Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts

Monday, May 6, 2024

தாக்கப்பட்ட பையன் பாஸ், தாக்கியவர்கள்.

 


ஜாதிய வெறியேறிய மாணவர்களால் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் சின்னத்துரை என்ற மாணவன் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிர் பிழைத்த சம்பவம் நினைவில் உள்ளதல்லவா!

முழுமையாக குணமாகவில்லை. தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. தங்கையும் தாக்கப்பட்ட துயரம், படிப்பதற்கான உடல் நிலையும் இல்லை, மன நிலையும் இல்லை.

அத்தனையையும் மீறி பனிரெண்டாவது வகுப்பு பொதுத்தேர்வில் சின்னதுரை தேர்ச்சி பெற்று விட்டான். வாழ்த்துக்கள் சின்னதுரை.  மாநிலத்தின் முதல் மதிப்பெண்ணிற்கு நிகரானது சின்னதுரை பெற்ற வெற்றி.

சின்னதுரை தன்னை சந்தித்த பத்திரிக்கையாளர்களிடம் சி.ஏ படிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்று சொல்லியுள்ளான். அவனுக்கு உள்ள உறுதி, நம்பிக்கை ஆகியவை அவனது இலக்கை அடைய அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

சின்னதுரையை தாக்கியவர்கள் அவனது பள்ளி மாணவர்கள். அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிறுவர் சீர்திர்திருத்தப் பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்பட்டிருப்பார்கள்

அவர்கள் பரிட்சை எழுதியிருப்பார்களா?   எழுதியிருந்தாலும் தேர்ச்சி பெற்றிருப்பார்களா? குற்றவாள்:இ என்ற முத்திரையோடு    அவர்கள் எதிர்காலம் என்ன ஆகும்?

 ஜாதிய வெறியை தூண்டி விட்டவர்கள் சொகுசாகவே இருப்பார்கள். ஆனால் அவர்களால் வெறியூட்டப்பட்டவர்கள் நிலைமைதான் பாவம் ! 

ஆம் எப்போதுமே தூண்டி விடும் அயோக்கியர்கள் தங்கள் பெயர் வெளியே தெரியாமல் உத்தமர்கள் போல நடிப்பார்கள். அதையும் ஒரு முட்டாள் கூட்டம் நம்பும். ஆனால் தூண்டப்பட்டு தவறிழைப்பவர்கள்தான் மாட்டிக் கொண்டு தண்டனை பெறுவார்கள்.

 

Friday, February 3, 2023

மோடிக்கேற்ற கேள்வி

 


இல்லாத பாடமான "என்டையர் பொலிட்டக்கல் சைன்ஸ்" படித்ததாக கதையளந்து விட்டு "பரிட்சை எழுதுவது எப்படி?" என்று எங்களுக்கு "வகுப்பெடுக்க வந்த மோடியே, வினாக்கள் கடினமாக இருந்தால் உம்மால் பதில் சொல்ல முடியாமல் பிபிசி ஆவணப் படத்தை தடை செய்து முடக்கினீரே, அது போல நாங்களும் தேர்வுகளையே முடக்கி விடலாமா?"

Sunday, July 13, 2014

கணக்கு வாத்தியாரே தப்பா கூட்டலாமா?

நேற்றைய செய்தித்தாளில் படித்த செய்தி.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் எடுத்த அரக்கோணம் பள்ளி மாணவன் கணக்குத் தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க மறுகூட்டலில் அவன் 100 மதிப்பெண்கள் எடுத்தது தெரிய வந்தது. முன்னர் அவன் பெற்ற மதிப்பெண் 99. முன்பு அந்த விடைத்தாளைத் திருத்தியவர் தவறாகக் கூட்டியிருக்கிறார்.

ஒரு கணித ஆசிரியரே தவறாக கூட்டலாமா?

 

Saturday, May 10, 2014

வசந்தபாலன் நம்பிக்கையளிக்கிறார்

முந்தைய பதிவில் சொன்னது போல இயக்குனர் வசந்தபாலன்
தனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்த பதிவை பகிர்ந்து
கொண்டுள்ளேன். அதில் கடைசி வரி அற்புதம். 
Director's Touch



1989ம் ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் முதல்நாள் பேப்பரில் நண்பகல் 12மணியிலிருந்து 1 மணிக்குள் வரும்.
முதல் மதிப்பெண் பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்,
அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் தான் மார்க் லிஸ்ட்
நோட்டிஸ் போர்டில் ஒட்டப்படும்,

