Showing posts with label சுனாமி. Show all posts
Showing posts with label சுனாமி. Show all posts

Saturday, December 26, 2020

பேரழிவு அலை

 


இதற்கு முன்பு கண்டதில்லை.
இனியும் காண விருப்பமில்லை.

கடலை நம்பினோர்
கடலாலாலே  கைவிடப்பட்டார்.

கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது.
சுனாமி கொத்து கொத்தாகக் கொன்றது.

அழகிற்கு அடையாளமாம் அலை
அன்று மட்டும் பேரழிவின் அடையாளமானது.

ஆழிப்பேரலையின் சீற்றத்தால் மாண்டோருக்கு

மனமார்ந்த அஞ்சலி

Saturday, April 5, 2014

சுனாமி அலையில மோடி நீச்சலடிச்சாராம்?



http://yunus.hacettepe.edu.tr/~osert/HotPot2013/02_kilinc_ozbey/148479-050-AA87518E.jpg

சங் பரிவாரக் கும்பல் வேலூர் மக்களிடம் மத வெறியைத் தூண்ட வெளியிட்டுள்ள பிரசுரம் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதில் உள்ள காமெடி பகுதி பற்றி இப்போது பார்ப்போம்.

குஜராத் பூகம்பம், ரிஷிகேஷ் நிலச் சரிவு, சுனாமி ஆகியவற்றில் மோடி காண்பித்த மீட்புப் பணி பார்த்து அமெரிக்காவே அசந்து போய் இவரிடம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறதாம்.

பதினைந்தாயிரம் பேரை எண்பது இன்னோவா காரில் காப்பாற்றிய சூப்பர் மேன் வேலையைப் பார்த்து இந்தியாவே கை கொட்டி சிரித்த  பின்னர், அதெல்லாம் இல்லை என்று மோடியே ஒப்புக்கொண்டு மௌனமான பின்பும் கூட அந்த கதையை ஜால்ராக்கள் மட்டும் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

சரி குஜராத் பூகம்பத்தின் போது அவர் முதலமைச்சரே கிடையாதே, பிறகு என்ன மீட்புப் பணி செய்தாரு? கேசுபாய் படேலை கவிழ்க்கிற வேலையைத்தான பார்த்துக்கிட்டு இருந்தாரு.

சுனாமிக்கும் குஜராத்திற்கும் சம்பந்தமே இல்லை. தமிழ்நாட்டுக்கும் மோடி வந்து ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடலை. ஒரு வேளை சுனாமி வந்த போது யாருக்கும் தெரியாம வங்காள விரிகுடாவில் நீச்சல் அடிச்சு நிறைய மீனவர்களை காப்பாத்தினாரோ? ஒரு வேளை நம்ம தமிழ்நாட்டு பத்திரிக்கைக்களும் தொலைக்காட்சிகளும் அதை இருட்டடிப்பு செஞ்சுட்டாங்களா? டூ பேட்.

ஆனா ஒபாமாவும் புஷ்ஷும் அசந்து போய்தான் இருக்காங்க. மோடி பேசறதை ஒபாமா பாக்கற மாதிரி, துபாய் பஸ் ஸ்டாண்டை குஜராத்தில இருக்கிற மாதிரி, சீனாவுல உள்ள ரோட்டை குஜராத்தில இருக்கிற மாதிரி எத்தனை போட்டோஷாப் மோசடி போட்டோவை நாமும் பாத்திருக்கோம். பாவம் சில பேரு அதை நிஜம்னு வேற நம்பிக்கிட்டு இருக்காங்க. ஒபாமா மட்டும் நம்ப மாட்டாரா என்ன? நாமே மிகப் பெரிய உடான்ஸ் பார்ட்டிங்க, நம்மையும் மிஞ்சறதுக்கு இந்தியாவில ஒரு பெரிய டூப் மாஸ்டர் இருக்காரேனு பாடம் கத்துக்க கண்டிப்பா வருவாங்க.

அடுத்த அமெரிக்க தேர்தலில் இருக்கு கூத்து.


Saturday, December 28, 2013

கல்வி அளிக்க உயர்ந்த கரங்கள்



சுனாமியில் தந்தையை இழந்திருந்த பாக்கியலட்சுமி என்ற மாணவியின் கல்வி குறித்து சங்கம் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை பாக்கியிருந்தது.

