Wednesday, April 1, 2020

இஸ்லாமிய வைரஸ் - வேதனையின் வெளிப்பாடு

மனுஷ்ய புத்திரனின் கவிதை கீழே உள்ளது. சங்கிகளின் விஷமப் பிரச்சாரத்தால் இன்று இஸ்லாமியர்கள் மீது சந்தேகப்பார்வையை சாதாரண மக்கள் கூட பதிக்கத் தொடங்கியுள்ள நேரம் இது. அந்த வேதனையை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

டெல்லியில் நடைபெற்ற தப்ளீக் மாநாட்டால் கொரானா வைரஸ் பரவியது என்று சொல்லும் நேர்மையாளர்கள் அதே காலகட்டத்தில் நடைபெற்ற "நமஸ்தே ட்ரம்ப்", சிவராத்திரி கொண்டாட்டம், ராம நவமி பூஜை, அமிர்ந்தானந்த மயி மடத்தில் ஒளிந்து கொண்டிருந்த வெளி நாட்டினர் பற்றியும் கண்டனக்குரல் தெரிவித்தார்களா என்பதையும்

கைதட்டல் கொண்டாட்டம் கொரோனாவுக்கான அழைப்பிதழ் என்பதை உணர்ந்திருந்தார்களா

என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும். 


