Saturday, July 22, 2017

சூரத் போயிட்டு வரேன்
நாளையும் நாளை மறுநாளும் சூரத்தில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம். 

ஆகவே சூரத் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். புதன் இரவு வேலூர் வந்து சேர்வேன்.

வலைப்பக்கத்தில் எழுத மோடியின் மாநிலத்தில் நல்ல சரக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

சூரத் செல்வதால் வலைப்பக்கத்துக்கு விடுமுறையெல்லாம் விடவில்லை. சில பதிவுகள் தயாராகவே உள்ளது. அதிலே இரண்டு ஆசான் ஸ்பெஷல்.

ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் பின்னூட்டத்துக்கு பதில் மட்டும் வீடு திரும்பிய பின்னே.

பை. பை
 

இதுதாண்டா இந்தியப் போலீஸ்நான்கு போலீஸ்காரர்கள் பற்றி விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் திரௌபதி ஆலயத்தில் தலித் மக்களை கோவிலுக்குள் விடுவதில்லை. அதற்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துகிறது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அப்போதைய குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ  தோழர் ஜி.லதா உள்ளிட்டவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடக்கிறது. தோழர் ஜி.லதாவின் வயிற்றில் பூட்ஸ் காலால் உதைத்தார்கள். இத்தாக்குதலை முன்னின்று நடத்திய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜிற்கு தமிழக அரசு டி.ஐ.ஜி பதவி உயர்வு கொடுத்தது.

சமீபத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பெண்களின் மீது தாக்குதல்களை நடத்தியது தமிழக காவல்துறை. திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி  என்ற பெண்மணியை ஓங்கி அறைந்து அவரது செவித்திறனை பாதிக்க வைத்த கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி திமிராக நடந்து கொண்ட பாஜககாரர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்த ஷ்ரேஸ்தா தாக்கூர் என்ற காவல்துறை பெண் அதிகாரியை யோகி அரசு நேபாள எல்லைக்கு மாற்றலில் தூக்கி அடித்தது.

சிறைச்சாலைக்கு உள்ளே சசிகலா, சகல வசதிகளையும் அனுபவிக்க சிறைத்துறை டி.ஜி.பி இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்பதை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி ரூபா போக்குவரத்துத்துறைக்கு மாற்றப் பட்டுள்ளார்.

கடமையை ஒழுங்காக நிறைவேற்றினால் தண்டனை.
கொடூரத் தாக்குதல் நடத்தினால் பதவி உயர்வு.

நன்றாகத்தான் இருக்கிறது நம் நாடு.

Friday, July 21, 2017

கேரளாவுக்கே போயிடலாம்

மேலே உள்ள படத்தை பார்த்தீங்க இல்லை?
தோழர் வெண்புறா சரவணன் அவர்களிடமிருந்து சுட்டது.

இதுக்கு மேல வேற என்ன விளக்கமா சொல்லனும்?

அங்கே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படுகிறது. அது ஆட்சி. அவர் முதல்வர்

இங்கோ அவர்களுக்கு அவர்களே உயர்த்திக் கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத்தை பெறுவதற்குக் கூட போராட வைக்கிறார்கள்.

விவேக் சொன்னது போல

“இனி எண்ட ஸ்டேட் கேரளா, எண்ட சிஎம். பினராயி விஜயன்”

என்று அங்கேயே போய் விடலாம் போல.

காந்தி சொன்னதுதான் - ஒன்னுமில்லஇரண்டு தோழர்கள் இன்பாக்ஸில்  கேட்டார்கள்.

அலுவலகத்தில் இரண்டு தோழர்கள் நேரில் கேட்டார்கள்.

ராம் கோவிந்த் குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

இந்தியா விடுதலை பெற்ற முதல் நாளான 15 ஆகஸ்ட் 1947 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு மகாத்மா காந்தி அளித்த பதிலையே அவர்களுக்குச் சொன்னேன்

"ஒன்னுமில்ல"

Thursday, July 20, 2017

அடுத்த துண்டுப் பிரசுரம் ???????துண்டுப் பிரசுரமும் குண்டர் சட்டமும்

கள்ளச்சாராயம் காய்ச்சுபவன், கட்டப்பஞ்சாயத்து செய்பவன், செயின் அறுப்பவன், மாமூல் வாங்கும் ரௌடிகள். கூலிக்கு கொலை செய்பவன், ஆகியோர்தான் குண்டர்கள் என்று நினைத்திருந்தால் அது மிகவும் தவறு என்று எடப்பாடி எடுபிடி அரசு சொல்கிறது.

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது,
அரசின் அபாயகரமான திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் வழங்குவது

ஆகியவற்றைத்தான்

ஆபத்தான நடவடிக்கைகள் என்று கருதி குண்டர் சட்டத்தை பயன்படுத்தியுள்ளது.

