Showing posts with label ராஜீவ் கொலை. Show all posts
Showing posts with label ராஜீவ் கொலை. Show all posts

Sunday, May 21, 2023

ராஜீவ் காந்தி கொலையான அன்று.

 


அந்த இரவு நானும்  அன்றைய நெய்வேலி கிளைச்சங்கத் தலைவர் தோழர் கே.ராமலிங்கமும்  நெய்வேலி அமராவதி திரையரங்கில்   வீர பாண்டிய கட்டபொம்மன் (அன்று பார்த்தது ஐந்தாவது முறை) இரவுக் காட்சி  பார்த்து விட்டு பஸ்ஸ்டாண்டில் டீ சாப்பிட்டு விட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அதுவரை ராஜீவ் கொலையான செய்தி தெரியவில்லை. காலை ஐந்தரை மணிக்கு பால்காரர் வந்து தகவல் சொல்லும் போது மட்டுமே தெரிந்தது. அவரும் எக்ஸ்ட்ரா ஒரு லிட்டர் பால் கொடுத்து ஃபிரிட்ஜில வச்சுக்குங்க, இனிமே எப்போ வர முடியும்னு தெரியல என்று சொல்லி விட்டு போனார்.


ஒரு அனிச்சை செயலாக நானும்  தோழர் ராமலிங்கமும் மறைந்த தோழர் விஸ்வேஸ்வராவும் பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டோம். சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை தொடங்கி விட்டார்கள். திமுக, சிபிஎம், சிபிஐ, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு, ஹெச்.எம்.எஸ் என அத்தனை கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள் சங்கத்தின் கொடி.

அதைத் தவிர இன்னொரு அமைப்பின், கட்சியின் கொடியை மட்டும் கை வைக்கவில்லை.

அது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்.

அப்போதே அந்த பயம்!

மீள் பதிவு 

Friday, November 11, 2022

அறுவர் விடுதலை - வரவேற்பும் எதிர்பார்ப்பும்

 

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். அறுவர் விடுதலை போல நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் விடுதலையும் மிக முக்கியமானது. அது மட்டுமல்ல, மோடியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்று அபாண்டமாக குற்றம் சுமத்தப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படாமல் மூன்றாண்டுகளாக சிறையில் வாடும் அண்ணல் அம்பேத்கரின் உறவினர் தோழர் ஆனந்த் டெல்டும்ப்டே உள்ளிட்ட தலித், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் விடுதலையும் கூட அவசியமானது. 



மாநில அரசின் முயற்சியில் பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த அறுவர் விடுதலையும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

இதன் நீட்சியாக, அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில் வாடுகிற இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள ஆணையம், அரசுக்கு சரியான அறிக்கை வழங்குமென்றும், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை என்கிற 'சட்டப்படியான' நோக்கம் நிறைவேறும் என்றும் நம்புகிறேன்.

இஸ்லாமிய சிறைவாசிகள் குறித்துப் பேசினாலே 'தீவிரவாதிகளுக்கு?' ஆதரவாகப் பேசுவதைப்போன்றும், ஏதோ இஸ்லாமிய சிறைவாசிகளுக்குச் சிறப்புச் சலுகைகளைக் கேட்பது போன்றும் ஒரு பொது மனநிலை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அந்த மனநிலைக்குப் பயந்தே பேசவேண்டியவர்களும் கூட பேசத்தயங்குகிறார்கள்.

முன்முடிவுகளோடு கட்டுண்டுபோய்க் கிடக்கும் அந்த மனநிலைக்குள் உணமையைக் கொண்டு சேர்ப்பது சவாலானதுதான்.

1. இஸ்லாமியரல்லாத மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் அதே உரிமையை ( கவனிக்கவும், சலுகையல்ல) இஸ்லாமிய சிறைவாசிகளுக்கும் வழங்கு என்பதுதான் கோரிக்கை.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கைதிகளுக்கு வழங்கியுள்ள உரிமையை மத வேறுபாடு பாராமல் எல்லாக் கைதிகளுக்கும் ஒரே தராசில் வழங்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

3. அரசும், சிறைத்துறையும், நன்னடத்தை போர்டுகளும் நிர்னயித்துள்ள 'முன் விடுதலைக்கான தகுதிக் குறியீட்டின்' அடிப்படையில் மற்ற சிறைவாசிகளை விடுதலை செய்வதுபோல இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய். பாகுபாடு காட்டாதே என்பதுதான் கோரிக்கை.

4. மற்ற கைதிகளுக்கெல்லாம் எஸ்கார்ட் இல்லாத பரோல் வழங்கப்படும்போது இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் எஸ்கார்டுகளோடு பெயில் வழங்கி பதட்டப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதுதான் கேள்வி?

இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம்.

