Saturday, October 19, 2019

பாஜகவில் யாரேனும் உண்டோ?




மறைந்த மகத்தான தோழர் ஐ.மாயாண்டி பாரதி பற்றி மறைந்த பத்திரிக்கையாளர் சௌபா எழுதியது.

இப்படி ஒரு வீர வரலாறு, தியாக வரலாறு பாஜகவில் உள்ள யாருக்காவது உள்ளதா?

காட்டிக் கொடுத்தவர்களும் மன்னிப்பு கேட்டவர்களும்தான் இருக்கிறார்கள்.

அதனால்தான் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சங்கிகள் புறப்பட்டுள்ளார்கள்.


"ரெட் சல்யூட்!”

———சௌபா,------------------------------

12 வயதில் தொடங்கிய பொதுவாழ்க்கை. இளம்பிராயத்தில் தேச விடுதலைக்காக முழுதாக 13 ஆண்டுகள் சிறைவாசம்; நெல்லை சதி வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை; திரு.வி.-வின் நவசக்தியில் தொடங்கி, லோகோபகாரி லோகசக்தி, பாரதசக்தி, ஜீவாவின் ஜனசக்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் போன்ற பத்திரிகைகளில், 50 ஆண்டுகள் எழுத்துப் பணி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை முதலில் அடையாளம் கண்டவர்; வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி முதலில் எழுதி பிரபலப்படுத்தியவர்

பாவலர் வரதராஜனை அவரது தம்பிகளோடு சேர்த்து இசைக் குழு ஆரம்பிக்கவைத்து மேடை ஏற்றியவர்... இத்தனை சிறப்புகளுக்கும் உரியவர் மதுரை மக்களால் அன்புடன் '.மா.பாஎன அழைக்கப்படும் .மாயாண்டி பாரதி.

  தாத்தாவுக்கு தற்போது வயது 98. வயோதிகத்தில் சோர்ந்திருப்பார் என்ற நினைப்பில்தான்மதுரையில் உள்ள அவரது பாரத மாதா இல்லத்துக்குச் சென்றேன். மனிதர் பரபரப்பாக சில படங்களை வெட்டி ஒட்டி ஏதோ லேஅவுட் செய்துகொண்டிருந்தார்.

''கண்ணாடி தேவைப்படலையா?'' - என்று கேட்டதும் சீறினார்.

''எனக்கு எதுக்குடா கண்ணாடி? உங்களை மாதிரி வயசாகிப்போனவன்களுக்குத்தான் கண்ணாடி வேணும். எனக்கு எதுக்கு?'' என்று சிரிக்கிறார்.

''நான் 23 வயசுல எழுதின 'படுகளத்தில் பாரத மாதாபுத்தகம் இப்போ மறுபதிப்பு வரப்போகுதுல. அதுக்குத்தான் புது லேஅவுட்!'' என்கிறார் உற்சாகமாக

அர்த்தம் பொதிந்த புன்னகையுடன் தன் பால்ய காலத்துக்குள் பிரவேசித்தார்...

''அப்ப எனக்கு 12 வயசு. கள்ளுக் கடை மறியல் தீவிரமா நடந்துட்டு இருந்துச்சு. தேசபக்தர்கள் எல்லாரும் கள்ளுக் கடைகளை மூடச் சொல்லி கூட்டங்கூட்டமா  மறியல் பண்ணாங்க. போலீஸ் லத்தி சார்ஜ் பண்ணி அவங்களை வெரட்டி அடிச்சாங்க. மதிச்சியம் கள்ளுக் கடை மறியல் நடந்தப்ப, நான் படிச்ச பள்ளிக்கூட ஜன்னல் வழியா பார்த்தேன்

போலீஸ் அடிக்க, தொண்டர்கள் கையில் கிடைச்சதை எல்லாம் எடுத்து, போலீஸ் மீது எறிஞ்சாங்க. ஒரே கலவரம். என் புத்தகப் பையை எடுத்துட்டு நைஸா வெளியே ஓடி வந்துட்டேன். பையில் இருந்த புத்தகங்களை தரையில் கொட்டிட்டு கொஞ்சம் தள்ளி குவிச்சுருந்த சரளைக் கற்களை, பையில் அள்ளிட்டுப் போய் தேசபக்தர்கள் பக்கத்தில் கொட்டினேன். அவங்க அதை எடுத்து போலீஸ் மேலே எறிஞ்சாங்க... 

