Saturday, July 31, 2021

வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா


குமரி மாவட்ட மூத்த தோழர் ஹாகுல் ஹமீது அவர்களின் முகநூல் பதிவு மூலம் வரலாறு படைத்த ஒரு பெண்மணியை அறிந்து கொண்டேன்.

அவருக்கு என் வீர வணக்கம்.



மார்பு மறைக்கும் போராட்டத்தின் களப் போராளி......
103வயது,வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா....
இனி... நினைவில் மட்டும்....
மன்னர் ஆட்சி காலத்தில், மன்னர் உட்பட பிரமுகர்கள் வரும் போதும், கோவில்களில் மூர்த்திகள் ஊர்வலம் வரும் போதும், வரவேற்பு
கொடுக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் என்று ஆண்டைகள் கருதும் பிரிவை சேர்ந்த இளம் பெண்கள், இரண்டு பக்கங்களிலும் நிற்க வேண்டும்... இந்த பெண்களின் கைகளில், மலர் இதழ்கள் கொண்ட, தட்டுகள் இருக்கும்... ஆண்டைகளும், கோவில் மூர்த்திகளும் ஊர்வலமாக வரும் போது, இந்த
இளம்பெண்கள், தங்களது கைகளில் இருக்கும் தட்டுகளிலிருந்து, மலர் இதழ்களை, அவர்கள் காலடிகளில் தூவ வேண்டும் என்பது சட்டம்..
இதை மலையாளத்தில் தாலப்பொலி என்று கூறுவார்கள்..

இதை படிக்கும் போது, சாதாரணமாக உங்களுக்கு தெரிந்தாலும், இங்கே மிகவும் முக்கியமான செய்தி என்னவென்றால், பெண்கள் அனைவரும், தங்களது மார்புகளை மறைக்காமல், திறந்து மார்போடு தான்,
ஆண்டைகளுக்கு பூக்கள் தூவி வரவேற்க வேண்டும் என்பது தான் குறிப்பிடத்தக்கது..

இது தான் அப்போதைய ஆச்சாரம்... மரபு.. வழக்கம்,சட்டம் எல்லாம்...

இப்போது கூட, நமது ஊர்களில், அமைச்சர் பெருமக்களோ, தலைவர்களோ வரும் போது, பள்ளி/கல்லூரி மாணவிகளை வெயிலிலும்,
மழையிலும் கால் கடுக்க நிற்க வைக்கும் அவலத்தை காண முடியும்...
ஆனால், இது போன்ற நிலப்பிரபுத்துவ கூறுகளின் எச்சங்களை நாம் கூட அனுமதித்து வருகிறோம் என்பது தான் விசித்திரம்..

இப்படித்தான்....

1952ம் ஆண்டு, இன்றைய கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டம், வேலூர் என்று கிராமத்தில், மணிமலர் காவு என்ற கோவிலில், கும்ப பரணி
திருவிழா, கோலாகலமாக நடந்தது...

அப்போதைய கொச்சி சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது; திருச்சூர் மாவட்டம் சேங்ஙழிநாடு என்ற சிறு பகுதி ஆண்டையின்
ஆட்சியின் கீழ் இருந்த, மேலே குறிப்பிட்ட கோவில் திருவிழாவில், இளம் பெண்கள், தாலப்பொலி எடுத்து மலர் தூவி அனைவரையும் வரவேற்க வேண்டும் என்பது ஆண்டையின் உத்தரவு...

ஆண்டைகளின் உத்தரவுகள் மீறப்பட்டால்,
அங்கேயே, அதே இடத்தில் மரணம் நிச்சயம் என்பது தான் ராஜ நீதி.... இதை எவரும் கேள்வி கேட்க முடியாது...
ஆனால், தாலப்பொலி ஏந்த வேண்டிய இளம் பெண்கள் தாலப்பொலிக்கு வர வேண்டிய நேரம் வரை வரவில்லை... மார்பு மறைக்காமல் வரும் நூற்றுக்கணக்கான பெண்களை கண்டு ரசிக்க கூட்டம் கூட்டமாக
வந்து நின்ற, மேல் சாதி கயவன்கள் தங்களது இச்சை நிறைவேறாத கோபத்தில் துள்ளிக் குதித்து கொந்தளித்தனர்...
ஆண்டை, கோபத்தில் தனது பெரிய மீசையை முறுக்கிக்கொண்டே தவிப்போடு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்... ஆண்டாண்டு காலமாக, நடந்து வரும், ஆச்சாரம், தாமதமாகும் ஏமாற்றம் அவருக்கு..