சுனாமி நிவாரணப்பணிகள் குறித்த ஒரு ஆவணப்படம் தயாரித்து அதனை சி.டி யாக்கி விற்பனை செய்வது, அந்த தொகை மூலம் பாக்கியலட்சுமியின் கல்விச் செலவை சமாளிப்பது என்று முடிவு செய்யப்பட்டு ஆவணப்படம் தொகுக்கும் பணி தொடங்கியது. நம்முடைய இயக்கத்தில் ஒருவராகவே கலந்து போன ஆடியோ சேகர் இப்பணியில் நமக்கு மிகவும் உதவினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபதாவது பொது மாநாடு பெங்களூர் நகரத்தில் துவங்க இருந்ததால், சி.டி விற்பனைக்கான உரிய இடமும் காலமும் அதுதான் என்பதால் அதற்குள் பணியினை முடிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் கிடையாது. நாம் குடும்பங்களுக்கு நிவாரணப் பை அளிக்க சென்ற போது வந்திருந்த பத்திரிக்கையாளர் எடுத்திருந்த சில வீடியோ காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், புகைப்படங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது. ஒளி, ஒலி இவை இரண்டிலுமே தெளிவில்லாவிட்டாலும், நம் நோக்கத்தில் தெளிவு இருந்தது. தமிழ், ஆங்கிலம் ,ஹிந்தி என்று மூன்று மொழிகளில் குரல் பதிவு செய்யப்பட்டு தனித்தனியாக தயாரிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் தோழர் எஸ்.ராமனும் தமிழில் தோழர் ஏ.நாராயணனும் குரல் கொடுக்க ஹிந்தியில் குரல் கொடுக்க  அன்றைய தொழிலுறவு மேலாளர் திரு டி.எஸ்.சுப்ரமணியன் முன் வந்தார்.

அகில இந்திய மாநாட்டில் சுனாமி நிவாரண சி.டி க்களை அகில இந்தியத் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் வெளியிட பொதுச்செயலாளர் தோழர் கே.வேணுகோபால் முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டார். இந்த சி.டி க்கான நோக்கத்தை தலைவர்கள் இருவருமே விளக்கி மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகள், பார்வையாளர்கள் வாங்கி உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். மாநாட்டு வரவேற்புக்குழு சி.டி விற்பனைக்காக அரங்கத்தின் நுழைவாயிலிலேயே ஒரு கேந்திரமான இடத்தை ஒதுக்கித் தந்து உதவினார்கள். பிரதிநிதிகளாகவும் பார்வையாளர்களாகவும் வந்திருந்த நமது கோட்டத் தோழர்களே இடைவேளை நேரங்களில் விற்பனையை கவனித்தார்கள். மாநாட்டு கண்காட்சியிலும் நிவாரணப்பணிகளின் புகைப் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தோழர்கள் மத்தியில் சி.டி க்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஹிந்தி மற்றும் ஆங்கில சி.டி க்கள் பெரும்பாலும் விற்றுப் போயிருந்தது. மாநாட்டின் இறுதி நாளில் நமக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

மாநாட்டு அரங்கில் நாம் தயாரித்த ஆவணப்படத்தை திரையிட வேண்டும் என்ற நமது விருப்பத்தை நிறைவேற்றிய வரவேற்புக்குழுத் தோழர்கள் இன்னொரு இன்ப அதிர்ச்சியும் அளித்தார்கள். பாக்கிய லட்சுமியின் கல்விச் செலவிற்காக ரூபாய் பத்தாயிரம் வரவேற்புக்குழுவின் சார்பில் அளிக்கப்பட்டது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம். வேறு பல தோழர்களும் தேடி வந்து நிதி அளித்தார்கள். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான மூத்த தலைவர், தோழர் சந்திர சேகர போஸ் அவர்கள் ரூபாய் ஐநூறு அளித்த போது பதில் பேச யாருக்கும் வார்த்தைகள் எழவில்லை. வேலூர் கோட்டத் தோழர்களின் பணிக்கு இதை விட வேறு அங்கீகாரம் வேண்டுமா என்ன?

திரட்டப்பட்ட நிதி கொண்டு செல்வி பாக்கியலட்சுமியின் கல்விக்கான செலவை பதினொன்றாவது மட்டும் பனிரெண்டாவது வரை கடலூர் செயிண்ட் ஜோசப் பள்ளியில் படிக்க வைத்தோம். பின்பு அவர் இளங்கலை ரசாயணம் படிக்கவும் மூன்று ஆணடுகளும் முழுமையாக கட்டணம் செலுத்தி புத்தகம் வாங்கிக் கொடுக்கவும் செய்தோம். இந்த பணியை கடலூர் கிளைச்சங்கத் தோழர்கள் மிகவும் செம்மையாக செய்தார்கள். இன்று அவர் பட்டதாரியாக திகழ்வதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான் காரணம் என்பது நமக்கு பெருமையளிக்கிற ஒன்று.

இந்த பணியை  அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கம் கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு அறிக்கையிலும் பின் வருமாறு பதிவு செய்திருந்தது.