இஸ்லாமிய வைரஸ்
..................
உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது
' கொள்ளை நோயை
கொண்டு வந்த
இஸ்லாமியர்கள் உடனடியாக
வெளியே வரவும்
நீங்கள் பதுங்கியிருக்கும்
ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து"
நான் யோசிக்கவே இல்லை
முதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டு
ஒரு வெள்ளைக்கொடியுடன்
வெளியே வந்துவிட்டேன்
நான் பொறுப்புள்ள இந்தியன்
நான் பொறுப்புள்ள இஸ்லாமியன்
நான் பொறுப்புள்ள
ஒரு சந்தேகத்திற்குரிய குடிமகன்
ஒரு இஸ்லாமியன்
இவ்வளவுகாலம் பயங்கரவாதியாக
இருந்ததைவிட பயங்கரமானது
அவன் ஒரு கொள்ளை நோயைக்கொண்டு வருபவனாக இருப்பது
உலக வரலாற்றிலேயே
ஒரு கிருமி முதன் முதலாக
மதம் மாறியிருக்கிறது
சீனத்தில் பிறந்தால்
கம்யூனிஸ கிருமியென்று
அழைக்கப்பட்ட அது
இந்தியாவிற்குள் நுழைந்ததும்
இஸ்லாமியக் கிருமியாக
பரிமாணம் அடைந்துவிட்டது
முதலில் அது
ஒரு சிறிய ஊரில்
தாய்லாந்து பயணிகள் சிலரிடமிருந்து
ஆரம்பித்ததாக சொல்லப்பட்டது
பிறகு அது நிரூபிக்கப்படவில்லை
அவர்கள் தற்செயலாக
இஸ்லாமியார்களாக இருந்தார்கள்
பிறகு ஒரு நகரத்தில்
சமூகப்பரவலின் முதல் பலி விழுந்ததாக
அறிவிக்கப்பட்டது
அவர் அவசரமாக புதைக்கப்பட்டார்
செய்திகள் வாசிக்கப்பட்டன
அவர் தற்செயலாக
ஒரு இஸ்லாமியராக இருந்தார்
இப்போது அது
தலை நகரத்திலிருந்து வந்திருக்கிறது
இஸ்லாமிய ரயிலில்
இஸ்லாமியர்கள்
இஸ்லாமியக்கிருமியைக்
கொண்டுவந்தார்கள் என சொல்லப்படுகிறது
அவர்கள் தற்செயலாக
இஸ்லாமியராக இருந்தார்கள்
இஸ்லாமியர்கள் பொறுப்புள்ள
குடிமக்களாக இருப்பது அவசியம்
கூட்டமாக இருந்த இஸ்லாமியர்கள்
தாமாக முன் வந்து
தங்களை சோதனைக்கு
ஆட்படுத்திக்கொள்வது அவசியம்
கூட்டமாக இருந்த எல்லோருமே
பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றாலும்
அது ஒரு இஸ்லாமிய கிருமியாக
இருக்கக்கூடும் என்பதால்
கூடுதல் பொறுப்பு தேவை
கூடுதல் எச்சரிக்கை தேவை
இஸ்லாமியர்கள்
கோயில்களை இடித்தவர்கள்
குண்டுகளை வெடிப்பவர்கள்
தேசத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள்
காதல் ஜிகாத்தை நடத்துபவர்கள்
என்றெல்லாம் சொல்வதைக்காட்டிலும்
இஸ்லாமியர்கள்
கொள்ளை நோயைக்கொண்டுவந்தவர்கள்
என்று சொல்வது
கொள்ளை நோயைவிடவும் வேகமாக பரவக்கூடியது
ஒரு இஸ்லாமியருக்கு வீடுதராதிருக்கு
ஒரு இஸ்லாமியருக்கு வேலை தராதிருக்க
ஒரு இஸ்லாமியர்கடையில் பொருள்வாங்காதிருக்க
நியாயமான காரணங்கள் இல்லாதிருந்தது
இப்போது அவர்கள்
கொள்ளை நோயைக்கொண்டு வருபவர்கள்
என்பது தெளிவாகிவிட்டது
வாட்ஸப் அப்படித்தான் சொல்கிறது
ஒரு எளிய மனிதனின் தலைக்குள்
அது வைரஸைவிடவும் வேகமாக நுழைகிறது
மாட்டுக்கறி உண்பவன்
என்று ஒருவன் கொல்லப்பட்டதுபோல
வைரஸைக் கொண்டுவருபவன் என
நாளை ஓடும் ரயிலிருந்து
ஒரு இஸ்லாமியன்
கீழே தள்ளப்படலாம்
எதுதான் நடக்கவில்லை இங்கே?
கொள்ளை நோயைக்கொண்டு வருபவர்களென
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவரையும் சந்தேகிப்பதைக்காட்டிலும்
ஒரு சமூகத்தை சந்தேகிப்பது எளிது
அப்படித்தான்
இன சுத்திகரிப்பின்
இனத் தூய்மைக்கொண்டு
வர முடியும்.
இதை நீங்கள் ஏன்
திரும்ப திரும்ப சொல்கிறீர்கள் என
தெரியாமல் இல்லை
எல்லோரையும் மரண பயம்
ஆட்கொண்டிருக்கிறது
என்னையும்தான்
இருந்தும் உங்கள்
யாரையும் விடவும்
ஒரு இஸ்லாமியனாக
நான் இன்னும் கொஞ்சம் தனிமைப்படுகிறேன்
அது அப்படிதான் நீண்டகாலமாக நிகழ்கிறது
மத நல்லிணக்கத்தில்
நம்பிக்கைக்கொண்ட
என் சிநேகிதி பதட்டமாகக்கூறுகிறாள்
' இன்னும் கொஞ்சம் தள்ளியிரேன்'
மத சகோதரத்துவத்தை போதிக்கும்
என் நண்பர் முணுமுணுக்கிறார்
' உங்கள் ஆட்கள் ஏன் இப்படி
பொறுப்பற்று நடக்கிறார்கள்?'
உண்மைகளுக்காக
கொஞ்சம் காத்திருங்கள்
என்று சொல்ல விரும்பினேன்
ஆனால் சொல்லவில்லை
இப்படி ஏற்கனவே
நிறையச் சொல்லிவிட்டேன்
நான் எப்போதும்போல
தலையைக் குனிந்துகொண்டேன்
நான் பதில் சொன்னால்
நான் கிருமியைக் கொண்டு வருபவன்
என்பதற்குப்பதில்
நானே ஒரு கிருமி என்று அழைக்கப்படுவேன்
நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம்
ஒவ்வொரு எச்சரிக்கையும் நம்புகிறோம்
ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்படிகிறோம்
ஆயினும்
நாங்கள் களைத்துபோய்விட்டோம்
எங்கள் பரிசுத்தத்தை நிரூபித்து நிரூபித்து
எங்களிடமிருந்த சோப்புகளெல்லாம்
தீர்ந்துவிட்டன
வெறுப்பின் வைரஸ்கள்
வதந்திகளின் சோதனைக்கூடங்களில் பிறக்கின்றன
அவை மசூதிகளில்
இஸ்லாமியர்களின் சுவாசக்கோளங்களில்
வேகமாக வளர்கின்றன
அடுத்த செய்தி அறிக்கை
ஷாஹின் பாத்தில்
தேசியக்கொடியுடன் அமர்ந்திருந்தவர்களிடமிருந்து
இது துவங்கியது என்பதாக இருக்கலாம்
இதுதான் சிறந்த சந்தர்ப்பம்
நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி
இஸ்லாமியர்களை
தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப
ஹிட்லரைப்போல
நீங்கள் கேஸ் சேம்பர்களில்
விஷவாயுக்குழாயை
திறக்காவிட்டாலும்
இந்த தேசத்தின்
அனைத்து இஸ்லாமியர்களையும்
ஒட்டுமொத்தமாக
கிருமி நாசினி குளியலுக்கு
உட்படுத்த இதுதான் சந்தர்ப்பம்
மற்றபடி
கொரோனோவுக்கு
எதிராக
ஒன்றிணைவோம்
1.4.2020
காலை 8.42
மனுஷ்ய புத்திரன்

1 comment:

  1. Sir .He him self mulsim.hope he is talking about him self.
    Manushya Puthiran is a poet and also a DMK supporter in Tamil Nadu. He was born as S. Abdul Hameed in Thuvarankurichi, the Tiruchirappalli district. He began his literary career in early 80's and at a very young age of 16, his first poem got published.

    ReplyDelete