Tuesday, October 8, 2019

நீடித்திட வேண்டும் காந்தியின் மரபு . . .



அமானுல்லா கான்,
தலைவர்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்


இந்தியா கொண்டாடுகிறது. உலகமும் கூட மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இப்பூவுலகில் நடமாடிய அற்புதமான ஆளுமைகளில் காந்தியும் ஒருவர் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. அதிகமாக மதிக்கப்பட்டவர் அவர். அதே நேரம் மிக அதிகமாக வெறுக்கப்பட்டவரும் அவர்தான். அவரை ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தின் அடையாளமாக பார்ப்பவர்கள் உலகெங்கும் மதிக்கிறார்கள். இந்தியாவை “இந்து ராஷ்டிரம்” ஆக மாற்ற முடியாமல் போனதற்கு முக்கியமான காரணமானவர் என்று கருதுபவர்களால் அவர் வெறுக்கப்படுகிறார். இந்த சக்திகள் மகாத்மாவின் கொலைகாரனை கொண்டாடி அவனை வணங்க கோயில்கள் கூட கட்டுகிறார்கள். அதே நேரம் அவர்களே குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக காந்தியை பயன்படுத்திக் கொள்ளவும் தீவிரமாக முயல்வது ஒரு முரண்நகை. இந்த முயற்சியை முறியடித்து அவர்களின் போலித்தனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

நூற்றுக்கணக்கான மோதல்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவு குழு வன்முறைகளையும் உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. மத்தியக் கிழக்கு பகுதியில் கிடைக்கும் முக்கியமான, கேந்திரமான இயற்கை வளத்திற்காக ஏகாதிபத்தியம் அப்பிராந்தியத்தையே போர்க்களமாக மாற்றி விட்டது. ராணுவச் செலவினங்களுக்காக உலகம் ஒவ்வொரு ஆண்டும் 2 ட்ரில்லியன் டாலர் வரை செலவழிக்கிறது. அதிலே ஒரு சிறு பகுதியை செலவழித்தாலே உலகத்தின் முகத்திலிருந்து வறுமையை முற்றிலுமாக ஒழித்திட முடியும். மனித குலத்தின் வாழ்வையே அச்சுறுத்தக்கூடிய விதத்தில் பல நாடுகள் அணு ஆயுதங்களை குவித்து வருகின்றன. லாபத்தை அதிகப்படுவதற்காக மூலதனம் நம் பூமியின் எதிர்காலத்தையே பணயம் வைத்து  சுற்றுச் சூழலை வெறித்தனமாக அழித்து வருகிறது. முன்னெப்போதுமில்லாத ஏற்றத்தாழ்வுகளை உலகம் சந்தித்து வருகிறது. உலக ஏழை மக்களில் பாதியளவு உள்ள 3.8 பில்லியன் மக்களின் சொத்து மதிப்பை விட அதிகமாக உலகின் முதல் 26 செல்வந்தர்கள் சொத்து வைத்துள்ளனர். இந்தியாவில் உள்ள முதல் ஒன்பது செல்வந்தர்களின் செல்வ மதிப்பு, வறுமையில் உள்ள 50 % மக்களின் சொத்து மதிப்பிற்கு இணையானது. இப்படிப்பட்ட சூழலில் உலகம் சந்தித்து வருகின்ற தங்குதடையற்ற சுரண்டல்கள், ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட வடிவங்கள், தீர்வுகள் ஆகியவற்றை அவருடைய வாழ்விலிருந்தும் போராட்ட மரபிலிருந்தும் கண்டறிய நல்லதொரு வாய்ப்பை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா அளித்துள்ளது.  

