ததை வைத்து ஒரு சங்கி சின்னப்பையன் சனாதனம் சமத்துவத்தை போதிக்கிறது என்று உளறியதை வைத்து நேற்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

 அதை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட படங்கள் கீழே.

 



எப்படி நீலாம்பரி படையப்பாவிற்கு உட்கார நாற்காலி தரவில்லையோ அது போல காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியும் நிர்மலா அம்மையாருக்கும் நாற்காலி தரவில்லை.

 

ஆம்.

 இதுதான் சனாதனம்.

 பெண்களை சமமாக நடத்தாது, அவர்கள்  இரண்டாந்தரப் பிரஜைகள்தான்.

இனியும் அந்த சின்னப்பையன் சனாதனம் சமத்துவத்தை போதிக்கிறது என உளற மாட்டான் என்று ம்புகிறேன்.

 பிகு: நிர்மலா மேடம், நெசமாவே அது நீங்கதானா?

 வழக்கமாக உங்களிடம் தென்படும் சிடுசிடுப்பு, ஆணவமான உடல் மொழி எதையுமே காணோமே! இப்படி பவ்யமா நிக்கறீங்களே!