Showing posts with label மாரடோனா. Show all posts
Showing posts with label மாரடோனா. Show all posts

Wednesday, July 16, 2025

என்றைக்கும் இதுதான் டாப்

 


முகநூலில்  ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பக்கத்தில் பார்த்த காணொளி இது. 


1986 லிருந்து நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் சிறந்த ஒரு கோலை தேர்வு செய்து வழங்கியுள்ளார்கள்.

எத்தனை வருடம் ஆனால் என்ன, எத்தனை வீரர்கள் புதிதாய் தோன்றினால் என்ன, 1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்திற்கு  எதிரான போட்டியில் மாரடோனா அடித்த கோலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதுதான் என்றும் டாப்.

பிகு: ஒரு மாறுதலுக்காக அரசியல் இல்லாத பதிவு இது.

Thursday, November 26, 2020

மாரடோனாவிற்காக உடைக்கப்பட்ட கதவு

 


கதவை உடை, கால்பந்து பார்ப்போம் (மீள் பதிவு)

 

தொண்ணூறாம்   ஆண்டு  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நேரம் நான் எல்.ஐ.சி நெய்வேலி கிளையில் பணியாற்றி வந்தேன். அப்போது எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பில் நான்கு பேர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தது. ஒருவர் கிளை மேலாளர்.  அவர் வீட்டிற்குச் சென்று டி.வி   பார்ப்பதில்  சில  சங்கடங்கள் உண்டு.  அடுத்து ஒரு மூத்த பெண் தோழர் வீடு. இன்னொரு தோழர் அப்போதுதான் திருமணமானவர். அங்கே செல்வது அவ்வளவு நாகரிகமாக இருக்காது.

 

எஞ்சியது என் வீடு மட்டும்தான். அப்போது என் பெற்றோரும் டெல்லி, ஹரித்வார், காசி என வெளியூர் சென்றிருந்தால் விளையாட்டு  ரசிகர்களுக்கு என் வீடுதான் சரணாலயம். தோழர்களோடு   நேரத்தை செலவிடுவதை விட ஒரு கிளைச்செயலாளருக்கும் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!

 

அன்று பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே இரண்டாம்   சுற்றுப்போட்டி. அனைவருக்குமே மாரடோனாதான் நாயகன். ஒன்பது  மணிக்குப் போட்டி. அனைவரும் வேகவேகமாக சாப்பிட்டு போட்டியைப் பார்க்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

 

அந்த ஊழியர் குடியிருப்புக்களுக்கு ஆட்டோமேடிக் பூட்டுக்களை   அமைத்திருந்தார்கள்.  சாவியை  கையில்  வைத்துக்  கொள்ளாமல் கதவு மூடிக்கொன்டால்  உள்ளே  ஆட்கள்  இருந்தால்  தப்பிக்கலாம்.  இல்லையென்றால்  சிக்கல்தான். காற்று வேகமாக அடித்தால்  கதவு மூடிக்கொள்ளும் அபாயம் எப்போதும் உண்டு.

 

எட்டரை மணிக்கு அந்த விபரீதம் என் வீட்டிலும் நிகழ்ந்தே விட்டது. கதவை திறந்து  வைத்து  விட்டு  யாருடனோ  வெளியே  நின்று  பேசிக்  கொண்டிருக்கையில் காற்று அடிக்க கதவு மூடிக்கொண்டது. ஒரு பெரிய குச்சி கொண்டு ஜன்னல் வழியாக சாவியை எடுக்க முயல  அது இன்னும் அதிக தூரத்திற்குச்சென்று விட்டது.

 

பூட்டு ரிப்பேர் செய்பவரை அழைத்து வரலாமா என்ற என் குரல்  எனக்கே கேட்பதற்கு முன்பு எங்கிருந்தோ சுத்தியலும் மற்ற உபகரணங்களும் வந்து சேர்ந்தது.பூட்டு உடைக்கப்பட்டது, கதவும்  கூட கொஞ்சம் உடைந்து போனது. எல்லாம் நாளைக்கு சரி செய்து கொள்ளலாம் என்று உள்ளே நுழைந்தார்கள். தொலைக்காட்சியைப் போட்டார்கள். மாரடோனா முகம் திரையில் தோன்றியது. விசில் அடிக்காத குறை மட்டும்தான். மற்றபடி எந்த  ஆரவாரத்திற்கும் குறைவில்லை.

 

அந்தப்போட்டி விறுவிறுப்பாக இருந்ததும் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதும் ஒரு சின்ன ஆறுதல். ( கடைசியில் அந்தக்  கதவை சரி செய்ய மூன்று நாட்கள் ஆனது.)

 

 

மாரடோனா - மனங்கவர்ந்த வீரன்

 


டிஜியோ மாரடோனா - 2020 அளித்த இன்னொரு பெருந்துயரம் மாரடோனாவின் மரணம்.

உலகின் தலை சிறந்த கால் பந்து வீரர். லட்சக்கணக்கான ரசிகர்களை  உலகெங்கும் கொண்டவர். குள்ளமான உருவம், கொஞ்சம் குண்டு என்று கூட சொல்லலாம். ஆனால் அவர் வேகமும் எதிரணி வீரர்களை சமாளித்து பந்தை கடத்திக் கொண்டு செல்லும் லாவகமும் அவரை என்றுமே ரசிகர்களின் கண்மணியாகவே வைத்திருந்தது.

