Showing posts with label சந்தர்ப்பவாதம். Show all posts
Showing posts with label சந்தர்ப்பவாதம். Show all posts

Tuesday, November 26, 2024

கடவுள் அருள் யாருக்கு மோடி?

 


மஹாராஷ்டிர அரசியல் களம் சுவாரஸ்யமாகியுள்ளது.  அதிக இடங்களை வென்றுள்ளதால் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்தான் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்று பாஜக சொல்கிறது (ஆர்.எஸ்.எஸ் சொல்கிறதா என்று தெரியவில்லை. சொல்லும் என்றே தோன்றுகிறது). அமலாக்கப்பிரிவின் கடாட்சம் வேண்டும் என்பதால் அஜித் பவார், பட்னாவிஸ் பக்கம் சென்று விட்டார்.

சிவசேனாவை உடைத்து முதல்வரான ஷிண்டேதான் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆட்கள் சொல்லத்தொடங்கி விட்டார்கள். பீகாரில் நிதீஷ்குமாருக்கு எம்.எல்.ஏ க்கள் குறைவு, அவர் முதல்வராக உள்ளாரே என்று தொடங்கி நல்லவரு, வல்லவரு, இதர இதர இதர வழிபாடுகளுக்கு குறைச்சலே இல்லை.

யார் முதல்வராவார்?

மூன்று பேரும் கிரிமினல்கள், சந்தர்ப்பவாதிகள், அதிகாரத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்.

ஷிண்டேவின் ஆதரவாளர்கள் அவருக்காக மஹாராஷ்டிராவில் உள்ள எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

கடவுள் அருள் யாருக்கு மோடி?

உங்கள் கடவுளைச் சொல்கிறேன், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவந்த் தான். 

Wednesday, May 8, 2024

இதுவும் கர்மாவா சங்கிகளா?

 


எங்கேயாவது ஏதாவது ஜனநாயகத்துக்கு எதிரான சம்பவம் நடந்தால் அதை நியாயப்படுத்தி முட்டு கொடுக்க வாய்ப்பில்லாத போது சங்கிகள் அதனை கர்மா என்று சொல்லி விடுவார்கள்.

இப்போது பாஜக ஆட்சி ஹரியானாவில் கவிழும் நிலை ஏற்பட்டு விட்டது. மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ க்கள் பாஜக பக்கத்திலிருந்து காங்கிரஸ் பக்கத்திற்கு தாவி விட்டார்கள். அதனால் பாஜக பெரும்பான்மையை இழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தோற்றுப் போவார்கள். இதுவும் குதிரை பேரத்தின் விளைவுதான்.

மகாராஹ்டிரா, பீகார், மத்தியப்பிரதேசம், கர்னாடகம் என்றெல்லாம் ஆட்சிகளை கவிழ்த்த பாஜகவின் ஆட்சியும் கவிழ்வது இனிமையான செய்திதான், அந்த முறை உடன்பாடில்லாவிட்டாலும் கூட.

சங்கிகள் இந்த சம்பவத்திற்கு என்ன எதிர்வினையாற்றுவாற்றுவார்கள்?

ஜனநாயகப் படுகொலை என்பார்களா?

இல்லை

கர்மா அவர்களை திரும்பித் தாக்கி விட்டது என்பார்களா?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தொடர்ந்து அயோக்கியத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, யாருடைய ஆதரவு இருந்தாலும் சரி, அடி நிச்சயம் விழும் என்பதைத்தான் ஹரியானா உணர்த்துகிறது.

 

Wednesday, November 1, 2023

அமாவாசைகள் அப்படித்தான்.

 


 

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர்களின் அலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

அப்படி ஒட்டு கேட்கப்படுவதில் அதிர்ச்சியடையவோ ஆச்சர்யமடையவோ ஏதுமில்லை.

அமைதிப்படை அமாவாசை போன்ற படிக்காத தற்குறிகளுக்கு அதிகாரம் கிடைத்தால் அதை தக்க வைத்துக் கொள்ள எந்த கேவலமான வேலையையும் செய்வார்கள். கீழ்த்தரமான செயல்பாடு என்பதுதான் அவர்களின் கேரக்டர்.

 அமாவாசைகள் மீது கோபப்படுவதை விட அமாவாசைகளுக்கு அதிகாரத்தை கொடுத்த, அமாவாசைகளுக்கு ஆதரவும் முட்டும் கொடுக்கிற முட்டாள்கள் மீதுதான் கோபப்பட வேண்டும்.