காலையிலே என் மார்க்கை பார்த்து விட்டேன்.குறைவான மார்க்.
அப்பா டாக்டர் இஞ்சினியர் bsc agri என்ற கனவில் இருந்தார்.
குறைவாக மார்க் எடுத்தவர்கள் எல்லாம் ஒரு குரூப்பாய் சேர்ந்து கொண்டு கூடி கூடி பேசினோம்,வயிறு கலக்கியது,
மதிய சாப்பாட்டுக்கு வீட்டிற்கு போனால் அப்பா கேட்பார்
அதனால் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு போகவில்லை.
மாலை கசிய அனைத்து பையன்களும் வீட்டிற்கு சென்றார்கள்.
இரவு 8 மணிவரை தாமதித்து விட்டு
மெதுவாக அழுத மூஞ்சியுடன் வீட்டிற்கு போனான்.
அப்பா மார்க் சீட்டை பார்த்தார்.
எதுவும் பேசவில்லை.
ஏன் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரலை இதுக்குத்தானா....
வசந்தா இவனுக்கு சாப்பாடு போடு என்றபடி வெளியே போய்விட்டார்.
இரவு நெடுநேரமாகியும் தூக்கம் வரவில்லை.
அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டார்கள்.
இவன் கதை கவிதைன்னு சுத்தறப்பவே தெரியும்
இவ்வளவுதான் மார்க் வாங்குவான்னு...
ஏதோ புண்ணியத்துக்கு பாஸ் ஆனானேன்னு உறங்கிப்போனார்,
எனக்கு தான் அழுகை அழுகையாய் வந்தது.ஒரு தந்தையின் ஆசையில் மண்ணள்ளி போட்டோமுன்னு.....


நண்பர்களே அத்தனை குறைவான மார்க் வாங்கி நானெல்லாம் இன்று உருபட்டுவிடவில்லை.....
பெயிலாக போனதற்கோ மார்க் குறைவாக வாங்கியதற்கோ கவலைபடாதீர்கள்.
உங்கள் சக்தியை வேறுபக்கம் கூர்மையாக்கி கொள்ளுங்கள்.
இடைவிடாது உழையுங்கள்.
உழைப்பு திறமை நேர்மை பொறுமை கவனம் வெற்றியை தேடி தரும்.
வாழ்க்கை மீதான நம்பிக்கையை மட்டும் தளரவிடாதீர்கள்.
யானை வாழற காட்டுல தான் எறும்பும் வாழுது

இவர்களையும் நீங்கள் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்



இன்றைய ஹிந்து நாளிதழ் பல்வேறு பள்ளிகளின் முழு பக்க, அரை பக்க, கால் பக்க விளம்பரங்களால் நிறைந்திருந்தது. மற்ற நாளிதழ்களும் அதே போன்ற விளம்பர வெள்ளத்தில்தான் மூழ்கியிருந்தன.

நூறு சதவிகித வெற்றி, மாநிலத்தில் இத்தனையாவது இத்தனையாவது இடம், இத்தனை பேர் இத்தனை பாடங்களில் இவ்வளவு மதிப்பெண் எடுத்தார்கள் என்ற விபரங்களையெல்லாம் போட்டு ஆகவே எங்கள் கஜானா மேலும் பெருக எங்கள் பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேருங்கள் என்று அழைத்திருந்தார்கள்.

விளம்பரங்களுக்கு அடுத்தபடியாக மாநிலத்தில், மாவட்டத்தில் முதல் இடங்களைப் பெற்ற மாணவிகள், மாணவர்களின் படங்கள், பேட்டிகள் பெருமளவு இடத்தை பிடித்திருந்தன. அவர்களுக்கெல்லாம் நேற்றைய தினம ஒரு பொன்னாளாகவே அமைந்திருக்கும். பல வருட உழைப்பு அல்லவா அது! அவர்களுக்கெல்லாம் என் பாராட்டுக்கள்.

நேற்று முகநூலில் பார்த்த பல நிலைத்தகவல்கள் வித்தியாசமான அணுகுமுறையோடு இருந்தது. தேர்வில் வெற்றி பெறாவிட்டாலோ அல்லது மதிப்பெண் குறைந்து போனாலோ கவலைப்படாதீர்கள், இவை மட்டுமல்ல வாழ்க்கை என்ற ரீதியில் உற்சாகமளிக்கும் வார்த்தைகளை நிறைய பேர் தங்களின் அனுபவங்களோடு எழுதியிருந்தார்கள். அதிலே இயக்குனர் வசந்தபாலன் எழுதியது மிகவுமே நன்றாக இருந்தது. அதை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.