அவரது விளையாட்டை முதன் முதலில் தொலைக்காட்சியில் பார்த்தது என்பது 1986ம் வருடம் மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போதுதான். அது கூட நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பார்த்ததுதான்.

நள்ளிரவில் நடைபெற்ற அந்த போட்டியைக் காண என் இரண்டாவது அக்காவின் கணவர் சென்னையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்டு நெய்வேலி வந்தார். ஒரு விளையாட்டுப் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரம் பெருங்கடலின் பெரும் ஓசையையும் தாண்டியதாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டதும் அப்போதுதான். 

சரி, எப்படியும் தூங்க முடியாது. போட்டியையாவது பார்ப்போம் என்று சலிப்போடுதான் பார்க்கத்துவங்கினேன். மாரடோனா எனும் காந்தம் மனதில் ஒட்டிக் கொண்டது. உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா வெற்றி பெற்ற பின்பு, அவர்கள் கடந்து வந்த பாதையை பின்னொரு நாள் தூர்தர்ஷன் ஒளிபரப்பிய போதுதான் "இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கோல்" என்று அழைக்கப்படுகிற இந்த பரபரப்பான கோலை பார்த்தேன். 

நீங்களும் பாருங்கள்










ஒரு வேளை காணொளி திறக்காவிடில் இந்த யூட்யூப் இணைப்பு மூலம் அதை ரசியுங்கள். 


மைதானத்தின் பாதியிலிருந்து கிட்டத்தட்ட ஆறு பேரை சமாளித்து அவர் கோலடித்த அந்த திறமை, மாரடோனாவின் மகத்தான தருணம். இங்கிலாந்திற்கு எதிரான அதே போட்டியில்தான் "கடவுளின் கை (Hand of God)" என்ற சர்ச்சைக்குரிய கோலும் இடம் பெற்றது என்பது ஒரு முரண்.

1990 உலகக் கோப்பை போட்டியும் அவரது ஆதிக்கத்தில்தான் இருந்தது. மேற்கு ஜெர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவரை நகர விடாமல் மூன்று வீரர்களை சுற்றி வளைத்து இருந்தார்கள் என்பதே அவர் மீதான அச்சத்திற்கு சான்று. ஒரு சர்ச்சைக்குரிய பெனால்டி முடிவால் உலகக் கோப்பையை அர்ஜெண்டினா இழந்தது உலகெங்கிலும் இருந்த மாரடோனா ரசிகர்களுக்கு துயரமளித்தது. (1990 போட்டிகளின் போது எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்து பிறகு மீள் பதிவு செய்கிறேன்) 

1994 உலகக் கோப்பை போட்டியிலிருந்து அவர் போதைப் பொருளை உட்கொண்ட குற்றச்சாட்டினால் வெளியேற நேரிட்டது. ஆனாலும் அவர் ரசிகர்களின் இதயத்திலிருந்து வெளியேறவில்லை.

ஒரு சாமானிய குடும்பத்திலிருந்து வந்தாலும் திறமை மூலம் சரித்திரம் படைக்க முடியும் என்பதற்கு உதாரணமானவர் அவர்.

சோஷலிச நாயகர்களை மதிப்பவர் அவர்.

தன் கையில் "சே" வை பச்சை குத்திக் கொண்டவர்.



க்யூப நாயகன் பிடல் காஸ்ட்ரோவின் மீது மதிப்பு கொண்டவர்.



பொலிவாரிய புரட்சி நாயகன் ஹ்யூகோ சாவேஸிற்கும் நெருக்கமானவர்.



இந்தியா வந்திருந்த போது தோழர் ஜோதி பாசுவை அவர் வீட்டில் சந்தித்தவர். பிடல் காஸ்ட்ரோவின் இந்தியப் பயணத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை தோழர் ஜோதி பாசு, மாரடோனாவிற்கு அளித்துள்ளார்.



நான் மிகவும் மதிக்கும் பிடல் காஸ்ட்ரோவிற்கு மிகவும் நெருக்கமான உங்களையும் நான் மதிக்கிறேன் என்று அப்போது தோழர் ஜோதிபாசுவிடம் சொல்லியுள்ளார்.


மாரடோனாவிற்கு அவரது ரசிகனின் மனமார்ந்த அஞ்சலி. 

Thursday, June 12, 2014

ஒரு மந்திரவாதியின் அற்புதம்- இது நிஜம்தான்

  இன்று தொடங்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை
முன்னிட்டு உங்களுக்காக



 

கிட்டத்தட்ட இருபத்தி எட்டு வருடங்கள் கடந்து விட்டது.
ஆனாலும் இந்த அற்புதம் நெஞ்சை விட்டு அகலவே இல்லை.
இங்கிலாந்திற்கு எதிராக உலகக் கோப்பை 
அரை இறுதியாட்டத்தில்  மாரடோனா எனும் மந்திரவாதி
போட்ட அற்புத கோலை      
பார்த்து ரசியுங்கள்