சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல அமெரிக்காவின் பல்டிக்குப் பின்னே ஏதோ கணக்கு இருக்கிறது. அதன் பாதிப்பு ரஷ்யாவுக்கா உக்ரைனுக்கா என்பது சீக்கிரம் தெரிய வரும்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, February 26, 2025
ரஷ்யா Vs உக்ரைன், அமெரிக்கா பல்டி
சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல அமெரிக்காவின் பல்டிக்குப் பின்னே ஏதோ கணக்கு இருக்கிறது. அதன் பாதிப்பு ரஷ்யாவுக்கா உக்ரைனுக்கா என்பது சீக்கிரம் தெரிய வரும்.
Friday, March 18, 2022
இறந்தவர் உயிர்த்தெழும் உக்ரைன்.
உக்ரைனில் அடுக்கி வைக்கப்பட்ட சடலங்கள் முன்பாக ஒரு ஊடகக்காரர் பேசிக் கொண்டிருக்க அந்த சடலங்களில் ஒன்று அசைந்து உயிரோடு இருந்த காணொளியை இப்போதுதான் ஒழுங்காக பார்த்தேன். அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அது என்னமோ அதனை பகிரவே முடியவில்லை
(ஆஹா, இந்த மந்திரத்தைப் பெற தேவர்கள் நடத்திய நாடகக் காதலைப்
பற்றியே தனியாக ஒரு பதிவு எழுதலாம் போல இருக்கே!)
Wednesday, March 9, 2022
புடினுடன்தான் பேச வேண்டும் சேலன்ஸ்கி
மோடியோடும் பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களோடு பேசி போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுமாறு கேட்டுக் கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி சேலன்ஸ்கி சொல்லியுள்ளார்.
இவர்களால் என்ன செய்ய முடியும் என்று அவர் நினைக்கிறார்?
கூறையேறி கோழி பிடிக்க கையாலாகாத மோடி வானம் ஏறி எப்படி வைகுண்டம் போவார்?
"இது உன் பிரச்சினை குமாரு, நாங்க தலையிட்டா கேங் வாராயிடும்" என்ற புதுப்பேட்டை வசனத்தைப் போல
அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இந்த போரிலிருந்து நாசுக்காக நழுவியதைப் பார்த்தும் புத்தி வரவில்லையென்றால் என்ன சொல்வது?
அவர் பேச வேண்டியது ஒருவரோடு மட்டும்தான்.
அப்போதுதான் போர் முடிவுக்கு வரும்.
அவர் பேச வேண்டிய ஒரே நபர்
ரஷ்ய ஜனாதிபதி புதின்.
Monday, February 28, 2022
ரங்கசாமியையும் நக்கலடிப்பீர்களா மூடச்சங்கிகளா?
மோடி தரகு வேலை பார்க்கும் விமான நிறுவனங்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கான கட்டணத்தை மும்மடங்கு உயர்த்தியுள்ள நிலையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக பயணச் செலவை மாநில அரசு ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
முட்டாள் சங்கிகளுக்கு அது பொறுக்கவில்லை. அது எப்படி முடியும்! மீட்பு நடவடிக்கை ராணுவம்தானே செய்ய முடியும்! இவரால் எப்படி முடியும்! காமன் சென்ஸ் வேண்டாமா என்றெல்லாம் பிதற்றினார்கள். ஸ்டாலின் சொன்னது பயணச் செலவைப் பற்றி மட்டும்தான். அதைப் பற்றிக் கூட சிந்திக்காமல் ஐ.டி விங் கொடுத்த செய்தியை பரப்பி தாங்கள் எப்போதும் முட்டாள்கள் என்று நிரூபித்துக் கொண்டார்கள்.
உத்தர்கண்ட் வெள்ளத்தின் போது 60,000 குஜராத்திகளை 20 இன்னோவா கார்களில் மோடியே நேரடியாக மீட்டார் என்று நம்பி பரப்பிய முட்டாள் ஜென்மங்களும் இவர்கள்தான் என்பது வேறு விஷயம்.
இதோ இப்போது
புதுச்சேரி மாணவர்களின் பயணச் செலவை புதுவை அரசு ஏற்கும் என்று புதுவை முதல்வர் திரு என்.ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவை அரசு பாஜகவின் கூட்டணி அரசு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நக்கல் அடித்த மூடச்சங்கிகள், ரங்கசாமியையும் அதே போல் நக்கலடிப்பார்களா?
ஆம்.
ஏனென்றால் எடப்பாடிக்குப் பிறகு சிக்கிய அடிமையல்லவா அவர் !!!!
Sunday, February 27, 2022
முதலாளிகளுக்கு மோடியின் சிக்னல்
"இந்திய மாணவர்கள் ஏன் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிக்க வேண்டும்? நம் தனியார் துறை இதனை கையிலெடுக்க வேண்டும்"
இது நேற்று மோடி உதிர்த்த முத்து.
