Tuesday, May 22, 2018

கொலைகாரனே பதவி விலகு . . .
இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அனைத்திற்கும் தமிழக அரசே பொறுப்பு. அமைதியாக போராடி வரும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி துப்பாக்கிச் சூடு மூலம் இதுவரை எட்டு பேர் இறக்க காரணம் கண்டிப்பாக எடப்பாடி அரசின் அடிமை புத்திதான்.

மாவட்ட ஆட்சியரும் எஸ்.பி யும் இன்று தூத்துக்குடியில் இல்லாததே நடந்த அராஜகம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கான சான்று. 

பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா நிறுவனம் தூக்கி எறிந்த எலும்புத்துண்டுகளுக்காக தமிழக மக்கள் மீது தாக்குதல் நடத்திய அராஜகச் செயலை கண்டிக்கிறேன்.

ஓளிந்து வாழும் எஸ்.வி.சேகரை கைது செய்யத் துப்பில்லாத தமிழக காவல்துறை போராடுபவர்கள் மீது மட்டும் தன் வீரத்தைக் காண்பிக்கிறது.

நச்சைப் பரப்பும் ஸ்டெரிலைட் ஆலையை பாதுகாப்பதற்காக, வேதாந்தாவின் லாபம் பெருகுவதற்காக அப்பாவி மக்களின் மீது வெறியாட்டம் நடத்தியுள்ள எடப்பாடி ஒரு கொலைகாரனே.

தமிழர்களை கொன்று ரத்த ருசி பார்க்கும் வெறி பிடித்த மிருகங்களே, எடப்பாடியே, ஓ.பன்னீரே, தமிழகத்தை ஆளும் அருகதை உங்களுக்குக் கிடையாது.

உடனே பதவி விலகு . . .

ஸ்டெரிலைட் ஆலையை மூட வேண்டும் என்ற முழக்கத்தோடு கொலைகாரன் எடப்பாடியே பதவி விலகு என்ற முழக்கத்தையும் இணைத்தே எழுப்பிட வேண்டும்

கரையிலிருந்து கங்கை . . .

கொல்கத்தாவில் பி.பி.டி பாக் என்ற புறநகர் ரயில் நிலையம் கங்கைக்கரையை ஒட்டி உள்ளது என்று முன்னரே ஒரு பதிவில் எழுதியிருந்தேன். 

அந்த ரயில் நிலையத்திலிருந்தும் பின்னர் ஓடும் ரயிலிலில் இருந்தும் கங்கையை எடுத்த புகைப்படங்கள் உங்களுக்காக.


கொல்கத்தா நகரின் இரண்டு தொங்கும் பாலங்களையும் இந்த ரயில் பயணத்தில் பார்க்கத்தான் முடிந்தது, அவற்றின் மீது செல்லவில்லை.

                                                                                - பயணம் தொடரும் . . .

Monday, May 21, 2018

தொடருது சிவப்பின் வெற்றி . . .
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இடதுசாரி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரா, மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஹீயூகோ சாவேஸ் காலத்திலேயே அவரை பதவியிலிருந்து வீழ்த்த சதி செய்து மகத்தான மக்கள் போராட்டம் காலமாக மூக்குடைபட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் அங்கே மீண்டும் தோற்றுப் போயுள்ளது.

வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சிகள் மூலம் ஏராளமான அவதூறுப் பிரச்சாரம், குழப்பங்கள், கலவரங்கள், மோசடிகள் என ஏராளமானவற்றை முயற்சி செய்து நிக்கோலஸ் மதுரா மீண்டும் வெற்றி பெறுவதை தடுக்கப் பார்த்தது.

பதிவான வாக்குகளில் 68 % வாக்குகளைப் பெற்று மகத்தான மக்கள் ஆதரவோடு நிக்கோலஸ் மதுரா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சிவப்பு மாற்றம் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.

வாழ்த்துக்கள் தோழர் மதுரா. . .

காவிகள் களவாடும் ஆயுதங்கள் . . .


மரபு ஆயுதங்களைக் களவாடும் காவிக்கும்பல்
சு.வெங்கடேசன்
தமிழகத்தில் திட்டமிட்டு பண்பாட்டு குழப்பத்தை காவிக்கும்பல் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இந்திய வரலாற்றைப் புதிதாக எழுதப் போகிறோம் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, ஹரப்பா, மொகஞ்சதாரோ நகர நாகரீகத்தை மிஞ்சிய நாகரீகத்திற்கான தடயங்கள் கீழடியில்100ஏக்கர் பரப்பில் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள அனைத்து கலைப் பொருட்களும் கலை நுணுக்கத்தோடு நுட்பத்தோடு உள்ளன. இன்றைய பொதுப்பணித்துறை கட்டுகிற கட்டிடத்தில் ஒரு கலை நுணுக்கம் கூட இல்லாமல் சவப்பெட்டிபோல் உள்ளது. இதுதான் நவீனகால கலைமரபு. கீழடியில் கிடைத்தவற்றில் தந்தத்தில் சீப்பு, தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள் வரை உள்ளன. அங்கு மதம், சாதி சார்ந்த ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை. சாதி, சமயம், புராணங்கள் வருவதற்கு முன்பே அறிவால் மேம்பட்டு உயர்ந்த இடத்தில் இருந்தது தமிழ்ச்சமூகம். அந்த மரபுதான் காவிகளுக்குப் பிரச்சனையாக உள்ளது. 

உன்னுடைய வேதத்தில் நீ செய்கிற யாகத்தால் கடவுள் வந்து ஆசி கொடுப்பார் என்கிறாயே, நான்யாகம் செய்தால் என்னை விட்டுவிட்டு ஓடிய என்காதலன் எங்கே இருக்கிறான் என்று உன் கடவுள் கண்டுபிடித்து தருவாரா? என்று சங்க இலக்கிய பாடல் கேள்வி கேட்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்று கூறுகள் காவிகளுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் கைவிட முடிவெடுத்திருக்கிறார்கள். வரலாற்றுச் சின்னங்களைச் சுற்றியுள்ள 2 கி.மீ தூரம் எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்பது விதி. அதை நீக்கி இருக்கிறார்கள். செங்கோட்டையையே டால்மியா கம்பெனியிடம் வாடகைக்கு விட்டுவிட்டார்கள். வரலாற்றின் மீது ஏன் இவர்களுக்கு இவ்வளவு பகை என்றால், வரலாறு இவர்களுக்கு எதிரானது. வரலாறு மக்களின் பன்முகத் தன்மையைப் பறைசாற்றுவது. அது மொழி, பண்பாட்டின் கூறுகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உள்ளது. 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். நவீன வளர்ச்சியில் அச்சு எந்திரங்கள் வரும் போது தமிழ்மொழி அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை யோசித்தவர் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த வீரமாமுனிவர். புள்ளி வைக்கிற எழுத்து வேண்டாம் என்று மாற்று எழுத்துக்களை உருவாக்கியவர் அவர். அதன்பிறகு 10க்கும் மேற்பட்ட எழுத்துக்களைக் குறைத்து மிகப்பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் பெரியார். கிறிஸ்தவனும், மத நம்பிக்கையற்றவனும், வைஷ்ணவனும், சைவனும் என எல்லோரும் சேர்ந்து உருவாக்கி கட்டிக்காத்த மரபுதான் அனைத்து சமயத்தவனுக்காகவும் உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.எனவேதான் கங்கைக் கரையில் இருந்த தெளிவான சாதியப் பாகுபாடு தமிழகத்தில் இல்லை.அண்மையில் சிவகங்கையில் ஒரு கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டில் ஒருவர் கொடுத்த சொத்துப்பட்டியல் உள்ளது. கோவிலுக்கு சொத்து இருந்தால்தான் பூசை நடக்கும். கடவுளை விட உயர்ந்தது சொத்து, பொருள்தான். எனவேதான் காரல் மார்க்ஸ் பொருள் என்பது ஒரு சமூக உறவு என்றார். 