தேர்வு முடிவுகள் பற்றிய செய்திகளில் என்னை கவர்ந்தது இரண்டு பள்ளிகள், இரண்டு மாணவர்கள்.

வேலூர் மாவட்டத்தில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றவை ஐம்பத்தி ஐந்து பள்ளிகள். இதிலே பெரும்பாலானவை தனியார் பிராய்லர் உற்பத்திக் கூடங்கள். வருடத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி காண்பிப்பவர்கள். பத்தாவதில் 90 % மதிப்பெண் வாங்குபவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு நூறு சதவிகித தேர்ச்சி என்று சொல்வதில் அவ்வளவு பெரிய சாதனை ஒன்றும் கிடையாது.

வேலூரை அடுத்த பெருமுகையில் உள்ள ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியும் அரக்கோணத்தில் உள்ள ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் நூறு சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளன. சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்கள் மட்டுமே இப்பள்ளிகளுக்கு வருவார்கள். இப்பள்ளிகள் பெற்றுள்ள நூறு சதவிகித வெற்றி என்பது உண்மையிலேயே மகத்தானது.

அதிலும் அரக்கோணம் பின் தங்கிய ஒரு பகுதி. அங்கே தேர்வெழுதிய மாணவிகளின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். 232 பேர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்குமே என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல விசைத்தறி தொழிலாளியாக 25,000 ரூபாய்க்கு கொத்தடிமையாக மாற்றப்பட்டு வேலை செய்து பிறகு அண்ணன் பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக கிடைத்த பரிசால் மீட்கப் பட்ட நாமக்கல் மாணவன் ஆர்.கோபால் பெற்ற 1144 மதிப்பெண்களும் குழந்தைத் தொழிலாளியாக தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த சிவகாசி மாணவி மகாலட்சுமி பெற்ற 1068 மதிப்பெண்களும் அற்புதமானது. மாநிலத்தின் முதலிடத்திற்கு சமமானது.

இவர்களையும் நெஞ்சாறப் பாராட்டுங்கள். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள்.



Tuesday, May 3, 2011

ஸ்டேட்டும் சரியில்லை, சென்ட்ரலும் சரியில்லை

இந்த வாரம் மூன்றாவது முறையாக  என் மகனின் கோபத்தை பதிவு 
செய்ய வேண்டியுள்ளது.  அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு 
நேற்று  முன்தினம்  நடைபெற்றது. தமிழகத்தில்  தேர்வு மையங்கள் குறைவு.  எங்களுக்கு   அருகாமை  மையம் சென்னைதான்.  காலை 9 .30  மணிக்கு  தேர்வு  துவங்க வேண்டும்.


பொதுவாகவே சென்னையின்  நெரிசல், நசநசப்பு  எல்லாமே  எரிச்சலூட்டும்  என்பதால்  மிக மிக அத்தியாவசியமான  நேரங்களில்  மட்டுமே சென்னை செல்வேன். இங்க எப்படித்தான் மனுஷங்க இருக்காங்களோ   என்று  பொதுவாக சென்னைவாசிகள்  மீது  அனுதாபத்துடன்  ஒலிக்கும் குரல்களில்  என்னுடையதும்  உண்டு. போன வேலை முடிந்த அடுத்த கணமே சென்ட்ரல்  அல்லது கோயம்பேடு  நோக்கி  விரைபவன் நான்.  

ஆக இந்த  அவஸ்தைக்கு  பயந்து  ஞாயிறு  காலை  ஒரு கார் வைத்துக் 
கொண்டு  சென்னை சென்று  தேர்வு மையத்திற்கு  முன் கூட்டியே 
சென்று விட்டோம்.  ஒன்பதரை மணி தேர்விற்கு  முக்கால் மணி நேரம் 
முன்பாக வர வேண்டும்  என்று  எழுதியிருந்தார்கள்.  எட்டே முக்கால் 
மணிக்கு  பையனை  உள்ளே  அனுப்பி விட்டு  இன்னும் மூன்றரை மணி 
நேரம் எப்படி தள்ளுவது,  எங்காவது போய் விட்டு வரலாமா  என்று 
யோசித்துக் கொண்டிருந்த போது   " போன மச்சான் திரும்பி வந்தான் " 
கதையாக  மாணவர்கள்  வெளியே  வந்து விட்டார்கள். 