Saturday, December 4, 2021

அதானி – மம்தா டீலிங் என்ன?

 


மோடியின் உற்ற நண்பர் அதானி, மோடிக்கு எதிராக கம்பு சுற்றுவதாக காண்பித்துக் கொண்டிருக்கும் மம்தா அம்மையாரை சந்தித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அதானி முதலீடு செய்யப் போகிறாராம்.



 தொழில் வளர்ச்சி வேண்டுமென்று இடது முன்னணி கொண்டு வந்த சிங்கூர் டாடா நானா திட்டத்தை சீரழித்தவர் மம்தா பானர்ஜி.

 அவர் இப்போது அதானிக்கு நிலம் தரப் போகிறார்.

 ஆமாம், விஸ்வாமித்திரர் உருவாக்கிய திரிசங்கு சொர்க்கம் போல  அந்தரத்தில் எந்த தொழிற்சாலையும் அமையாதல்லவா! கண்டிப்பாக நிலம் வேண்டுமே!

 அதானிக்கு  மம்தா எப்படி நிலம் தரப் போகிறார்?

 புத்ததேப் போலவா? மோடி போலவா?

 புத்ததேப் உருவாக்கிய, டாடா ஒப்புக் கொண்ட வழிமுறை என்ன?

 சிங்கூரில் மேற்கு வங்க அரசு டாடாவிற்கு ஒதுக்கியது வெறும் 990 ஏக்கர் நிலம் மட்டுமே. நிலத்தின் கட்டுப்பாடு அரசின் வசமே இருக்கும். இழப்பீடு எப்படி தரப்பட்டது தெரியுமா?

 சந்தை விலையைப் போல ஒன்றரை மடங்கு. குத்தகைதாரருக்கு தனியாக இழப்பீடு. நிலம் கொடுத்தவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அதைத் தவிர நிலம் கொடுத்தவர்களது குடும்பத்து பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே நானோ நிறுவன ஊழியர்களுக்கு சீருடை தைக்கப்பட வேண்டும். உணவகமும் அவர்கள் அமைப்பார்கள்.

 சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மற்ற மாநிலங்களில் விவசாய நிலங்கள் தேவையை விட பல மடங்கு அதிகமாக பறிக்கப்பட்டது. அடிமாட்டு விலை கூட விவசாயிகளுக்கு தரப்படவில்லை. மற்ற இழப்பீடுகளுக்கும் சிங்கூர் இழப்பீட்டிற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்தான்.

 சிங்கூர் திட்டத்தை மம்தா அழித்ததே இது போன்ற நடைமுறை அமலானால் மற்ற முதலாளிகளுக்கு சிரமம் என்பதால்தான்.

 அதே நேரம் அதே டாடா நானோவுக்கு மோடி ஒதுக்கியது 20,000 ஏக்கர், அதுவும் அடிமாட்டு விலையில்.

 இப்போது டாடா நானோ செயல்படவில்லை. ஆனால் நிலம் அவர்களிடம்தான்.

 மம்தா எந்த பாதையை பின்பற்றப் போகிறார்?

 எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

 மோடியின் நண்பருக்கு மோடியின் பாணியில்தான் உதவுவார்.

 அப்போதுதான் அவரது ஏழைப்பங்காளன் வேடமும் கலையும். மம்தா-மோடி மோதல் எல்லாம் வெறும் நாடகம் என்பதும் புரியும்.

 

 

Tuesday, June 22, 2021

தாலிபனுடன் என்ன டீலிங் மோடி?


இப்போதுதான் ஆங்கில இந்து நாளிதழில் படித்தேன்.

கத்தார் நாட்டின் சிறப்பு தூதர் "முத்லக் பின் மெஜெத் அல் கொரானி"  என்பவர் ஒரு கருத்தரங்கில் சொன்ன அதிர்ச்சி தகவல்.

கத்தார் நாட்டின் தோஹா நகரில் தாலிபன் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைமையை  இந்திய தூதுக்குழு இரண்டு முறை சந்தித்து விவாதித்துள்ளது. அந்த சந்திப்பு நடந்த நேரங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தோஹாவில்தான் இருந்துள்ளார்.

