Sunday, October 20, 2019

வெக்கையை வைரமாய் தீட்டிய அசுரன்




இது ஒரு டூ இன் பதிவு.

“வெக்கை” நாவல் பற்றியும் “அசுரன்” திரைப்படம் பற்றியுமானது.

அசுரன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் வரத் தொடங்கியவுடன் வெக்கை நாவலை ஆன்லைன் மூலம் வரவழைத்தேன். நாவல் வந்து சேரும் முன்னே திரைப்படத்தை பார்த்து விட்டாலும் நாவல் வந்த பிறகே எழுத வேண்டுமென்று காத்திருந்தேன். கடந்த வியாழன் அன்று நாவல் கைக்கு வந்தது. அன்றே ஒரு பயணம் இருந்ததால் ஒரே மூச்சாக படித்து விட்டேன்.

“சிதம்பரம் நினைத்தது அப்படியில்லை. வலது கையை மட்டும் துண்டிக்க திட்டமிட்டிருந்தான்”

என்ற முதல் வரியே நாவலுக்குள் நம்மை முழுமையாக இழுத்து விடும். அண்ணனைக் கொன்ற வடக்கூரானை வெட்டி விட்டு பின் தொடர்ந்து வந்தவர்கள் மீது தானே தயார் செய்த நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பித்து வருகின்ற சிதம்பரம், தன் தந்தையுடன் காட்டில் பதுங்கி தப்பித்து எட்டாம் நாளில் சரணடைவதற்காக பேருந்தில் ஏறுவதுதான் கதை.

காட்டுக்குள் அலைவது, உணவுக்காக அலைவது போன்ற நிகழ்வுகள் மத்தியில் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் சொல்லப்படுகிறது. சிதம்பரத்தின் அப்பா கொலை செய்து விட்டு வேறு ஊருக்கு வருவது, அவரை அரவணைக்கிற குடும்பத்தில் திருமணம் செய்து கொள்வது. சிதம்பரத்தின் மாமா தன் தங்கைக்கு கொடுத்த நிலத்தை பறிக்க வடக்கூரான் முயல்வது, அதற்கான அச்சுறுத்தலாக சிதம்பரத்தின் அண்ணனை கொல்வது, சிதம்பரத்தின் அப்பா, மாமா ஆகியோர் முயற்சி செய்தும் முடியாத கொலையை சிதம்பரம் செய்ததால் அனைவருக்குமான பெருமிதம், குடும்பத்தில் இழையாடும் பாசப் பிணைப்பு என்று வெக்கையின் பயணம் அமையும்.  நிலத்தை காக்கும் போராட்டமாகவே வெக்கை அமைந்துள்ளது. அத்தோடு நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ குணாம்சங்களை அம்பலப்படுத்தி காவல்துறை எப்போதும் அவர்களின் கையாள் என்பதை ஜின்னிங் பேக்டரி சம்பவம் மூலமும் சொல்கிறது வெக்கை.

சிதம்பரமும் அவன் அப்பா சிவசாமியும் காட்டில் இறங்கும் காட்சியோடுதான் அசுரனும் தொடங்குகிறது. வெக்கையைக் காட்டிலும் அசுரன் என்னை அதிகமாக ஈர்த்தது என்றால் அதற்கான காரணங்கள் என்னவென்று ஒரு பட்டியலே தர முடியும்.

நிலத்தில் நடக்கிற பிரச்சினை காரணமாக சிதம்பரத்தின் அண்ணன் முருகன் வடக்கூரான் மகனை அடித்து விட, அதற்காக சிவசாமி ஒவ்வொரு வீட்டிலும் விழுந்து கும்பிட  அதைக்கண்டு வெகுண்டெழும் முருகன் திரைப்பட அரங்கின் கழிவறையில் வடக்கூரானை செருப்பால் அடிக்கிறான். அதை வெளியில் சொல்ல முடியாமல் புழுங்கும் வடக்கூரான் முருகனை கொலை செய்கிறான்.

வடக்கூரானை எதுவும் செய்ய முடியாத கையாலாகதவர்கள் என்று தந்தையையும் மாமாவையும் கருதும் சிதம்பரமே வடக்கூரானை கொன்று விடுகிறான். பிறகுதான் இருவரும் காட்டுக்குள் இறங்குகிறார்கள். காட்டில் கூட அப்பா சிவசாமியை வெறுப்பாக பார்க்கும் சிதம்பரத்திற்கு தன்னைக் கொல்ல வரும் வடக்கூரான் ஆட்களை அவர் தாக்குகிற போதுதான் மரியாதை வருகிறது. அப்போதுதான் சிவசாமியின் முன் கதையும் விரிகிறது.

சாராய வியாபாரியின் நம்பிக்கையான ஆளாக இருக்கும் சிவசாமியால் வேலைக்கு சேர்த்து விடப்படுகிறவனே பின்பு சிவசாமியின் காதலி செருப்பு அணிகையில் இழிவு படுத்துகிறான். அத்தனை பெண்களையும் செருப்பணிந்து ஊர்வலமாய் கூட்டிச் செல்லும் காட்சி ஒரு கவிதை. முதலாளியும் ஜாதிக்காரன் என்பதற்கே முன்னுரிமை அளிப்பதில் சிவசாமிக்கு  ஒளி பிறக்கிறது. முதலாளிகளிடம் சிக்கியுள்ள பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக தன் அண்ணன் வழக்கறிஞர் சேஷாத்ரி தலைமையில் நடத்தும் போராட்டத்திலும் இணைகிறான். வெண்மணி சம்பவம் போலவே போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட ஆதிக்க சக்திகளை வெட்டி சாய்த்து விட்டு வரும் சிவசாமி பசுபதியின் தங்கையை திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ முயற்சிப்பதுதான் முன் கதை.

