Showing posts with label வேகம். Show all posts
Showing posts with label வேகம். Show all posts

Sunday, November 5, 2017

பாரி வேந்தன் ஆகாதீர்



கடந்த செப்டம்பர் மாதத்தின் இறுதியில் சேலத்திற்கு காரில் ஒரு இரவுப்பயணம் செல்ல வேண்டியிருந்தது. நள்ளிரவிலேயே திரும்பி வந்தோம். கிருஷ்ணகிரியில் பைபாஸ் சாலையில் தேநீர் குடிக்க நிறுத்தியபோது பக்கத்தில் செடிகளுக்கு மத்தியில் வெள்ளையாக ஏதோ தெரிந்தது.

ஒரு ஆர்வத்தில் அருகே சென்றால் அந்த வெள்ளைப் பொருள் சுத்தமாக நொறுங்கிய ஒரு கார்.

படத்தைப் பாருங்கள்.

 
எவ்வளவு வேகமாக வந்திருந்தால் இவ்வளவு மோசமாக உருக்குலைந்து போயிருக்கும்?

முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த பாரி வேந்தன் போல செடிகள் படருவதற்கு  இந்த கார் என்றுதான் அதைப் பார்க்கையில் தோன்றியது.

உயிரைக் குடிக்கும் அதி வேகம் தேவையா?

மித வேகத்தில் போனால் குடியா முழுகி விடும்?

வேகம் தவிர்ப்பீர்,

பாரி வேந்தன் ஆகாதீர். உங்களது குடும்பத்தினரை பரிதவிக்க வைக்காதீர்.

பின் குறிப்பு : இதை எழுதும் போதே இன்னொரு சந்தேகம் வந்தது. அது பிறகு.

Sunday, November 25, 2012

எனக்கு அச்சமாக இருக்கிறது..... உங்களுக்கு?

 


இரு சக்கர வாகனத்தில்  அதி வேகமாய் விரைவதை
ஒரு சாகசம் என கருதி தங்களுடைய வாழ்வோடும்
மற்றவர்களின் வாழ்வோடும் விளையாடும்  சில
இளைஞர்களுக்கு  அன்பான ஒரு திறந்த மடல்.

அன்பான நண்பனே,

மோசமான சாலைகள், குறுகிய சாலைகள்,
அதிலே மேடும் பள்ளங்களும் அடிக்கடி
வந்தால்தான் அவை சாலைகள் என்று
இன்றைய இலக்கணங்கள் சொல்கின்றன.

சாலையின் அளவை விட, தரத்தை விட
அதிகமான வாகனங்கள்,
நத்தையாய் ஊர்ந்து போகும் சில
தருணங்கள், அப்போது காற்று 
மண்டலத்தையே புகைதான் ஆக்கிரமிக்கும்.

இந்த நிலையிலும் கூட உன்னால்  மட்டும்
எப்படி இவ்வளவு வேகமாக வண்டி
ஓட்ட முடிகிறது?

முன் செல்லும் வண்டிகளை முந்திச்
சென்று கொண்டே இருப்பதற்காக 
ஏதேனும் விருது அளிக்கப் போகிறார்களா என்ன?

வளைவில் முந்தாதே என்று ஒவ்வொரு
ஆட்டோவிலும் எழுதி வைத்துள்ளார்கள்.
நீயோ அந்த ஆட்டோக்களையெல்லாம் கூட
வளைந்து வளைந்து முந்துகிறாய்..

இவ்வளவு வேகமாக சென்று என்னதான்
சாதிக்கப் போகிறாய்?

இல்லை இது என்ன பந்தயத்திற்கான
மைதானமா?

அவ்வளவு அவசரமென்றால் சற்று
முன்பாக புறப்பட்டிருக்கலாமே!

கூடுதல் விலை கொடுத்து வண்டி
வாங்கி உனக்கு மகிழ்ச்சி அளித்தனர்
உன் பெற்றோர்.