இந்தியாவின் தேச விடுதலைப் போராட்டம் என்பது மகாத்மா காந்தி களம் புகும் வரை அது மேட்டுக்குடி மற்றும் உயர் நடுத்தர வகுப்பினரின் பிரச்சினையாக மட்டுமே இருந்தது. மனித குல வரலாற்றிலேயே மிகப் பெரும் மக்கள் திரள் போராட்டமாக அவர் அதை மாற்றினார். அவர் பெண்களை, ஒடுக்கப்பட்ட மக்களை சுதந்திரத்திற்காக போராடுவதற்கு ஒன்றிணைத்தார். இந்து முஸ்லீம் ஒற்றுமை, கதர், தீண்டாமை ஒழிப்பு ஆகியவையே அவரைப் பொறுத்தவரை சுதந்திரப் போராட்டத்தின் அஸ்திவாரம். சுதந்திரம் என்பதை மக்களுக்காக வென்றெடுக்க வேண்டுமென காந்தி விரும்பினார். “உண்மையான சுதந்திரம்” என்பது சிலர் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல, அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்கள் அதனை தவறாக பயன்படுத்தும் போது அதனை தடுக்கும் வல்லமை அனைவருக்கும் வருவதுதான் என்றார் அவர். அவர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க அவர் நீண்ட காலம் வாழவில்லை. சுதந்திரம் கிடைத்த ஒரு வருடத்திற்குள்ளேயே கொலை செய்யப்பட்டு விட்டார். இந்திய மக்கள் உண்மையான சுதந்திரத்தை வென்றெடுத்தார்களா? ஆம், இல்லை என்ற இரண்டு பதில்களுமே பொருந்தும். இந்தியா ஒரு முற்போக்கான அரசியல் சாசனத்தை ஏற்படுத்தி சட்டத்தின் முன்பு அனைவருமே சமம் என்று பிரகடனப்படுத்தியது. அது சில அடிப்படை உரிமைகளையும் சில சுதந்திரங்களையும் அனுபவிக்க உத்தரவாதமளித்தது. நாட்டின் செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் குவியாமல் வளர்ச்சியின் பயன் கடைசி குடிமகன் வரை செல்வது உத்தரவாதம் செய்யப்படும் என உறுதியளித்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்த உயரிய கொள்கைகளின் மீது இந்தியாவின் அடித்தளம் அமைக்கப்பட்டதோ அவை எல்லாமே இன்று மிகப் பெரிய தாக்குதலுக்கும் அழுத்தத்திற்கும் உட்பட்டுள்ளது. ஜனநாயகம் என்பது பெரும்பான்மைவாதமாக மாற்றப் பட்டு விட்டது. அனைத்து தார்மீக நெறிமுறைகளும் குழி தோண்டி புதைக்கப்பட்டு இன்று அரசியல் ஒரூ மிகவும் லாபகரமான தொழிலாகி விட்டது. தீண்டாமைக் கொடுமையை வேரறுக்க சுதந்திரம் ஒரு கருவியாக இருக்கும் என்று காந்தி கருதினார். ஆனால் இன்று இந்தியா ஜாதிகளின் குடியரசு என நினைக்கும் அளவிற்கு ஜாதிய பிளவுகள் ஆழமாகியுள்ளது. நாடு சந்தித்து வருகிற முன்னெப்போதும் இல்லாத பிரிவினைவாத தாக்குதல்களுக்கும் அதனை ஆள்பவர்கள் பின் நின்று இயக்குவதுமான இன்றைய அரசியல் சூழலில் “இந்து முஸ்லீம் ஒற்றுமை” என்பது கானல் நீராகவே உள்ளது என்பது கொஞ்சம் கூட மிகையல்ல. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எப்படி காந்தியின் மீது சதி மற்றும் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்களை சுமத்தினரோ அது போலவே இன்றைய ஆட்சியாளர்களை கேள்வி கேட்பவர்களும் தேசத்துரோகிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். காஷ்மீர் பிரச்சினையில் மோடி அரசு மீதான அணுகுமுறையை விமர்சித்த காரணத்தால் காந்தி அமைதி அறக்கட்டளையின் தலைவர் மீது காவல்துறை வழக்குகளை ஏவியுள்ளது.