இப்படித்தான் என் பொதுவாழ்க்கை ஆரம்பிச்சது. கண் மூடி கண் திறக்கிறதுக்குள்ள 86 வருஷம் ஓடிருச்சு. எத்தனை ஜெயில்... எத்தனை அடி - உதை! தமிழ்நாட்டில் என்னை அடைக்காத ஜெயிலே கிடையாது. 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலுனு எனக்குப் பட்டப் பெயர்கூட உண்டு.

ரெண்டாவது உலக யுத்தம் தொடங்கினப்போ, ஆங்கிலேயர்கள் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தாங்க; யுத்த நிதி திரட்டினாங்க. 'பட்டாளத்தில் சேராதே... பணம்-காசு கொடுக்காதேனு சிவகாசியில் பேசினேன். அதுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சப் ஜெயிலில் ஆறு மாசம் அடைச்சு, 50 ரூபாய் அபராதம் விதிச்சாங்க. எனக்கு ஜாமீன் கொடுக்க அப்போ இருந்த வெள்ளைக்கார டெபுடி கலெக்டர், ' உனக்கு சொத்து ஏதும் இருக்கா?’னு கேட்டார். 'இருக்குங்கய்யா... மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கிற மங்கம்மா சத்திரம் என் சொத்து. மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மகால், வண்டியூர் தெப்பக்குளம் எல்லாம் எங்க அப்பாவோட சொத்து. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் எங்க பாட்டன், முப்பாட்டன் சொத்துதாங்கனு சொன்னேன்

இதை மொழிபெயர்த்துச் சொன்னதும் டெபுடி கலெக்டர் கடுப்பாகி, 'இவனுக்கு ஜாமீன் கிடையாது. ஜெயிலில் தூக்கிப்போடுங்கனு சொல்லிட்டுப் போயிட்டாரு.

1938-ல் ராஜபாளையத்தில் காங்கிரஸ் மாநாடு. அதுக்கு குமாரசாமி ராஜா தலைமை. அந்த மாநாட்டில் விநியோகிக்க மதுரையில் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிச்சு, 'திருப்பூர் குமரனை அங்கீகரிக்கணும்னு கோரிக்கை வெச்சுருந்தோம். அச்சடித்த நோட்டீஸ்களோடு மதுரையில் இருந்து நானும் என் நண்பனும் சைக்கிள்லயே ராஜபாளையம் போனோம். இப்ப இருக்கிற மாதிரி ரோடு இல்லை. வண்டிப்பாதைதான். பல தடவை விழுந்து எழுந்து கை கால் எல்லாம் காயங்களோடு போய்ச் சேர்ந்தோம்

அங்கு வந்திருந்த சக்திதாசன் சுப்ரமணியம், கே.ராமநாதன், மா..குருவேங்கடம்... மூவரும்தான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றினாங்க.

'நல்லா எழுதுற; பேசுற. நீ எங்ககூட பத்திரிகை ஆபீஸ் வேலைக்கு மெட்ராஸுக்கு வர்றியா?’னு கேட்டாங்க

நான் அப்போ போராட்டம், ஜெயில்னு அநாதைப் பயபோலத்தானே சுத்தித் திரிஞ்சுட்டு இருந்தேன். 'சரி வர்றேன்னு வண்டி ஏறிட்டேன். 'லோகசக்தியில் உதவி ஆசிரியர் வேலை. அண்ணா சாலைக்குப் பக்கத்தில் ஒரு தகரக் கொட்டகையில் எங்க பிரஸ் மறைவா இருக்கும். பகல் முழுக்க கை ரிக்ஷா இழுக்கிறவன் மாதிரி அப்பாவியா உட்காந்திருப்பேன். இரவு எல்லாம் கம்போஸிங், பிரின்டிங் நடக்கும்.

அப்ப நான் எழுதின, 'போருக்குத் தயார்’, 'கம்பெனியைக் கலக்கிய கட்டபொம்மன்கட்டுரைகள் ரொம்பப் பிரபலம்

போலீஸ் தேடி வந்து, 'மாயாண்டி பாரதிங்கிறது யாரு... தெரியுமா?’னு எங்கிட்டயே கேட்டாங்க. 'நான் ரிக்ஷா கூலி சாமிஎன் வண்டியில்தான் அவரு ஏறுவார். நாளைக்கு வருவாருனு சொல்வேன். மறுநாள் போலீஸ் வரும். 'அடடா... இப்பத்தான் அவரை பிராட்வேயில் எறக்கிவிட்டுட்டு வர்றேன்னு சொல்வேன்