உலகில் தோன்றிய மகான்களின் வாக்கியங்களில் மிக உயர்ந்த மகாவாக்கியங்களை லண்டனில் ஒரு தத்துவக்குழு தொகுத்துள்ளது. அந்த 10 மகாவாக்கியங்களில் 4 வாக்கியங்களை எழுதியவர் மாமேதை காரல் மார்க்ஸ். பணம் என்பது பொருள் அல்ல சமூக உறவு என்றார். சொத்து இருந்தால்தான் கோவில், சாமி இருக்கும். எனவேசொத்தை எழுதி வைத்தார்கள். 

பழைய பத்திரங்களில் கீறல் என்ற சொல் இருக்கும். அது என்ன கீறல்?கல்வெட்டில் பொறிக்கப்பட்ட சொத்துக்களை கொடுத்தவருக்கு கல்வெட்டு எழுத்துப்பயிற்சி கிடையாது. எனவே, பயிற்சி பெற்றவர் எழுதி முடித்தபிறகு சொத்துக்கொடுத்தவர் சுத்தியல் உளியை வைத்து ஒரு கீறல் போடுவார். அதன் பிறகு அதற்குக் கீழ் இவர் இன்னார் என்று பயிற்சி பெற்றவர் முறையாக எழுதுவார். இதுதான் கீறல். கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கல்வெட்டில், நிலத்தைக் கொடுத்தவர் சமூகக் கட்டமைப்பில் உயர்ந்த சாதி என்று சொல்லப்படும் வெள்ளாளர் பிரிவை சார்ந்தவர். இந்தக் கல்வெட்டை எழுதியவர் குரும்பன் என்ற தலித் சமூகத்தைச் சார்ந்தவர். ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகொண்ட உயர்சாதிக்காரருக்கு எழுதத் தெரியவில்லை. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எழுதத் தெரிந்திருக்கிறது. இரண்டாவது, அந்தக் கல்வெட்டு இருப்பது கருவறை. உயர்சாதிக்காரர் சென்ற இடத்திற்கெல்லாம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர். 

14ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இவர்கள் சொல்லுகிற அனைத்துக் கற்பிதங்களையும் நொறுக்கிறது. சாதி நெருக்கடிக்கு உள்ளாகாமல் 14ம் நூற்றாண்டு வரை தமிழ்ச்சமூகம் போராடி வந்திருக்கிறது.இந்த மண்ணின் சுய சிந்தனை கொண்ட அறிவு மரபு அனைத்து வகையிலும் காவிகளுக்கு இடையூறாக இருக்கிறது. பிளாட்டோ போன்றோர் மனிதனை எப்படி மேலாண்மை செய்வது என்றுதான் சிந்தித்தார்கள். எனவே கடவுளை உருவாக்கி, கடவுளின் பெயரால் பயமுறுத்தி கற்பிதங்களையும் உருவாக்கினார். 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு நேர் எதிரான மரபைக் கொண்டது தமிழ்ச்சமூகம் என்பதற்கு ஓராயிரம் சான்றுகள் உள்ளன. எனவே, மரபுகளை வீழ்த்துவது, பண்பாட்டுக் கூறுகளை சிதைப்பது, வரலாற்றை மாற்றுவது என்று வெறித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
தமிழ்ச்சமூகம் இதற்கெதிராக விழிப்புணர்வோடு போராட வேண்டும். குறிப்பாக, அரசியல் தளத்தில் போராட பல இயக்கங்கள் இருக்கின்றன. பண்பாட்டுத்தளம் நுட்பமானது. கூர்மையானது. நமது ஆயுதங்களைஎதிரிகள் களவாட நாள்தோறும் முயற்சிக்கிறார்கள். காவிகள் அதைக் களவாண்டு பயன்படுத்தினாலும், அதன் மரபணுக்கள் உனக்கு எதிராகவே திரும்பும் என்பதுதான் கடந்த 3 ஆண்டுகால அனுபவம். எனவே, இந்த மண்ணின் மகத்தான மரபை உயர்த்திப் பிடிப்போம். சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம் என்பது இன்றைய முழக்கம் அல்ல, பண்டைய வரலாறு. அதைத் தொடர்வோம்.”
(தமுஎகச தென்சென்னை மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை)தொகுப்பு செ.கவாஸ்கர்

நன்றி - தீக்கதிர் 21.05.2018

Sunday, May 20, 2018

புதுசா எதுக்கு? கமிஷன் அடிக்கவா?


வேலூர் மாவட்டம் ஏலகிரியில் நேற்று கோடை விழா தொடங்கி உள்ளது. 

கோடை விழாவை கொண்டாட நிரந்தரமான மேடை ஒன்று அமைக்கப்படும் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்டதை நிறைவேற்ற முடியவில்லை. அடுத்த வருடம் அமைத்து விடுவோம் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.

மிகச் சிறப்பாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கலை அரங்கம் ஒன்று அங்கே பாழடைந்து கிடப்பது அமைச்சருக்கு தெரியுமா?

ஏலகிரியில் உள்ள யாத்ரி நிவாஸ் - மிகச் சிறப்பாக பராமரிக்கப் பட்டு வருகிற அரசு விருந்தினர் இல்லை. எங்கள் கோட்டச் சங்கத்தின் சார்பாக ஒரு முறையும் தென் மண்டலக் கூட்டமைப்பு சார்பாக ஒரு முறையும் அங்கே இரண்டு நாள் தொழிற்சங்க வகுப்பு நடந்துள்ளது. அறைகளின் பராமரிப்பு, உணவின் சுவை மற்றும் தரம், அந்த வளாகத்தின் சுகாதாரம், தூய்மை என எல்லாமே அபாரம். எந்த ஒரு தனியார் விடுதிக்கும் சளைத்ததல்ல அது. 

யாத்ரி நிவாஸ் சுற்றுச்சுவரை ஒட்டி ஒரு அரசு திறந்த வெளி கலை அரங்கம் உள்ளது. 

நல்ல பெரிய மேடை. மேடைக்கு அழகூட்ட இரு புறமும் தூண்கள்.  அரை வட்ட வடிவில் படிகளோடு அமைக்கப்பட்ட பார்வையாளர் மாடம். கடைசி வரிசையில் அமர்ந்துள்ளவர்கள் கூட மேடையை எந்த தடையும் இல்லாமல் பார்க்க முடியும். மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த திறந்த வெளி கருத்தரங்கம்.

