Showing posts with label சு.வெ. Show all posts
Showing posts with label சு.வெ. Show all posts

Monday, July 19, 2021

தமிழ்நாடு சோதனைக்களமா? பலி பீடமா?



மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எழுதிய கடிதம் கீழே உள்ளது.

நாமும் உரக்கச் சொல்வோம்.

மோடி வகையறாக்களே, உங்கள் தரகு அரசியலுக்கு தமிழ்நாடு ஒன்றும் சோதனைக்களமோ பலி பீடமோ அல்ல.




 தமிழகம் சோதனைக் களம் அல்ல...

சமூக நீதியின் பலிபீடமும் அல்ல...
பட்ஜெட்டில் ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதும் எந்த நிறுவனத்தை என்று சொல்ல மாட்டேன் என்கிறார். ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே, இது என்ன ஜனநாயகம்!

என்னிடம் பெயர் கேட்டால் சொல்ல மாட்டேன் என்று நிதியமைச்சர் சொல்லும் போதே நிதி அயோக் தனது பரிந்துரையை அரசிடம் தந்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்து விட்டன. கசிந்ததா.. கசிய விடப்பட்டதா...

1971 ல் 107 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டுதான் நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு பிறகு இந்த அரசு நிறுவனங்கள் பொது இன்சூரன்ஸ் பரவலை சிற்றூர்கள், கிராமங்கள் வரை எடுத்துச் சென்றுள்ளன. த‌னியா‌ர் நிறுவனங்களின் அலுவலக அமைவிடங்கள் எல்லாம் அவர்கள் வணிகத்தில் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன பிறகும் மெட்ரோ நகரங்கள் அல்லது இரண்டாம் தட்டு நிறுவனங்களை மையமாக கொண்டு அமைந்துள்ளன என்ற இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (I.R.D.A) 2020 ஆண்டறிக்கை கூட சொல்வது நிதி அமைச்சருக்கு தெரியாத ஒன்றல்ல.

ரூ 12 பிரிமியத்திற்கு ரூ 2 லட்சம் காப்பீடு வழங்குகிற, வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட 'பிரதான் மந்திரி சுரக்ச பீம யோசனா' திட்டத்தை அமலாக்கி வருவது நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தானே! லாபமா... மக்கள் நலனா என்றால் தனியார்கள் எதை தெரிவு செய்வார்கள்? அரசு நிறுவனங்கள் எதை தெரிவு செய்யும் என்பதற்கு உதாரணங்கள் உள்ளன ஏராளம்.

நான்கு அரசு நிறுவனங்கள் தனியார் வசம் போக கூடாது. நான்கு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஆயுள் காப்பீட்டில் எல். ஐ. சி இருப்பது போல ஒரே அரசு பொதுக் காப்பீடு நிறுவனமாக உருவாக்கி வலுப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்.

ஒன்றிய அரசே... அரசின் நிதித் தேவைகளை ஈடு செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளன. அவற்றை செய்ய அரசியல் உறுதி இல்லாமல் அரசு நிறுவனங்கள் மீது கை வைக்காதே!

இவ்வளவு காலம் பங்கு விற்பனைதான்; அரசு நிறுவனங்களாகவே தொடரும் என்று பேசி வந்த அரசாங்கத்தின் உண்மை நோக்கம் இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

அரசின் கைகளில் 51 % பங்குகள் இருக்கும் வரை ஓ. பி. சி, பட்டியல் சாதி, பழங்குடி இட ஒதுக்கீடுகள் தொடரும். ஆனால் தனியார் மயம் என்றால் சமூக நீதியும் சேர்ந்து பலியாகும். இட ஒதுக்கீடு இருக்காது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே முதல் இலக்காக இருக்கும் என்று செய்திகள் வருவதும், அரசோ நிதி அயோக்கோ மவுனமாக அந்த செய்தி பரவ அனுமதிப்பதும் அதிர்ச்சி தருகிறது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தமிழ் நாட்டில், சென்னையில், தலைமையகம் கொண்ட நிறுவனம். அதனால் அது அகில இந்திய நிறுவனம் எ‌ன்றாலு‌ம் அதன் சேவை இயல்பாகவே தமிழ் நாட்டையும், தென் மாநிலங்களையும் சுற்றி அதிகமாக அமைந்திருக்கிறது. தமிழ் நாடு முதல்வர் காப்பீடு திட்டத்தை இதுவே நிர்வகித்து வருகிறது.

