Wednesday, April 8, 2020

கைவிடாத மதுரை மக்கள்

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் பதிவு

மதுரை மக்கள் கைவிடவில்லை
நண்பர்களே!
சென்றவாரம் புதன்கிழமை மதுரை மாநகராட்சியில் வீடுகளை நோக்கி காய்கறிப்பையைக்கொண்டுசெல்லும் முயற்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய நாள் காலையில், “மதுரைமக்களே… கைவிட்ராதீங்க” எனக்கேட்டு எழுதியிருந்தேன்.

இந்த புதிய முயற்சியை பலரும் வரவேற்றனர். மதுரையிலிருந்து மட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து பலரும் பாராட்டினர்; பல நகரங்களில் இதுபோன்ற முயற்சிகள் தொடங்கப்பட்டன.

மதுரையில் விற்பனைக்குச் செல்லும் வண்டிகளின்எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தபடியே இருந்தன. “சார், எங்க தெருவுக்கு, எங்க ஏரியாவுக்கு காய்கறி வண்டியே வரல சார். தயவுசெய்து வரச்சொல்லுங்க சார்” என்று நாள்தோறும்குறைந்தது பதினைந்து பேரிடமிருந்தாவது கோரிக்கைகள் வந்தன.

“சார், சத்தங்கேட்டுச்சு சார்; வெளியில வர்ரதுக்குள்ள போயிட்டாங்க சார். நின்னு போகச்சொல்லுங்க சார்” என வருத்தப்பட்டு பேசும் குரல்களும் அதற்கு சமமான எண்ணிக்கையில் இருந்தன.

“சார், மிக பயனுள்ள வேலை சார் இது” எனப்பாராட்டுகள் இடைவிடாது வந்துகொண்டிருந்தன.

இந்தப்பணி தொடங்கப்பட்டு இன்றோடு எட்டாவது நாள். இந்த எட்டுநாள்களும் தன்மைரீதியாக பெரும்மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நாள்கள். ஊரடங்கின் தொடக்க நாள்களின்தன்மை,செய்யவேண்டிய வேலைகள் சார்ந்தவைகளாக இருந்தன. ஆனால், நாள்கள் செல்லச்செல்ல சமூகத்தின் கொந்தளிப்புகள் மேலேறிவரத் தொடங்கின. ஒவ்வொரு நாளும் பெரும்மனஅழுத்தங்கள் உருவாகுகிற நாள்களாக மாறியுள்ளன. நாள்தோறும் கடிதங்கள், அறிக்கைகள், கோரிக்கைகள் எனப் பலவாறு செயல்பட்டாலும்,இந்த நாள்கள் அனைத்திலும் ஒரு செயலுக்கான வரவேற்பு அறுந்துவிடாமல் வந்துகொண்டே இருந்தது; அதுதான் வீடுநோக்கி காய்கறித்தொகுப்பைக் கொண்டுசெல்லும் செயல்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று பிற்பகல் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. மிகவும் ஆச்சரியமூட்டும் மின்னஞ்சல் அது. அந்த மின்னஞ்சலில் எழுதப்பட்ட விசயத்தையும் இணைக்கப்பட்டிருந்த படத்தையும் நீண்டநேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

நேற்றுக் காலை, ஒரு வீட்டின் வாசலில் காய்கறித்தொகுப்பு வண்டி போய் நின்றிருக்கிறது. வீட்டுக்காரர் ஒரு பை 100 ரூபாய் வீதம் இரண்டு பைகளை வாங்கியுள்ளார். மாநகராட்சி நிர்வாகம், தன்னார்வளர்களின் முயற்சி எல்லாவற்றையும் கேள்விப்பட்டுத்தான் இதனை வாங்கியுள்ளார். ‘ஏனோதானோவென்று ஏதாவது செய்திருப்பார்கள்; பைக்குள் இருக்கும் காய்கறிகளில் எத்தனை சூத்தையோ, எத்தனை அழுகலோ!’ என்று எண்ணியபடி காய்கறிப்பையை ஒரு தட்டிலே கொட்டியுள்ளார்.


