ஸ்டான் சுவாமி – 84 வயதில் சிறைக்கு அனுப்பப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளான மனித உரிமை செயற்பாட்டாளர். மோடியை கொலை செய்ய சதி செய்ததாக போலிக் குற்றச்சாட்டிற்கு உள்ளான மனித உரிமை செயற்பாட்டாளர்களில் ஒருவர். அந்த பீமா கோராகன் வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு நடந்தால் பொய்கள் அம்பலமாகி அசிங்கமாகி விடும் என்பதால் இந்த தாமதம். தண்ணீர் குடிப்பதற்கு ஒரு சிப்பர் கொடுப்பதற்குக் கூட உச்ச நீதிமன்றம் வரை வழக்கு போட வேண்டியிருந்தது. சிறைத்தண்டனையின் கொடுமைகள் அவர் உயிரைக் குடித்தது.
ஸ்டான் சுவாமி இறந்தவுடன் அவரது அஸ்தி தமிழகம் முழுதும் கொண்டு வரப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அஸ்திக் கலசத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது “ஸ்டான் சாமி பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த உயர்ந்த மனிதர்” என்று பாராட்டி பேசியது மட்டுமல்லாமல் மத்தியரசையும் கண்டித்துள்ளார்.