பழனியிலே கலாட்டா செய்த மன்னார்குடி மடத்து ஜீயர் உள்ளிட்ட பசுக்குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தயாராக இல்லாத அரசு இது.

ராமநாதபுரத்திலே மதக்கலவரத்தை தூண்டி விட விஷத்தையும் பொய்களையும் பரப்பிய எச்.ராசா மீது சுண்டு விரலைக் கூட உயர்த்த தைரியமில்லாத அரசு இது.

தமிழகம் கலவர பூமியாகும் என்று பகிரங்கமாக அறிவித்த மத்திய மந்திரி பொன்னாரைக் கண்டிக்கக்கூட திராணி இல்லாத அரசு இது.

ஆனால் அரசின் நடவடிக்கைகளையோ கொள்கைகளையோ விமர்சிப்பவர்கள் மீது தடியடி கொண்டு தாக்குதல் நடத்துவது என்பதை நடைமுறையாக்கி உள்ள இந்த அரசு, இப்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறி குண்டர் சட்டத்தை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது.

சகிப்பின்மைக்கு உதாரணமாக திகழும் மோடியின் கால்களில் வீழ்ந்து கிடப்பதால் தமிழக அரசும் மோடி அரசு போலவே மோசமாக திகழ்கிறது.

அடிமை இந்தியாவில் துண்டு பிரசுரத்தை மக்களவையில் வீசிய வீரன் பகத்சிங்கிற்கு தூக்கித்தண்டனை அளித்தது பிரிட்டிஷ் அரசு.

சுதந்திர இந்தியாவிலோ தமிழகத்தின் அடிமை அரசு  குண்டர் சட்டத்தை பயன்படுத்துகிறது.

வருடங்கள் உருண்டோடினாலும் அரசுகள் மாறுவதில்லை  

போராடும் அமைப்புக்கள் மக்களிடம் எடுத்துச்செல்லும் அடுத்த துண்டுப்பிரசுரம், இந்த அராஜகத்தை கண்டிப்பதாகத்தான் இருக்க வேண்டும். பார்ப்போம் எத்தனை பேரை இந்த அரசால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள முடியும் என்பதை.

ம.பு நக்சலைட் கவிதை - நெருடலோடு

மனுஷ்ய புத்திரனின் நீண்ட கவிதை நன்றாகத்தான் உள்ளது. அதனால்தான்  இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

ஆனாலும் ஒரு நெருடல் உள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது.

கவிதையைப் படியுங்கள்.

கடைசியில் சொல்கிறேன்.*நக்சலைட்**மனுஷ்யபுத்திரன்*நான் ஒரு நக்சலைட்

என்னைக் கைது செய்யுங்கள்.

என்னைக் கொலை செய்யுங்கள்

நான் வெடிகுண்டுகள் செய்யவில்லை.....

வாகனங்களைத் தகர்க்கவில்லை.....

வனங்களில் மறைந்து வாழவில்லை.....

மக்களின் நிலம் திருடப்படுவதற்கு எதிராக

நான் ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தேன்.....

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

நான் அணு உலைக்கு எதிராக

உண்ணாவிரதம் இருந்தேன்...

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

நான் பழங்குடிகளுக்கு

மருத்துவம் செய்தேன்...

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

நான் வகுப்பறையில் மாணவர்களுக்கு

மனித உரிமையை போதித்தேன்

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

நான் சாராயக் கடைக்கு எதிராக

ஒரு பாட்டுப் பாடினேன்...

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

நான் மரித்த தியாகிகளுக்கு

அஞ்சலி செலுத்த முயன்றேன்...

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

நான் வாடிவாசலை

திறக்கக் கோரினேன்...

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

நான் லாக் அப் மரணங்களுக்கும்

போலி என்கவுன்டர்களுக்கும்

நீதி கோரினேன்....

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

நான் அவர்களுக்குப் புரியாத

சில புத்தகங்களை வைத்திருந்தேன்...

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

தெருவில் உட்கார்ந்திருந்த மக்களை

திரும்பிப் பார்க்காமல் போன மந்திரிக்கு

செருப்பை எடுத்துக் காட்டினேன் .

ஆகவே நான் ஒரு நக்சலைட் !

அதிகாரத்தின் மறைவிடங்களில்

காறிதுப்பும் ஒரு கவிதையை எழுதுகிறேன்....

ஆகவே நான் ஒரு நக்சலைட் !எனக்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கின்றன...

நான் ஒரு தேச விரோதி !

நான் ஒரு சமூகவிரோதி !

நான் ஒரு பிரிவினைவாதி !

நான் ஒரு கூட்டுச்சதிகாரன் !

நான் ஒரு பயங்கரவாதி !ஆனால் நக்சலைட் எனும் பெயர்தான்...

சொல்வதற்கு எளிதாக இருக்கிறது

அதைச்சொல்லும்போது

ஒரு அச்சம் மனதில் கவிகிறது...

