Thursday, February 28, 2013

புரட்சித் தலைவலி ஜெயலலிதா





முக நூலில் பார்த்து ஒரு தோழர் அனுப்பிய படம் இது. பரவாயில்லை அதிமுக தொண்டர்கள் தங்கள் தலைவியைப் பற்றி சரியாகவே புரிந்து கொண்டுள்ளார்கள். பாவம் இந்த கட் அவுட் வைத்த தொண்டர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ?

பி.கு : புரட்சித் தலைவவி என்றுதான் உள்ளது என யாரும் பின்னூட்டம் போட வேண்டாம். வேகமாகப் படிக்கும் போது தலைவலி என்றுதான் எல்லோரும் படிப்பார்கள்.

ஜெ வின் ரத்தச்சிலை , கீழ்த்தரமான விளம்பர உத்தி





நேற்று ஜூனியர் விகடனில் இந்த செய்தி படித்து விட்டு மிகவும் அதிர்ந்து போனேன்.

கராத்தே ஹுசைனி, ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக அவருடைய, அவரது மாணவர்களின் ரத்தத்தைக் கொண்டு ஜெயலலிதாவின் சிலையை செய்துள்ளார்.  அன்னதானம், அபிஷேகம், அறுபத்தி ஐந்து அடி கேக், அலகு குத்தி தேர் இழுத்தது என்பதிலிருந்து தான் மாறுபட்டு இருப்பதாக காண்பிப்பதற்கு இப்படி ஒரு இழி செயல் செய்துள்ளார்.

இதற்கு முன்பு ரத்தத்தில் ஓவியம் வரைந்ததாகவும் அதைப் பார்த்த ஜெ மகிழ்ந்து போய் 19 ஏக்கர் நிலம் கொடுத்ததாகவும் பெருமையோடு வேறு கூறியுள்ளார். இன்னும் பெரிதாக ஏதோ எதிர்பார்த்தே இதை செய்துள்ளார் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்.

மனித உயிர் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல், மனித ரத்ததின் மகத்துவம் தெரியாமல் செய்யப்பட்ட மட்டமான வேலை இது. ரத்தம் கிடைக்காமல் எத்தனையோ உயிர்கள் அன்றாடம் பலியாகிறது. அவசரமாக ரத்தம் வேண்டும் என்பதற்காக திண்டாடுபவர்கள் எத்தனையோ பேர். சி.எம்.சி மருத்துவமனையின் ரத்த வங்கி முன்பாக அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தாலே ரத்த தானத்தின் முக்கியம் புரியும்.

நாம் அளிக்கும் ரத்தம் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறது என்ற உணர்வோடு ரத்த தானம் அளிக்கும் நல்ல பழக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆனால் இவரோ? தான் கெட்டது மட்டுமல்லாமல் தன் மாணவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்துள்ளார்.

அவர் கணக்கு படி பார்த்தாலே கிட்டத்தட்ட எண்பது உயிர்களை காப்பாற்றக் கூடிய ரத்தம் இவரது வக்கிர சிந்தனையால் விரயமாகி இருக்கிறது.  மனித நேய சிந்தனை கொண்ட ஒவ்வொருவரும் இந்த மலிவான செயலைக் கண்டிக்க வேண்டும்.

ஜெயலலிதா இதனை கண்டிக்க  வேண்டும். அது மட்டுமல்ல சரியான ஒரு இடத்திற்கு ஹூசைனியை அனுப்ப வேண்டும்.

அந்த இடம் : மன நோய் விடுதி..

ராகுல் காந்திக்கு ஒரு சோகப் பாட்டு பார்ஸல்





“’ நானொரு ராசியில்லா ராஜா “  என்ற பாடலை வாய்க்கொழுப்பு மிக்க ராகுல் காந்திக்கு பார்ஸல் அனுப்பலாம் என்றுள்ளேன்.

மிகுந்த ஆணவத்தோடு திரிபுரா மாநிலத்தில் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து மார்க்சிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராக விஷம் கக்கிய ராகுல் காந்திக்கு திரிபுரா மாநில மக்கள் நல்ல சவுக்கடி கொடுத்துள்ளனர். இடது முன்னணி அரசை மீண்டும் பிரம்மாண்டமான பெரும்பான்மையோடு தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை மக்கள் எப்போதும் நேசிப்பார்கள் என்பதை இப்போது திரிபுரா மக்கள் நிரூபித்துள்ளனர்.

மாணிக் சர்க்கார் என்ற மகத்தான மனிதரின் நேர்மைக்கும் எளிமைக்கும் தூய்மைக்கும் அனுபவத்திற்கும் திறமைக்கும் முன்பு அரைவேக்காடு ராகுல் காந்தியின் வெற்றுக் கூச்சல் எடுபடவில்லை.