இது முட்டாள்தனமான கருத்து என்பதை நேற்றைய
அவர்களுக்கு தவிப்பு புரியாது என்ற பதிவில் வரும்
உக்ரைன், ரஷ்யா என்று பல நாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் எல்லா மாநிலத்திலிருந்தும்தான் செல்கிறார்கள். அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒன்றும் செல்லவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியாமல்தான் செல்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கோட்டாவிற்கான கோடிக்கணக்கான கட்டணத்தை கட்ட முடியாமல் குறைந்த கட்டணத்தில் படிக்க கடன் வாங்கிச் செல்பவர்கள்தான்.
வரிகளைப் படித்தவர்களுக்குப் புரியும்.
ஆனால் மோடியின் முன்னெடுப்பு முட்டாள்தனமில்லை.
"நீங்கள் எவ்வளவு மருத்துவக் கல்லூரிகளை வேண்டுமானால் திறந்து கொள்ளுங்கள். கேதன் தேசாய், அன்புமணி போன்றவர்கள்தான் எங்கள் ஆட்சியில் உள்ளார்கள். அதனால் கோடிக்கணக்கில் பணம் பார்க்கலாம். தேர்தல் பத்திரம் மூலம் எங்களையும் கவனித்து விடுங்கள்"
என்பதுதான் மோடி முதலாளிகளுக்கு கொடுத்துள்ள சிக்னல்.
ஆம். மோடி அவராகத்தான் மனதில் உள்ள உண்மையைச் சொல்லி மாட்டிக்கொண்டார்.
Saturday, February 26, 2022
அவர்களுக்கு தவிப்பு புரியாது.
உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கிற வேலையை மட்டும் மோடி செய்தால் போதும் என்று எழுதியதற்கு
"உக்ரைன் வரை போய் படிக்கும் அளவிற்கு வசதி உள்ளவனால் விமானக் கட்டணம் செலுத்த முடியாதா?"
என்று ஒரு கேள்வி வந்தது.
இந்த கேள்வியை இப்போது சங்கிகள் பரவலாக கேட்கத் தொடங்கி விட்டார்கள். அதிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் பயணச்செலவை மாநில அரசு ஏற்கும் என்று முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்பு எரிச்சல் அதிகமாகி விட்டது.
நீட் எழுதாமல் கோடிக்கணக்கில் செலவு செய்பவனுக்கு எதற்கு தண்டச் செலவு செய்ய வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் போன்ற வெறியன் வெளிப்படையாகவே பேசுகிறான்.
மேலோட்டமாக பார்த்தால் நியாயமாகவே தோன்றும். ஒரு சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.
மதுரையில் கல்லூரியில் படித்த காலம். விடுதியில் இருந்த நேரம். மாதத்தின் கடைசி வாரம். மெஸ் கட்டணத்தோடு செலவுக்கான பணம் (கொஞ்சமாகத்தான்) மாதத்தின் முதல் வாரம் வரும். மாதக் கடைசியில் சொற்பமாகத்தான் கையிருப்பு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடக்கிறது. மாநிலம் முழுதும் போராட்டம் பரவியதும் அரசு அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடியது. விடுதிகளை விட்டு மாணவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மதிய உணவு தயார் செய்திருந்ததால் அதை சாப்பிட்டு விட்டு செல்ல பெருந்தன்மையோடு கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது.
அப்போது என் கையில் பேருந்து கட்டணத்துக்கு மேலாக ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது. யாரிடமும் கேட்க கூச்சம். என் அக்காவின் மாமியார் வீடு மதுரையில் இருந்தது. அவர்களிடம் சென்று பணம் கேட்டிருக்கலாம். ஆனால் இப்படி கல்லூரி மாணவர்கள் பொறுப்பில்லாமல் போராடலாமா என்று என் அக்கா மாமனார் கொஞ்சம் வகுப்பெடுப்பார். ஊருக்கு போனதும் இதே வகுப்பு உக்கிரமாக நடக்கும். அதற்கு முன்பாக இன்னொரு வகுப்பு வேண்டாமென்று புறப்பட்டு விட்டேன்.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அனைத்து கல்லூரி மாணவர்களால் நிரம்பி வழிந்தது. பேருந்துகளில் செம கூட்டம். ஒரு மணி நேரம் கழித்தே நின்று செல்ல இடம் கிடைத்தது. இடைப்பட்ட நேரத்தில் தேநீருக்கு ஒரு ஐம்பது காசு செலவழிந்து விட்டது.