என் கேள்வியெல்லாம் இந்திய அரசியலைப்புச்சட்டம் சிறைவாசிகளுக்கென உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை வழங்காமல், அவர்கள் சார்ந்துள்ள மதத்தின் அடிப்படையில் பாராபட்சம் காட்டப்படுவதைச் சகித்துக்கொண்டு கடக்கும் நாம் நம்மை நாகரீகச் சமூகம் என்று சொல்லிக்கொள்ள எதாவது முகாந்திரம் இருக்கிறதா..? என்பது மட்டும்தான்.

Thursday, May 19, 2022

காங்கிரஸ் வாய் மூடுவது நல்லது.

  


காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் தன் தளத்தை பாஜகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது.

 தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா தவிர வேறு எந்த மாநிலத்திலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மக்கள் பிரதிநிதிகள் கிடையாது.

 உட்கட்சி மோதலால் ராஜஸ்தான், சத்திஸ்கர் அரசுகள் எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து போகலாம்.

 நிலைமையை சீரமைக்க என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.  உதய்பூரில் நடைபெற்ற “மண்டையை பிய்த்துக்கொள்ளும் அமர்வில்” இருந்த முடியும் போனதுதான் மிச்சம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

 அப்படி இருக்கையில் ஏதோ கொஞ்ச நஞ்சம் மரியாதை இருக்கிற தமிழ்நாட்டிலேயும் அதனை கெடுத்துக் கொள்ள கடும் முயற்சி செய்கிறார்கள்.

 பேரறிவாளன் சொல்லாததை நான்தான் இணைத்தேன் என்று எப்போது புலனாய்வு அதிகாரி தியாகராஜன் சொன்னாரோ, அப்போதே அவர் விடுதலைக்கு தகுதியானவராகி விட்டார்.

 அவர் விடுதலையைக் கண்டித்து “வாயில் துணியை கட்டி ஆர்ப்பாட்டம்” என்றெல்லாம் அவர்கள் இன்று நடத்தியது அவர்களை மேலும் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி விடும். (காங்கிரஸ் இழப்பு பாஜகவுக்கு சாதகம் என்ற கொடுமைக்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டியுள்ளது)

 அதனால் காங்கிரஸ் வாயில் துணி கட்டி போராடுவது போன்ற விபரீத முடிவுகளுக்குப் பதிலாக வாயை மூடி இருப்பது உத்தமம்.

Wednesday, May 18, 2022

பேரறிவாளன் - பெரும் நிறைவு

 



பேரறிவாளன் விடுதலையானது உண்மையிலேயே மகிர்ச்சியளிக்கிறது.


அற்புதம் அம்மையாரின் நீண்ட கால சட்டப் போராட்டம் நிறைவுக்கு வந்தது முதல் மகிழ்ச்சி.


மாநிலங்களின் உரிமையை மதிக்காத ஆட்டுத்தாடிக்கு கிடைத்த அடி என்பது இரண்டாவது காரணம்.


பேரறிவாளன் வாக்குமூலத்தில் இல்லாததை நான்தான் இணைத்தேன் என்று எப்போது புலனாய்வு அதிகாரி தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரோ, அப்போதே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். காலம் கடந்தாவது நடந்ததே என்பது மகிழ்ச்சிக்கான மூன்றாவது காரணம்.


விசாரணையே இல்லாமல் பல இஸ்லாமியர்கள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நியாயம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.


பிகு: அற்புதமான ஓவியத்தை தீட்டிய ஓவியர் தோழர் ரவி பாலேட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Monday, November 12, 2018

ரஜனிக்கு அவ்வளவுதாங்க தெரியும்?


"யார் அந்த ஏழு பேர்?" என்று ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவர் பற்றிய கேள்விக்கு ரஜனிகாந்த் திருப்பி கேட்டதில் அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ அவசியமில்லை. 

அவர் படம் ரிலீஸாகும் நேரங்களில் அரசியல் பிரவேசம் பற்றி பேசி பரபரப்பை உண்டாக்கும் வணிக உத்தியை கடைபிடிக்கும் சராசரி வியாபாரி ரஜனிகாந்த்.

பாஜக பின்புலத்தில் இம்முறை அப்படம் வழக்கத்தை விட அதிகமான காலம் ஓடிக் கொண்டிருப்பதால், அவரை ஒரு அரசியல்வாதி என்றோ, அவருக்கு எல்லாமும் தெரியும் என்றோ, நினைத்தால் நிச்சயம் அது நம் தவறுதான்.

அவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதாங்க. 


Friday, September 7, 2018

இதையாவது செய்யுங்கள் எடப்பாடி. . .



யானை மாலை போட்டு பிச்சைக்காரன் அரசனான கதைதான் நீங்கள் முதல்வரான கதை.