அதன் இன்றைய நிலை எப்படி உள்ளது பாருங்கள்.பாசி படர்ந்து பாழடைந்து போயுள்ளது மேடை. அந்த மேடையில் என்ன நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது என்பதற்கு சின்ன உதாரணமாக கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

ஆமாம். இப்போது அது இலவச திறந்த வெளி பார்.

பார்வையாளர்கள் மாடம் மிகப் பெரிய கொடுமை. அதை எழுத்தால் விவரிப்பதை விட படத்தில் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.முழுதுமாக செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கிறது.

"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ?"

என்ற பாரதியின் வரிகளுக்கு இந்த திறந்த வெளி கருத்தரங்கம் பொருத்தமான உதாரணம்.

அரசு அமைத்தது அதனால்தான் பராமரிப்பு இல்லை என்று சிலர் சொல்ல வரலாம். அதனால்தான் அரசு அமைத்த யாத்ரி நிவாஸ் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பதை முன் கூட்டியே குறிப்பிட்டேன். 
ஏலகிரியில் அமைக்கப்பட்டுள்ள அரசு பூங்கா கூட நன்றாகத்தான் பராமரிக்கப்பட்டு வருகிறது.  மேலே உள்ள படம் அதற்குச் சான்று. 

அரசின் கைவசம் உள்ளது என்பதல்ல பிரச்சினை. இந்த கலை அரங்கம் பாழடைக்கப்பட்டதன் பின்னணியில் ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு வேளை ஒழுங்காக பராமரிக்கப்பட்டால் இயற்கைச் சூழலில், மெல்லிய குளிரில் பல நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அற்புதமான இடமாக இந்த அரங்கம் அமைந்திடும்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட கலை அரங்கத்தை நாசம் செய்து விட்டு புதிதாக ஒன்று அமைப்பது என்றால் அதற்கு கமிஷன் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இன்னொரு முக்கியமான செய்தியையும் குறிப்பிட வேண்டும். இந்த கலை அரங்கத்திற்கு முன்பாக ஒரு அரசு அலுவலகம் உள்ளது.

அது 

ஏலகிரி காவல் நிலையம். 

Saturday, May 19, 2018

ஆளுனரை நீக்கு, அவைக்குறிப்பை நீக்கு . .


யெட்டி ராஜினாமா நல்ல விஷயம். 

நீண்ட  நாட்களுக்குப் பிறகு நடந்த நல்ல தரமான சம்பவம்.

பதினைந்து நாள் அவகாசம் இருபத்தி நான்கு மணி நேரமாக குறைக்கப்பட்டதால் குதிரை பேர டீலிங்கிற்கு வாய்ப்பில்லாமல் வேறு வழியில்லாமல் நடந்த சம்பவம்.

"அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்"

என்பது இப்போது யெட்டியை விட மோடியை விட

கர்னாடக ஆட்டுத்தாடிக்குத்தான் மிகவும் அசிங்கம்.

தன் விசுவாசத்தைக் காண்பிக்க யெட்டியை பதவியேற்க அழைத்த,

தன்னைப் போலவே இன்னொரு மோசடிப் பேர்வழியை தற்காலிக சபாநாயகரை நியமித்த

ஆளுனர், வெட்கம், மானம், ரோஷம் இருந்தால் அவரே ராஜினாமா செய்ய வேண்டும்.

அதெல்லாம் அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

ராஜினாமா செய்வது என்று முடிவெடுத்த பின்பு எதற்கு உணர்ச்சி பொங்க உரை நிகழ்த்த வேண்டும்? அது எல்லாமே பொய், பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை.

அவசியமற்ற அந்த உரை கர்னாடக சட்டப்பேரவை ஆவணங்களில் பதிவாக வேண்டிய அவசியமில்லை.

அதையும் நீக்கிட வேண்டும்.

இறுதியாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு ஒரு வார்த்தை.

உங்களுக்கான உண்மையான சோதனை இப்போதுதான் தொடங்குகிறது. அடிபட்ட நரி மூர்க்கத்துடன் திருப்பித் தாக்கும். உங்களின் ஒற்றுமை மூலமும் மக்களுக்கான நல்லாட்சி மூலமும்தான் இப்போது கிடைத்துள்ள வெற்றிக்கனியை தக்க வைத்துக் கொள்ள முடியும். 

அதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
அன்று கொடுத்த ரத்தம் . . .
எனது கொல்கத்தா பயணத்தில் நான் பார்க்க நினைத்த இன்னொரு இடம் வில்லியம்ஸ் கோட்டை. பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்டது.  ராணுவ முகாமாக அன்றிலிருந்து இன்று வரை செயல்பட்டு வருகிறது. உள்ளே செல்ல முடியாது என்றாலும் வெளியிலிருந்து பார்க்க விரும்பினேன்.

எங்கள் விருந்தினர் இல்லத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்கே அழைத்துச் செல்ல பார்த்தவ் கோஷ் என்ற தோழர் வருவார் என்று முதல் நாள் இரவு தகவல் சொன்னார்கள். அவரும் காலை தொலைபேசியில் அழைத்து உறுதி செய்தது மட்டுமல்லாமல் காலை உணவு சாப்பிட்டு விடாதீர்கள் என்றும் அழுத்தமாக வலியுறுத்தினார்.

நானும் அப்படியே காத்திருந்தேன். அனேகமாக ஏதாவது ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார் என்பது என் எதிர்பார்ப்பு. அவரும் வந்தார். டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் சாண்ட்விட்ச், அவித்த முட்டை, ரசகுல்லா மற்றும் இன்னொரு பெங்காலி இனிப்பு, ஃப்ரூட் கேக், இவையெல்லாம் சாப்பிட வசதியாக ஒரு தட்டு, ஃப்ளாஸ்கில் தேநீர் என்று கொண்டு வந்து என்னை அன்புக்கடலில் திண்டாட வைத்து விட்டார்.

“எதற்கு இவ்வளவு சிரமம்?” என்று கேட்ட போது எங்கள் ஊருக்கு வந்த தோழருக்கு செய்வதற்கு என்ன சிரமம் என்று கேட்டது மட்டுமல்லாமல் ஒரு சம்பவத்தையும் நினைவு படுத்தினார். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு அவர் சகோதரி சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது ரத்தம் தேவைப்பட்டுள்ளது. அவரால் வேலூர் வர முடியாத நிலையில் சங்கத்தின் மூலமாக தொடர்பு கொண்டபோது நீங்களும் ரமேஷ்பாபு (எங்கள் இணைச்செயலாளர்)  என்ற தோழரும் ரத்தம் அளித்துள்ளீர்கள்.  இப்போதுதான் உங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று அவர் நெகிழ்ச்சியோடு கூற எனக்கு பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை.

வேலூர் திரும்பியதும் தோழர் ரமேஷ்பாபுவிடமும் வழக்கமாக ரத்த தானம் செய்யும் பல தோழர்களிடமும் இச்சம்பவம் பற்றி பகிர்ந்து கொண்டேன்.  எல்லோருக்குமே ஒரு சந்தோஷம். இப்பணியை தொடர்ந்து செய்ய எல்லோருக்குமே உற்சாகமளித்தது.