கூடுதல் வேகத்தால் அவர்களின் 
மகிழ்ச்சியை நீ பறித்திட வேண்டுமா?

உந்தன் வேகம் உன்னை மட்டுமா
பாதிக்கப் போகிறது?

நீ வேறு ஒருவன் மீது மோதினால்
அவனும்தானே அடிபடப் போகிறான்?

உனது தவறுக்கு அவனுக்கு 
தண்டனையா?

இப்போது நீ மிச்சப்படுத்தும் நேரத்தை
விட உனக்கு விபத்து நேர்ந்தால்
விரயமாகும் நேரம் பல மடங்கு
அதிகம்.

உன் வேகத்தைப் பார்த்தால்
எனக்கு  அச்சமாக இருக்கிறது.

பணிவோடு சொல்கிறேன்.
வேகம் தவிர்,

உன் மீது உள்ள 
உண்மையான அக்கறையோடு.

( வேகமாய் விரையும் சில இளைஞர்களைக்
கண்ட கவலையோடு எழுதியது)



Tuesday, October 9, 2012

கொலைக் களமாய் மாறிப் போன வாஜ்பாய் கனவு





தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளில் ஒன்றாக,  ஒளிரும் இந்தியாவிற்கான  அடையாளமாக மிக அதிகமான அளவில் விளம்பரப் படுத்தப்பட்டது தங்க நாற்கர சாலைத் திட்டம். வாஜ்பாய் அதை தனது சிறு வயது கனவு என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொண்ட காலம் உண்டு.

எந்த ஒரு தேசத்திற்கும் சாலை வசதிகள் என்பது மிகவும் முக்கியமான கட்டமைப்புத் தேவை. அந்த விதத்தில் தங்க நாற்கர சாலை என்பது பயனுள்ளதுதான்.  ஆனால் அதை முறையாக பயன்படுத்துபவர்களாக வாகன ஓட்டிகள் உள்ளனரா? தேவையான கட்டுப்பாடுகள் உள்ளதா? என்பதுதான் கேள்வி.

மற்ற இடங்களில் எப்படி என்று தெரியாது. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்னை – பெங்களூர் தங்க நாற்கர சாலை அதிகமான விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கிறது.

அதி வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் சாலையைக் கடப்பவர்கள் பற்றி கவலைப் படுவதே கிடையாது. பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடம் என்பது தெளிவான முறையில் எச்சரிக்கப்படவில்லை. எச்சரிக்கை பலகை இருந்தாலும் அதனை கவனிக்க முடியாத வேகத்தில்தான் கார்கள் விரைகின்றன.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போதுதான் எவ்வளவு வேகமாக வண்டிகள் செல்கின்றன என்பதை உணர முடியும். விஷ்க் என்ற ஒலியோடு நம்மைக் கடக்கும் வண்டி ஒரு சில வினாடிகளில் தூரத்தில் ஒரு புள்ளியாகி மறைந்து விடும்.

அதி நவீன, அதி வேக கார்கள் வந்த பின்பு, மிதமான வேகத்தில் செல்வது என்பதே கௌரவக் குறைச்சலாகி விட்டது. நேற்று முன் தினம் வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் வேகமாக கடந்த கார் ஒன்று முன் சென்ற பைக் மீது மோத பைக்கில் பயணித்தவர்கள் மேம்பாலத்திலிருந்து அப்படியே கவிழ்ந்து விழுந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணமடைந்தார்.

இது தொடர்கதையாகி விட்டது.

வேகக் கட்டுப்பாடு நிர்ணயிப்பது,
அதை முறையாக கண்காணிப்பது,
மீறுபவர்கள் மீது டிரைவிங் லைசன்ஸை ரத்து செய்வது உள்ளிட்ட
நடவடிக்கைகளை எடுப்பது

ஆகியவை மட்டுமே தங்க நாற்கர சாலை விபத்துக்களை குறைக்க வழி வகுக்கும்.

இதை அரசு செய்யுமா?