Showing posts with label மனிதம். Show all posts
Showing posts with label மனிதம். Show all posts

Monday, August 10, 2020

மாமனிதர்கள் 2

குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள அனல் போன்ற எளிய மனிதர்களைப் பாராட்டுவோம், போற்றுவோம்.

இந்த பெருந்துயரைக் கூட கேரளாவிற்கு கடவுள் அளித்த தண்டனை என்று கொக்கரித்து மகிழும் கேவலமான சங்கிகளை புறக்கணிப்போம். இவர்களின் பக்தியின் லட்சணத்தை மாலை பார்ப்போம். 

கேரள காங்கிரஸ்காரர்களும் சங்கிகளாகவே மாறி விட்டார்கள் என்பதும் எரிச்சலூட்டுகிற இன்னொரு விஷயம்.







 #அவர்களுக்கு எந்த வருத்தமும் #இல்லை..

கரிப்பூர் விமான விபத்தின் போது, உள்ளூர் மக்கள் தன்னெழுச்சியாக, கொரோனா அச்சுறுத்தலையும் மீறி, மீட்பு பணிகளில் ஈடுபட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..
உண்மை... அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் தான்... பாராட்டுகளுக்கும் புகழ்ச்சிக்கும் தகுதியானவர்கள் தான்..

ஆனாலும்.....

கரிப்பூரிலிருந்து, அங்கே, தொலைவில், மூணாறு, ராஜமலையில் 78 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக புதையுண்டு போனார்கள்; கொரோனா அச்சுறுத்தலையும் புறக்கணித்து விட்டு, ராஜமலை நோக்கி, எத்தனையோ கிலோமீட்டர்கள், ஓட்டமும் நடையுமாக, அந்த நள்ளிரவில் அங்கே சென்று மீட்பு பணிகள் செய்த எளிய மனிதர்கள் உண்டு..

நிலத்தின் கீழே, மண்ணில் புதைந்து கிடக்கும் ராஜமலை தொழிலாளர்களை, அன்றாடம் கண்டு பழகியவர்களை, நண்பர்களை, முகம் அறியாதவர்களை, காப்பாற்ற, டார்ச் லைட் வெளிச்சத்தில் தேடித்தேடி கண்டு பிடித்த எளிய மனிதர்கள்..

பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த முகம் தெரியாத எளிய மனிதர்களால்,காப்பாற்றப்பட்டார்கள்...

கழுத்தளவு சேற்றில், சகதியில் புதையுண்டு கிடந்த #தீபன் உட்பட பலரையும் இழுத்து வெளியே எடுத்தவர்கள் இவர்கள் தான்..

உணவு இல்லை;குடிக்க தண்ணீர் இல்லை; வாகனம் எதுவுமே இல்லை... இறந்து போனவர்களை படுக்க வைக்கக்கூட எதுவுமே இல்லை;தகர ஷீட்டுகளை இணைத்துக் கட்டி, சேற்றின் மீது பாதை அமைத்து,மீட்பு பணிகளை செய்தார்கள், அந்த எளிய #மனிதர்கள்... மண்ணில் புதைந்து போன, விறைத்துப் போன உடல்களை தேடித்தேடி கண்டு பிடித்தார்கள் #அவர்கள்..

முதல் படத்தில் இருப்பவர் கூட அப்படி ஒரு எளிய மனிதர் தான்...

பெயர்...#அனல்..
ராஜமலை தொழிலாளர்கள் புதையுண்டு போனார்கள் என்ற தகவல் கிடைத்த உடனே,, ஓடியும் நடந்தும் சென்று, மீட்பு பணிகளை செய்து விட்டு, அதிகாரிகளும் அமைச்சர்களும், மீட்பு படையினரும், சுகாதார பணியாளர்களும் வந்து சேர்ந்த பிறகு வீட்டுக்கு வந்து சேர்ந்தார் #அனல்..

தனது உடம்பு முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட அட்டைகள், தனது ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிப்பது கூட அறியாமல் வீட்டுக்கு வந்த #அனல் என்ற #மனிதனின் உடம்பிலிருந்து,ஒவ்வொரு அட்டையாக உருவி எடுக்கிறார்,அவரது மனைவி...

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த புகழ்ச்சியையும் எதிர் பாராமல், மீட்பு பணியில் ஈடுபட்ட #அனல் போன்ற எளிய #மனிதர்களை, கேரள முதல்வரும், அமைச்சர்களும் மட்டுமேஅங்கீகரித்தால் போதும் என்று நாம் கருதக்கூடாது...

ஆமாம்...
#அனல் போன்ற எளிய #மனிதர்களை நாம் மறந்து விடக்கூடாது...

#அனல் உட்பட, ராஜமலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து #மனிதர்களுக்கும் ஒரு #Big #Salute.. #ShahulHameed

மாமனிதர்கள் 1

எங்கள் ஓய்வு பெற்ற அதிகாரி தோழர் ரமணன் எழுதிய கவிதை. நான் நெகிழ்ந்ததால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கேரளாவை தாக்கிய இன்னொரு துயரத்திலும் மனிதம் வெளிப்பட்டது. அது பற்றிய பகிர்வு மாமனிதர்கள் 2 ஆக இன்னும் கொஞ்ச நேரத்தில் . . .


மாமனிதர்கள்

அடித்துக் கொட்டும்
அடை மழை.
அவர்கள் அசரவில்லை.

காவல்,ஆம்புலன்ஸ் வர
அவர்கள் காத்திருக்கவில்லை.

கொட்டிய குருதியால்
நனைந்த சொகுசு இருக்கைகள்
கவலை இல்லை என்றனர்.

யார் பெற்ற பிள்ளைகளோ
மார்போடணைத்து
தெரிந்த மொழியில்
தேற்றினர்.

தலைக் குல்லா
நெற்றி நீறு
எதுவும் பேதமில்லாமல்
எடுத்து சென்றனர்.

தெரிந்த மருத்துவ மனைகளுக்கு
தெறித்தோடும் வேகத்தில்
தீயாய் கொண்டு சேர்த்தனர்.

கொட்டும் மழை
அடர் திரையாய்
மறைப்பினும்
வழுக்கும் சாலை
கரணம் தப்பினால் மரணம்
என்றாலும்
தம்முயிர் மதியாது
மன்னுயிர் காத்த
மலப்புரம் மாமனிதர்களுக்கு
சிரம் தாழ்த்தி
செவ்வணக்கம்.

திறமையாய் தரையிறக்கி
தன்னுயிர் ஈந்து
பல்லுயிர் காத்த
விமானிகளுக்கும்
வீர வணக்கம்.