நாம் மறந்து போனாலும் அவர்கள் நினைவில் வைத்துள்ளனர் என்பது மனதிற்கு நிறைவளிக்கிறது.  கொல்கத்தா பயணத்தின் உன்னதமான தருணமாக இதைத்தான் கருதுகிறேன்.

                                                               - பயணம் தொடரும் . . .

பி.கு ; மேலே உள்ள படத்தில் எனக்கு வலது பக்கத்தில் நிற்பவர் தோழர் பார்த்தவ் கோஷ். இடது பக்கத்தில் இருப்பவர் கிழக்கு மண்டல பொருளாளர் தோழர் அமிதவ்

Friday, May 18, 2018

நாளை 4 மணிக்கு என்ன நடக்கும்?


உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாளை நான்கு மணிக்கு கர்னாடக சட்டப்பேரவையில் யெடீயூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றாக வேண்டும்.

நாளை நான்கு மணிக்கு என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு?

பல்லாயிரம் கோடி முதலீட்டில் நடந்து கொண்டிருக்கிற குதிரை பேரம் ஒரு வேளை வெற்றி பெற்றிருந்தால் எந்த சிக்கலும் இல்லாமல் யெடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறலாம்.

ஒரு வேளை பதினைந்து நாள் அவகாசம் குறைக்கப்பட்டதால் குதிரை பேர முயற்சிகள் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் அப்போது என்னவெல்லாம் நடக்கலாம்?

குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் யெட்டி வெற்றி பெற்றதாகக் கூட தற்காலிக சபாநாயகர் அறிவிக்கலாம். அதற்குத் தகுந்தாற்போலத்தான் ஒரு மோசடிப் பேர்வழியை தற்காலிக சபாநாயகர் அறிவித்துள்ளார் என்பது கவனத்திற்குரியது.

காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப் பேரவையிலிருந்து அடித்து துரத்த ரௌடிகளை சட்டமன்றத்துக்கு உள்ளே பாஜக அனுப்பலாம்.

சட்டப்பேரவைக்கு உள்ளேயே ஏதாவது பிரச்சினையை உருவாக்கி  காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றி விட்டு உள்ளே உள்ள பாஜக உறுப்பினர்களை மட்டும் வாக்களிக்க வைத்து யெட்டி ஜெயித்ததாக அறிவிக்கலாம்.

நீதிபதி குமாரசாமி பாணியில் தற்காலிக சபாநாயகர் தப்புக் கணக்கு கூட அறிவிக்கலாம்.

ஒரு வேளை இந்திய அரசியல் வானில் மிகப் பெரிய அதிசயம் நிகழ்ந்து நேர்மையோடு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் யெட்டி தோற்றுப் போய் ராஜினாமா செய்யலாம். 

காத்திருப்போம்.

நாளை நல்லதே நடக்கும் என்று.
ஜெயிலுக்கு அனுப்பிய பாம்பு . . .


அநேகமாக அந்த வீடியோவை  நீங்களும் பார்த்திருக்கலாம். வயது  முதிர்ந்த ஒரு தம்பதி நாற்காலியில் அமர்ந்திருக்க பூஜை ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நல்ல பாம்பு படமெடுத்து ஆடிக்கொண்டிருக்க, அதனை ஒரு பாம்பாட்டி கட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த பாம்பிற்கு பூஜை நடக்கிறது. பூ போடுகிறார்கள், தீபாராதனை காட்டுகிறார்கள். வீடியோவின் இறுதியில் ஏதாவது ட்விஸ்ட் இருக்கிறதா என்று பார்த்தால் எதுவுமில்லை.

பாம்பை வைத்தெல்லாம் பூஜை செய்வது ரொம்பவே ஓவர் என்று தோன்றியது. கொஞ்சம் அசந்தாலும் சிக்கல், மனிதனுக்கோ அல்லது பாம்புக்கோ . . .

இன்றைய செய்தியில்தான் தெரிந்தது.

அந்த பாம்பு பூஜையின் வீடியோ வைரலாக பரவியதில் வனத் துறையின் கவனத்திற்கும் சென்று, பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக அறிவிக்கப்பட்ட அந்த வகை பாம்பினத்தை வைத்து 

அந்த சர்ப்ப பூஜையை நடத்திய அந்த முதியவர்களின் மகன் சுந்தரேசன் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள பாம்பாட்டி பழனியை தேடிக் கொண்டிருக்கிறார்கள் (இவர் ஒன்றும் எஸ்.வி.சேகர் இல்லையே. அதனால் விரைவில் பிடித்து விடுவார்கள்)

தேவையற்ற வேலை செய்ததன் விளைவு இப்படி கம்பி எண்ணும் நிலையை உருவாக்கி விட்டது.

ஆனால் ஒன்று 

இந்த கைது நடக்காவிட்டால்

சர்ப்ப பூஜைகள் அதிகரித்து விடும்.
Thursday, May 17, 2018

தோழமை மழையில் நனைந்த தருணம் . . .

கொல்கத்தா பயணத்தை அற்புதமான அனுபவமாக மாற்றியது அங்கே இருந்த எங்கள் தோழர்கள் வெளிப்படுத்திய தோழமை உணர்வுதான்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் பொதுச்செயலாளராக, தலைவராக 1955 முதல் 1994 வரை செயல்பட்ட  மகத்தான தலைவர் தோழர் சந்திர சேகர் போஸ் அவர்களை சந்திப்பதும்  அறுபதுகளின் இறுதியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய வீரம் செறிந்த "இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டம்" நடைபெற்ற "இலாகோ" கட்டிடத்தையும் தொடர்புடைய இதர இடங்களைப் பார்ப்பதும்தான் கொல்கத்தா பயணத்தின் முக்கிய நோக்கம்.

இது தொடர்பாக எங்கள் கிழக்கு மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் ஜெயந்தோ முகர்ஜியிடம் முன் கூட்டியே பேசியிருந்தேன். கொல்கத்தா வந்த உடனேயே சங்க அலுவலகத்திற்கு விரைந்தேன். அங்கே தோழர் ஜெயந்தோவும் மற்ற பொறுப்பாளர்களும் இருந்தார்கள். பிஸ்கெட், டீயோடு வரவேற்றார்கள்.  தோழர் போஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒரு ஓய்வு பெற்ற தோழரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரும் தயாராக இருந்தார். அவர் தோழர் போஸிடம் தொலைபேசியில் பேச அவரும் உடனே அழைத்து வரச் சொல்லி விட்டார். 

கிழக்கு மண்டல பொருளாளர் தோழர் அமிதவ் ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். மாலை ஆறு மணி முதல் ஒன்பதரை மணி வரை தோழர் சந்திர சேகர போஸோடு நீண்ட உரையாடல். 96 வயது என்பதை அவர் சொன்னால்தான் நம்ப முடியும். அந்த அளவிற்கு ஒரு தெளிவு, நினைவாற்றல். போராட்ட களத்தில் அவரோடு இருந்த சகாக்கள் தோழர் சரோஜ் மற்றும் தோழர் சுனில் பற்றி பேசுகையில் நெகிழ்ச்சி, சங்கம் இன்று வளர்ந்துள்ள நிலை குறித்து மகிழ்ச்சி, இளைய தோழர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்று மூன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. அவரது வீட்டிலேயே இரவு உணவு அருந்தி விட்டு புறப்பட்டேன். டாக்ஸி ஸ்டேண்ட் வரை நானே வருகிறேன் என்று எழுந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வாழ்வின் உன்னதமான தருணமாக அந்த நிமிடங்கள் அமைந்திருந்தது."இலாகோ கட்டிடம்" பார்க்க நானே அழைத்துச் செல்கிறேன் என்று தோழர் அமிதவ் சொல்லியிருந்தார். அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து விட்டார். அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு கிளையில்தான் அவர் பணியாற்றுகிறார். அங்கே உள்ள அனைத்து தோழர்களிடமும் மிகவும் பெருமையாக அறிமுகம் செய்து வைத்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு இடத்தில் பணியாற்றுகிறோம் என்று அந்த தோழர்களிடமும் ஒரு பெருமிதம் இருந்தது. 