தேர்வு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக  சொல்லி விட்டார்கள். மீண்டும் 
பதினோரு மணிக்கு வாருங்கள்  என்று  சொல்லி விட்டனர். தேர்வு 
மைய பொறுப்பாளர்கள்  காரணம் சொல்லவும் தயாரில்லை. பெற்றோரோடு  பேசுவதையே  இழிவாகக் கருதினார்கள்.  ஏற்கனவே 
தேர்வு மைய வளாகத்திற்குள்  பெற்றோரை அனுமதிக்காமல்  
பிளாட்பாரத்தில்  அல்லவா நிற்க வைத்திருந்தார்கள்! 


வீட்டில் உள்ளவர்களோடு  தொலை பேசியில் பேசி தொலைக்காட்சி செய்தி  பார்க்கச்சொன்னால்  ஆற்காட்டார் புண்ணியத்தில்  மின்சாரம் 
கிடையாது. பிறகு ஒரு வழியாக  ஒரு தோழர் மூலமாக  தகவல் 
பெற்றால்  கேள்வித்தாள் கசிந்து விட்டதாக சொன்னார்கள். அப்படியென்றால்  பதினோரு மணிக்காவது  தேர்வு நடக்குமா  என்ற 
கேள்வி  எழுந்தது. 


எத்தனை எத்தனை குழப்பங்கள்  ஏற்பட்டது தெரியுமா? 


பனிரெண்டரை மணிக்குதானே  தேர்வு முடியப்போகின்றது  என்பதால் 
பெற்றோர் புறப்பட்டுப் போனதால்  தெருவில் நின்ற மாணவர்கள் 
ஏராளம். செல்போன் உபயோகிக்கக்கூடாது  என்பதால் மாணவர்கள் 
கையில் தொலைபேசியும் கிடையாது.  நான் ஒரு பத்து நிமிடம் வேறு
ஒரு தொலைபேசியில்  பேசிக் கொண்டிராவிட்டால்  என் மகனுக்கும் 
அதே கதிதான் ஏற்பட்டிருக்கும். 


இரண்டரை மணிக்கும் மூன்று மணிக்கும் புறப்படும் ரயில்களில்  
முன்பதிவு  செய்தவர்கள் கதி அதோகதியானது. 


பெட்டி படுக்கையோடு காத்திருந்த பெற்றோரின் பிளாட்பார வாசம் 
அதிகரித்தது. 


மதியம் வேறு தேர்வு  எழுத திட்டமிட்ட மாணவர்கள்  என்ன செய்வது
என்ற பதட்டத்தில்  குழம்பித் தவித்தார்கள். 

எல்லாவற்றையும்  விட மாணவர்களின்  உற்சாகம் வடிந்து போய் 
தேர்வின் மீதான கவனம்  சிதறியது. 


தேர்வு ஏன் ஒத்தி வைக்கப்பட்டது  என்பதற்கான  விளக்கம் சரியாக 
இல்லை. மத்திய தேர்வு ஆணையம்  தொடர்ந்து குளறுபடிகள் 
செய்து வருகின்றது. 


மாநில அரசு தேர்விற்கு பிறகு எரிச்சலை உருவாக்கியது.
மத்திய அரசோ தேர்விற்கு முன்பே   எரிச்சலை உருவாக்கியது.

                                                  மொத்தத்தில் 
 
ஸ்டேட்டும்  சரியில்லை, சென்ட்ரலும்  சரியில்லை




Saturday, April 30, 2011

ஐயா தங்கம் தென்னரசு, உங்க போட்டிக்கு நாங்கதான் மாட்டினோமா?

மாண்புமிகு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஐயா 
அவர்களுக்கு,  உங்களின்  இன்றைய  பெருமித அறிவிப்பினால் பாதிக்கப்
பட்டுள்ள  பனிரெண்டாம் வகுப்பு மாணவனின்  வருத்தமும் வேதனையுமான கடிதம் இது.  மே மாதம் பதினான்காம் தேதி  எங்கள் 
தேர்வு  முடிவுகள் வரும் என்ற அறிவிப்பை  இது நாள் வரை உங்களுக்கு 
கட்டுப்பட்டு நடந்த  அதிகாரி  அறிவித்த போது  மகிழ்ச்சியடைந்தோம். 
அமைச்சரைக் கலக்காமல் அதிகாரிகள்  தன்னிச்சையாக  தேர்வு முடிவுகள் வரும்  தேதியை  அறிவித்து விட்டார்கள்  என்று நீங்கள் அறிக்கை விட்ட போதே  ஏதோ  வில்லங்கம்  வரப்போகிறது  என்று 
நினைத்தேன்.  அதன்படியே   எதிர்பார்த்த    வில்லங்கம்  வந்தே விட்டது. 

