Thursday, April 23, 2020

இன்று இதுதான் மிகவும் பொருத்தம் . . .


இன்று உலக புத்தக தினம்.  ஊரடங்கு காலத்தில் “சூல்” படித்த பின்பு முடித்த மூன்று புத்தகங்களில் எதைப் பற்றி இன்று எழுதலாம் என்று யோசித்தேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான தோழர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு எழுதிய “யார் கையில் இந்து கோயில்கள்?”

எங்கள் மூத்த தலைவர், தஞ்சைக் கோட்டத்தின் முன்னாள் தலைவரான தோழர் கி.இலக்குவனின் (கே.லட்சுமணன்) எழுதிய “தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும்”

எங்கள் மதுரைக் கோட்டத் தோழரும் எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ் எழுதிய “சில இடங்கள் . . . சில புத்தகங்கள் . . .”

இன்று எழுதுவதற்கு மூன்றாவது நூலே பொருத்தமானது என்பதால் அதை தேர்ந்தெடுத்துள்ளேன். நூல் அறிமுகம் எழுதுவதற்காக இன்று இன்னொரு முறையும் படித்தேன்.

நூல் அறிமுகம்

நூல்                                :     “சில இடங்கள் . . . சில புத்தகங்கள் . . .”
ஆசிரியர்                     :    ச.சுப்பாராவ்
வெளியீடு                    :   பாரதி புத்தகாலயம்
                                             சென்னை – 18
விலை                            :     ரூபாய்  140.00



இது ஒரு த்ரீ.இன்.ஒன் நூல். ஐரோப்பிய பயண அனுபவக் கட்டுரைகள், சில நூல்கள் பற்றிய தகவல்கள், சில எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் என்று மூன்று அம்சங்கள் அடங்கிய நூல்.

“எனக்குள் ஒருவன்” திரைப்படத்தில் முதல் முறையாக கமலஹாசன் சிம்லா வருவார். அங்கே பல இடங்களை முன் கூட்டியே பார்த்துள்ளேன் என்று ஷோபனாவிடம் சொல்வார். அது முன் ஜென்ம நினைவுக் கதை. தோழர் சுப்பாராவும் முதல் முறையாக ஐரோப்பா சென்றாலும் அங்கே பல இடங்களை முன் கூட்டியே பார்த்த உணர்வு வந்தது என்கிறார். ஆனால் அது முன் ஜென்ம நினைவெல்லாம் இல்லை. அந்த இடங்கள் பற்றி தங்கள் கதைகளில் எழுத்தாளர்கள் நுணுக்கமாக விவரித்ததை படித்த நினைவு  என்று சொல்கிறார்.

ஹேக் நகரைப் பற்றி எழுதுகிற போது ஓவியர் வான்கோவின் வாழ்க்கையும் வந்து போகிறது. ப்ரஸ்ஸல்ஸ் நகரைப் பற்றி எழுதும் போது பிரடரிக் ஃபார்ஸித்தின் “டே ஆப் தி ஜாகல் பற்றியும் “டாக்ஸ் ஆப் தி வார்” பற்றியும் அறிந்து கொள்வோம். எல்லாவற்றையும் விட மாமேதை மார்க்ஸ், ஏங்கல்ஸூடன் இணைந்து “கம்யூனிஸ்ட் அறிக்கை” எழுதிய ஸ்வான் ரெஸ்டாரண்ட் இப்போது எப்படி உள்ளது பற்றியும் அந்த இடம் ஒரு தனியாரின் சொத்து என்பதால் மார்க்ஸின் அறைக்குள் செல்ல அனுமதி இல்லை என்றும் எழுதியுள்ளார்.முழுமையாகப் படிக்கையில் ”உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்” என்று  மனதிற்குள்ளாவது சொல்லத் தோன்றும்.

பாரீசுக்குப் போகையில் கூடவே இர்விங் வாலஸும் (இர்விங் வால்ஸ், ஜெஃப்ரி ஆர்ச்சர், சிட்னி ஷெல்டன் ஆகியோரின் ஒரு சில நாவல்களை முன்னொரு காலத்தில் படித்தது  எனக்கும் கூட நினைவுக்கு வந்தது. நுணுக்கமான விவரிப்புக்கள் என்று தமிழில் சொல்ல வேண்டுமானால் சமீபத்திய உதாரணம் “வேள்பாரி”தான்.) பாரீசின் லூவர் மியூசியத்திற்கு டான் பிரவுனின் டாவின்ஸி கோட் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் நூல்களையும் சொல்கிறார். ஹிட்லர் உத்தரவிட்டும் பாரீஸை அதன் அழகில் மயங்கி அழிக்காத ஜெர்மன் தளபதி கோல்டிட்ஸ் பற்றியும் அறிகிறோம். இந்த வரலாற்றை சொல்கிறது லாரி காலின்ஸூம் டொமினிக் லாப்பியரும் எழுதிய :இஸ் பாரிஸ் பர்னிங்?” நூல். இதில் கொடுமையான செய்தி என்னவென்றால் ஜெர்மனி சரணடைந்து கைதாகிற கோல்டிட்ஸை பாரிஸ் மக்கள் காரி உமிழ்ந்தார்கள் என்பதுதான்.

வாடிகன் சிட்டிக்கும் செயின்ட் பீட்டர் தேவாலயத்தைப் பற்றி விவரிக்கையில் டான் பிரவுனின் “ஏஞ்சல்ஸ் அன்ட் டெமன்ஸ்” நாவலில் சொல்லப்பட்டதையும் சேர்ந்தே சொல்கிறார்.