இறுதியாக....
எதிர் பார்த்த, நூற்றுக்கணக்கான இளம் பெண்கள், சேலை கட்டி,நீண்ட முந்தானையோடு, தங்களது மார்பை மறைக்கும் ரவிக்கை அணிந்து, கம்பீரமாக வந்து வரிசையில் நின்றனர்.. இந்த பெண்களின் வரிசையில் முதல் பெண்ணாக, வேலத்து லட்சுமி குட்டி என்ற சிங்கக் குட்டி......
சகாவ், வேலத்து லட்சுமிக்குட்டி....

ஆமாம்..
ஆண்டைகள் தேர்வு செய்த பெண்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுக்கு தைரியமூட்டி, ரவுக்கை அணிந்து, சேலை கட்டச்
சொல்லி, தானும், ரவுக்கையும், சேலையும் அணிந்துகொண்டார், லட்சுமிக்குட்டி அம்மா!

பிறகென்ன...
மணிமலர் காவு கோவில் வளாகத்தில்...
அந்த சிங்கக் குட்டிகளின், ஆவேசத்தை, லட்சுமிக்குட்டி அம்மாவின் தலைமையில், தீப்பந்தம் போன்று கனன்று கொண்டிருந்த
அந்த இளம் கதிர்களின் வெப்பத்தை, ஆண்டைகள் புரிந்து கொண்டார்கள்...
அங்கே குழுமியிருந்த மேல்சாதி கயவன்கள், மறைக்காத மார்புகளை காண வந்து, எதுவும் நடக்காமல், பின்னங்கால் பிடரியில் பட தப்பித்து ஓடியதை, மணிமலர் காவு பகவதி அம்மன், கண்கள் குளிர கண்டு களித்தார்.....

நூற்றாண்டுகளாக, அங்கே நிலவி வந்த, கொடிய சட்டத்தை தனது கால்களின் போட்டு மிதித்து, பெண்களின்,சுயமரியாதையை,
மீட்டெடுத்த,சகாவ் வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா,
தனது 103வது வயதில்,நேற்று காலமானார்....

ஒரு நூற்றாண்டு பெருவாழ்வு, நேற்று முடிவுக்கு வந்தது...

பெண்கள் இல்லாமல்,வரலாறும் இல்லை; சமூக மாற்றமும் இல்லை; ஜனநாயகமும் இல்லை;சமத்துவமும் இல்லை...#ShahulHameed

 



Friday, July 30, 2021

சார்பட்டா பரம்பரை – சர்ச்சைகளையும் தாண்டி.

 


சார்பட்டா பரம்பரை படத்தை சனிக்கிழமையன்று பார்த்தோம். இரவு உணவுக்காக எடுத்துக் கொண்ட  இடைவேளை மட்டும்தான். இதற்கு முன்பு ஓ.டி.டி யில் பார்த்த திரைப்படங்கள் த்ரிஷ்யம் 2 மற்றும் மூக்குத்தி அம்மன். த்ரிஷ்யம் 2 நாள் முழுதும் பார்த்தால் மூக்குத்தி அம்மனை நாலு நாள் பார்த்தேன்.  படம் சுவாரஸ்யமாக இருந்ததால்தான் இது சாத்தியமானது.

 சார்ப்பட்டா படம் தொடர்பான சர்ச்சைகள் என்ன?

 கீழ்க்கண்டவற்றை நான் படித்தேன்,

 சார்ப்பட்டா பரம்பரையில் முக்கியமானவர்களான மீனவர்களின் பங்களிப்பு  இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

 திமுகவை விதந்தோதுவதாகவும் அதிமுகவை மட்டம் தட்டுவதாகவும் அமைந்துள்ளது.

 வட சென்னை தொழிலாளர்களோடு ஐக்கியமான செங்கொடி இயக்கம் பற்றியும் எதுவும் இல்லை.

 தேர்தல் முடிவுகள் தெரிந்ததும் ஆளுங்கட்சிக்கு வால் பிடிப்பது போல காட்சிகளை அமைத்துள்ளார்கள்.

