Showing posts with label அவசர நிலை. Show all posts
Showing posts with label அவசர நிலை. Show all posts

Sunday, September 29, 2024

இந்திரா போல் முடியுமா மோடி?

 


பழைய சம்பவம் பற்றியதுதான். சொல்லப்போனால் போன வாரம் எழுதியதுதான். 

தோழர் யெச்சூரி பற்றிய ஒரு கட்டுரையை தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஜேஎன்யு பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து இந்திரா அம்மையார் விலக வலியுறுத்தியது தொடர்பாக தோழர் யெச்சூரியே எழுதியது கீழே உள்ளது.

“இந்திரா அவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற பின்னும் ஜேஎன்யு வேந்தர் பதவியில் தொடர்ந்தார். அவசர நிலைக் காலம் கொண்டு வந்ததாலும் அப்போது நிகழ்ந்த அநீதிகளாலும் அவர் அந்த பதவியில் தொடரக்கூடாது என நாங்கள் கூறினோம். நான்கு பக்க குற்றப்பத்திரிக்கை ஒன்றை எழுதி அனைத்து மாணவர்களும் வெலிங்டன் க்ரெஸெண்டில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். அவசர நிலைக்காலத்தின் போது தலை மறைவாக இருந்த மாணவர்களின் கைது வாரண்டுகளை ஜேஎன்யு விடுதியில் உள்ள அவர்களின் அறைக்கதவுகளில் ஒட்டி விட்டுச் செல்வார்கள். நாங்கள் எங்கள் மனுவை அவர் வீட்டுக் கதவில் ஒட்ட நினைத்தோம்.

 நாங்கள் அங்கே சென்ற போது வி.சி.சுக்லா எங்களிடம் என்னவென்று வினவினார். நாங்கள் இந்த மனுவை அவர்களிடம் தர வந்துள்ளோம் என்று சொன்னேன்.அவர் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். ஐந்து பேர் மட்டும் உள்ளே வரலாம் என்றார். நான் முடியாது என்று மறுத்தேன்.  அனைத்து மாணவர்களும்தான் வருவோம் என்று சொன்னேன். அவர் மீண்டும் உள்ளே சென்றார்,  இம்முறை இந்திரா அம்மையாரே கதவுக்கருகில் வந்தார்.  அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். என்ன இதெல்லாம் என்று அவர் கேட்டார். நான் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர், இந்த மனுவை உங்களிடம் அளிக்க வந்துள்ளோம் என்று அவரிடம் சொன்னேன். அங்கே போலீஸ் காவல் எதுவும் இல்லை. நீங்கள் வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னேன். நீங்கள்  அப்பதவியில் தொடர்வது சரியல்ல என்றேன். அவர் அந்த மனுவை வாசிக்குமாறு என்னிடம் சொன்னார்.  நாங்கள் சற்று தயங்கினோம். ஏனென்றால் அதில் ஏராளமான வசைகள் இருந்தன. நான் படித்தேன். முகத்தில் ஒரு நிரந்தரமான புன்னகையுடன் அவர் அதனை முழுமையாகக் கேட்டார்.

 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து இந்திரா காந்தி உடன் விலகி விட்டார். 

இது போல யாராவது மோடியிடம் குறை சொல்ல வந்தால் அவர்களை பார்க்கவோ அல்லது அவர்கள் குற்றச்சாட்டுக்களை (வசைகள் அடங்கிய) முகத்தில் நிரந்தரப் புன்னகையோடு மோடியால் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? குற்றச்சாட்டின் நியாயம் உணர்ந்து பதவியைத்தான் துறக்க முடியுமா?

பதில் சொல்லுங்க சங்கிகளா?

Sunday, June 30, 2024

அவசர நிலைக்காலம் – அருகதையில்லை

 


பாஜக அவசர நிலைக் காலத்தை இப்போது கையிலெடுத்து ஆடி வருகிறது. சபாநாயகர் தொடங்கி ஜனாதிபதி வரை மக்களவையில் அதைப் பற்றி பேசுகிறார்கள். ஐ.டி விங் தயாரித்துக் கொடுத்த பதிவை பெரிய சங்கிகள் தொடங்கி சில்லறை சங்கிகள் வரை ட்விட்டரிலும் முக நூலிலும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவசர நிலைக் காலத்தை  விமர்சனம் செய்து தங்களை ஜனநாயகக் காவலர்களாக காண்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள் சங்கிகள்.

 அவசர நிலைக் காலம் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம்தான். இதை எந்த தயக்கமும் இன்றி உரக்கச் சொல்வேன். முதலாளிகளுக்கு உதவ சொத்துரிமையை மட்டும் விட்டு விட்டு அனைத்து அடிப்படை உரிமைகளையும் முடக்கியது இந்திய அரசு.

 எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டனர். சிறைக்கு அனுப்பப்பட்டனர். பத்திரிக்கைகளுக்கு சென்சார் கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்டனர். சஞ்சய் காந்தி அடித்த கூத்துக்கள் தனி.

 இனியொரு முறை இப்படி ஒரு காலம் வரக்கூடாது என்பதால் அவசர நிலைக்காலம் பற்றி நினைவுபடுத்திக் கொண்டிருப்பது அவசியம்/

 இதைப் பற்றியெல்லாம் பேச சங்கிகளுக்கு அருகதை இருக்கிறதா?

 யாருக்கு அருகதை உண்டு என்பதை முதலில் பார்ப்போம்.

 அவசரநிலைக் காலத்தை அன்று எதிர்த்த அரசியல் கட்சிகள் எவை?

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,

ஸ்தாபன காங்கிரஸ்,

திமுக

 இவை மட்டும்தான் எதிர்த்தன.

 ஜெயபிரகாஷ் நாராயணனும் கிருபளானியும் மொரார்ஜி தேசாயும்  மற்ற மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் சிறை சென்றார்களே தவிர பாஜகவின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. மோடி எல்லாம் அப்போது யாரென்று தெரியாத தம்மாத்தூண்டு சில்லறை சங்கி.

 இன்றைக்கு பாஜகவில் இருக்கும் சுப்ரமணிய சாமியைத் தவிர பாஜக ஆட்கள் யாரும் எமர்ஜென்சிக்கு எதிராக வாய் திறக்கவில்லை. பாஜகவின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அன்றைய சர்சங்சாலக் பாலாசாஹிப் தேவரஸ், இந்திரா அம்மையாருக்கு வாழ்த்துக் கடிதம் எழுதி இருபது அம்சத் திட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என்று உறுதியளித்தார்.

 


அவசர நிலைக்காலத்தை அன்று எதிர்க்காமல் அதற்கு சலாம் போட்ட சங்கிக் கூட்டத்திற்கு இப்போது அதனை விமர்சிக்கும் அருகதை கிடையாது.

 கடந்த பத்தாண்டுகளாக மோடியின் ஆட்சி என்ன ஜனநாயகத்தை பாதுகாத்த ஆட்சியா என்ன?

 அறிவிக்கப்படாத அவசர நிலைக் காலம்தானே அது!

 இப்போது  மட்டும் என்ன வாழ்கிறது?

 ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தால் எம்.பி க்களின் மின்னஞ்சல் முடக்கப்படுகிறது.

 பேசிக்கொண்டிருக்கும் போதே மைக் அணைக்கப்படுகிறது.

 இந்த அற்பர்கள் ஜனநாயகம் பற்றி பேசலாமா?

 

Wednesday, December 14, 2016

மோடி= இந்திரா, ஷா= பரூவா




மோடியை விமர்சனம் செய்தால் அது என்னவோ இந்தியா மீதான விமர்சனம் என்று எடுத்துக் கொண்டு "இந்தியா மீது யாராவது விமர்சனம் செய்தால் நான் பொறுமையாக இருக்க மாட்டேன்" என்று பாஜக தலைவர் அமித் ஷா முழங்கியுள்ளார்.

மோடி இந்தியாவின் பிரதமராக இருப்பதாலேயே அவரை விமர்சித்தால் அது இந்திய நாட்டின் மீதான விமர்சனம் என்று அர்த்தமல்ல, மோடி ஒன்றும் இந்தியா கிடையாது என்று அவரிடம் யாராவது கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.

இன்னொன்றும் சொல்லுங்கள்.

அவசரநிலைக்காலத்தின் போது அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.பரூவா மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்த வாசகம் என்ன தெரியுமா?

"இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா"

எப்படி அமித்ஷா இன்று மோடிதான் இந்தியா என்று சொல்கிறாரோ அதைத்தான் டி,கே.பரூவா அன்று சொன்னார். 

அப்படிச் சொன்ன டி.கே.பரூவா வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்பட்டு காணாமலேயே போய் விட்டார் என்றும் அமித்ஷாவிற்குச் சொல்லுங்கள்.

பின் குறிப்பு : 

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு எழுதப்பட்டது. செல்லா நோட்டு பிரச்சினையால் நீண்ட காலம் டிராப்டிலேயே இருந்ததை இன்று பகிர்ந்து கொள்கிறேன். 

இந்த முழக்கங்கள் எவ்வளவு அபத்தமானது என்பதை தமிழகம் உணர்த்தி வருகிறது என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்/