அப்புறம் ஒரு வழியா, அது நான்தான்னு எப்படியோ கண்டுபிடிச்சு ஜெயிலில் போட்டானுக. வெளியே வந்த பின்னாடி, என்னை சோஷலிஸ்ட் இளைஞர் சங்கத்தின் செயலாளர் ஆக்கிட்டாங்க. அப்போ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காந்தியின் எதிர்ப்பை மீறி இரண்டாவது முறையா காங்கிரஸ் தலைவராத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

காங்கிரஸ்காரர்கள் யாரும் அவரை வரவேற்கவில்லை. ரயில் நிலையத்தில் நான்தான் அவருக்குக் கைகொடுத்து வரவேற்றேன். அவரோடது அகலமான முரட்டு கை. அப்புறம் மதுரைக்குப் போனார் நேதாஜி. எனக்கும் போக ஆசைதான்; ஆனா முடியலை. அங்கே முத்துராமலிங்கத் தேவர், கோபி, ஜானகியம்மா எல்லாரும் அவரை வரவேற்றாங்க!'' - ஆழ்ந்த பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தார் .மா.பா.

''சுதந்திரம் வாங்கிட்டோம். வெள்ளைக்காரன்கிட்ட வாங்கின அடியும் உதையும் முடிஞ்சுதுனு நினைச்சோம். ஆனா முடியலை. 'சீனாவை ஆதரிச்சோம்னு சொல்லி கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது காங்கிரஸ் சர்க்கார். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அடக்குமுறை காலம். நர வேட்டையாடினாங்க. சிக்கினவங்களை எல்லாம் சிறையில் போட்டாங்க.       பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கைக்குப் போயிட்டாங்க. ஆனால், செயல்பாடுகள் மட்டும் நிற்கலை.

வி.பி.சிந்தன், .கே.கோபாலன், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்களுடன் கோவை சிறையில் இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைச்சது. சிறைக்குள்ளயே வகுப்பு எடுப்பாங்க. சிறைக்குள்தான் நான் முழுமையான கம்யூனிஸ்ட் ஆனேன். அதுக்காக இப்ப வரைக்கும் நான் ரொம்பப் பெருமைப்படுறேன்

பரோல்ல வெளியே வந்தப்போ, 'இவன் நாடு, மக்கள்னு திரியிறான். இவனுக்குக் கல்யாணம் முடிச்சுவெச்சா பொண்டாட்டி, புள்ளைனு திருந்திருவான். ஊர் வேலைக்குப் போகாம இருப்பான்னு எனக்கு பொண்ணு பாத்தாங்க. நமக்கு யாரு பொண்ணு குடுப்பா? கடைசியா எங்க அக்கா மக பொன்னம்மாவைக் கட்டிவெச்சாங்க

நான் கடலூர் ஜெயிலில் இருந்தப்ப, மனு எழுதிப் போட்டு பார்க்க வந்தா எம் பொஞ்சாதி.

'ஏன் மாமா, இந்தச் சீனாக்காரன் பண்ணுறது தப்புனு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா, உங்களை வெளியில் விட்டுருவாகளாமே?’னு கேட்டா. அன்னைக்கு அவ கன்னத்துல ஓங்கி ஒரு அறை அறைஞ்சுட்டேன். 'இதுக்காடி நீ இங்க வந்தே, காங்கிரஸ்காரன் அனுப்பிவெச்சானா?’னு கேட்டேன். அவ அழுதுக்கிட்டே போயிட்டா. ஆனா, அதுக்குப் பிறகு அவ சாகிற வரைக்கும், அவ மேல் கோபமா என் கை பட்டது இல்லை.

நான் விடுதலையான கொஞ்ச காலத்தில், சேலம் சிறையில் அரசியல் கைதிகள் உரிமை கேட்டுப் போராடினாங்க. 22 பேரைச் சுட்டுக் கொன்னுட்டாங்க. நான் பல நாட்கள் சாப்பிடலை; தூக்கம் இல்லை. ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அப்போ தூத்துக்குடியில் தலைமறைவா  இருந்தோம். தூத்துக்குடி அருகே 'மீளவிட்டான்என்ற இடத்தில் ரயிலைக் கவிழ்க்கணும்னு முடிவு பண்ணினோம். அஞ்சே பேர்தான். தண்டவாளத்தைக் கழற்றிட்டுக் காத்திருந்தோம்.