உருப்படியாக நீங்கள் இதுவரை எதுவும் செய்தது கிடையாது. அடுத்த தேர்தலுக்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ, அதை சுருட்டுவது என்பதைத் தவிர வேறு எந்த இலக்கும் உங்களுக்கோ, உங்கள் சகாக்களுக்கோ கிடையாது. அதனால்தான் பாசிஸ பாஜக கட்சியின் அடிமையாக உள்ளீர்கள்.

வரலாற்றில் இடம் பிடிக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான எழுவரது விடுதலையை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ள நிலையில் முன்னரே தமிழக சட்டப் பேரவை, அதிலும் நீங்கள் சொல்வது போல உங்களின் அம்மா ஆட்சி முடிவு செய்த விடுதலையை உறுதிப்படுத்துங்கள். 

பொன்னார் போன்ற ஜோக்கர்கள் தலையிட அனுமதிக்காமல் விரைந்து செயல் பட்டு அவர்களை விடுதலை செய்யுங்கள்.

இது நாள் வரை எதுவும் செய்யாத நீங்கள்
இதையாவது செய்திடுங்கள்


Sunday, May 21, 2017

ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்



ராஜீவ் காந்தி நினைவு நாளை ஒட்டி பல பதிவுகளை முக நூலில் படித்துக் கொண்டிருந்த போதுதான் இந்த வருட புத்தகக் கண்காட்சியில் வாங்கி இன்னும் படிக்காமல் வைத்திருந்த இந்த நூல் நினைவுக்கு வந்தது.

அந்த படுகொலை நடந்த நேரம் ராஜீவ் காந்தியுடன் இருந்த தா.பா புதிய செய்திகள் எதையாவது அளித்துள்ளாரா என்று அறிந்து கொள்ள சற்று வேகமாகவே படித்தேன்.

இதுவரை தமிழகம் அறியாத புதிய செய்தி எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரதமராக தனது பொறுப்பை சரியாக நிறைவேற்ற தவறிய ராஜீவ் காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதுதான் இந்தியா பற்றி அறிந்து கொண்டார், ஆட்சிக்கு வந்திருந்தால் ஒரு வேளை இந்திய அரசியல் நிலைமைகள் மாறி இருக்கும் என்று நற்சான்றிதழ் வழங்குகிறார்.

அந்த நற்சான்றிதழ் மீது ஏனோ நம்பிக்கை வரவில்லை, ஜெ மீது தா.பா காண்பித்த அளவுக்கதிகமான விசுவாசம் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

சில முரண்பாடுகளும் இந்த நூலில் இருக்கிறது. 

வி.பி.சிங்கைக் கவிழ்த்து அந்த இடத்திற்கு ஜோதி பாசு அல்லது இந்திரஜித் குப்தாவை கொண்டு வர ராஜீவ் காந்தி முயன்றதாகவும் அந்த முயற்சிக்கு கம்யூனிஸ்டுகள் ஒத்து வராமல் வாய்ப்பை வீணடித்தாக ஒரு இடத்தில் விமர்சிக்கிறார். இன்னொரு இடத்தில் கம்யூனிஸ்டுகள், நெறி வழி நின்று அந்த முடிவெடுத்ததாக பாராட்டவும் செய்கிறார்.

அதே போல விடுதலைப் புலிகளுக்கும் ராஜீவ் காந்திக்கும் அந்த நேரத்தில் ஒரு இணக்கமான சூழல் இருந்தது, அதனை பாழ்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் முட்டாள் அல்ல என்றும் சொல்கிறார். அதே நேரம் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் சதியை நிறைவேற்ற அவர்கள் கூலிப்படையாக செயல்பட்டார்கள் என்றும் சொல்கிறார்.

அந்த ஏகாதிபத்திய நாடு எது என்பதை வெளிப்படையாக சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்.

அந்த நூலில் என்னை நெகிழ வைத்த விஷயம்.

வெடிகுண்டால் தாக்கப்பட்ட தோழர் தா.பா இறந்து விட்டதாக சொல்லப் பட்ட போது அவரது குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள், சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற விபரங்கள் ஆகியவையே அவை. 

ஸ்ரீபெரும்புதூரில் காரிலிருந்து இறங்குகையில் "நான் தமிழர்களை நேசிக்கிறேன். தமிழர்கள் என்னை நேசிக்கிறார்கள்" என்று சொன்னார் என்று சொல்கிறார் தா.பா. 

இச்செய்தியை இந்த நூலில்தான் படிக்கிறேன். அது உண்மையா? 



பின் குறிப்பு: இருபத்தி ஆறு வருடங்கள் கடந்த பின்பும் ராஜீவ் காந்தியின் கொலையில் இன்னும் சில மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படவில்லை. ஏகாதிபத்திய நாடு ஒன்றின் பங்களிப்பே அதற்கு காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.