கொல்கத்தா துறைமுகம் செல்ல வேண்டும் என்று வழி கேட்டேன். துறைமுகத்தின் வாசலில் இருந்து பார்ப்பது வீண். அதற்குப் பதிலாக நியூ அலிப்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலில் போனால் அந்த ரயில் துறைமுகத்தை ஒட்டியபடியே செல்லும் என்று சொல்லி கூடவே செல்ல ஒரு தோழரையும் அனுப்பி வைத்தார்கள். 

நாங்கள் ரயில் ஏறிய பி.பி.டி.பாக் என்ற ரயில் நிலையம் கங்கை நதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இடது முன்னணி அரசு 2000 ம் ஆண்டு கங்கை நதிக்கரையை ஒட்டி மில்லினியம் பூங்கா என்ற ஒரு பூங்காவை அமைத்துள்ளது. மறு கரைக்கு படகு சவாரியும் உண்டு. அதைத்தான் தவற விட்டு விட்டேன். என் உடன் வந்த அந்த தோழர் கௌதம் ரயில் செல்லும் வழியெங்கும் பல தகவல்களை கூறியபடியே வந்து கடைசியாக விருந்தினர் இல்லம் செல்ல மெட்ரோ ரயிலிலும் ஏற்றி வைத்தார்.

கொல்கத்தா தோழர்களின் அன்பும் உபசரிப்பும் தோழமை உணர்வும் தந்த பரவசத்தோடு அன்று இரவு விருந்தினர் இல்லம் திரும்பினேன். 

இத்தோடு முடியவில்லை.

இவற்றை மிஞ்சும் இன்னொரு நெகிழ்ச்சியான அனுபவம் மறுநாள்  கிடைத்தது.

அது பற்றி நாளை 

                                  -  பயணம் தொடரும் 

கொல்லுங்கய்யா, நல்லா கொல்லுங்க . . .யெடியூரப்பாவிற்கு  பெரும்பான்மை இல்லை என்பது நன்றாகவே தெரிந்திருந்தும் அந்தாளை பதவியேற்க அழைத்தது வடி கட்டிய அயோக்கியத்தனம்.

பதினைந்து நாள் அவகாசம் கொடுப்பது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ க்களை இழுக்கும்  டீலிங்கிற்கான அவகாசம்.

இந்த அயோக்கியத்தனம் அரங்கேறுவதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது.

ஆளுனர் ஒரு காவி விசுவாசி.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் கூட.

எல்லா விசுவாசிகளும் சேர்ந்து 

கொல்லுங்கய்யா,
இந்திய ஜனநாயகத்தை
நல்லா கொல்லுங்கய்யா

Wednesday, May 16, 2018

கம்யூனிஸ்டுகள் மீது காண்டு என்றால் . . .


கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ஒரு பத்திரிக்கையில் பிழைப்பு நடத்தி வரும் ஒருவருக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை, அதிலும் மிகச் சிறப்பாக கருத்துக்களை முன்வைக்கும் தோழர் கனகராஜைப் பார்த்தாலே காண்டாக இருக்கிறதாம்.

கமலஹாசன் தனது மய்யப் பொறுப்பாளர்களை அறிவித்த போது "ஸ்ரீபிரியா குத்து நடனம் போடுவாரா" என்று ஜொள்ளு ஒழுக கேட்ட தரமான பத்திரிக்கையாளர் மாலன், அதை வழி மொழிகிறார்.

தொலைக்காட்சி விவாதங்களில் அபத்தமாக உளறிக் கொண்டு அராஜகமாக நடந்து கொள்கிற காவிகள் மீது இந்த கேடு கெட்ட ஜென்மத்திற்கு வராத எரிச்சல், கம்யூனிஸ்டுகள் மீது வருகிறது என்றால் 

கம்யூனிஸ்டுகள் மீது அந்த அரைகுறைக்கு பொறாமை என்று சொல்வதா?

இல்லையில்லை

கடைந்தெடுத்த காவி ஸ்லீப்பர் செல்லால் மட்டுமே இப்படி வன்மத்தை வெளிப்படுத்த முடியும் . . . 

அவர் அங்கே பத்திரமாக, ஆனால் தனியாக . . .

கொல்கத்தா எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு பூங்காவில் உலகின் முதல் புரட்சித் தலைவரான தோழர் லெனினுக்கு ஒரு சிலை உண்டு.

திரிபுராவில் சங்கிகள் செய்த அநாகரீக, அராஜக செயலை திரிணாமுல் குண்டர்கள் ஏதாவது செய்திருப்பார்களோ என்ற அச்சத்துடன் அந்த சிலை அங்கே உள்ளதா என்று முதல் வேலையாக அங்கே  பார்க்கச் சென்றேன்.

தோழர் லெனின் சிலை எந்த பாதிப்பும் இல்லாமல் கம்பீரமாகவே இருக்கிறது.ஆனால் அந்த பூங்கா எப்போதுமே பூட்டியே இருந்தது.  எங்கள் விருந்தினர் இல்லத்திற்கு வெகு அருகில் இருப்பதால் ஒவ்வொரு முறை அந்த பக்கமாக சென்ற போதும் உள்ளே செல்ல நினைத்தேன்.

"பார்க் பந்த் கயா" என்று காவலாளி ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி விட்டார்.

பூட்டிய பூங்காவிற்குள் பத்திரமாகவே இருக்கிறார், ஆனால் யாரும் அருகில் வந்து பார்க்கும் வாய்ப்பில்லாமல் தனியாக . . .

                                                             - பயணம் தொடரும்

மோடி தொகுதியில் பிணக்குவியல்

கங்கை மாதா கனவில் வந்து போட்டியிடச் சொன்னதாய் கதை விட்டு மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் நேற்று ஒரு மிகப் பெரிய விபத்து.
மொட்டைச்சாமியார்  உத்தரவிட்டு கட்டிக் கொண்டிருக்கிற ஒரு 129 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பதினெட்டு பேர் இறந்து விட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட வேண்டும்.

கட்டப்படும் போதே விழுகிறது என்பது மொட்டைச்சாமியார் ஆட்சியின் தரமான நிர்வாகத்துக்கு சான்று.

கங்கை மாதா கனவில் சொன்னதால் வாரணாசியில் போட்டி இட்டதாய் சொல்லும் மோடி தன் தொகுதியில் மிகப் பெரிய துயரம் நடந்தும் அங்கே செல்லவில்லை. ஊர் சுற்றியால் தொகுதிக்கு மட்டும் போக முடியாது போல.