தேச நலனை, மக்கள் நலனை தாக்குவதற்கு தமிழ் நாடு சோதனைக் களமா?

நான்கு அரசு பொது நிறுவனங்களும் அரசின் கைகளிலேயே தொடரட்‌டும்! தமிழ் நாட்டை தலைமையகமாகக் கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும். இன்று நிதி அமைச்சருக்கு கடிதமும் எழுதியுள்ளேன்.

மக்கள் நலனையும், தமிழ் நாட்டை த‌லைமை இடமாகக் கொண்டு இயங்குகிற ஒரு அரசு நிறுவனத்தையும், சமூக நீதியையும் காவு கேட்கிற இந்த தனியார்மய நகர்வை தமிழ் நாடு எதிர்க்கும். மும்பை, டெல்லி, கொல்கத்தாவை தலைமை இடங்களாகக் கொண்ட அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் காத்து நிற்கும். தேசத்தி‌ன் குரலை ஒன்று திரட்டுவதிலும் முன் நிற்கும்.

Thursday, November 19, 2020

இந்தியில் எழுதாதே போய்யா!

 மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் விரிவான முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்தி வெறி பிடித்த அமைச்சருக்கு அவர் அனுப்பிய கடிததை முழுமமையாக படியுங்கள்.

அந்த கடிதம் சொல்லும் அர்த்தம்

"இந்தியில எழுதாதே போய்யா"




தமிழக எம்.பி -க்களுக்கு ஹிந்தியில் பதிலளிப்பது சட்டவிதி மீறலாகும்.

மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.
பெறுநர்,
மாண்புமிகு அமைச்சர் திருமிகு நித்யானந்த ராய்,
உள்துறை இணை அமைச்சர்,
இந்திய அரசு.
மாண்புமிகு அமைச்சர் திருமிகு நித்யானந்தா ராய் அவர்களுக்கு,
பொருள்: *இந்தி மொழியிலான உங்களின் பதில் கடிதம்*

உங்களின் 09.11.2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அக் கடிதம் இந்தி மொழியில் இருந்ததால் அதன் உள்ளடக்கம் குறித்து என்னால் அறிய இயலவில்லை. இந்தி மொழியில் பதில் தந்ததன் மூலம், சட்டம் மற்றும் நடைமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

நான் தங்களுக்கு 9-10-2020 அன்று சி.ஆர்.பி.எஃப் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்க வேண்டுமென்று கோரி கடிதம் எழுதியிருந்தேன். தற்போது வந்துள்ள பதில் அக் கோரிக்கை குறித்ததாகவே இருக்கக்கூடுமென்று அனுமானிக்கிறேன்.

1963 ல் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்படாது என அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு உறுதியளித்தது தாங்கள் அறிந்ததே. இப் பிரச்சினை மீது எழுந்த நாடு தழுவிய விவாதத்தில் பிறந்த கருத்தொற்றுமையின் விளை பொருளே நேரு அவர்களின் உறுதி மொழி. பின்னர் 1965 ல் தமிழகத்தில் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பின் புலத்தில் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களாலும் இதே உறுதி மொழி திரும்பவும் வழங்கப்பட்டது. 1967 ல் அலுவல் மொழிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களாலும் இது உறுதி செய்யப்பட்டது.

நான் இங்கு 1976 அலுவல் மொழி விதிகள் (இந்திய ஒன்றியத்தின் அலுவல் தேவைகளின் பயன்பாட்டிற்காக) - (1987, 2007, 2011 ஆண்டுகளில் திருத்தப்பட்டது) ஆவணத்தில் இருந்து சில பகுதிகளை சுட்டிக் காட்ட விழைகிறேன்.

*"இந்த விதிகள், அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டிற்குரியது) விதிகள் 1976 என்று அழைக்கப்படும். இவை இந்தியா முழுமைக்கும், தமிழ்நாடு மாநிலம் தவிர, பொருந்தும்"*

இச் சட்ட விதிகள் மிகத் தெளிவாக தமிழ்நாடு மாநிலத்துக்கு ஒன்றிய அலுவல் மொழிச் சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுள்ளதை குறிப்பிடுகிறது.