With Voluntary contributions received, the ICEU, Vellore Division, ably assisted by its Cuddalore Branch Unit is continuing to take care of the educational expenses of Kumari  Bakkialakshmi. In 2004, when, Tsunami hit their village, she was a 10th Standard student and for the Higher Secondary Course, she was admitted in a reputed school at Cuddalore and she secured 73 % marks in the 12th Standard Public Examination. Now she has been admitted in B.Sc (Chemistry) Course in St John’s College, Cuddalore. All the amounts required for college fees and for purchase of books were funded by the ICEU, Vellore Division. The Divisional Union is committed to take care of all expenses required  by her to complete her college studies.

இந்தப் பணிக்காக திரட்டப்பட்டு மீதமிருந்த தொகையும் இரு மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த பின்னர் பயன்படுத்தப்பட்டது.

வேலூர் கோட்டத் தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் கடுமையான உழைப்பும்  முழுமையாக வெளிப்பட சுனாமி நிவாரணப் பணிகள் காரணமாக இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்களின் முழுமையான வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் இருந்ததால் மட்டுமே நம்மால் உதவிகளை தகுதியான பயனாளிகளுக்கு செய்ய முடிந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சுனாமி நிவாரணப் பணிகளில் வேலூர் கோட்டம் ஆற்றிய பணிகளுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு சிறப்பான அங்கீகாரத்தை அளித்தது. ஆம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர நிவாரணமாக ஒரு சமுதாயக் கூடத்தை கட்டித் தரும் பொறுப்பு வேலூர் கோட்டத்திற்கு கிட்டியது.

அந்த பணி குறித்து விரிவாக இன்னொரு அத்தியாயத்தில் காண்போம்.  

சுனாமி அலையடித்த கடலோரம் ஒரு இசை மழை



  சுனாமி நினைவலைகள் - மூன்றாம் பகுதி

நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிகழ்வோடு நமது நிவாரணப் பணிகள் நிறைவுற்று இருக்க வேண்டும். ஆனால் முழுமையாக கணக்கு போட்டு பார்த்த போது இன்னும் கொஞ்சம் நிதி இருந்தது. அதை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த போது பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி நம்மை ஈர்த்தது. சுனாமியின் போது தமிழகத் திரைப்படத்துறையிலிருந்து பலரும் நிதி உதவி செய்தார்கள். ஆனால் அவர்களின் உதவி என்பது முதலமைச்சரைப் பார்த்து காசோலை கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு முடிந்தது. ஆனால் ஹிந்தி திரைப்பட நடிகர் திரு விவேக் ஓபராய் நேரடியாக கடலூர் வந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட தேவணாம்பட்டிணம் கிராமத்தில் பல உதவிகளை நேரடியாக செய்தார். அதுமட்டுல்லாது உலகப் புகழ் பெற்ற ட்ரம்ஸ் இசைக்கலைஞர் திரு சிவமணி அவர்களின் இசை நிகழ்ச்சியையும் நடத்தினார். அது அந்தப்பகுதி மக்களால் வரவேற்கப்பட்டது. இந்த செய்தியை படிக்கும் போது நாமும் ஏன் இப்படிப்பட்ட  நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற சிந்தனை ஏற்பட்டது.  

மூன்று இடங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கவுன்ஸிலிங் நடத்தலாம் என்று திட்டமிட்டோம். சிதம்பரத்தில் கிள்ளை, கடலூரில் புதுக்குப்பம், புதுவையில் பிள்ளைச்சாவடி என்று மூன்று மையங்கள் தேர்வு செய்யப்பட்டன. ராணிப்பேட்டையில் உள்ள கீதாஞ்சலி என்ற இசைக்குழு  ஓரளவு குறைந்த கட்டணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டனர். கோட்ட நிர்வாகத்தோடு பேசியதில் இசைக்குழுவிற்கான கட்டணத்தை தாங்கள் ஏற்பதாக ஒப்புக் கொண்டனர். பிப்ரவரி 9, 2005 முதல் பிப்ரவரி 11, 2005 வரை நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளிலும் முதுநிலைக் கோட்ட மேலாளர் திரு வி.தாமோதரன், கலந்து கொண்டு உரையாற்றினார்.