பல்வேறு முக்கியமான இடங்கள் பற்றி எழுதப்பட்டிருந்தாலும் மிக முக்கியமான இடமாக நான் கருதுவது நாஜிக்கள் நெதர்லாந்தில் அமர்ஸ்ஃபூர்ட்  என்ற இடத்தில்  அமைத்த  வதை முகாம் பற்றியதுதான். அதை முழுமையாக படிப்பதுதான் முறையாக இருக்கும். 

அதைப் படிக்கையில் சமீபத்தில் விசாகப்பட்டிணத்தில் நடந்த எங்கள் அகில இந்திய மாநாட்டில் டெல்லிப் பல்கலைக் கழக பேராசியர் அபூர்வானந்த் பேசுகிற போது குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வந்தது. யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் வதை முகாம்களுக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்லப்படுகிற போது ஜெர்மனி மக்கள் சாலையின் இரு புறத்திலும் நின்று கை தட்டி கொண்டாடுவார்கள். அந்த மன நிலைக்கு இப்போது இந்தியர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தன் கவலையை பகிர்ந்து கொண்டார்.

ஆசிரியர் அனுமதியோடு அந்த அத்தியாயத்தை மட்டும் ஸ்கேன் செய்தோ, புகைப்படம் எடுத்தோ பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.  தேசியம் என்ற பெயரில் பாஸிசம் தலை தூக்கும் காலத்தில் பாசிஸம் என்ன செய்தது, பாசிஸம் எப்படி முடிந்தது  என்பதை  இந்த வதை சொல்கிறது என்று முடிக்கிறார் தோழர் சுப்பாராவ்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் நூல்களும் எழுத்தாளர்களும் வந்து போகிற பயண அனுபவ நூல் புதுமையானது. சுற்றுலாப் பயணிகள்பால் அங்குள்ள காவலர்களின் அணுகுமுறையை இங்கே உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.  இன்னொரு முக்கியமான பத்தியை அப்படியே பகிர்ந்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.

“மற்றொரு அற்புதமான விஷயம், எல்லாப்பணிகளிலும் பெண்கள். டிராம், ரயில் ஓட்டும் பெண்கள், ரயில், விமான நிலையங்களில் உடல் முழுக்க விதவிதமான ஆயுதம் ஏந்திக்  காவல் காக்கும் பெண்கள்,  தீயணைப்பு வண்டிகளில் தொங்கிச் செல்லும் தீயணைப்பு வீராங்கணைகள், நள்ளிரவில் எங்களுக்கு டாக்சி ஓட்டி வந்தவர், (என்னால் தூக்கவே முடியாத எங்கள் 24 கிலோ பெட்டிகளை ஒற்றைக் கையால் தூக்கி டிக்கியில் வைத்தார்) வெனிஸின் அலை வீசும் கடலில் படகுப் பேருந்தில் கண்டக்டராக இருக்கும் பெண் என்று உண்மையாகவே விடுதலை பெற்ற பெண்களாக, எந்த மனத்தடைகளும் இல்லாதவர்களாகத் தோற்றமளிக்கும் பெண்கள்”

மேலே உள்ள பத்தியை பெண்களின் அழகிற்கு இனக்கலவை, குருதிக் கலவைதான் காரணம் என்ற  ஆராய்ச்சி  செய்த எழுத்தாளருக்கு சமர்ப்பிக்கிறேன்.

தோழர் சுப்பாராவின் ஐரோப்பிய பயணத்திற்குக் காரணமான அவரது மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் நமக்கு ஒரு சுவாரஸ்யமான நூல் ஏராளமான புகைப்படங்களோடு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் தோழர் சுப்பாராவ்

பிகு1

: நாம் நம்பவே  முடியாத ஒரு சம்பவம் ஒன்று நூலில் வருகிறது. அது

ஈபிள் டவரில் இருந்து இறங்கி வந்து சுற்றிலும் உள்ள புல் தரையில் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த கட்டுச்சாதமான, லெமன் சாதத்தை சாப்பிட்டோம்.




5 comments:

  1. அருமையான நூல் அரிமூகம் தோழர். ஒரு பயணநூலை இவ்வளவு சிறப்பாக, புகழ் பெற்ற நூல்களில் அவ்விடங்கள் சொல்லப்பட்டுள்ளதையும் இனைத்து விவரிக்கக் கூடிய அளவிற்கு ஆசிரியரின் வாசிப்பு விரிவாயும் ஆழமாயும் உள்ளதென்பதை உணர்கிறேன். தோழர் சுப்பாராவ் நம்சங்கத் தோழர் எனும்போது சற்றே பெறுமிதமும் இந்நூலை படித்தாக வேண்டும் என்று உணர்வும் உங்கள் நூல் அறிமுகம் உண்டாக்குகிறது.இந்நூலை வாங்க தேவையான விவரங்களை அனுப்புங்கள் தோழர்.

    ReplyDelete
  2. அவசியம் படிக்கேண்டிய நூல் என்பதை தங்களின் பதிவு உணர்த்துகிறது.
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. இன்று இதுதான் மிகவும் பொருத்தம் . . .
    அருமை சார்

    ReplyDelete
  4. சில இடங்கள்... சில புத்தகங்கள்...பாரதி புத்தகாலய வெளியீடு என்பதை இப்போதான் கவணிச்சேன். நான் புதுவையிலேயே வாங்கிக்கறேன் தோழர். நன்றி.

    ReplyDelete
  5. அருமையான பதிவு

    ReplyDelete