இது பற்றி விளக்கம் கேட்டதற்கு வெளியுறவு அமைச்சகம் பதில் சொல்ல மறுத்து விட்டதாம்.

ஒரு பயங்கரவாதக்குழுவோடு மோடி அரசு விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்ன விவாதித்தது? உண்மைகளை மறைப்பது ஏன்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் வராது என்பதற்காக நம்மால் கேட்காமல் இருக்க முடியாதல்லவா?

பாமியான் புத்தர் சிலையை உடைத்த தாலிபனும் பாபர் மசூதியை இடித்த பாஜவும் ஒன்றுதானே!

அவர்களுக்குள் ஏதாவது தொழில் நுட்ப பரிமாற்றம் ஏதாவது இருக்கும்!

 

Saturday, June 12, 2021

ஒரே ஆள்தான். ஆனா அவங்க

 


மேலே படத்தில் இருப்பது முகுல் ராய்.

சாரதா சிட்பண்ட் ஊழலில் முக்கியக் குற்றவாளி.

மம்தாவின் கையாளாக இருந்த அவர் பாஜகவிற்கு மாறியதும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குப்பைத் தொட்டிக்கு போனது. அப்போது மம்தா அவரை கடுமையாக திட்டினார்.

இப்போது அவர் தாய்க்கழகம் திரும்ப, கண்கள் பணிக்க, இதயம் கனக்க மம்தாவும் அவரை ஏற்றுக் கொள்ள

முகுல் ராய் மீதான விசாரணை தொடரும் என்று சி.பி.ஐ சொல்லியுள்ளது.

மொத்தத்தில் திரினாமுல்லும் பாஜகவும் ஒன்னு.

இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு.

Tuesday, May 4, 2021

ஏன் வெளியேறவில்லை கிச்சா?

 


தான் சார்ந்திருக்கிற தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியலின சமூகம் என்ற வரையறையிலிருந்து  நீக்க வேண்டும் என்பதுதான் டாக்டர் கிருஷ்ணசாமியின் நீண்ட நாள் கோரிக்கை.

 


இட ஒதுக்கீடு எங்கள் சமூகத்திற்கு அவசியமில்லை என்று சொல்லும் டாக்டர் கிச்சா ஏன் பொதுத்தொகுதி எதிலும் போட்டியிடாமல் எப்போதும் போல ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டார்?

 அவரே பட்டியலினத்திலிருந்து வெளியேற தயாராக இல்லாத போது தன்னுடைய சமுதாய மக்களை மட்டும் வெளியேற வேண்டும் என்று சொல்லி அவர்களுடைய இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்க முயல்வது நியாயமா?

Tuesday, March 2, 2021

எடப்பாடி ஊழல் தோஷம் எப்படிப் போச்சு மருத்துவரய்யா?

 




“இது நம்ம ஆளு” படத்தில் ஒரு காட்சி வரும். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு ஊமைப் பெண்ணை வீடு புகுந்து திருடினார் என்று கட்டிப் போட்டு பஞ்சாயத்தில் நிறுத்தி வைத்திருப்பார்கள். பாக்யராஜ் அந்த பெண்ணின் கட்டை அவிழ்த்து விட்ட பிறகுதான், அந்தப் பெண் திருட வீட்டிற்குப் போகவில்லை என்றும் வீட்டில் உள்ளவர்கள் வெளியே போன சூழலில் கதறிய குழந்தையின் அழுகுரல் கேட்டு தாங்காமல் பால் கொடுக்க சென்றார் என்பது தெரிய வரும். ஒடுக்கப்பட்ட இனைத்தைச் சேர்ந்தவர் தன் குழந்தைக்கு பால் கொடுத்தது தெரிந்தால் அவமானம் வந்து விடும் என திருட வந்தார் என்று கதை கட்டியிருப்பார்கள்.

 உண்மை தெரிந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டாலும் அந்த பெண் பால் கொடுத்ததால் ஏற்பட்ட தோஷத்தை போக்க ஏதாவது செய்யுங்கள் என்று அந்த அக்ரஹாரத் தலைவர் சோமயாஜூலுவிடம் கேட்க, அவரும் சொம்பில் இருந்த கங்கை நீரை மந்திரம் சொல்லி தெளித்து தோஷத்தை போக்குவார். அதே போல என் தோஷத்தையும் போக்குங்கள் என்று ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட ஷோபனாவும் கேட்டு தோஷ நிவாரணத்தின் அபத்தத்தை வெளிப்படுத்துவார் என்பது வேறு விஷயம்.