நிறவெறிக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் நடத்திய போராட்டங்களின் மூலமே அவரின் அரசியல் உறுதி, சமூகம் பற்றிய புரிதல் ஆகியவை வளர்ந்து அவர் ஒரு ஆளுமையாக உருவானார். அவருடைய அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனைகளில் மகத்தான ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் மற்றும் பிரிட்டிஷ் வரலாற்றியலாளர் ஜான் ரஸ்கின் ஆகியோரின் தாக்கம் இருந்தது. டால்ஸ்டாயின் படைப்புக்களிலிருந்து காந்தி இரண்டு முக்கியமான படிப்பினைகளை பெற்றார். எதிர்ப்பியக்கங்களில் அஹிம்சையின் வலிமை என்பது அதில் முதலானது. வெறுப்பூட்டும் சிந்தனைகளை அன்பின் மூலம் வென்றெடுக்க முடியும் என்பது இரண்டாவது. ஆனால் டால்ஸ்டாயின் மிகச் சிறந்த படைப்பை யாராவது வீட்டில் வைத்திருந்தாலேயே அதை நீதித்துறையே கூட அபாயமாக பார்க்கக் கூடிய விதத்தில் இந்தியா இன்று காந்தியிடமிருந்து வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. டால்ஸ்டாயின் அமைதியான எதிர்ப்பு என்பதை சத்யாகிரகப் போராட்ட வடிவமாக உருவாக்கிய காந்தி உண்மையை உறுதியாய் பற்றி நின்றார். அஹிம்சையின் அடிப்படையிலேயே உண்மையான நாகரீகத்தை கட்டமைக்க முடியும் என்று காந்தி நம்பினார். அவரைப் பொருத்தவரை உண்மை என்பது உன்னதமானது. உண்மையாய் இருப்பதன் மூலமே  மனித வாழ்வு அர்த்தமுள்ளதாய் அமையும். எனவே அவர் தேசிய விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை மற்றும் சத்யாகிரக அடிப்படையில் வழி நடத்தினார்.

இந்தியா காந்தியத் தத்துவங்களிலிருந்து விலகி நீண்ட தூரம் பயணித்து விட்டது. உண்மையை ஓரமாய் ஒதுக்கித்தள்ளி உணர்வுகள் முக்கிய இடத்தை ஆக்கிரமிக்கும் “உண்மை போன்ற Post Truth” காலத்தில் இந்தியா இப்போது வாழ்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மை என்பது அரிதாகி விட்டது. அப்பட்டமான பொய்கள், கட்டுக்கதைகள், பொய்யாக வடிவமைக்கப்பட்ட செய்திகள் ஆகியவையே அரசியல் அணி திரட்டலுக்கான கருவிகளாகி விட்டது. சிறுபான்மை மக்கள் மீதான வன்முறை அரசின் ஆதரவோடு நியாயப்படுத்தப்படுகிறது. சமூக நல்லிணக்கத்தை புறந்தள்ளி பிளவினை உருவாக்க பலமான ஆயுதமாக “வெறுப்புணர்வு” பயன்படுத்தப்படுகிறது.

காந்தியின் பொருளாதார நம்பிக்கைகள் பிரிட்டிஷ் வரலாற்றியலாளர் ஜான் ரஸ்கின் அவர்களின் தாக்கத்தால் உருவானது. ஆடம் ஸ்மித் மற்றும் ஏனையர் முன் வைத்த பழமைவாத பொருளாதாரக் கொள்கைகளை ஜான் ரஸ்கின் நிராகரித்தார். அனைவருக்குமான நன்மை என்பதில்தான் தனி நபருக்கான நன்மை என்பது அடங்கியுள்ளது என்று ஜான் ரஸ்கின் உறுதியாக நம்பினார். அதனைத்தான் காந்தி சர்வோதயா, அந்த்யோதயா கோட்பாடுகளாக வடிவமைத்தார். அனைத்து உழைப்புக்கும் ஒரே மதிப்புதான் என்று கூறிய ரஸ்கின் உழைப்பின் மதிப்பை வலியுறுத்தினார். கிராமப்புற பொருளாதாரம், உழைப்பின் மதிப்பு, அறங்காவலர் முறை ஆகியவை மீதான காந்தியின் கருத்துக்கள் ஜான் ரஸ்கினின் தாக்கத்தால் விளைந்தவையே.