மொட்டைச் சாமியாரும் அங்கே செல்லவில்லை.

இதுதான் இந்த கேடு கெட்டவர்கள் மக்களுக்கு அளிக்கும் மரியாதை.

இந்த லட்சணத்தில் இவர்கள் கர்னாடகத்தில் பெரும்பான்மை அடையவில்லையே என்று இன்னும் வருத்தப்படும் சில படித்த அதி மேதாவிகள் இருக்கிறார்கள்.

அந்த நல்லவர்கள் பாலத்துக்கு அடியில்  உயிரோடு சிக்கியிருக்கலாம். 

Tuesday, May 15, 2018

லிப்டில் தவித்த அந்த நொடிகள் . . .

கடந்த திங்களன்று கொல்கத்தா நோக்கி புறப்பட்டேன்.

கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு மணிக்கு இறங்கினாலும் பெட்டி வர கால தாமதமாகி விட்டது. சென்னையிலிருந்து கொல்கத்தா வர இரண்டு மணி நேரம். விமானத்திலிருந்து கன்வேயர் பெல்டிற்கு வர கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து நிமிடமானது. 

டாக்ஸி ஒன்றை பிடித்து எங்கள் எல்.ஐ.சி விருந்தினர் இல்லத்திற்குச் சென்றால் ஒரு மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் "Welcome to Kolkatta" என்றது. அங்கங்கே நின்று நின்று ஒரு வழியாக இரண்டு மணி நேரம் கழித்து கெஸ்ட் ஹவுஸ் சென்று விட்டேன்.

கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்ப்பட்ட அழகிய, கம்பீரமான "எஸ்பிளனேட் மேன்ஷன்" என்ற பிரம்மாண்டமான கட்டிடத்தில்தான் எங்கள் விருந்தினர் இல்லம், இரண்டாவது மாடியில் இருந்தது.லிப்டில் ஏறி இரண்டாவது மாடிக்கான பட்டனையும் அமுக்கி இரண்டாவது மாடிக்கும் வந்து விட்டேன். பழைய கம்பிக் கதவுகளை (Collapsible Gate) க் கொண்டது அந்த லிப்ட். கதவைத் திறந்தால் கதவு திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.

மேலே எரிந்த விளக்கு மின்சாரம் ஓடிக் கொண்டிருப்பதை உறுதி செய்தது. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கதவு திறக்கவே இல்லை. ஆகா, மாட்டிக் கொண்டு விட்டோம் என்று நினைக்கையில் கதவு திறக்கும் சப்தம். ஒருவர் உள்ளே நுழைந்தார்.

நான் திறக்க முயன்ற கதவல்ல. அதற்கு எதிர்ப்புறக் கதவு. 

"சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சுடும், முன்னாடியும் சுடும்" என்ற அபூர்வ சகோதரர்கள் வசனம் போல இரு புறமும் கதவுகள் கொண்ட லிப்ட். ஒவ்வொரு தளத்திலும் திறப்பு ஒரு பக்கத்தில் இருக்கிறது.
அதை சரியாக கவனிக்காமல் நான்தான் பல்பு வாங்கி விட்டேன்.

ஆனாலும் அந்த சில நொடிகள் பதட்டமாகத்தான் இருந்தது என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் 

அதன் பின் எல்லாம் சுகமே 

 -  பயணம் தொடரும் . . .

நாட்டுக்கு நல்லதென்றால் குமாரசாமி வந்தாலும் தப்பில்லை . . .
காலை எட்டு முப்பது மணி நிலவரம் ஒன்று.
பத்து மணிக்கு கொஞ்சமாக மாறியது.
பனிரெண்டு மணி நிலவரம் வேறு.
இரண்டு மணிக்கு எல்லாம் முடிந்து போனதோ என்று தோன்றியது.
மூன்று மணிக்கு நிலைமை மாறியது.
நான்கு மணிக்கு மனதுக்கு ஒரு நிறைவு கிடைத்தது.

குமாரசாமியை அப்படி ஒன்றும் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது.

ஆனாலும்

யெடியூரப்பா போன்ற ஊழல் பேர்வழிகள் முதல்வராவதற்குப் பதிலாக

கேடு கெட்ட, கேவலமான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்குப் பதிலாக, அதன் மூலம் காவிக் கூட்டம் ஆணவத்தில் ஆடுவதைத் தவிர்க்க, குமாரசாமியே முதல்வராவது ஒன்றும் தவறில்லை என்றே உணர்கிறேன்.

மதச்சார்பற்ற வாக்குகள் பிரிவதன் மூலம் பாரதீய ஜனதா கட்சியே ஆதாயம் அடையும்

என்பதை

வாக்குகளின் சதவிகிதத்திற்கும் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் பலத்த வேறுபாடு உள்ளது. எனவே  விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தம் தேவை

என்பதை

பொய்களையும் அவதூறுகளையும் அடிப்படையாகக் கொண்ட மோடியின் தாக்குதல் பிரச்சாரத்தை  எதிர்கொள்வதற்கான பொருத்தமான வியூகம் அமைக்க வேண்டிய அவசரம் உள்ளது

என்பதை

கர்னாடக மாநில தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.

மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு இடதுசாரிகள் ஒன்றுபட்டு களம் கண்டால் மோடியையும் காவிக்கூட்டத்தையும் வீழ்த்துவது ஒன்றும் சிரமமில்லை.

மோடி பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் ஆபத்தை முறியடிக்க எதுவும் செய்யலாம். நாட்டிற்கு அதுதான் நல்லது என்பதால் எதையும் செய்யலாம், குமாரசாமி முதல்வராவது உட்பட.

இப்போது காண்பித்துள்ள முதிர்ச்சியை காங்கிரஸ் கட்சி தொடர வேண்டும்.தமிழக போலீஸை விட கேவலமானவர்கள் . . .


மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மம்தாவின் குண்டர்கள் நடத்திய வெறியாட்டம் குறித்த தீக்கதிர் செய்தியினை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடங்கிய அராஜகம், நேற்று உச்சகட்டத்தை அடைந்து பனிரெண்டு  உயிர்களை பலி வாங்கியுள்ளது.

இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் வழக்கம் போல கள்ள மௌனம் சாதிக்கிறது. கேரளாவில் காவி யாருடைய நகமாவது பிய்ந்து விழுந்தால் வன்முறை என்று அப்போது கூச்சல் போடலாம் என்று காத்திருக்கிறார்களோ என்னமோ?

மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜக விற்கும் உடன்பாடு  என்ற மிகப் பெரிய பொய்யைப் பிடித்துக் கொண்டு தொங்கிய சமூக ஊடக புரட்சியாளர்கள், போராளிகள் கூட இப்போது வேறு பக்கம் புரட்சி செய்ய போய் விட்டார்களா என்று தெரியவில்லை.

இவ்வளவு கொலைகள் கண் முன்னே நடந்தும் கூட, அவையெல்லாம் சிறு சம்பவங்கள் (STRAY INCIDENTS) என்று மேற்கு வங்க மாநில காவல்துறை தலைவர் குறிப்பிடுகிறார். அதன் மூலம் தமிழக காவல்துறையை விட கேவலமானவர்கள் நாங்கள் என்பதை நிரூபித்து விட்டார்.