இசை நிகழ்ச்சி என்பது உண்மையிலேயே ஒரு பரவசமான அனுபவமாகத்தான் இருந்தது. துயரத்தில் மூழ்கிப் போயிருந்த மக்கள் தற்காலிகமாகவாவது தங்கள் கவலைகளிலிருந்து கவனத்தை திசை திருப்ப இசை நிகழ்ச்சிகள் பயன்பட்டன. சிறுவர்கள் உண்மையிலேயே குதூகலித்தனர். இசையின் வல்லமையை, சக்தியை நன்றாகவே உணர முடிந்தது. கடலூர் மாவட்டத்தின் துணை ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ  கிள்ளை நிகழ்ச்சியில் பேசுகையில் “இப்பகுதியில் நாங்கள் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நாங்கள் யோசித்திருந்த வேளையில் நீங்கள் நடத்தி விட்டீர்கள் “ என்று பாராட்டினார். மறுநாள் புதுக்குப்பம் நிகழ்ச்சிக்கான தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருந்த போது மாவட்ட ஆட்சித்தலைவர் ககன்தீப்சிங் பேடியோடு அங்கே வந்த அவர் ‘ இவர்களெல்லாம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று கிள்ளையிலும் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள் “ என்று அறிமுகம் செய்தார். உங்கள் சங்கம் செய்து கொண்டிருக்கும் பணிகள் பற்றி நான் அறிவேன் என்று சொன்ன மாவட்ட ஆட்சியர் நீங்கள் தேவனாம்பட்டிணத்திலும் அக்கரைப்பேட்டையிலும் கூட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று உரிமையோடு சொன்னார்.

புதுக்குப்பம் நிகழ்ச்சியையும் மக்கள் ரசித்துப் பார்த்தார்கள். அந்த கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஒரு வாலிபன் மேடைக்கு வந்து பாடியது என்பதே நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு சான்று. பல பாடல்களை மக்கள் விரும்பி பாடச்சொன்னது அவர்கள் நிகழ்ச்சியில் இரண்டறக் கலந்ததற்கான அடையாளம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் இணைச்செயலாளர் தோழர் ஆர்.கோவிந்தராஜன் அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று  வித்தியாசமான பாணியில் பேசினார். வங்கித்தோழர் மருதவாணன் அன்று கண்களில் கண்ணீரை வரவழைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த மகளிர் தோழர்கள் எஸ்.ஜெயஸ்ரீ, ஜெயந்தி, பத்மா ஆகிய கடலூர் கிளைத்தோழர்கள் அங்கிருந்த குழந்தைகளை கடற்கரைக்கு வருமாறு அழைத்த போது முதலில் அச்சத்தோடு மறுத்தவர்கள், தோழர்களின் இயல்பான பழகுதலுக்குப் பிறகு அவர்கள் கரம் கோர்த்து கடற்கரையில் கால் நனைத்து விளையாடியது நெகிழ்ச்சிகரமான ஒரு சம்பவம் ஆகும்.

புதுவை பிள்ளைச்சாவடி நிகழ்ச்சியும் வித்தியாசமாகவே அமைந்திருந்தது. நமது நிவாரணப்பணிகளை கண்ணுற்ற திருமதி ஜெயலட்சுமி நாயக் என்ற அதிகாரி, அவரது உறவினர் அளித்த இருபதாயிரம் ரூபாயை நம்மிடம் அளித்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கூறி இருந்தார். அதற்கும் பொருட்கள் வாங்கப்பட்டு சுமார் முப்பது குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அறிவியல் இயக்கத் தோழர்கள் அன்று வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி கவுன்ஸிலிங் அளித்தது பாராட்டத்தக்கது.  அன்றைய கலை நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வர் திரு என்.ரங்கசாமி வருவதாக ஒப்புக் கொண்டாலும் கடைசி வரை வரவேயில்லை. தகவலும் தெரிவிக்கவில்லை. அவரது உதவியாளர்கள் தொலைபேசி அழைப்புக்களைக் கூட எடுக்கவில்லை. பார்வையாளர்கள் நிகழ்ச்சி நடக்க, நடக்க உற்சாகமாகி நடனமாடவே தொடங்கி விட்டனர். தென் மண்டலத் தலைவர் தோழர் சி.ரவீந்திரநாதன் மேடையில் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசியதை ஆரவாரமாக வரவேற்றார்கள். கீழே நடனமாடிய தீபக் என்ற சிறுவனை அவர் மேடையில் நடனமாடச் செய்ததும் அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. சிறுவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து சங்கப் பொறுப்பாளர்களையும் நடனமாட கையை பிடித்து இழுத்துச் சென்றார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களை  வேலு என்பவரது வீட்டில் அமர்ந்து சாப்பிட்டோம். அவர் சொன்னதை இங்கே அப்படியே பதிவு செய்வது சரியாக இருக்கும்.

“ ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்குதான் சிரிச்சிருக்கோம், சுனாமி வந்ததுலேந்து என் பையன் டவுன்ல் இருக்கிற சொந்தக்காரங்க வீட்டிலதான் தூங்குவான். இன்னிக்குத்தான் அவன் பயம் இல்லாமல் எங்க வீட்டிலெயே தூங்கியிருக்கான்”

நெகிழ்ச்சியோடு புறப்பட்டோம்.