மொழிப் பிரச்சினையில் தனது நிலையை அழுத்தமாக நிலை நிறுத்துவதில் தனித்துவமான இடம் தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேற்கூறிய விதி விலக்கு எங்கள் மாநிலத்திற்கு தரப்பட்டதும் அதன் வெளிப்பாடேயாகும்.

மேலும் அதே விதிகள், "சி" பிரிவில் குழுவாக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அலுவல் மொழிச் சட்டம் அமலாக்கப்ப்டுவது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. அதன் பொருத்தமான பகுதியைக் கீழே தந்துள்ளேன.

*"சி" பிரிவில் இடம் பெற்றுள்ள பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான மற்றும் அம் மாநிலங்களைச் சேர்ந்த, அலுவலகங்கள் (மத்திய அரசு அலுவலகங்கள் அல்லாதவை), தனி நபர்களுக்கான மத்திய அரசு அலுவலகங்களின் கடிதப் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும்."*

எனவே இந்தியில் பதில் தருவதான உங்கள் அமைச்சரவையின் நடவடிக்கை இச் சட்ட விதிகளை அப்பட்டமாக மீறுவது ஆகும்.

நான் உங்கள் கவனத்திற்கு - மத்திய அரசு பணியாளர், பொது மக்கள் முறையீடுகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அலுவல் நிர்வாகப் பிரிவு (DOPT - அலுவலக சேவைப் பிரிவு) வெளியிட்ட "அரசு நிர்வாகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ சட்ட மன்ற உறுப்பினர்களுக்குமான அலுவல் தொடர்புகள் - முறையான நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்" என்ற தலைப்பிலான எஃப்/எண் 11013/4/2018 - அலுவலக சேவை/ ஏ /III / 10.02.2020 தேதியிட்டது - அரசாணையைக் கொண்டு வர விழைகிறேன்.

இந்த அரசாணையின் இரண்டாவது பத்தி இதே பொருள் குறித்து இதற்கு முன்பாக அக்டோபர் 2012, நவம்பர் 2014, பிப்ரவரி 2018, அக்டோபர் 2018 ல் பல்வேறு தேதிகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளைக் குறிப்பிடுகிறது. மூன்றாவது பத்தி, மேற்கூறிய அரசாணைகள் கடைப்பிடிக்கப்படாமை குறித்து அத் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட மீறல்கள் பற்றிப் பேசுகிறது. எதிர்காலத்தில் முறையான அமலாக்கத்தை உறுதி செய்ய மூல அரசாணையையும் அது இணைப்பாக தந்துள்ளது.

அந்த 01/12/2011 தேதியிட்ட மூல அரசாணை எண் 11013/4/2011 - அலுவல் சேவை (ஏ)- பிரிவு 5 (எக்ஸ்) ன் வரிகள் இவை.
*"எப்பொதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து ஆங்கிலத்தில் கடிதம் வரப்பெற்று அதற்கான பதிலை அலுவல் மொழிச் சட்டம் 1963 ன் அடிப்படையில், அதன் விதிகளின்படி, இந்தியில் தர வேண்டியிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில், அதன் ஆங்கில மொழியாக்க வடிவமும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்"*

அலுவல் மொழிச் சட்டத்தில் குறிப்பான விதி விலக்கைப் பெற்றுள்ள தமிழகத்திற்கு இதன் இந்தி மொழிப் பயன்பாடு குறித்த அம்சம் பொருந்தாவிட்டாலும் இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திற்குமே நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து ஆங்கிலக் கடிதம் வரப்பெறும் பட்சத்தில் ஆங்கில மொழியாக்க வடிவம் அனுப்பப்பட வேண்டுமென்ற கட்டாயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே உங்கள் அமைச்சகம் ஆங்கில மொழியாக்கம் இல்லாமல் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் பதில் அளிப்பது இந்த அண்மைய அரசாணையையும் மீறுவது ஆகும். இந்த அரசாணையே தொடர் மீறல்களை சரி செய்ய வெளியிடப்பட்டதே எனும் போது அதுவும் மீறப்படுகிறது.