நீங்கள்  பதட்டமாக  இருக்க வேண்டிய நாட்கள் குறைந்துதானே போயுள்ளது.  முன்பு சொன்ன நாளை விட முன்பாகவே  வரப்போகிறதே, 
இதிலே  உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்கலாம்.  என்ன பிரச்சினை
என்பதை பிறகு  சொல்கிறேன். 

நாங்கள்  எங்கள் முடிவுகளை  முன்கூட்டியே  அறிந்து கொள்வதற்காகவா 
நீங்கள் ஒன்பதாம் தேதி  முடிவுகளை  அறிவிக்கப்போகின்றீர்கள்? அதிகாரிகளுக்கும்  உங்களுக்குமான  மோதலில்  நீங்கள்தான் மேல்  
என்பதை  நிருபிக்கத்தானே  அதிகாரி சொன்ன தேதிக்கு முந்தைய 
தேதியை  அறிவித்துள்ளீர்கள். வேறு  என்ன நோக்கம் இருக்கிறது? 
சொல்லுங்களேன் பார்ப்போம்.  

தேர்வு முடிவு அறிவிப்பதில்  உங்கள்  அதிகாரத்தை  நிலை நாட்டி விட்டீர்கள்.  வாழ்த்துக்கள். ஆனால்  நீங்கள்தானே  எங்களது கட்டணத்தை
முறைப்படுத்துவதற்காக கோவிந்தராஜன்  கமிட்டியை அமைத்தீர்கள். அந்த  கமிட்டி  நிர்ணயித்த  கட்டணத்தைப் போல  மூன்று, நான்கு மடங்கு 
கட்டணத்தை எங்கள் பள்ளிகள் வசூலித்தார்கள்.  நாங்களும் வேறு 
வழியின்றி  கட்டினோம். அப்போது  எங்கே போனது  உங்கள் அதிகாரம்? 

இப்போது உங்கள் அதிகாரத்தைக் காண்பிக்க ஐந்து நாட்கள் முன்பாக 
முடிவுகள்  வரப்போகின்றது. ஆனால்  அதற்கான பணிகள் முடிந்து 
விட்டதா?  உங்கள் அவசரத்தில்  எங்கள் மதிப்பெண் பட்டியலை தயார் 
செய்வதில்  குளறுபடிகள் நடந்தால்  யார் பொறுப்பு?  பாதிப்பு எங்களுக்குத்தானே!  
இப்போது  உங்கள் அதிகாரம் நிலை நாட்டப்பட்டுள்ளதால் கடுப்பாகியுள்ள   அதிகாரிகள் உள்குத்து  எதுவும்  செய்து  அவர்களின் 
சக்தியை காண்பிக்க மாட்டார்களா? 

ஒரு தேதியை முடிவு செய்வதிலேயே  இத்தனை குழப்பம்  என்றால் 
உங்கள்  ஆட்சியின்  லட்சணம்  இதுதானா?  

தேர்தல் முடிந்த பிறகு  இந்த குழப்பம். இதை முன்னமே செய்திருந்தால் 
நாங்கள் மாணவர்களே  உங்களுக்கு  எதிராக களத்திற்கு  வந்து 
உங்களை  தோல்வி அடைய வைத்திருப்போம்.  

பதினான்காம் தேதிதான்  முடிவு வரப்போகின்றது  என்று சொல்லி, 
அதற்கு முன்பாக  எங்காவது போய்விட்டு வரலாம்  என்று 
கெஞ்சிக் கூத்தாடி  கூர்க்  சுற்றுலா செல்ல என் பெற்றோரை  ஏற்பாடு 
செய்ய வைத்திருந்தேன்.  ஒன்பதாம் தேதி முடிவு வருவதால்  எல்லா 
திட்டமும்  இப்போது பணால்.  என் சாபம் உங்களை சும்மாவே விடாது. 

உங்கள் அவசரத்தால்  என்ன குளறுபடி வரப்போகின்றதோ  என்று 
அஞ்சிக் கொண்டே  இருக்கும்

பனிரெண்டாம்  வகுப்பு மாணவன். 
பின்குறிப்பு : என் மகனின் கோபத்தையும் எரிச்சலையும் கடிதமாக்கியுள்ளேன்.  உடன்பிறப்புக்கள்  யாராவது படித்தால் 
உங்கள் மாண்புமிகுவிடம்  சொல்லுங்களேன் .