நம்மிடமிருந்த நிதி முழுதும் நிறைவடைந்திருந்தது. ஆனால் ஒரு பணி இன்னும் பாக்கி இருந்தது.

ஆம் சுனாமியில் தந்தையை இழந்திருந்த பாக்கியலட்சுமி என்ற மாணவியின் கல்வி குறித்து சங்கம் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடமை பாக்கியிருந்தது.

Friday, December 27, 2013

மனிதம் வெளிப்பட்டது.



 சுனாமி நினைவலைகள் இரண்டாவது பகுதி

இந்த தருணத்தில் நமக்கு சில தகவல்கள் வந்திருந்தன. கோவைக் கோட்டத்தின் மகளிர் துணைக்குழு நிவாரணப்பணிகளுக்காக உடனடியாக ரூபாய் பத்தாயிரம் அனுப்பியிருந்தனர். மறு நாளே சேலம் மற்றும் மதுரைக் கோட்டங்களின் தோழர்கள் நிவாரணப் பொருட்களோடு வருவதாக  சொல்லி இருந்தார்கள். அதன்படியே 29.12.2004 அன்று சேலம் மற்றும் மதுரைக் கோட்ட தோழர்கள், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் தோழர்கள் கடலூர் வந்தனர். தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், இணைச் செயலாளர் தோழர் எம்.கிரிஜா ஆகியோரும் வந்திருந்தனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.தனசேகரன் அவர்களின் வழி காட்டுதலோடு  கடலூர் நகரில் இருந்த சில முகாம்களுக்கு சென்று அங்கே இருந்த மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. சாமியார் தோப்பு, பெரிய குப்பம், புதுக்குப்பம் போன்ற ஊர்களுக்கும் சென்றோம். அங்கே எல்லாம் முகத்தில் முகமுடி அணியாமல் செல்லவே முடியாத நிலைதான் இருந்தது. சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தாலும்  காற்றில் அதன் வாடை அடித்துக் கொண்டே இருந்தது. அன்று காலை புறப்படும் முன்னே தடுப்பூசி போட்டுக் கொண்டுதான் எல்லோரும் செல்ல வேண்டும் என வலியுறுத்திய தோழர் தனசேகரன் அதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தார். அது எவ்வளவு அவசியம் என்பது பெரும் இழப்பு ஏற்பட்ட கிராமங்களுக்கு சென்ற போதுதான் தெரிந்தது. கடலூர் கிளைச்சங்க தோழர்கள் பலரும் அன்றைய தினம் நிவாரணப் பணிகளில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். உணவு, உடை என்ற அளவில் முதற்கட்ட பணிகள் முடிந்தது.

அன்றைய தினம் கடலூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டிருந்த மக்களை பார்க்க சென்றிருந்தபோது தந்தையை சுனாமியில் இழந்திருந்த பாக்கியலட்சுமி என்ற மாணவி தனக்கு உடைகள் எதுவும் தேவையில்லை, என்னை படிக்க வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். சங்கமும் அவருக்கு எல்லா உதவிகளையும் கண்டிப்பாக செய்கிறோம் என உறுதியளித்தது.

ஒரு குடும்பம் நடத்துவதற்கான அத்தியாவசியமான பொருட்களை அடுத்த கட்டமாக வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அடித்துச் சென்ற அலை வீட்டில் உள்ள பொருட்களையும் அல்லவா எடுத்துச் சென்றிருந்தது! இதற்கிடையில் ஒரு நாள் ஊதியம் என்ற வேண்டுகோளை ஏற்று தோழர்கள் அளித்த நிதியும் கோட்டச் சங்கத்திற்கு வந்து கொண்டே இருந்தது. எல்.ஐ.சி நிர்வாகமும் சுனாமி நிவாரணத்திற்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி நிர்வாகத்தின் மூலம் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு. அப்படி இருப்பினும் நமது தோழர்கள் வருமான வரி விலக்கு என்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தங்களின் பங்களிப்பு நேரடியாக பாதிக்கப் பட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்றால் அது சங்கத்திடம் அளித்தால் மட்டுமே சாத்தியம் என்ற தெளிவான புரிதலோடு தோழர்கள் நிதி அளித்தார்கள். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் நாடு முழுதும் உள்ள தோழர்களிடம்  நிதிக்கான வேண்டுகோள் விடுத்திருந்தது.