முந்தைய பிரதமர்களால் வழங்கப்பட்ட உயர்வான உறுதிமொழிகள் இன்றைய ஆட்சியாளர்களாலும் மதிக்கப்பட வேண்டுமென்பது எனது ஆழமான உணர்வு. இருப்பினும் அரசாங்கமே சட்டங்களையும் நடைமுறைகளையும் திரும்பத் திரும்ப மீறுவது மனதை வருத்துவதாகும். ஆகவே தமிழ்நாட்டிற்கு மொழிப் பிரச்சினையில் தரப்பட்ட தனித்துவமான உறுதி மொழியை மதித்து அதன் சட்ட ரீதியான அம்சங்களை அமலாக்குமாறு வேண்டுகிறேன்.

இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்கிற பன்மைத்துவ பண்பை பாதுகாக்கிற மேன்மையான வரலாற்றுப் பெருமிதம் உள்ள நாடாகும். அத்தகைய பார்வை அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்விலும் வெளிப்பட வேண்டும். இதுவே நாட்டின் ஒற்றுமையை, கூட்டாட்சி முறைமையை வலுப்படுத்துவதாய் அமையும்.

ஆகவே உங்கள் அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களைத் தந்து தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்தும் வந்தது போன்றே, ஆங்கிலத்திலேயே பதில் தருவதை உறுதி செய்யுமாறு வேண்டுகிறேன்.
உங்களின் விரைவான மறு மொழியை எதிர் நோக்கி,
தங்கள் உண்மையுள்ள,
(சு. வெங்கடேசன்)
நாடாளுமன்ற உறுப்பினர்,
மதுரை






Friday, October 9, 2020

வேள்பாரியின் வெற்றியும் விளக்கெண்ணெய் சங்கியும்

 



 குறுகிய காலத்திலேயே ஒரு மக்களவை உறுப்பினராக மிகச் சிறப்பான முத்திரை பதித்து வருகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் சமீபத்திய வெற்றி பற்றி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

 வாழ்த்துக்கள் தோழர் சு.வெ.

உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்

 

மதுரை மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர்

சு . வெங்கடேசனின் முயற்சிக்கு மற்றுமொரு வெற்றி!

 


மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் முயற்சியால் மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித்தகுதியில் செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

 

மத்திய தொல்லியல் துறையின்  தொல்லியல் பட்டயப் படிப்பில் சேருவதற்கு மத்திய அரசு சமீபத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் அந்த படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதியில் சமஸ்கிருதம்  உள்ளிட்ட பல மொழிகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழிக்கு அப்பட்டியலில் இடமில்லை.

 

இந்த விளம்பரத்தைப் பார்த்த மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரும் நாடறிந்த எழுத்தாளருமான சு.வெங்கடேசன், இப்பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கும் ஊடகங்களின் கவனத்திற்கும் கொண்டு வந்தார். பல்வேறு ஊடகங்களில் அவர் அளித்த பேட்டிகள் செம்மொழி தமிழ் புறக்கணிக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்தியதுடன், விளம்பர பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பிலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. திமுக தலைவர் மு ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சிகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். தமிழக அரசின் சார்பில்  பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் பழனிசாமி இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.

 

இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித்தகுதியில் செம்மொழி தமிழ் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சு.வெங்கடேசன் தொடர்ந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் உட்பட  பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

சபாஷ் தோழா.. நீ கலக்கு!

 

இன்னொரு செய்தியையும் சொன்னால்தான் இந்த பதிவு முழுமை பெறும்.

 

தோழர் சு.வெ குரலெழுப்பிய உடன் தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டு ஆணவத்தை மட்டுமே மண்டையில் வைத்திருக்கும் பாஜக சங்கி திருப்பதி நாராயணன் திமிரோடு ஒரு பதிவு போட்டார்.

 


இதற்கு தோழர் சு.வெ வே தக்க பதிலடி கொடுத்து விட்டார்.

 


இப்போது தோழர் சு.வெ சொன்னதுதான் சரி என்பது நிரூபணமாகி உள்ளது. விளக்கெண்ணெய் நாராயணன் இப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்.

 இதனால்தான் சொல்கிறோம் சங்கிகள் வாய் திறந்தாலே வெளி வருவது பொய் மட்டுமே.