 இந்த காட்சி ஏன் நினைவுக்கு வந்தது?

 எடப்பாடி ஒரு ஊழல் பேர்வழி என்று மருத்துவரய்யா போட்ட ட்வீட்டுகளை ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பகிர்ந்து கொண்ட போது நினைவுக்கு வந்தது.

 


எடப்பாடி அரசின் மீது பன்வாரிலால் புரோஹித்திடம் ஊழல் புகார் பட்டியல் அளித்த  சின்ன மருத்துவரய்யாவின் புகைப்படம் நினைவு படுத்தியது.

 


மருத்துவரய்யாக்கள் எந்த சொம்பில் எந்த புனித நீர் கொண்டு எடப்பாடியின் ஊழல் தோஷத்தை போக்கி 23 சீட்டுக்களை பெற்றிருப்பார்கள்?

அந்த சொம்பில் கங்கை நீருக்கு பதிலாக பல கோடிகள் இருந்திருக்கும். சொம்பு கூட மருத்துவரய்யாக்கள் கையில் இருப்பதற்குப் பதிலாக எடப்பாடி கையில் இருந்திருக்கும்.  டாக்டரய்யாக்கள் மீது அவர் தெளித்த கங்கை நீராகிப் போன கரென்ஸி நோட்டுக்களே அவரது ஊழல் தோஷத்தைப் போக்கியிருக்கும்!

 என்ன சரிதானே டாக்டரய்யாக்களே?

 

Friday, October 30, 2020

குஷ்பு மாதா கீ ஜெய்


 போன மாதம் வரை மிகக் கடுமையாக திட்டிக் கொண்டிருந்த ஒருவரை இப்படி பாரத மாதாவாக சித்தரிக்கிறோமே என்று பாஜக ஆட்களில் ஒருவருக்காவது குற்ற உணர்ச்சி வந்திருக்குமா?

அட, வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை, சுய புத்தி, சொல் புத்தி உள்ளவனா, மனுசனா இருந்தா அவன் ஏங்க பாஜகவில் இருக்கப் போறான் என்ற உங்கள் குரங்குக் குளியல் எனக்கு கேட்கிறது.

ஆமாம்.
மானங்கெட்ட மடையர் கூட்டம்தானே அது

Tuesday, October 13, 2020

பிச்சையெடுப்பது கௌரவம் மாலன்!

 



குஷ்பூவை விமர்சிக்க வாருங்கள்

குஷ்பூவை விமர்சிக்க வாருங்கள்.
உங்களில் பாவம் செய்யாதவர் எவரோ அவர் முதல் கல்லை எறியுங்கள்

இது நம்ம எழுத்து வியாபாரி மாலனின் முக நூல் பதிவு. முதல் குஷ்புவிற்கும் இரண்டாம் குஷ்புவிற்கும் இடையில் அவரது அபத்தம் அடங்கியுள்ளது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் என்று யாரும் குஷ்புவின் பல்டியை விமர்சிக்க கூடாது என்பதுதான் அவர் சொல்ல வருவது.

பாஜக எத்தனையோ அரசியல் சந்தர்ப்ப வாத நடவடிக்கைகள் எடுத்த போதெல்லாம் அதற்கு முட்டுக் கொடுத்த இந்த ...... வாய், இப்போது அரசியல் புனிதம் பேசுகிறது.

மாலனின் வார்த்தைக்கு எனக்கு தெரிகிற ஒரே அர்த்தம்.

வாங்கற காசுக்கு மேலேயே கூவற மாலா!

பாவம் நீ என்ன செய்வ! போட்டி அதிகமாகுது. வயசான காலத்துல கிடைக்கிற காசை தக்க வைக்க இப்படி கூவித்தான் பிழைப்பை பார்க்க வேண்டியிருக்கு! இந்த பிழைப்புக்கு பதிலா பிச்சையெடுத்தா கௌரவமா இருக்குமே மாலன்!

Sunday, July 28, 2019

ஸ்பெல்லிங் மாற்றிய யெட்டி தலை தப்புமா?


இன்று யெடியூரப்பா மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போகிறார்.

ஏற்கனவே ஒரு முறை முதல்வராக பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ராஜினாமா செய்து விட்டுப் போனவர் இப்போது மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார்.