உண்மை மற்றும் அஹிம்சையின் அடிப்படையில் காந்தி வழி நடத்திய மகத்தான போராட்டம் உலகெங்கும் பல எதிர்ப்பு போராட்டங்களின் மீது தாக்கம் செலுத்தியது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நிற வெறிக்கு எதிரான போராட்டத்திற்கு மகாத்மா காந்தி ஒரு உந்து சக்தியாக இருந்தார். “நெல்சன் மாண்டேலா காந்தியின் சத்யாகிரக அறவழிப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். ஒடுக்குமுறைக்கு எதிரான வலிமையான அமைதிப் போராட்டம் அது. அது பிற்காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உருவாக உத்வேகமளித்தது. மனிதத்தன்மையை பகிர்ந்து கொள்வோம் என்ற மாண்டேலாவின் கோட்பாட்டை வலிமைப்படுத்தவும் உதவியது” என்று இந்தியாவிற்கான தென் ஆப்பிரிக்க தூதுவர் ஹாரிஸ் மஜாகே குறிப்பிடுகிறார்.

அமெரிக்க சிவில் உரிமைப் போராட்டங்களில் காந்திய வழிமுறைகளை மார்டின் லூதர் கிங் ஜூனியர் கடைபிடிக்கிறார். “அஹிம்சை வழியில் சமூக மாற்றம் என்ற எங்கள் போராட்ட நடைமுறைக்கு வழி காட்டும் ஓளியாக இந்தியாவின் காந்தி திகழ்கிறார்” என்று மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்  நன்றி சொல்கிறார்.  “உனது எதிரியை நேசியுங்கள், உன்னை கொடுமைப்படுத்துவோருக்காகவும் வழி படுங்கள்” என்று யேசுநாதர் பைபிளில் கூறியதை காந்தியின் அஹிம்சையும் சத்யாகிரகமும் நினைவு படுத்துகிறது என்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சுட்டிக் காட்டுகிறார். வட மேற்கு எல்லைப் பகுதியைச் சேர்ந்த வன்முறை நிரம்பிய பாஷ்துன் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அவரது அபிமான சீடர் கான் அப்துல் கபார் கான் தலைமையில் மாற்றியதுதான் காந்தியின் மிகவும் அற்புதமான வெற்றி. ஒரு லட்சம் பாஷ்தூன்கள் அடங்கிய அஹிம்சை தொண்டர்கள் படை “குடால் கிட்மாத்கர்” என்று அழைக்கப்பட்டது.

இன்றைய இந்தியா, காந்தி விரும்பிய, போராடிய இந்தியா இல்லை. மத நல்லிணக்கம், பொருளாதார சுயசார்புத்தன்மையை வளர்ப்பது, தீண்டாமை ஒழிப்பு ஆகியவை குறித்த அவரது போதனைகள் இந்திய மக்களில் பெரும்பாலானவர்களை இன்று ஈர்ப்பதில்லை. அவரது உழைப்பின் மதிப்பு கோட்பாடு தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. காந்தி இன்று வெறும் தூய்மை இந்தியாவின் சின்னமாக மட்டும் சுருக்கப்படு விட்டார்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே கையாலகற்றும் கொடுமை நீடிப்பதையும் விஷ வாயுவை வெளிப்படுத்தும் கழிவு நீர் தொட்டிகளுக்கு இறப்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் பல நூறு பேர் அனுப்பப்படும் அவலமும் பற்றி அறிந்தால் காந்தி வெட்கத்தால் கூனி குறுகியிருப்பார். செல்வம் மற்றும் வருமானத்தில் காணப்படும் மிகப் பெரிய அசமத்துவம், இடைவெளி, காந்தியின் அறங்காவலர் முறையோடு முரண்பாடுகளை உருவாக்கியிருக்கும். இந்தியச் சூழலில் பரவியுள்ள வெறுப்பெனும் நச்சுக்காற்றைப் பார்த்து காந்தி அஞ்சியிருப்பார். உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் காந்தி கண்ட  இந்தியாவின் ஆன்மா தொலைந்து போய் விட்டது. காந்தியின் கொலைகாரனை தியாகி என்று புகழாரம் சூட்டிய ஒருவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக மக்களவைக்கு சென்றிருப்பதை என்னவென்று சொல்வது?

