முதல்
பாதி பார்க்கும் போது நன்றாக உள்ளது மாதிரித்தான் இருந்தது. ரஜனிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக
மாணவர்களோடு பழகும் சீன்கள் எல்லாம் ஓ.கே தான்.
ஆனால்
இரண்டாவது பாதிதான் மிகவும் சோதனையாக அமைந்து விட்டது. ஃப்ளாஷ் பேக்கோ அல்லது உத்தர பிரதேச காட்சிகளோ மனதில்
நிற்கவில்லை. எப்போது படம் முடியும் என்ற அளவிற்கு பொறுமையை சோதித்து விட்டது.
மணல்
கொள்ளை, ஆணவக் கொலை, காவிகளின் அராஜகம், திருநங்கைகள் பற்றி எல்லாம் பேசப்பட்டுள்ளதாக
பல தோழர்கள் பரவசப்பட்டு எழுதி இருந்தார்கள். அந்த காட்சிகள் எதுவுமே கொஞ்சம் கூட ஆழமில்லாதவை.
படத்தில் என்ன வசனம் பேசியிருந்தாலும் அதை நிஜத்தில் ரஜனி கடைபிடிக்கப் போவதில்லை.
ரஜனிகாந்தை
மட்டுமே முன்னிறுத்துவதற்காக பாவம் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, மகேந்திரன், சசிகுமார்
ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளனர். இதிலே ரொம்பவும்
பாவம் சிம்ரனும் த்ரிஷாவும். ஒரு நிமிடம் மட்டுமே வரும் சின்னி ஜெயந்த் நான்கு யூட்யூப்
சேனல்களில் பேட்டி கொடுத்ததாக என் மகன் சொன்னான்.
கபாலியையும்
காலாவையும் கடுமையாக விமர்சித்தவர்கள் இந்த படத்தை உயர்த்திப் பிடிப்பதும் கூட ஒரு வித அரசியலாகத்தான் தெரிகிறது. “நிலம் எங்கள்
உரிமை” என்ற கருத்தையும் காவிக்கு எதிராக சிவப்பும் நீலமும் கறுப்பும் ஒன்றிணைய வேண்டும்
என்பதையும் மிகவும் அழுத்தமாகச் சொன்ன காலாவை விட பேட்ட ஒன்றும் அவ்வளவு உசத்தியாக
தோன்றவில்லை.
ஒளிப்பதிவு,
பின்னணி இசை போன்ற விஷயங்கள் நன்றாக இருந்தது.
என்
பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவருக்கு ஐம்பது வயதிருக்கும். முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்
நாற்பது வயதைக் கடந்திருந்தார். ஆனாலும் அவர்களின் அலப்பறை ஓவராகவே இருந்தது. ஆக ரசிகர்கள் எப்போதுமே ரசிகர்களாக வயது வித்தியாசமில்லாமல்
இருக்கிறார்கள். இதுதான் நடிகர்களுக்கு நாற்காலிக் கனவுகளைத் தருகிறது.
ஒரு
ஸ்மால் டவுட்:
ரஜனி
வில்லனை அவ்வப்போது சுள்ளான் என்று அழைத்து அசிங்கப் படுத்துகிறார். தனுஷ் நடித்த ஒரு
படத்தின் பெயர் சுள்ளான் என்றும் ஆரம்ப காலத்தில் அவரை கிசுகிசுக்களில் சுள்ளான் என்றும்
குறிப்பிடுவார்கள். வில்லனை சுள்ளான் என்று அழைப்பதன் மூலம் தன் மருமகனுக்கு ஏதாவது
செய்தி சொல்கிறாரா ரஜனி?