எந்த மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்கு போனாலும் அங்கே காங்கிரஸ் கட்சியை படுகுழியில் தள்ளும் வேலையை கன கச்சிதமாக செய்யும் ராகுல் காந்தி உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்தான். காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று மகாத்மா காந்தி சொன்னதை நடைமுறைப்படுத்தும் ஆற்றல் அவருக்கு மட்டும்தான் உண்டு.

துணைத் தலைவர் ஆவதற்கு கொஞ்ச நாள் முன்பாக தாடியை எடுத்து விட்டு வலம் வந்த ராகுல் காந்தி இப்போது திரிபுரா தோல்வியால் துயருற்று மீண்டும் தாடியோடு சோகப் பதுமையாக காட்சி அளிப்பாரோ?

அப்போது அவருக்கு இந்த பாட்டும் மிகப் பொருத்தமாக இருக்கும்.

எங்கே செல்லும் இந்த பாதை? யாரோ யாரோ அறிவாரோ?

Tuesday, February 26, 2013

நீங்களும் நிச்சயம் ..... நெகிழ்ந்து போவீர்கள்

முக நூலில் பார்த்தது.

என்னை நெகிழ வைத்தது.
அதனால் உங்களுடைய பார்வைக்கும்.

நன்றி திரு ஷாகுல் ஹமீது.


செல்ல பிராணிகள் விற்பனை செய்யும் கடை ஒன்று..
அங்கே நாய்க்குட்டிகள் பிரிவில் ஒரு சிறுவன் விற்பனையாளரை நோக்கி கேட்டான்..
"அந்த நாய்க்குட்டி எத்தனை ரூபாய்...?"
அந்த விற்பனையாளர்... "இங்கே எந்த நாய்க்குட்டியை எடுத்தாலும் 500 ருபாய் தான்.." என்றார்...
இடது பக்கம் ஒரு காலை இழந்த நொண்டி நாய்க்குட்டி ஒன்று
விளையாடிக்கொண்டு இருந்தது...சிறுவன் அந்த நாய்க்குட்டியை
கையில் எடுத்து முத்தமிட்டான்...

"இது..?" என்றான்..
"இது ஒரு காலை இழந்த நாய்க்குட்டி..
எனவே இது விற்பனைக்கு இல்லை... " என்றார் விற்பனையாளர்...

சிறுவன்... "ஐயா நான் இதையே எடுத்து கொள்கிறேன்...
இந்தாருங்கள் 500 ரூபாய்.." என்றான்..

விற்பனையாளர் சந்தேகம் கேட்டார்...
"தம்பி நல்ல நிலையில் பல நாய்குட்டிகள் இங்கே
விளையாடிக்கொண்டிருக்க...நீ இந்த நொண்டி நாய்க்குட்டியை
ஏன் தேர்ந்தெடுத்தாய்...?" என்று கேட்டார்..

உடனே சிறுவன் பதில் ஏதும் பேசாமல் தன் கால் சட்டையை
தூக்கி காட்டினான்..
ஒரு கால் மரக்கட்டையால் செய்யப்பட்டு
ஊனமாக இருந்தான் சிறுவன்...
விற்பனையாளர் கண்ணில் கண்ணீர்...

Monday, February 25, 2013

அம்மா பிறந்தநாளை தினந்தோறும் கொண்டாடுங்கள்





ஜெ வின் பிறந்தநாளை நேற்று ரத்தத்தின் ரத்தங்கள் பக்தி சிரத்தையோடு  விமரிசையாக கொண்டாடி தீர்த்து விட்டார்கள், எங்கெங்கு காணினும் ப்ளெக்ஸ் பேனர்கள், அங்கங்கே படம் வைத்து லவுட் ஸ்பீக்கரில் பாடல்கள் முழங்கின, சில ஊர்களில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க யோகம். அன்ன தானம், அபிஷேக வகையற்றாக்களுக்கும் குறைவில்லை.

நேற்று முக்கியமாக நான் கவனித்த ஒரு அம்சம்.

நேற்று முழுதும் ஒரு நிமிடம் கூட மின்சார வெட்டே கிடையாது. தீபாவளி, பொங்கலுக்காவது இரண்டு மணி நேர மின் வெட்டு இருந்தது.

நேற்று முழுமையும் தடையற்ற மின்சாரம் கிடைத்தது.

அதனால்தான் சொல்கிறேன்.