ஒருகாய்கூட சூத்தையோ, அழுகலோ இல்லாமல் இருந்திருக்கிறது. சற்றே ஆச்சரியத்தோடு அவற்றை ஆராயத் தொடங்கியுள்ளார். இதே அளவு காய்கறியை, ஊரடங்கு தொடங்கும் முன் வாங்கியபொழுது என்ன விலை இருந்தது; ஊரடங்கு தொடங்கிய பின் அருகிலிருந்த கடையொன்றில் வாங்கியபொழுது என்ன விலை இருந்தது என்பதை ஏற்கனவே தன்னிடமிருந்த கணக்கு விபரங்களிலிருந்து ஒப்பிட்டுப் பார்த்துள்ளார்.

ஊரடங்கு தொடங்கும் முன் 111 ரூபாய் இருந்துள்ளது இதே அளவு காய்கறி; ஊரடங்கு தொடங்கிய பின் சிறிய சூப்பர்மார்க்கெட் போன்றதொரு கடையில் வாங்கியபொழுது 265 ரூபாய் விலை இருந்துள்ளது;ஆனால், இப்பொழுதோ 100 ரூபாய்க்கு வீட்டுக்குக்கொண்டுவந்து கொடுக்கப்படுகிறது என்பது அவரால் நம்பமுடியாத ஒன்றாக இருந்துள்ளது.

உடனே அந்த இரண்டு காய்கறித்தொகுப்புகளையும் இரண்டு தட்டில்வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். கணக்குப் போட்டுப்பார்த்த அந்தத்தாளையும் புகைப்படம் எடுத்துள்ளார். இணையத்தில் எனது மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடித்து புகைப்படங்களுடன் கூடிய பாராட்டுக்கடிதத்தை எழுதியுள்ளார். மிகக்குறைந்த வார்த்தைகளைக்கொண்ட நேர்மையான மொழியில் எழுதப்பட்ட புகழாரங்கள் அவை.




நேற்றைய நாள் ஒப்பீட்டளவில் சற்றே நல்லநாள்.காலையில் மேலூரில் கடந்த ஆறுநாள்களாக கடைகள் திறக்க அனுமதிக்கபடாமலிருந்த பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆட்சியரின் உத்தரவு வந்ததும் மேலூர் மக்கள் நன்றியைப் பகிர்ந்தபடி இருந்தனர். 

மதுரைக்கும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டத்துக்குமான உணவுப்பொருள்களின் மொத்த வணிகம் கீழமாசிவீதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் நடைபெறுகிறது. இக்கடைகளைத்திறந்து வணிகத்தை,போதிய இடைவெளியோடு நடத்துவதில் தொடர்ந்து பிரச்சனை நீடித்தது. ஆட்சியரிடமும் காவல் துறை ஆணையரிடமும் இதுதொடர்பாக இரண்டுமூன்று முறை பேசியாகிவிட்டது. இந்தப் பின்னணியில் நேற்று காலையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் திரு.ஜெயப்பிரகாசம் அவர்கள் கூறினார். உண்மையிலே மகிழ்வை ஏற்படுத்தியது அது.

பொது ஊரடங்கிற்கும் வீட்டுக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் வாழ்வின் தேவைக்கும் இடையில் பொருத்தமான பாதையை உருவாக்க வேண்டும். அதனைச் சட்டதிட்டங்களாலோ, மேலிருந்துவரும் ஆணைகளாளலோ உருவாக்க முடியாது; களநிலவரத்தைச் சரியாக மதிப்பிடத் தெரிந்தவர்களால்தான் அதனை உருவாக்க முடியும். அதை உருவாக்குகிற முயற்சியில் மதுரை முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இதன் தொடர்ச்சியாகத்தான் நேற்று மாலை மடிகணிணியைத் திறந்ததும் காய்கறி தொக்குப்புக்கான பாராட்டுக்கடிதத்தைப் பார்த்தேன். இந்தப் புகழாரங்களை உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதற்காக மார்க்கெட் சங்கத் தலைவர் மனுவேல் ஜெயராஜ் அவர்களுக்கு போன் செய்தேன். “துல்லியமான கணக்கோடும் சிதைந்திடாத காய்கறிகளின் படத்தோடும் ஒருவர் பாராட்டியுள்ளார் சார்” என்று கடிதத்தைப் பற்றிச் சொல்லி எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தேன். “இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது சொல்லி எங்க வேலையைக்கூட்டிக்கிட்டே இருக்கீங்களே சார்” என்றார்.