தோழர்களிடமிருந்து கிடைத்த நிதி மட்டுமல்லாது மக்களிடமும் செல்வோம் என்று முடிவெடுக்கப்பட்டு மக்கள் மத்தியிலும் சென்றோம். அது ஒரு வாழ்நாள் அனுபவம் என்பதை இந்த வசூல் இயக்கத்தில் பங்கேற்றவர்கள் என்றைக்கும் நினைவு கொள்வார்கள். சுனாமி வந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் பின்பே நாம் மக்களிடம் சென்றோம். அதற்குள்ளாக ஏற்கனவே அரசியல் கட்சிகள், தொண்டு அமைப்புக்கள் ஆகியோர் மக்களிடம் சென்றிருந்தனர். அப்படி இருந்தும் மக்கள் நாம் சென்ற போதும் நம்மிடமும் பணமாகவோ, பொருளாகவோ உதவிகளை வழங்கினார்கள். மக்களிடம் சென்ற எல்லா மையங்களிலும் நம்மிடம் இல்லை என்று சொல்லாமல் மக்கள் வாரி வழங்கினார்கள். சில சம்பவங்களை மட்டும் இங்கே பதிவு செய்வது அவசியமாகும்.

வேலூர் நகரத்தில் மக்களிடம் செல்கையில் மக்களிடம் கையேந்தி தனது வாழ்க்கையை ஓட்டி வருகிற ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி, தன் கைவசம் இருந்த பத்து ரூபாயையும் நம்மிடம் அளித்தது நெகிழ்ச்சியூட்டியது. அது போல இன்னொரு மூதாட்டி, நடைபாதையில் வடை சுட்டு வாழ்வை நடத்தும் அந்த பெண்மணியும் தன் கைவசம் இருந்த பணத்தை அப்படியே கொடுத்தார். அடுத்த நாளை எப்படி எதிர்கொள்வோம் என்ற பிரச்சினையில் உழலுபவர்கள் கூட பெரும் துயரத்தில் தவிப்பவர்களுக்கு தங்களால் இயன்றதை செய்வோம் என்று முன்வந்தது மனிதாபிமானம் இன்னும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்தியது. அதே போல சிறிய அளவில் ஆயத்த உடை விற்பனைக் கடை வைத்துள்ள ஒரு வணிகர் ஐம்பது ஆடைகளை அப்போதே கொடுத்து விட்டு, அதன் பிறகு அவரே அலுவலகம் வந்து இன்னும் ஐம்பது ஆடைகளை கொடுத்து விட்டுச் சென்றார். அதே போல் இன்னொரு சிறு வணிகர் நூறு பிளாஸ்டிக் குடங்களை அன்பளிப்பாய் அளித்து விட்டுச் சென்றார்.

திருவண்ணாமலை, திருக்கோயிலூர், விழுப்புரம் ஆகிய கிளைகளின் தோழர்கள் அவர்களே நேரடியாக கடலூர் சென்று கடலூர் கிளைச்சங்கத் தோழர்களின் உதவியோடு பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக பொருட்களை வழங்கி விட்டு வந்தார்கள். திருப்பத்தூர் கிளையில் மக்களிடம் வசூலான பொருட்களோடு அப்போதைய கிளைச்சங்கப் பொறுப்பாளர்கள் தோழர்கள் டி.ஸ்ரீதரன் மற்றும் கே.ரவி நள்ளிரவு நேரத்தில் ஆட்டோவில் வேலூர் வந்து அவற்றை கொடுத்து விட்டு போனார்கள். தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவில் எண்பது கிலோ மீட்டர் நள்ளிரவில் பயணம் செய்வது என்பது ஆபத்தானது. ஆனால் உணர்வு வேகத்தில் இந்த தோழர்கள் ஆபத்தையும் பொருட்படுத்தாது உற்சாகத்தோடு வந்தார்கள்.

மொத்தமாக ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒரு ஸ்டவ், ஒரு பக்கெட், ஒரு குடம், ஒரு குவளை, சமையல் பாத்திரங்கள், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள், ஒரு காலண்டர் போன்றவை  கொண்ட ஒரு பை தயாரித்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்காக பொருட்களை சேகரிக்கும் பணி தொடங்கியது. முன்னூறு குடும்பங்களுக்கு  இந்த உதவியை செய்வது என்று நாம் யோசித்திருந்தோம். கோவைக் கோட்டச்சங்கமும் இந்த பணியில் இணைந்து கொண்டது. இருநூற்றி ஐம்பது குடும்பங்களுக்கு தங்கள் கோட்டம் சார்பில் பொருட்கள் வழங்க கோவைக் கோட்டம் முன்வந்தது. ஐந்நூற்றி ஐம்பது குடும்பங்களுக்கு இந்த பொருட்களை தயார் செய்வது மிகப் பெரிய சவால் என்பது பணியில் இறங்கிய பின்புதான் தெரிந்தது.