இம்முறையாவது அவர் தலை தப்புமா?

எந்த நம்பிக்கையில் அவர் முதல்வரானார்?

ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டில் எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கி குமாரசாமி மந்திரி சபையை கவிழ்த்த தைரியமா?

அதே ஆயிரக்கணக்கான கோடிகள் மூலமாக பெரும்பான்மை பெற்று விட முடியும் என்ற நம்பிக்கையா?

காங்கிரஸ்- ஜனதா தள் - இந்த இரண்டு கட்சிகளில் இப்போது உள்ளவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு விலைக்கு வாங்க முடியும் என்ற நம்பிக்கையா?

நோ, நோ, நோ

எல்லாம் பெயரின் ஸ்பெல்லிங்கை மாற்றியுள்ள நம்பிக்கைதான்.

ஆமாம்.   
  
Yeddyurappa  

என்ற பெயரை

Yediyurappa

என்று மாற்றிக் கொண்டு விட்டார். 

வாழ்க்கையையே பிழையாகக் கொண்டுள்ள ஒரு மனிதனுக்கு எழுத்துப் பிழையெல்லாம் ஒரு விஷயமா என்ன?

பார்ப்போம். இதுவாவது அவருக்கு கை கொடுக்கிறதா என்று!



Sunday, July 14, 2019

கூட்டணி அதர்மம் - கோவா ஸ்டைல்


கோவாவில் காங்கிரஸ் கட்சியின் பத்து எம்.எல்.ஏ க்கள் எந்த நிபந்தனையும் (!) இல்லாமல் பாஜகவில் சேர்ந்தது நினைவில் உள்ளதல்லவா?

அப்படி நிபந்தனை ஏதுமில்லாது சேர்ந்தவர்களில் மூன்று பேரை அமைச்சராக்கி விட்டார்கள்.

அமைச்சரவையின் எண்ணிக்கை அதிகமாகக் கூடாது என்பதற்காக மனோகர் பாரிக்கர் காலம் முதல் கோவா பாஜக அரசை ஆதரித்து வந்த "கோவா ஃபார்வர்ட்" என்ற கட்சியின் சார்பில் இருந்த அமைச்சர்களை நீக்கி விட்டார் கோவா முதல்வர்.

அப்படி பதவி நீக்கம் செய்யப்படுகிற தகவலைக் கூட எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் இதன் மூலம் மனோகர் பாரிக்கர் இரண்டாவது முறையாக இறந்து விட்டார் என்று வேறு புலம்பியுள்ளார் அந்த கட்சியின் சார்பில் துணை முதல்வராக இருந்து திடீரென  முன்னாள் துணை முதல்வர் என்ற நிலைக்கு மாற்றப்பட்ட விஜய் சர்தேசாய்.

சொந்தப் பிள்ளைகள் கிடைத்தவுடன் தத்துப் பிள்ளைகளை கழட்டி விடுவதுதான் உலக வழக்கம் என்பது பாவம் அவருக்கு புரியவில்லை.

இதுதான் பாஜகவின் கூட்டணி அதர்மம் என்பதும் கூட. 

Tuesday, July 9, 2019

தாமரை மலர்ந்தாலும் அசிங்கம்தான் யெட்டி


"ஆபரேஷன் தாமரை" என்ற பெயரில் கோடிக்கணக்கான முதலீட்டில் யெட்டியூரப்பா தொடங்கிய பேக்கரி டீலிங் இப்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. குமாரசாமியின் ஆட்சியும் கூட.

காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பு என்பதே கொஞ்சமும் கிடையாது என்பதும் இந்த நிலைக்கு ஒரு காரணம்.

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் விலகிய பதவிக்கு மீண்டும் திரும்பப் போகிறார் யெட்டி என்பது நிதர்ஸனம்.

விலைக்கு வாங்கிய எம்.எல்.ஏ க்களைக் கொண்டு கிடைக்கிற பதவி பெருமையல்ல யெட்டி, கடைந்தெடுத்த அசிங்கம் . ..

ஓடி வந்தவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் யெட்டி. நீங்கள் கொடுத்ததை விட நல்ல விலை வேறு யாராவது கொடுத்தால் உங்களிடமிருந்தும் ஓடி விடப் போகிறார்கள் . . .