திருச்சியிலும் இதே நிலைதான். ஒரு ஏழரை மணி அளவில் வந்திருப்பேன். இரண்டு இட்லியும் ஒரு தோசையும் சாப்பிட்டதில் ஒன்றரை ரூபாய் செலவு. மீண்டும் திருச்சியிலிருந்து நெய்வேலி வரை நின்ற கோலத்தில் பயணம். திருவள்ளுவர் பேருந்து என்பதால் கூடுதல் கட்டணம் இரண்டு ரூபாய். ஆக கையில் இருந்தது ஒரு ரூபாய்தான். விருத்தாச்சலத்தில்தான் உட்கார இடம் கிடைத்தது.
மதியத்திலிருந்து நின்று கொண்டே வந்ததில் ஏற்பட்ட களைப்பு, ஜன்னல் சீட்டில் வந்து மோதிய குளிர் காற்று இரண்டுமே தூக்கம் என் கண்களை தழுவச்செய்து விட்டது.
அதன் விளைவு???
நான் இறங்க வேண்டிய மந்தாரக்குப்பம் நிறுத்தத்தை தவறவிட்டு விட்டேன். மத்தியப் பேருந்து நிலையத்தில் நடத்துனர்தான் எழுப்பி விட்டார்.
மந்தாரக்குப்பத்திற்கு செல்ல என்.எல்.சி டவுன் பஸ் எப்போது என்று கேட்டால் அமராவதி தியேட்டர் செகண்ட் ஷோ முடிந்து பனிரெண்டு மணிக்கு மேல்தான் என்று சொல்கிறார்கள். ஆட்டோக்காரர்கள் நாங்கள் கொண்டு விடுகிறோம் என்று சொலிகிறார்கள். அவர்கள் கேட்ட பத்து ரூபாய் என்னிடம் இல்லை என்கிறேன். வீட்டுக்கு போய் வாங்கிக் கொடு என்று சொல்கிறார்கள். பொறுப்பில்லாமல் தூங்கி விட்டு ஆட்டோவில் வந்தாயா என்று நள்ளிரவில் திட்டு வாங்க தயாராக இல்லை.
பனிரெண்டு மணிக்கு மேல் டவுன் பஸ்ஸில் இருபத்தி ஐந்து பைசா கட்டணத்தில் சென்று எழுபத்தி ஐந்து பைசா கையிருப்போடு வீட்டுக்குப் போன சொந்தக்கதை, சோகக்கதை இது.
எதிர்பாராத பயணத்தால் ஒரே மாநிலத்தில் பட்ட அவதி இது.
படிக்கச் சென்ற உக்ரைன் மாணவர்களால் திடிரென விமானச் செலவுக்கான கட்டணத்தை எப்படி திரட்ட முடியும் என்று சிந்தித்தால் இந்த கேள்வி வராது.
உக்ரைன், ரஷ்யா என்று பல நாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் எல்லா மாநிலத்திலிருந்தும்தான் செல்கிறார்கள். அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒன்றும் செல்லவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியாமல்தான் செல்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கோட்டாவிற்கான கோடிக்கணக்கான கட்டணத்தை கட்ட முடியாமல் குறைந்த கட்டணத்தில் படிக்க கடன் வாங்கிச் செல்பவர்கள்தான்.
இந்தியாவிற்கான அரசு விமான நிறுவனம் இல்லாத நிலைமையில் தனியார் விமானக் கம்பெனிகள் சூழலைப் பயன்படுத்தி மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதால் அவர்கள் கதி அதோகதியாக மாறி விட்டது.
இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.
அரசு நிறுவனமாக ஏர் இந்தியா இருந்திருந்தால் மூன்று மடங்கு கட்டணக் கொள்ளை நடக்காது. அதனால் அந்த கட்டணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது ஏர் இந்தியாவை விற்றுத் தின்ற அரசின் கடமைதான்.
எல்லாமும் இலவசமாக இருக்க முடியாது என்பதெல்லாம் விளக்கெண்ணெய் உபதேசம். முதலாளிகளுக்கு கொடுக்கும் வரிச்சலுகை, தள்ளுபடி உள்ளிட்ட எல்லா எழவுகளும் கூட இலவசம்தான். சொற்றொடர் வேறு.
உக்ரைனில் தவிப்பவர்கள் நம்மவர்கள் என்ற உணர்வுள்ளவர்கள் இப்போது செலவுக்கணக்கு பார்க்க மாட்டார்கள். நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொகுசாக இருப்பவர்கள்தான் பொருளாதார மேதைகளாக வியாக்யானம் செய்து கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு மாணவர்களின் தவிப்பு புரியாது. அவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்ளும் வாய்ப்பை காலம் நமக்கு கொடுத்துள்ளது.
என்ன இவர்கள்தான் தங்களை தேச பக்தர்கள் என்று பீற்றிக் கொள்வார்கள்.