 இதில் முதல் இரண்டு விஷயங்கள்தான் பரபரப்பான சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

 ஒடுக்கப்பட்டவர்களில் ஒரு பகுதிக்கு ஒளி வட்டம் தர இன்னொரு பகுதியை இருட்டடிப்பு செய்வது சரியல்ல. கற்பனைக்கதைதானே என்று இதனை ஒதுக்கி விட முடியாது. கதாநாயகனின் ஆசான் மறுக்கையில் இறுதியில் அவனுக்கு பயிற்சி கொடுத்து தயார் செய்பவரை மீனவராக காண்பித்தது தவறுக்கான சிறு பிராயச்சித்தம் என்று சொல்லலாம்.

 அவசர நிலைக்கு எதிராகத்தான் திமுக இருந்தது என்பதும் அன்றைய சர்வாதிகார ஒன்றிய அரசுக்கு எதிரானவர்களுக்கான சரணாலயமாக தமிழ்நாடு இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. திமுக அரசு கலைக்கப்பட்ட பின்பு கைது படலங்கள் நிகழ்ந்தது என்பதும் அவற்றை பதிவு செய்ததும் சரிதான்.  இவற்றை எல்லாம் சரியாக சொன்ன போது அவசர நிலைக்காலத்தில் தாக்குதலுக்குள்ளான இன்னொரு பகுதியான செங்கொடி இயக்கம் பற்றி கண்டு கொள்ளாமல் இருந்ததால் உருவான ஆதங்கம் நியாயமே.

 கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் அனைவருமே அதிமுகவினரா என்று தெரியாது. ஆனால் இந்நாளைய பல கல்வி வள்ளல்களின் ரிஷிமூலம், நதி மூலம் தேடிப்பார்த்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.ஜி.ஆர் காலத்து சாராய உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் என்பதும் ஒரு யதார்த்தம்.

 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக சார்பு படமாக எடுக்கப்பட்டது என்பது அபத்தமான குற்றச்சாட்டு. அவ்வளவுதான். இரண்டரை மாதங்களுக்குள் ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிட முடியுமா?

 சரி,

 இப்போது திரைப்படத்திற்கு வருவோம்.

 குத்துச்சண்டையை நுணுக்கமாக சொல்லியுள்ள படம் இது.  படத்தின் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாகவே உள்ளார்கள். வாத்தியாருக்கான மிடுக்கோடு பசுபதி மிரட்டுகிறார். யார் கோதாவில் இறங்க வேண்டும் என்ற முடிவை அறிவிக்கிற, மகனின் பலவீனத்தை சொல்கிற, சீடன் பயிற்சிக்கு வராத போது ஆத்திரப்படுகிற காட்சிகளில் எல்லாம் மிளிர்கிறார்.

 ஜெயம் ரவிக்கு பேராண்மை எப்படி ஒரு புதிய பரிமாணம் கொடுத்து தூக்கி விட்டதோ அது போல ஆர்யாவுக்கு இந்த படம். கடுமையாக உழைத்துள்ளார். ஆர்யாவின் அம்மா, மனைவி வேடங்களில்  நடித்தவர்களும் அருமையாக நடித்துள்ளனர். வி.ஐ.பி தனுஷிற்குப் பிறகு அம்மாவின் கையால் துடைப்ப அடி வாங்கிய கதாநாயகன் கபிலன் ஆர்யாதான்.

 கபிலனை மனைவி வாடா, போடா என்று கூப்பிடுவதும் முதலிரவில் போடுகிற குத்து டான்ஸும் தமிழ்த் திரைப்படத்திற்கு மிகவும் புதியது. நன்றாகவும் இருந்தது. ஆமாம், கலையரசன் நல்லவரா? கெட்டவரா? குழப்பமான பாத்திரப்படைப்பு.

 ஆனால் அனைவரையும் விட இத்திரைப்படத்தில் கலக்கியவர்கள் இருவர்கள்தான்.

 டேன்ஸிங் ரோஸாக நடித்தவர் குத்துச்சண்டை மேடையிலும் மற்ற தருணங்களிலும் தன் நடன அசைவுகளாலும் நெற்றியின் மீது வந்து விழும் கர்லிங் முடி ஸ்டைலாலும் கவனத்தை ஈர்க்கிறார்.  எதிர்காலம் இவருக்கு நன்றாக இருக்கும்.

 எம்.ஆ.ர்.ராதா தோற்றத்தில், வசன உச்சரிப்போடு டேடியாக படம் முழுதும் ஜான் விஜய் கலக்குகிறார். எரிச்சலூட்டும் போலீஸ்காரராக வந்து கொண்டிருந்தவருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு திருப்பு முனை.