கையில் பதாகையுடன் நின்றிருந்த

ஒரு இளம்பெண்ணை

ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து

கீழே தள்ளுகிறான்.

பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்.

முதலில் அவளுக்கு

அந்த வார்த்தையின் அர்த்தம்கூடத் தெரியவில்லை.

பிறகு அவள் அந்தச் சொல்லின்

அர்த்தக் கடலில் நீந்தத் தொடங்கினாள்.தினமும் நக்சலைட்டுகள்

கொல்லப்பட்டார்கள் என்றோ

பிடிபட்டார்கள் என்றோ

சில மங்கலான புகைப்படங்கள்

பத்திரிகைகளில் வெளிவருகின்றன.

மக்கள் அதை அப்படியே நம்புகிறார்கள்.

அந்தக் கொலைக்கு ,

அந்த கைதுகளுக்கு,

உடனடி அங்கீகாரங்கள் வழங்குகிறார்கள்.

அந்த மனிதர்களின் அடையாளங்கள்

உறுதிப்படுத்தப்படுவதில்லை.

அவர்கள்மீதான குற்றங்களுக்கு

நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கப்படுவதில்லை.

அவர்கள் அப்புறம் காணாமல் போய்விடுகிறார்கள்.

பிறகு

பிணமாகவோ,

நடைபிணமாகவோ,

பைத்தியமாகவோ

இந்த வாழ்க்கைக்குள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன்

நீண்ட காலமாக இது இப்படித்தான் நடக்கிறது.ஒருவர் நக்சலைட் என்று அழைக்கபட்டதுமே

நாம் அவர்களை கைவிட்டு விடுகிறோம்......

அவர்கள்

உங்களைவிடவும்

உங்களை நேசித்தவர்களாக இருக்கக்கூடும்.

அவர்கள்

உங்களைவிடவும்

இந்த தேசத்தை நேசித்தவர்களாக இருக்கக்கூடும்.

அதனாலேயே

அவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்.

மக்கள் மீதான நேசம்தான்

உண்மையான வெடி மருந்து.

அதிகாரம் அதைக் கண்டு எப்போதும் அஞ்சுகிறது.

மக்களின் மீதான அன்பு

கலகத்தை உருவாக்குகிறது.

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு

அரசாங்கம் உரிமம் வழங்குகிறது.

அதைபோலவே ஒருவரை

நிபந்தனையில்லாமல் அழிப்பதற்கும்,

அரசே உரிமை வழங்குகிறது.அது ஒருவரை நக்சலைட் என்று அழைப்பது

பிறகு நாயைச்சுடுவதுபோல

எந்த ஒரு மனிதனையும் சுடலாம்.

எனக்குத் தெரிந்து ஒரு டெய்லர்

அப்படித்தான் சுடப்பட்டான்.

மளிகைக்கடையில் வேலை செய்த

ஒரு மத்தியதர வயதினனை

காவல் துறையினர் நள்ளிரவில் அழைத்து சென்றார்கள்

பிறகு அவனை யாருமே பார்க்கவில்லை.

பயங்கரங்களை புரிபவர்கள்

இரண்டு பக்கமும் இருக்கிறார்கள்

ஆயுதபாணியாய் இருக்கிறார்கள்

யுத்த தந்திரங்களோடு இருக்கிறார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதில்லை.

எளிய மக்கள் கொல்லப்படுகிறார்கள்.சிறைக் கம்பிகளின் பின்னே

பல ஆண்டுகள் தடுத்துவைக்கப்படுகிறார்கள்.

பின்னர் சித்தரவதை அறைகளில்

லாடம் கட்டப்பட்டு

முறிந்த பாதங்களால்

கெந்திக் கெந்தி நடந்தபடி

நிரபராதிகள் என்று விடுதலையாகிறார்கள்.

ஒரு பெண் துண்டுப்பிரசுரங்களை

வினியோகித்ததற்காக

நக்சலைட் என்று அழைக்கப்பட்டு

இன்று சிறையிலிருக்கிறாள்.

அவளை நாம் கைவிட்டு விடக்கூடாது.

நமக்காக சுவர்களில் எழுதியவர்களை

எப்படிக் கைவிட்டோமோ...

நமக்காக லத்தியால்

முதுகெலும்பு முறிக்கப்பட்டவர்களை

எப்படி கைவிட்டோமோ.....

நமக்காக பன்னிரெண்டு ஆண்டுகளாக

விசாரணைக்கைதிகளாக இருப்பவர்களை

எப்படிக் கைவிட்டோமோ.....

அப்படி அவளையும்

நாம் கைவிட்டுவிடக்கூடாது...

மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் சொன்ன பிரச்சினைகள் தொடர்பாக அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? கைவிடக் கூடாது என்பதை அங்கேயும் சொல்வாரா?