உலகம் முழுதும் கொந்தளிப்பு நிலவும் காலம் இது. மோதல்களும் வெறுப்பும் அரசியல் விவாதங்களை ஆக்கிரமித்துள்ளது. லாபத்தை பல மடங்கு பெருக்குவதற்காக இயற்கை வளங்கள் தங்கு தடையின்றி சுரண்டப்படுகிறது. “பூவுலகின் அனைத்து ஜீவராசிகளும் கண்ணியமான, அமைதியான வாழ்வை நடத்துவதற்கான ஆதாரங்களை இயற்கை அள்ளிக் கொடுத்துள்ளது” என்று காந்தி  சொன்னார் என்பதை இங்கே நினைவு கூர்வது அவசியம். ஆனால் பேராசை கொண்ட சிலருக்கு இது போதுமானதாக தோன்றவில்லை. இப்பேராசை, பூமியின், அதில் வாழ்பவரின் எதிர்காலத்தை முற்றிலும் நிச்சயமற்றதாக மாற்றியுள்ளது. விடுதலைக்காகவும் ஒரு நியாயமான, சமத்துவமான சமுதாயத்திற்காகவும் போராடுகிற அனைவருக்கும் காந்தியின் போராட்டங்களும் வாழ்வும் இன்றும்  ஊக்கமளிப்பதாகவே அமைந்துள்ளது. காந்தியின் வாழ்வையும் போராட்டங்களையும் ஆழமாக பரிசீலிக்கிற வாய்ப்பை அறிஞர்களுக்கும் முற்போக்கு சக்திகளுக்கும் காந்தியின் 150 வது பிறந்த நாள் அளித்துள்ளது. அதன் மூலம் இன்றைய காலகட்டத்தின் பற்றியெரியும் பிரச்சினைகளில் சிலவற்றுக்காவது  நம்மால் தீர்வினை கண்டறிய இயலும்.

இந்தியாவின் இன்றைய நிலைமை பதட்டத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால் நம்பிக்கை இழப்பது என்பது ஒருவர் தன் மீதும் மனித குலத்தின் மீதுமே நம்பிக்கை இழப்பதாகும். அதிகார வர்க்கத்தை எதிர்க்கிற, அனைத்து குடிமக்களுக்கும் கண்ணியமான வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்பதற்காக போராடுபவர்களுக்கு காந்தியின் வாழ்வு உத்வேகமளிப்பதாகும். உண்மை, அன்பு, அஹிம்சை ஆகிய கொள்கைகளைக் கொண்ட காந்தியின் மரபு, நமது மிகச் சிறந்த பாரம்பரியமாகும். காந்தியை வெறுமனே தூய்மை இந்தியா இயக்கத்தின் விளம்பரத் தூதராக மட்டும் குறுக்கிட நடக்கும் முயற்சிகளை நாம் எதிர்த்திட வேண்டும். இந்தியாவின் தலை சிறந்த மகனுக்கு அவரது நூற்றி ஐம்பதாவது பிறந்த நாளில் நம் அஞ்சலியை செலுத்திடும் வேளையில் மனிதத்தை அதன் எதிரிகளால் என்றுமே வீழ்த்த முடியாது என்பதில் உறுதியாக நின்றிட வேண்டும். போர்கள், வெறுப்பு, கொடூரம் என அனைத்தையும் மனிதமே எப்போதுமே வென்றுள்ளது.

“அன்பைத் தவிர நீங்கள் காணும்
அனைத்து அடித்தளங்களுமே பிழையானது,
அன்பு மட்டுமே பிழைகளற்றது”

என்று பெர்ஷிய கவிஞர் ஹஃபீஸ் ஷிராஸ் சொன்னது போல
அன்பே எப்போதும் வெற்றி பெறும்.

இன்சூரன்ஸ் வொர்க்கர் அக்டோபர் 2019 இதழ் கட்டுரை

தமிழாக்கம் மற்றும் வெளியீடு


காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம்

  



No comments:

Post a Comment