ஆம், நேற்று இரவு முழுவதும் அவர் காய்கறிகளைஇட்டு நிரப்பவேண்டிய பைகளின் எண்ணிக்கை பத்தாயிரம். சற்றே தலைசுத்தும் எண்ணிக்கைதான்;ஆனால், போதுமான ஆள்களை வைத்து அதனை மிகத்தெளிவாக செய்துகொண்டிருக்கிறார். பாராட்டுகளைச் சொல்லிவிட்டு, “ஆனாலும் காய்கறி எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் கூட்டலாம் சார்” என்று கேட்டுக்கொண்டு முடித்தேன்.

அடுத்து மாநகராட்சி ஆணையருக்கு போன் போட்டு வாழ்த்துகளைச் சொல்லி கடிதத்தைப் பகிர்ந்துகொண்டேன். நேற்று எட்டாயிரம் பைகள் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன; இன்றுமுதல் பத்தாயிரம் பைகள். இத்தனை பைகளையும் நாள்தோறும் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்; 100வண்டி, எரிபொருள், ஓட்டுநர் என அனைத்தையும் மாநகராட்சி கொடுப்பதால் இந்த முயற்சி சாத்தியமாகிறது. இதுபோன்ற விசயங்களை ஈடுபாடு இல்லாமல் கொண்டுசெலுத்த முடியாது. ஆணையாளரின் ஈடுபாட்டுக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகளைச் சொன்னேன்.

இதில், குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியச்செய்தி மதுரையில் பொதுசந்தையில் காய்கறியின் விலை உயரவில்லை. அதற்குக் காரணம் 100 ரூபாய்க்கு வீடுநோக்கி வரும் காய்கறித்தொகுப்பு. மொத்த வியாபாரிகளிடமிருந்து நேரடியாக வீடு நோக்கி கொண்டு வரப்படுவதால் இந்த விலைக்குறைப்பு சாத்தியமாகியுள்ளது. மற்ற பொருள்களின் விலை இதேபோன்ற நிலையில் இல்லை; சற்றே உயர்ந்துதான் உள்ளது.

அடுத்து, ”வா நண்பா தோள்கொடுப்போம்” அமைப்பின் பொறுப்பாளர் ஜனாவுக்குப் பேசினேன், மிகவும் ஈடுபாட்டோடும் அக்கரையோடும் இந்தப்பணியை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஓரிரு நாள் செய்துவிடலாம், ஆனால் தொடர்ந்து ஒருவாரத்துக்கும் மேலாக செய்து கொண்டே இருப்பது மிகவும் பாராட்டுக்குறியதொன்று. அவருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் கடிதத்தின் பாராட்டுகளை பகிர்ந்துகொண்டேன். உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகள் என பலரும் இந்தப் பாராட்டுக்கு சொந்தக்காரர்கள்.

இன்னும் ஆறு நாட்கள் ஊரடங்கு இருக்கிறது, அதற்க்குப் பின்பும் நிலமைமுழு அளவில் உடனே சரியாகிவிடுமா? தெரியவில்லை. எப்படியோ அனைவருக்கும் நெடுநாள் வேலையிருக்கும் என்றே தோன்றுகிறது. இந்த நெடிய பாதையைக் கடக்க இது போன்ற கடிதங்கள் அவ்வப்போது தேவையான ஊக்கங்களைக் கொடுப்பவை.

இறுதியாக , பாராட்ட வேண்டிய ஒருவர் உண்டென்றால், அது மதுரை மக்கள். நல்லவைகளை செய்தால் நீங்கள் கைவிடமாட்டீர்கள் என்பதை மீண்டும் நிருப்பித்துள்ளீர்கள்.

உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.

1 comment:

  1. போற்றுதலுக்கு உரிய முயற்சி
    போற்றுவோம்
    இன்று இவ்வகையான முயற்சிகள் தமிழகமெங்கும் தொடங்கிவிட்டன

    ReplyDelete