"அடித்தால் திருப்பி அடி" என்ற தோழர் சீனிவாசராவின் வழிகாட்டுதலை மேற்கு வங்க தோழர்கள் எப்பொது பின்பற்ற தொடங்குகிறார்களோ, அது வரை தாக்குதல்கள் நிற்கப் போவதில்லை என்பது யதார்த்தம்.

இன்று கள்ள மவுனம் சாதிக்கும் கையாலாகாத கூட்டம் தன் ஆழ்நிலை தியானத்தை அப்போதும் தொடர வேண்டும். 

தீக்கதிர் செய்தி கீழே 

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் பயங்கரம்

சிபிஎம் ஊழியர் குடும்பமே எரித்துப் படுகொலை 
மாநிலம் முழுவதும் வெறியாட்டம்; 
12 பேர் படுகொலை


கொல்கத்தா, மே 14-எதிர்பார்த்தபடியே மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் குண்டர்கள் வரலாறு காணாத கொடூரவன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டனர். அதுதொடர்பான ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எனினும்தேசிய ஊடகங்கள், திரிணாமுல் குண்டர்கள் ஏவிய இந்த வன்முறை வெறியாட்டத்தை கட்சிகளுக்கு இடையிலான வெறும் மோதலாக வெளிப்படுத்தின.மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் திங்களன்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும், கிட்டத்தட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

பல நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளை துப்பாக்கி முனையில் அவர்கள் கைப்பற்றினார்கள். வாக் காளர்களை வெறிகொண்டு தாக்கினார்கள். ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வெளியேற்றி னார்கள். பல கிராமங்களை ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்கள் முற்றுகையிட்டனர். கைப்பற்றிய வாக்குச்சாவடிகள் அனைத்தையும் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து வாக்குகளை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். எதிர்த்து நின்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு என பயங்கரங்களை அரங்கேற்றினர். ஏராளமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகளை கைப்பற்றிச் சென்றனர்.

திரிணாமுல் குண்டர்களின் வெறி யாட்டம், தாக்குதல்களில் திங்களன்று மாலை 5 மணி வரை கிடைத்த விபரங்களின்படி 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கைமேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.பஞ்சாயத்து தேர்தலையொட்டி எதிர்க்கட்சியினர் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்இடதுமுன்னணியினர் மீது ஞாயிறன்று நள்ளிரவு முதலே திரிணாமுல் குண்டர்கள் வன்முறையை துவக்கிவிட்டனர்.

தெற்கு 24 பர்கானா மாவட்டம் நம்கானா ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் தேபுதாசையும், அவரது மனைவி உஷாதாசையும் குறிவைத்து கொடூரமாக தாக்குதல் நடத்திய குண்டர்கள், அவர்களை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி வீட்டோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்தனர். தோழர் தேபுதாஸ், திரிணாமுல் வேட்பாளரை எதிர்த்து பஞ்சாயத்து தேர்தலில் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் நடப்பதற்குள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஞாயிறன்று காலை திரிணாமுல் வேட்பாளர் மற்றும் அவரது சக குண்டர்களால் கடுமையாக மிரட்டப்பட்டிருந்தார். எனினும் அவர் துணிச்சலுடன்களத்தில் நின்றார். இந்தப் பின்னணியில் நள்ளிரவில் இருவரும் வீட்டோடு சேர்த்து எரித்து கொல்லப்பட்ட பயங்கரம் நடந்திருக்கிறது.

திங்களன்று காலை வாக்குப் பதிவு துவங்கிய நிலையில், வடக்கு24 பர்கானா மாவட்டம் அம்தங்காவில் சிபிஎம் ஊழியர் தைபூர் ரஹ்மான்கெயின் (28), திரிணாமுல் குண்டர் களால் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்டார். கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் நந்திகிராமில் சிபிஎம் ஊழியர் ஜோகேஸ்வர் கோஷ், அபுமன்னா ஆகியோர் திரிணாமுல் குண்டர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.சிபிஎம் ஊழியர்கள் மட்டுமின்றி சில இடங்களில் காங்கிரஸ், பாஜக ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.கிட்டத்தட்ட அனைத்து மாவட் டங்களிலும் நூற்றுக்கணக்கான சிபிஎம் ஊழியர்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகினர். 

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ரத்தம் சிந்தப்பட்டது. பல இடங்களில் அனைத்து தரப்புமக்களும் ஒன்றுசேர்ந்து திரிணாமுல் குண்டர்களை பதிலடி கொடுத்து விரட்டியடித்த சம்பவங்களும் நடந்தன.திரிணாமுல் வன்முறை தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் புகார்கள் அளித்துள்ளனர். 

கொல்கத்தாவில் திங்களன்று மாலை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சிபிஎம் தலைவர்கள் பிமன்பாசு, சூர்யகாந்த மிஸ்ரா தலைமையில் ஆவேசமிக்க கண்டனப் பேரணியும் நடைபெற்றது.

Monday, May 14, 2018

எச்சரிக்கை. நாளை முதல் ?????

கொல்கத்தா பயணம் வெற்றிகரமாக முடிந்தது.எனது அனுபவங்கள்,  கவனித்தது, காதில் விழுந்தது  என்று பகிர்ந்து கொள்ள ஏராளமாக இருக்கிறது.

எனவே நாளை முதல் கொல்கத்தா பயண அனுபவ பதிவுகள் தொடங்க உள்ளது.

ஒரு டீஸர் போல முதல் பதிவின் தலைப்பு மட்டும் அளிக்கிறேன்.

"லிப்டில் தவித்த அந்த நொடி"காவிரியே வரல! கோதாவரியாம் . . ."காவிரியையும் கோதாவரியையும் இணைக்கும் திட்டம் பற்றி மத்திய மந்திரி நிதின் கட்காரி என்னிடம் பேசினார். அந்த திட்டம் வந்து விட்டால் மேட்டூர் அணையில் கிடைக்கும் உபரி நீரை சேலம். நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு கொடுப்பேன். இத்திட்டத்தால் காவிரியில் நமக்கு 125 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்"

இது தமிழக முதல்வர் என்று சொல்லப்படுகிற எடுபிடி நேற்று ஒரு கூட்டத்தில் பேசியது.

அவரிடம் சொல்ல வேண்டிய சில உண்மைகள் உள்ளது. 

காவிரியில் கொடுக்க வேண்டிய தண்ணீரே கொடுக்காமல் மத்தியரசும் கர்னாட அரசும் ஏமாற்றுகிறது. உரிமையுள்ள காவிரிக்கே இந்நிலை என்றால் கோதாவரி தண்ணீர் எப்படி ஐயா கிடைக்கும்? கொடுப்பார்களா?

உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படியே, அது அநீதி என்பது ஒரு புறம் இருக்க காவிரியில் வர வேண்டிய தண்ணீரின் அளவு 177.75 டி.எம்.சி. கோதாவரி இணைத்த பிறகு 125 டி.எம்.சி தண்ணீர் வரும் என்றால் அதற்கு என்னய்யா அர்த்தம்? 