 செட் என்பதே தெரியாவண்ணம் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய வட சென்னையை உருவாக்கிய கலை இயக்குனருக்கும் படத்தின் இயல்பை குலைக்காத இசையமைப்பாளருக்கும் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.

 விளையாட்டு தொடர்பான எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் கதாநாயகனோ/நாயகியோ அல்லது அவர்கள் அணியோ இறுதியில் வெற்றிதான் பெறுவார்கள் என்பது எழுதப்படாத ஆனால் மிக அழுத்தமாக பின்பற்றப்படும் ஒரு விஷயம். சார்பட்டா பரம்பரையும் இந்த எழுதப் படாத விதிக்கு விலக்கல்ல. ஆனால் நடுவில் சில நிமிடங்கள் தவிர பார்வையாளர்களின் சுவாரஸ்யத்தை நிலைக்க வைத்திருந்ததுதான். அதற்காக இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 சில பலவீனங்களும் குறைகளும் விமர்சனங்களும் இருந்த போதிலும்  சார்பட்டா போன்ற விளிம்பு நிலை மக்களைக் குறித்த  திரைப்படத்தை உழைக்கும் மக்கள் ஆதரிக்க வேண்டும்.  

 நாம் அதை செய்யத் தவறினால் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள், ஆதிக்க சக்திகள் ஒரேயடியாக அடித்து துவைத்து இது போன்ற படங்களை எதிர்காலத்தில் யாரும் எடுக்க துணியாத அளவு செய்து விடுவார்கள், மத்யமர் சங்கிகளின் கருத்துக்களை மாதிரிக்குப் பாருங்கள்.




 






அப்படியே வந்தாலும் கூட, இது போன்ற எதிர்மறை கருத்துக்களை இவர்களே திட்டமிட்டு உருவாக்கி அந்த படைப்பை முடக்கி விடும் ஆபத்து உள்ளது.

 

அதற்காகவேதான் திரைப்பட தணிக்கைச் சட்டங்களில் மாற்றங்களை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள்.

 

அவை பற்றிய ஒரு விரிவான பதிவை நாளை பகிர்ந்து கொள்கிறேன்..

 

 

Thursday, July 29, 2021

வடிவேலு இன் சார்பட்டா பரம்பரை

  


முகநூலில் இருந்து எடுத்தது. நான் யாரிடமிருந்து சுட்டேனோ,, அவர் இன்னொருவரிடமிருந்து சுட்டதாக குறிப்பிட அவரும் தன் பதிவே சுடப்பட்டது என்று சொல்லியிருந்தார். அதனால் முகமறியாத அந்த படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்.

 

 நம் அடுத்த   வெளியீடு

 

சார்பட்டா பரம்பரை – சர்ச்சைகளையும் தாண்டி . . .

துக்ளக் துர்வாசரின் துர்நாற்றக் கட்டுரை

 


கீழடி போன்ற தொல்பொருள் ஆய்வுகள் தண்டச் செலவு என்றும் அதனால் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்று துர்வாசர் என்ற பெயரில் யாரோ ஒரு கிறுக்கர் துக்ளக்கில் கட்டுரை எழுதியுள்ளார்.



சமீபத்தில் கி.ரா இறந்து போன போது அற்பத்தனமாக எழுதிய வண்ண நிலவன் முன்பு துர்வாசர் என்ற பெயரில் துக்ளக்கில் மக்கள் விரோத கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார்.

இந்த துர்வாசர் அவரா இல்லை வேறு புதியவரா என்று தெரியவில்லை. யாராக


இருப்பினும் அவர்களின் வயிற்றெரிச்சல் நாற்றம் நன்றாகவே தெரிகிறது.

 கீழடியோ இல்லை மற்ற ஆய்வுகளோ ஏன் இவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது?

 ஆரிய நாகரீகத்திற்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்த நாகரீகம் இவை என்பது மட்டுமல்ல, இதுவரை அகழ்வாய்ந்து எடுக்கப்பட்ட அரும் பொருட்கள் எதிலும் இவர்கள் வித்ந்தோதும் மதச் சின்னங்கள் எதுவும் கிடையாது.

 மதமற்றவனாகத்தான் தமிழன் வாழ்ந்துள்ளான் என்பதை இவர்களால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்! அதனால்தான் துர்நாற்றமடிக்கும் கட்டுரையை துர்வாசரிடமிருந்து வந்துள்ளது.