அம்மா பிறந்தநாளை தினந்தோறும் கொண்டாடுங்கள்,

குறைந்த பட்சம் எங்களுக்கு மின்சாரமாவது கிடைக்கும்


பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு சட்டத்திற்கு விரோதமானது - தீர்ப்பை வழங்கிய நீதிபதி கே.டி.தாமஸ்


ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனையை எதிர் நோக்கும் பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடக்கூடாது எனவும் அவ்வாறு நிகழ்ந்தால் அது இந்திய அரசியல் சட்ட முறைமைக்கு எதிரானதாக ஆகிவிடும் எனவும் எச்சரித்திருக்கிறார் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்.13 ஆன்டுகளூக்கு முன் அந்த தண்டணையை வழங்கிய நீதிபதியே அவர்தான்.

''நான் தான் முன்னின்று அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தேன்.அது மிகவும் கொடுமையானது ஏனென்றால் அது அரசியல் சட்ட முறைமைக்கும் இயல்புக்கும் எதிரான நீதி வழுவிய ஒரு தீர்ப்பு என்று இப்போது தான் உணர்கிறேன் இத்தகைய வழக்கில் தீர்ப்பெழுதும் முன் அந்த மனிதர்களின் முன்னாள் வரலாறு அவர்களின் நிறுவப்பட்ட பண்புகள் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என சட்ட விதி 21 உபதேசிக்கிறது. அம்முறைமையை நாங்கள் கணக்கில் எடுக்காது நான் உட்பட மூன்று நீதிபதிகளும் தவறிழைத்துவிட்டோம். இதே கருத்தை முன்னாள் நீதிபதி எஸ்.பி. ஸின்ஹா அவர்களும் வெளிப்படுத்திருக்கிறார்.. 


மேலும் சாதாரண ஆயுள் தண்டனைக்கைதிகளுக்கு சிறைத்துறை வழங்கும் சில சலுகைகள் கூட 21-ஆண்டுகள் அதாவது இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து விட்ட இந்த ஏழைகள் மூவருக்கும் வழங்கப்படவில்லை. இதற்கப்புறமும் தூக்கு என்று ஆட்சியாளர்கள் முழங்கினால் அது ஒரே குற்றத்துக்கான இரண்டு தண்டனையாகவும் மேலும் நீதித்துறைகள் கண்டிராத மிக மோசமான நிகழ்வாகவும் அமையும் அதனால் அம்மூவரையும் வாழவிடவேன்டும் என ’’ கே.டி.தாமஸ்அறிவுறுத்தியிருக்கிறார்.


இத்தனை நாள் கழித்து இதனை சொல்லியுள்ள நீதியரசர்
இந்த தூக்கு தண்டனையை தடுக்க என்ன செய்யப் போகின்றார்?

சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவரே எடுக்கலாமே?

அதை செய்தால் அப்போது அவரைப் பாராட்டலாம். 
 

Sunday, February 24, 2013

இந்த தைரியம் இந்திய அரசுக்கு உண்டா?

ஸ்பெயின் நிறுவனத்தை அரசுடைமையாக்க பொலிவியா ஜனாதிபதி உத்தரவு



சுக்குர். பிப். 22-பொலிவியாவில் செயல் பட்டு வந்த ஸ்பெயின் நிறு வனத்தைஅரசுடைமையாக்க பொலிவியா ஜனாதிபதி இவோ மொரேல்ஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.பொலிவியாவின் லா பாஜ், கோச்சபாம்பா மற் றும் சான்டா க்ரஸ் ஆகிய விமான நிலையங்கள் கடந்த 1997ம் ஆண்டு தனியார் மய மாக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத் தை நிர்வகிப்பதற்கான ஒப் பந்தத்தை பொலிவியா அரசு ஸ்பெயின் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியது. இந்த ஒப்பந்தம் 2025ம் ஆண்டு முடிவடைகிறது. இந்நிலை யில், ஸ்பெயின் நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படை யில் முதலீடுகளையும், லாபத்தையும் உருவாக்க வில்லை. 

இதனைத் தொடர்ந்து, அதனை தேசிய மயமாக்கி முழுப்பொறுப்பையும் அந் நாட்டின் பொதுத்துறை, சேவைகள் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் கையகப் படுத்தும்படி பொலிவியா ஜனாதிபதி இவோ மொரேல்ஸ் அதிரடியாக உத்தரவு பிறப் பித்துள்ளார். மேலும், இங்கு வரும் பொதுமக்க ளுக்கு பாதுகாப்பை உறு திப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளும்படி அந் நாட்டு ராணுவத்திற்கும் உத் தரவிட்டுள்ளார்.

இதேபோன்று கடந்த ஆண்டு மே மாதம் பொலி வியாவிற்கு 75 சதவிகித மின்பாதையை வழங்கி வந்த ஸ்பெயின் நிறுவனத்தை யும், டிசம்பர் 30ம் தேதி ஸ்பெயினின் மேலும் இரண்டு மின்சாதன விற்ப னை நிறுவனங்களையும் பொலிவியா அரசு தேசிய மயமாக்கியது குறிப்பிடத் தக்கது. 