எவர்சில்வர் பாத்திரங்களும் சரி, அலுமினிய பாத்திரங்களும் சரி ஒரே கடையில் கிடைக்கவில்லை, பிளாஸ்டிக் பொருட்களின் நிலையும் இதுதான். பல கடைகள் ஏறி இறங்க வேண்டியிருந்தது. ஒரே தரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக பெரும் பிரயத்னங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. நாம் எந்த நோக்கத்திற்காக இந்த பொருட்களை வாங்குகிறோம் என்று விளக்கும போது அவர்கள் குறைவான லாபத்திற்கே நமக்கு பொருட்களை அளித்தார்கள். 

சிக்கலே ஸ்டவ்வில்தான் வந்தது. ஐந்நூற்றி ஐம்பது ஸ்டவ்கள் தேவை இருக்கையில் வேலூர் முழுதுமே இருந்தது என்பது வெறும் ஐம்பது மட்டும்தான். அதுவும் தரம் குறைந்ததாக இருந்தது. சென்னையில் கிடைக்கும் என்றார்கள். ஆனால் வியப்பளிக்கக் கூடிய விதத்தில் சென்னையிலும் நாம் எதிர்பார்த்தது போல கிடைக்கவில்லை. அங்கே இருந்த வணிகர்களே இரண்டு உற்பத்தியாளர்களின் விபரங்களைக் கொடுத்து பார்க்க சொன்னார்கள்.

அதிலே ஒருவர் சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். இருமுடி கட்டிக் கொண்டிருந்த கோயிலுக்கே சென்று அவரை சந்தித்த போது தன்னிடம் கையிருப்பு இல்லை என்றும் குறுகிய காலத்திற்குள் தயாரிப்பது சாத்தியமில்லை என்று கைவிரித்து விட்டார். அடுத்தவரிடம் ஒரு இருநூறு ஸ்டவ் கையிருப்பு இருந்தது. அவரோடு பேசி பேசி மீதமுள்ளதை ஐந்து நாட்களில் தயாரித்துத் தரவும் ஒப்புக் கொண்டார்.

ஸ்டவ் தவிர மற்ற எல்லா பொருட்களுமே கோட்ட அலுவலக வளாகத்தில் வந்து இறங்கியது. மன மகிழ் மன்றம் நிரம்பி வழிந்தது. அலுவலகத்தின் முன்னறையிலும் நடப்பதற்குத்தான் இடம் இருந்தது. அடுத்த கட்ட பணி என்பது பாத்திரங்கள், அரிசி, மளிகைப் பொருட்களை பிரித்து குடும்ப வாரியாக பிரிப்பது என்பது.

கோட்ட அலுவலகக் கிளையின் உறுப்பினர்கள் மற்றும் அன்று தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி இன்று நிரந்தர ஊழியர்களாக உள்ள தோழர்கள் ஆகியோரின் பணி மிகவும் சிறப்பானது. இந்த சமயத்தில் பல தோழர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்திற்கும் மேலாக 25 கிலோ அரிசி முட்டைகளை வழங்கினார்கள். 50  கிலோ  சர்க்கரை மூட்டை கூட அன்பளிப்பாய் வந்தது. அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், மற்ற பொருட்கள் ஆகியவற்றை தனித்தனி பாக்கெட்டுக்களில் போடும் வேலையும், பின் பாத்திரங்களோடு சேர்த்து ஒரே பையில் போடும் வேலையும் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நடந்தது. இதற்காக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இலச்சினையோடு கூடிய பிரத்யேக பை ஒன்றும் தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலை போல இந்த பணி நடந்தது. பொங்கலுக்கு முன்பு இந்த பொருட்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

கோட்ட அலுவலகத்தில் நடந்த சிறு நிகழ்ச்சியில் முது நிலை கோட்ட மேலாளர் திரு வி.தாமோதரன் வாழ்த்துரை வழங்க பொருட்கள் ஏற்றப்பட்ட  வாகனங்கள்  சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகள் நோக்கி புறப்பட்டன. கடலூர் மாவட்டத்திலும் புதுவையிலுமாக இந்த பொருட்களை பிரித்து அளிப்பது என்று  முடிவு செய்திருந்தோம். இன்னும் ஒரு நூறு குடும்பங்களுக்கும் பொருட்கள் இருந்தால்தான் புதுவையில் பிள்ளைச்சாவடி பகுதியில் அனைவருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நிவாரண உதவி வழங்க முடியும் என்று அங்கே இருந்த மார்க்சிஸ்ட் கட்சி பொறுப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர். என்ன செய்வது என்று  யோசித்த தருணத்தில் இன்னும் நூறு  குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களுக்கான செலவினத்தை நாங்கள் ஏற்கிறோம் என்று கோவைக் கோட்டச்சங்கம் உடனடியாக ஒப்புக் கொண்டது.

