Monday, October 14, 2019

திரைப்பட வசூலில் இல்லை வளர்ச்சி




இன்றைய ஹிந்து நாளிதழின் முதல் பக்க செய்தி உண்மையிலேயே கவலை அளிக்கக் கூடியது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் என்பது ஆறு சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்றும் அரசாங்கம் பொருளாதார மந்தத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தால் ஒரு வேளை அடுத்த நிதியாண்டில் அது 6.9 % என்ற அளவில் உயரலாம் என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை சொல்கிறது.

பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சில ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.

2017-18 ல் 7.2 % ஆக இருந்த வளர்ச்சி, 2018-19 ல் 6.8% ஆக குறைந்து தற்போது ஆறு சதவிகிதத்தை தாண்ட வாய்ப்பில்லை என்று அந்த அறிக்கை சொல்கிறது. தொழில் உற்பத்தித்துறை, வேளாண்துறை, சேவைத்துறை ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதத்தை பின்னுக்கு இழுக்கிறது.

வீழ்ச்சியின் காலகட்டமும் அக்காலக்கட்டத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளையும் இணைத்து பார்த்தால் அதன் காரணம் புரியும்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியை சிக்கலாக்கிய பெருமை பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் அவசரகதியிலான ஜி.எஸ்.டி அமலாக்கத்தினையுமே சாரும்.

சிறு குறு தொழில்கள் நசிவு, வேலையின்மை பெருக்கம் ஆகியவை எல்லாமே இந்த இரண்டு நடவடிக்கைகளால் விளைந்த சீரழிவு. இதனை சரி செய்ய எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை.

பட்ஜெட்டிலும் அதன் பின்பு ரிசர்வ் வங்கியிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்திலும் அளிக்கப்பட்ட கார்ப்பரேட் வரி சலுகை பெரு முதலாளிகளின் கஜானாவிற்கு செல்லும் தன்மை கொண்டதே தவிர அந்த பணம் புதிய முதலீடாக, வேலை வாய்ப்பை உருவாக்கி மக்கள் கைக்கு வரும் வாய்ப்பில்லாதது. Tricke Down Theory என்பது வெறும் மாயை என்று நிரூபணமாகி வெகு காலமாகி விட்டது.

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்காத வரை வேளாண்துறையில் வளர்ச்சி என்பது சாத்தியமற்றது.

ஒரூ காலத்தில் வளர்ச்சி விகிதத்தை உயர்த்திப் பிடித்தது சேவைத்துறை. ஜி.எஸ்.டி காரணமாக அதிலும் சிக்கல் வந்து விட்டது.

மக்களிடம் பணம் புழங்குவதற்கான நடவடிக்கைகள் என்னவோ, அது எதையும் செய்யாவிட்டால் வளர்ச்சி விகிதம் ரிசர்வ் வங்கி சொன்னதைக் காட்டிலும் குறையவே வாய்ப்புண்டு.

ஆனால் பொருளாதார மந்தம் உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள தயாராக இல்லை..

மூன்று இந்தி திரைப்படங்கள் 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளதே பொருளாதாரம் நன்றாக இருப்பதன் அடையாளம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியுள்ளதே ஆட்சியாளர்கள் நிலைமையின் தீவிரத்தை  உணரவில்லை என்பதற்கான சான்று.

 பொருளாதாரம் பற்றிய ஞானம் இல்லாதவர்களின் ஆட்சியில் நிலைமை முன்னை விட மோசமாகுமே தவிர சீர் படும் என்பது  கானல் நீரே. அடுத்த ஆண்டு கூட உலக வங்கி மதிப்பிட்டுள்ள 6.8% வளர்ச்சிக்கும் வாய்ப்பில்லை.


No comments:

Post a Comment