ஸ்பெயின் கோபம் பொலிவியாவின் இந்த நடவடிக்கைக்கு ஸ்பெயின் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. மேலும், பொலி யாவுடனான உறவை மறு ஆய்வு செய்யவுள்ளதாக வும் ஸ்பெயின் அரசு மிரட் டல் விடுத்துள்ளது.

நன்றி - தீக்திர் 23.02.2013

Saturday, February 23, 2013

இளையராஜாவின் கோபம் நியாயமானது, பாலச்சந்தர் மவுனம் ஏன்?

 








சமீபத்தில் குமுதம் இதழில் இளையராஜாவின் கேள்வி பதில்
பகுதியில் தனக்கும் பாலச்சந்தருக்குமான பிரச்சினை பற்றி
எழுதியிருந்தார். 

புது புது அர்த்தங்கள் திரைப்படத்தினை அவசரமாக
வெளியிட வேண்டும் என்பதற்காக பின்னணி இசை அமைக்க
இளையராஜாவிற்காக காத்திருக்காமல், ஏற்கனவே அவர்
பல்வேறு படங்களில் இசையமைத்திருந்த டிராக்குகளை
பயன்படுத்தியதுதான் காரணம் என்று அவர் சொல்லியிருந்தார்.

இன்று ஒரு தொலைக்காட்சியில் புது புது அர்த்தங்கள் 
ஓளிபரப்பினார்கள். பின்னணி இசை கேட்கவே படம்
பார்த்தேன்.

இளையராஜாவின் இசை போலவே இல்லை. கொஞ்சம்
கூட பொருத்தமாகவே இல்லை. இதிலே ஜனகராஜ் வரும்
காட்சியில் புன்னகை மன்னன் பின்னணி இசை வேறு.

பல காட்சிகளில்  பின்னணி இசை அளிக்க வேண்டிய
உணர்வு மிஸ்ஸிங். சூப்பர் ஹிட் பாடல்களுக்கும்
 பின்னணி இசைக்கும் சம்பந்தமே இல்லை. 
இளையராஜாவிற்கு அவகாசம் அளித்திருந்தால்  
படம் இன்னும் சிறப்பாகக் கூட  அமைந்திருக்கும்.

டைட்டிலில் இசை இளையராஜா என்று போட்டிருப்பதால்
பின்னணியும் அவர்தான் என்று கருதும் பலரும்
விஷயம் தெரியாமல் இளையராஜா ஏன் இப்படி 
பின்னணி இசையில்  சொதப்பினார் என்றுதான் 
நினைப்பார்கள். 

எனவே இளையராஜாவின் கோபம் நியாயமானது.
இதற்கு வாய் திறக்காமல் பாலச்சந்தர் மவுனம்
காப்பது அவரின் தவறையே உணர்த்துகிறது.

ஆனாலும் இந்த இருவரும் மீண்டும் இணைந்து
சிந்து பைரவி, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி
போன்ற சிறந்த பாடல்கள் கொண்ட படங்களை
அளிக்க வேண்டும் என்றுதான் மனம் ஏங்குகிறது.

Friday, February 22, 2013

எப்படி போனது 25,000 கோடி ரூபாய்?





தொழிலாளர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் மூலமாக இருபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முதலாளித்துவ ஊடகங்கள் புலம்பிக் கொண்டே இருக்கிறது.

இந்த கணக்கை எப்படி போட்டார்கள் என்று அவர்களால் சொல்ல முடியுமா?

வெற்று பரபரப்பிற்காக, தொழிற்சங்கங்கள் மீது வெறுப்பை உருவாக்குவதற்காக  அவர்களாகவே பரப்பும் கட்டுக்கதை இது.

இவ்வளவு இழப்பு வரும் என்று இந்த பொருளாதார அதி மேதாவிகளுக்கு முன்னமே தெரியுமானால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு அரசுக்கு அறிவுரை சொல்லி இருக்கலாமே?

இல்லை அரசாங்கத்தின் அசமஞ்சத்தனமும்தான் இந்த இழப்பிற்கு காரணம் என்று சேர்த்து சொல்லியிருக்கலாமே?

உண்மையில் இழப்பு என்பது இரண்டு நாட்கள் ஊதியத்தை இழந்த தொழிலாளர்களுக்குத்தான்.

ஆனால் அவர்கள் அதை இழப்பாக கருதவில்லை, இந்தியாவைப் பாதுகாக்க, அமெரிக்காவிடமும் பன்னாட்டுக் கம்பெனிகளிடமும் அடமானம் வைக்கப்பட்டுள்ள இந்தியாவை மீட்பதற்காக செய்துள்ள தியாகமாகத்தான் பெருமித உணர்வோடு பார்க்கிறார்கள்.