எனவே அன்று நிவாரண உதவிகளை கடலூர் மாவட்டத்தில் மட்டும் அளித்தோம். கடலூர் மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், தோழர் எஸ்.தனசேகரன், தோழர் மூசா, தோழர் மாதவன், தோழர் கற்பனைச்செல்வம், வங்கி சங்கத் தலைவர் தோழர் மருதவாணன்  ஆகியோருடைய அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய ஒத்துழைப்பால், அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பயனாளிகளை கண்டறிந்ததால் நம்மால் எளிதாக மக்களிடம் அவற்றை சேர்க்க முடிந்தது. தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.டி.தரணிபதி, துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், இணைச்செயலாளர்கள் தோழர் எஸ்.சந்தானம், தோழர் எம்.கிரிஜா, கோவைக் கோட்டச்சங்க பொதுச்செயலாளர் தோழர் ஜி.சுரேஷ் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார்கள். சிதம்பரம் கிள்ளைக்கு இரண்டாம் முறையாக சென்றோம். இந்த முறை நெரிசலில் சிக்கவில்லை. அதற்கு தோழர்கள் செய்து வைத்திருந்த முன்னேற்பாடுதான் காரணம்.

ஒரு லாரிலிருந்து இன்னொரு லாரிக்குப் பொருட்களை மாற்றுவது, லாரியில் இருந்து நிவாரணம் வழங்கும் இடத்திற்கு பொருட்களை கீழே இறக்குவது என்று கடினமான, மிக அதிகமான உடலுழைப்பு தேவைப்படும் பணிகள். ஆனால் இவையெல்லாம் நம் தோழர்கள் வெகு எளிதாக செய்து முடித்தார்கள். தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் கூட மூட்டைகளை தூக்கி வந்து தானும் ஒரு தொண்டர்தான் என்பதை சொல்லாமல் சொன்னார். மற்றவர்களுக்கான உதாரணமாக இருந்தார். வியர்வை கொட்டிக் கொண்டிருந்தாலும் முகத்தில் சோர்வே இல்லாமல் உற்சாகமாக பணியாற்றினார்கள். இந்த உற்சாகத்தால்தான் நாம் ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமம் என்று வேகம் வேகமாக செல்ல முடிந்தது. இரவு நேரமும் கூட பணி தொடர்ந்தது. நிவாரணப் பொருட்களை முழுமையாக அளித்து முடித்த பின்பு அத்தனை தோழர்களின் முகத்திலும் களைப்பையும் மீறி  “ நம்மால் இயன்றதைச் செய்தோம் “ என்ற நிறைவு இருந்தது.  கிட்டத்தட்ட நாற்பது தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். வேலூரிலிருந்து சில பெண் தோழர்களும் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவைக் கோட்டம் கூடுதலாக  நூறு குடும்பங்களுக்கு வழங்குவதாகச் சொன்னதால் அதற்கான பொருட்களை சேகரிக்கும் பணி தொடங்கியது. முந்தைய அனுபவத்தால் இம்முறை பணி சற்று எளிதாகவே இருந்தது. ஜனவரி மாதத்திலேயே ஒரு விடுமுறை நாளன்று புதுவை நோக்கிய பயணம் தொடங்கியது. அதற்கு முதல் நாள் சுனாமி நிவாரணப்பணிகளில் கலந்து கொண்ட, கடுமையான் உழைப்பை நல்கிய தோழர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. தென் மண்டல துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதன், இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள். தற்காலிக ஊழியர்களாக இருந்தாலும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினரகளுடைய உணர்வோடு உள்ளீர்கள் என்று  அவர்கள் பாராட்டினார்கள். இன்று அந்த தோழர்கள் நிரந்தர ஊழியர்களாகவே, சங்க உறுப்பினர்களாகவே உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

புதுவை பிள்ளைச்சாவடி கடற்கரையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுவை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தோழர்கள் டி.முருகன், வி.பெருமாள், எஸ்.ராஜாங்கம் ஆகியோருடைய வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்போடு இருநூற்றி ஐம்பது குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்  வழங்கப்பட்டது. தென் மண்டல துணைத்தலைவர்கள் தோழர் கே,சுவாமிநாதன், தோழர் என்.ஆனந்த செல்வி, இணைச்செயலாளர்கள் தோழர் எம்.கிரிஜா, எஸ்.சந்தானம் ஆகியோரோடு கோவைக் கோட்டப் பொருளாளர்களும் பங்கேற்றனர். வேலூரிலிருந்து இரு மகளிர் தோழர்கள், தோழர் ஜி.உதயபானு, தோழர் ஆர்.அமுதா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அநேகமாக இந்த நிகழ்வோடு நமது நிவாரணப் பணிகள் நிறைவுற்று இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்தது, இன்னும் நெகிழ்வாக

( நாளை தொடரும்)