177.75 டி.எம்.சி தண்ணீர் ஒழுங்கா வந்தாலே மேட்டூர் அணை நிரம்புமா? உபரி இருக்குமா என்பது சந்தேகம். இதிலே இவர் புதிதாக நாமக்கல், சேலம், திருச்சி விவசாயிகளுக்கு உபரி நீரை தருவாராம்.

"யோவ் கூமுட்டை"

என்று அழைக்க விரும்பினாலும்

நாகரீகம் கருதி

"மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அவர்களே,

கோதாவரி காவிரி இணைப்பு என்று உங்களிடம் மத்தியரசு போடுகிற அதே சீனை நீங்கள் மக்களிடம் போடாதீர்கள்.

நமக்கு உரிமையான காவிரி நீரை பெற்றுக் கொடுங்கள். அதற்காக மத்தியரசிடம் போராடுங்கள் என்று சொல்ல மாட்டேன். அதற்கான தைரியம் கிடையாது என்பது நன்றாக தெரியும். மோடியின் காலில் விழுந்தாவது பெற்றுக் கொண்டு வாருங்கள்.

காலில் விழுவது ஒன்றும் உங்களுக்கு புதிதல்லவே.

ஜெயலலிதா, சசிகலா, ஜெ ஜீப் சக்கரம், ஹெலிகாப்டர் விசிறி ஆகியவற்றின் கீழே விழுந்தவர்தானே!"

என்று முடித்துக் கொள்கிறேன்.


Sunday, May 13, 2018

மோடிக்கு ஃப்ரான்ஸில் மூக்குடைப்புஃப்ரான்ஸ் போன மோடிக்கு அங்கே நல்ல மூக்குடைப்பு கிடைத்திருக்கிறது.

"Le Monde" என்ற பத்திரிக்கையில் மோடியின் பேட்டி வருவதற்கான ஏற்பாடு நடந்திருக்கிறது.

அவர் அங்கே போனதற்குப் பின்பு நேரடி பேட்டி அளிக்க பயந்து பம்மியுள்ளார். கேள்விகளை எழுதிக் கொடுத்தால் அதற்கு பதில் அளிப்பதாகவும் அதை பிரசுரித்துக் கொள்ளவும் என்று சொல்லியுள்ளார்.

"நேரடியாக பேட்டி அளித்தால் அண்ணனின் பவுசு அம்பலமாகி விடும் என்பதையும் கேள்விகளுக்கு பதில் என்றால் அட்மின் எழுதிக் கொடுத்து விடுவார்"

என்பதை தனியாக வேறு எழுத வேண்டுமா?

"நேரடி பேட்டி இல்லாமல் இந்த கேள்வி பதில் சமாளிப்பெல்லாம் முடியாது. நீயும் வேண்டாம், உன் பேட்டியும் வேண்டாம்"

என்று அந்த பத்திரிக்கை மறுத்து விட்டது.

வேறு யாராவது மாட்டுவார்களா என்று பிரான்ஸ் நாட்டில் மோடி வகையறாக்கள் திரிகிறார்களாம் . . .

Saturday, May 12, 2018

த.செ வை பணியிடை நீக்கம் செய்யுங்கள் . . .


வாரங்கள் பல கடந்து கொண்டே இருக்கிறது.

முன் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கோடை மழை வருமோ என்று அதிசயிக்கப்படக் கூடிய விதத்தில் உயர் நீதி மன்றம் குட்டு வைத்துக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும் காமெடி வில்லன் எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை.

அதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும்.

அதிகார பலம், அதிகார ஆணவம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

திருமதி கிரிஜா வைத்யநாதன் தலைமைச் செயலாளராக இருக்கும் வரை கைது நடக்கப் போவதில்லை.

எனவே

ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் தரும் அம்மையாரை உடன் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

ஆனால் 

எடுபிடி அரசு அதனைச் செய்யாது என்பதே யதார்த்தம் . . .

இந்த லட்சணத்தில் மத்தியரசின் முதன்மைச் செயலாளராக அம்மையார் முயற்சிக்கிறாராம். 

அப்படி ஒரு கொடுமை நடந்தால்

இன்டர் போல் கூட சிப் சேகரை கைது செய்யாது.

தமிழக காவல்துறையின் வீரம் எல்லாம் போராடுகிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதுதான் பாயும்.


துரத்தி அடிங்க கர்னாடக மக்களே!!!!!
இன்று வாக்களிக்கும் கர்னாடக வாக்காளப் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள்

கர்னாடக மாநில தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக

வரலாறு காணாத பொய்யனான நரேந்திர மோடி உங்களை எல்லாம் முட்டாளாகக் கருதி தேர்தல் பிரச்சாரத்தில் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளுக்காகவே 

அந்த கேவலமான ஜென்மத்தை தோற்கடியுங்கள்.

மனிதத்தன்மையற்ற அந்த கூட்டத்தை கர்னாடக மாநிலத்தில் இருந்து துரத்தி அடியுங்கள்.

பாஜக ஆட்சியின் முடிவுரையின் தொடக்கத்தை எழுதும் வரலாற்றுக் கடமையை தவற விடாதீர்கள்.

கம்யூனிஸ்டுகள் போட்டியிடும் இடங்களில் அவர்களை ஆதரியுங்கள்

என்றும்

இதர இடங்களில் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க  வாய்ப்புள்ள வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

Saturday, May 5, 2018

பக்தர்களும் பக்தாள்களும்மேலே உள்ள படம் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத் தேர்த் திருவிழாவின் போது எடுக்கப்பட்டது. அமைதியாக நடந்து முடிந்த விழா அது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா கூட லட்சக்கணக்கானவர் பங்கேற்ற போதிலும் எந்த சம்பவமும் இல்லாமல் அமைதியாகவே நடந்தது. 

சித்திரை முழு மதி நாளன்று கிரிவலத்துக்காக திருவண்ணாமலையில் இரண்டு லட்சத்திற்கு மேல் கூடியதாக சொல்கிறார்கள். அங்கேயும் சிறு அசம்பாவிதமும் கிடையாது.

பக்தர்கள் கூடும் நிகழ்வுகள் அமைதியாகவே நடந்து முடிகிறது.

ஆனால்

வினாயகர் ஊர்வலமோ, காவிகளின் ரத யாத்திரைகளோ அப்படி நடப்பதில்லை. பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக உள்ள போது வேறெப்படி இருக்கும். 

ஏனென்றால் இவர்கள் பக்தாள் எனும் அடியாள்.

பக்தி வேடம் அணிந்த வெறியர்கள்.

கடவுளும் காவிகள் பயன்படுத்தும் ஒரு ஆயுதம். 

அவருக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்!

பாவம்யா மய்யத் தலைவரு!!1!


ஸ்ரீதேவி மரணமடைந்த போது இந்த வீடியோ பல சுற்று வாட்ஸப்பில் வலம் வந்தாலும் இப்போதுதான் அதைப் பார்த்தேன்.

வார்த்தையை காப்பாற்றுவாரா கமல் என்று ஒரு கேள்வி வேறு.

பதினாறு வயதினிலே படத்தின் அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.பாவம்யா மய்யத் தலைவரு!!!

அவரே கட்சி ஆரம்பிச்சு என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்காரு.

அவரைப் போய் இப்படி படுத்தறீங்களே!

நியாயமாரே!!!!