Wednesday, May 29, 2019

மோடி பேசிய உண்மை, அதிசயமாய்



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாற்பது சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களோடு தொடர்பில் உள்ளார்கள். மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்னார்.

குதிரை பேர முயற்சி, ஆணவம், மிரட்டல் என்றுதான் அப்போது பார்க்கப்பட்டது.

ஆனால் மோடி அபூர்வமாக சொன்ன உண்மை அது என்பது நேற்று திரிணாமுல் எம்.எல்.ஏ க்கள் இருவர் பாஜகவில் சேர்ந்த போதுதான் புரிந்தது.

மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ வோடும் தொடர்பில் உள்ளோம் என்று சொல்லியிருந்தால் அந்த துரோகியை முன் கூட்டியே நீக்கி இருந்திருக்கலாம்.

இன்னும் ஏழு கட்ட இழுப்பு வேலை இருப்பதாக சொல்லியுள்ளார்கள். 

மேற்கு வங்கத்தில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறதோ?

Thursday, May 2, 2019

இதுதாண்டா மோடி கேரக்டர் ...



இது மோடிக்கு புதுசு இல்லீங்க!

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் நாற்பது எம்.எல். க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்த பின்பு அவர்கள் உங்கள் கட்சியை கைவிட்டு விட்டு என்னோடு வந்து விடுவார்கள்

இது மோடி மம்தா பானர்ஜிக்கு வெளிப்படையாக விடுத்துள்ள மிரட்டல்.

அப்பட்டமான குதிரை பேரம் இது என்று பலரும் மோடியை கண்டித்துள்ளனர்.

இச்செய்தியில் அதிர்ச்சியடையவோ, ஆச்சர்யமடையவோ ஏதுமில்லை.

வழக்கமாக பாஜக செய்து கொண்டிருக்கிற தில்லுமுல்லு வேலைகளில் இதுவும் ஒன்று.

ஏதாவது மோசடி செய்து தேர்தலில் ஜெயிக்கப் பார்ப்பது,

அது முடியவில்லை என்றால் ஆளுனர் மூலம் ஆட்சி அமைப்பது.

அப்படியும் முடியவில்லை என்றால் வேறு கட்சி எம்.எல். க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வருவது.

ஆளும் கட்சி கூட்டணியை உடைத்து அங்கே போய் உட்கார்ந்து கொள்வது.

ஆளும் கட்சியை அடிமையாக்கி தன் ஆட்சியை நடத்துவது

கோவா, மணிப்பூர், உத்தர்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, கர்னாடகம், பீகார், தமிழகம்

என்று பல மாநிலங்களில் மேலே சொல்லப்பட்ட அனைத்து மோசடிகளையும் பாஜக செய்துள்ளது.

திரிபுராவில் காங்கிரஸ் கட்சி எம்.எல். க்களை ஹோல்சேல் விலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் வாங்கியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த காங்கிரஸ் எம்.எல். க்களை அப்படியே வாரிச் சுருட்டிக் கொண்டது பாஜக.

கோவாவில் மனோகர் பாரிக்கர் இறந்த பிறகு எம்.ஜி.பி கட்சியின் மூன்று எம்.எல். க்களில் இரண்டு பேரை பாஜகவிற்கு தாவ வைத்து மந்திரி, துணை முதல்வர் பதவிகளும் கொடுத்தது.

நிதிஷ்குமார், லாலு கூட்டணியை உடைத்து லாலு இடத்திற்குச் சென்று பாஜக ஒட்டிக் கொண்ட கதை நடந்தது பீகாரில்.

தமிழக அனுபவத்தைச் சொல்லவே வேண்டாம்.

கர்னாடகாவில் மட்டும்தான் இவர்களின் குதிரை பேர சதி வெற்றி பெறவில்லை.

இதுவரை தாங்கள் செய்து வந்த குதிரை பேர விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக பீற்றிக் கொண்டதில்லை.

மேற்கு வங்கத்தில் முதல் முறையாக வாய் விட்டு சொல்லி விட்டார் மோடி. அவ்வளவுதான்.

மோடியோ, பாஜகவோ நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே அதிர்ச்சி அடைவத்ற்கோ அல்லது  ஆச்சர்யமடைவதற்கோ வாய்ப்பு கிடைக்கும்.

அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்காமல் மோடி பார்த்துக் கொள்வார்.\

ஏனென்றால் இதுதான் மோடியின் கேரக்டர். 
பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,