உள்ளத்தை உருக்க வைக்கும் முன் கதைதான் திரைப்படம் உயிர்ப்போடு இருப்பதற்கான அஸ்திவாரம். அமைதியாக வாழ நினைத்தாலும் நிலப் பிரபுக்களின் நில ஆக்கிரமிப்பு வெறி அதனை அனுமதிப்பதில்லை என்பதை படம் அருமையாக சொல்கிறது. துண்டு நிலத்திற்காக பெரும் இழப்புக்களை  சந்தித்து விட்டு மகனின் உயிரைக் காக்க அதனை இழந்து சமரசம் செய்து கொள்கிற சிவசாமி மீண்டும் ஒரு துரோகத்தை சந்திக்க ஆயுதம் ஏந்துவது தவிர்க்க இயலாததாகிறது.

படத்தின் உயிர் மூச்சாக திகழும் வசனங்களைப் பற்றி இத்தனை நாள் கழித்து எழுதினால் அடிக்க வருவீர்கள். இந்த படத்தின் மிகப் பெரிய சிறப்பு, அதில் நடித்தவர்கள் காண்பித்த திறமை. மோடிக்கே சவால் விடும் நடிப்பாற்றல்.

குடிகாரனாக, சமரசம் செய்து கொள்கிறவனாக, ஆவேசமாய் எழுகிறவனாக அற்புதமாய் அடுத்த தேசிய விருதை தட்டிச் செல்லப் போகிறார் தனுஷ். கிராமத்து அம்மாவாய் பொருத்தமாய் உள்ளார் மஞ்சு வாரியர். பசுபதி மிகவும் பாந்தமாய். வில்லன் கூட்டமும் கச்சிதமாய். சிதம்பரமாய் நடிக்கிற கென் கருணாஸ் அபாரம். தன்னை தாக்க வந்தவர்களை அப்பா திருப்பி தாக்குகையில் கண்ணில் தெரியும் கணப் பொழுது பெருமிதம் அற்புதம். எத்தனையோ படத்தில் நடிச்ச உன் அப்பா லொடுக்கு பாண்டிக்குப் பிறகு ஒரு படத்தில கூட உருப்படியா நடிக்கலையே தம்பி,

பிரகாஷ்ராஜின் பாத்திரப்படைப்பு கீழத்தஞ்சை போராட்ட நாயகர் தோழர் பி.சீனிவாசராவை நினைவு படுத்துகிறது. வழக்கம் போல அருமையான நடிப்பு. மயானப் பாதை பிரச்சினைக்காக வருபவர்களிடம் “சாவு வந்தாதான் பிரச்சினை ஞாபகம் வருமா, போராடனும்யா, தொடர்ந்து போராடனும்” என்று சொல்வது களத்தில் நிற்பவர்களுக்கும் கூட.  இளையராஜாவைத் தவிர பின்னணி இசைக்காக யாரையும் புகழ்ந்தது கிடையாது. ஜி.வி.பிரகாஷின் பிஜிஎம் சூப்பர் என்று அரங்கத்திலிருந்து வெளியே வரும் போதே என் மகனிடம்  கூறினேன்.

நிலம் மீதான உரிமை என்பது திரைப்படங்களின் பேசு பொருளாக மாறுவது ஒரு நல்ல அம்சம். அதில் பஞ்சமி நிலம் பற்றி பேசியுள்ளது இன்னும் சிறப்பு. வெக்கையை மேம்படுத்தும் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று.

நாவல்கள் படமாக்கப்படும் போது அது பெரும்பாலும் சிதைக்கப்படுவது என்பதே அரிய விதி விலக்குகள் நீங்கலாக பெரும்பாலும்  நிகழ்ந்து வருபவை. சுஜாதாவின் ப்ரியா அப்படிப்பட்ட சொதப்பலுக்கு மிகச் சிறந்த உதாரணம். காகிதச் சங்கிலிகள் மிகப் பெரிய கொடுமை. கரையெல்லாம் செண்பகப் பூவை அந்த அச்சத்தின் காரணமாகவே பார்க்கவில்லை.

ஒரு நாவலை திரைப்படம் மூலம் மேம்படுத்த முடியும். இன்னும் அதிகமான தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதை வெற்றி மாறன் விசாரணை திரைப்படத்திலேயே சாதித்தார். அசுரனின் அந்த கலை இன்னும் மேம்பட்டுள்ளது. வெக்கையை அசுரன் மூலம் வைரமாய் தீட்டியுள்ளார் என்று சம்பிரதாய வார்த்தையாக சொல்லவில்லை. நாவலை படித்த பின்பு உணர்ந்தே சொல்கிறேன்.

உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் வெற்றி மாறன்.

No comments:

Post a Comment