 புராணக் கதைகள் படி துர்வாசர் ஒரு கோபக்கார, ஆணவமிக்க, அகந்தை பிடித்த, மூளையை பயன்படுத்தாத முரட்டு முனிவர்.

 புராண துர்வாசரை துக்ளக் துர்வாசர் நல்லவராக்கி விட்டார்.

Wednesday, July 28, 2021

ஜாதிச் சாக்கடையில் புரளும் ஜெமோ

 


கீழே உள்ளது புளிச்ச மாவு ஆஜானின் இணையப் பக்கத்தில் .பாரி என்ற பெயரில் பதிவாகியுள்ள ஒரு செல்ஃபி கேள்வி. மொட்டைக்கடிதாசி போல தானே கேள்வி எழுதும் கேவலமான பழக்கத்தை ஜெமோ என்று கைவிடப் போகிறாரோ?

-------------------------------------------------------------------------------------

ஆனால் அவர்களை இன்று இடைநிலைச் சாதியைச் சேர்ந்த குஞ்சுகுளுவான்களெல்லாம் அலட்சியமாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களின் தகுதியை மட்டம் தட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்லவேண்டுமென நினைக்கிறார்கள். அது வேண்டுமென்றே செய்வது இல்லை. உண்மையிலேயே அவர்களுக்கு அந்த தெனாவெட்டு இருக்கிறது. நம்பித்தான் செய்கிறார்கள்.

 

அந்த தோரணையுடன் பேசுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட  புலியூர் முருகேசன், யமுனா ராஜேந்திரன், யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டுடியோ அருண் போன்றவர்கள் அவர்களெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன ஆய்வுசெய்திருக்கிறார்கள்? என்ன வாசித்திருக்கிறார்கள்? வெறும் முகநூல்வம்பாளர்கள். பழங்காலத்தில் ஐம்பது வயதான தலித் முதியவரை பத்துவயதான ஊர்க்காரப் பையன் அடா புடா என அழைப்பான். அதே மனநிலைதான் இது.

 இந்த கூட்டம் மறந்தும் இந்த தலித் ஆய்வாளர்களின் நூல்களை குறிப்பிடுவதில்லை. அவற்றைப்பற்றி ஒருவரி எழுதுவதில்லை. அவர்கள் ஆய்வுசெய்கிறார்கள் என்பதையே மறைத்துவிடுவார்கள். தங்கள் பட்டியல்களில் அந்தப்பெயர்களை மறைத்து தொ.பரமசிவம் போன்ற தங்களுக்கு வேண்டியவர்களையே முன்வைப்பார்கள்.

------------------------------------------------------------------------------------

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ஜாதி என்பதை நிரூபிக்கிறார் ஜெயமோகன். உண்மையில் அவர் எழுத்திலும் செயலிலும்தான் ஜாதி வெறி மேலோங்கி இருக்கும். ஆனால் அவர் தோழர் யமுனா ராஜேந்திரன், தோழர் புலியூர் முருகேசன் மற்றும் யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டூடியோ அருண் ஆகியோர் மீது ஜாதி வெறி பிடித்தவர்கள், தலித் எதிரிகள் என்று சகதியை அள்ளி வீசுகிறார்.

சீமானைப் போல, நாம் தமிழர் தம்பிகளைப் போல இவரும் அவர்களுடைய ஜாதி என்னவென்று டி.என். ஆராய்ச்சி செய்வார் போல இருக்கிறது. இவரை தோலுரித்த நூலின் மையப்புள்ளி தோழர் யமுனா ராஜேந்திரன், அதிலே ஒரு கட்டுரை எழுதியுள்ள தோழர் புலியூர் முருகேசன் ஆகியோர் மீது இவர் வெறுப்பாக இருக்க அனைத்து காரணங்களும் உண்டு. இதிலே தோழர் புலியூர் வேறு இவரது குண்டர் படை லட்சுமி, வெண்பா ஆகியோர் பதிவுகளில் அவ்வப்போது நக்கலாய் பின்னூட்டம் போடுவார். யுவகிருஷ்ணா இவரை சமீப காலத்தில் சீண்டியதாக நினைவில்லை. அருணுக்கும் இவருக்கும் என்ன பஞ்சாயத்தோ?

கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இப்படி ஜாதி மோதலுக்கு அடித்தளமிடும் இந்த அற்பப் பதர்தான் எப்போதும் "அறம், அறம்" என்று கூச்சலிடுவது எவ்வளவு பெரிய நகை முரண்!