அதிகாலையில் வந்த ரயில் கவிழ்ந்துச்சு. பயங்கர சத்தம். ஆனா, உயிர்சேதம் எதுவும் இல்லை. நாங்கதான் இதைச் செய்தோம்னு போலீஸ் கண்டுபிடிச்சிருச்சு. மாநிலம் முழுக்கத் தேடினாங்க. நாங்க திருநெல்வேலி மேலப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் இருந்த வீட்டில்தான் குடியிருந்தோம். காலையில் போலீஸுக்கு டீ வாங்கிக் குடுப்போம். பலமுறை அவங்களும் எங்களுக்கு      டீ வாங்கிக் குடுத்தாங்க. ஆனா, எவனோ தகவல் சொல்லி எங்களைப் புடிச்சுட்டாங்க. மறுபடியும் ஜெயில்.

'ஏகலாம் சிறைச்சாலையே - நமக்கு
அதைவிட வேறென்ன வேலையே
னு பாடிக்கிட்டே ஜெயிலுக்குப் போனோம். எல்லாம் முடிஞ்சு மறுபடியும் ஜீவாவின் 'ஜனசக்தியில் வேலைக்குச் சேர்ந்தேன்.

ஒருநாள் நெடுநெடுனு வளர்த்தியா ஒரு பையன் வந்தான். 'உம் பேரு என்ன?’னு கேட்டேன். 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு சொன்னான். 'நண்டு செய்த தொண்டுனு ஒரு கவிதை எழுதியிருக்கேன். உங்க பத்திரிகையில் போட முடியுமா?’னு கேட்டான். '

இதுக்கு முன்னாடி பத்திரிகையில் உன் கவிதை வந்திருக்கா?’னு கேட்டேன். 'இல்லைனு உதட்டைப் பிதுக்கினான்.

'கவிதை இருக்கட்டும். இதைப் பாட்டா படிக்க முடியுமா?’னு நான் கேட்ட மறுநிமிஷமே, மேஜையில் தாளம் போட்டு, அதைப் பாட்டா படிச்சான். 'இப்படி இசையோட எழுதுனு சொல்லிட்டு, கவிதையைப் பிரசுரித்தேன்

அடிக்கடி கவிதையோடு வருவான். நானும் பிரசுரம் பண்ணுவேன். ஒருநாள் படபடப்போடு வந்து, 'எம்.ஜி.ஆர்., பாட்டு எழுதக் கூப்பிடுறார். நான் போகட்டுமா?’னு கேட்டான்.

'டேய்... கட்சிக்காரன் எவன்கிட்டயும் சொல்லாத. 'வேணாம்னுவாங்க. அவரு மகா நடிகர்டா. உனக்கும் நல்லது; அவருக்கும் நல்லதுனு சொல்லி அனுப்பிவெச்சேன்.

தேவிக்குளம், பீர்மேடு இடைத்தேர்தல் சமயத்தில் பண்ணைபுரத்தில் இருந்து 'வரதராஜன்னு ஓர் இளைஞன் வந்தான். அவனே பாட்டுக் கட்டி ஒரு கி.மீ சுற்றளவுக்குக் கேட்கிற மாதிரி பாடுவான். அப்படியொரு  கூட்டம் கூடுச்சு. தேர்தல் முடிஞ்சதும் மதுரைக்கு வந்தான்.

'எனக்கு ஏதாச்சும் நீங்க வழி சொல்லணும்னு சொன்னான்.

'நான் என்ன வழி சொல்ல... ஒண்ணு செய்யிநீ தனியாளா பாடினது போதும். உன்கூடப் பாடுறதுக்கு ஆளுங்க இருக்கானுகளா?’னு கேட்டேன்.

'என் தம்பிகள் இருக்காங்கனு சொன்னான்.
'பொண்ணுக?’

'என் தம்பி ராசைய்யா பெண் குரலில் பாடுவான்னு சொன்னான்.
'நீங்க இசைக்குழு ஆரம்பிங்கனு சொன்னேன்


உடனே 'பாவலர் சகோதரர்கள் இன்னிசை நாடக மன்றம்னு ஆரம்பிச்சாங்க. ஊர் ஊராப் போயி சக்கபோடு போட்டாங்க. அந்த ராசைய்யாதான் நம்ம இளையராஜா.

இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா, நேத்து நடந்ததுபோல இருக்கு. ரொம்பப் பெருமிதத்தோடு இருக்கேன். ஒரே ஒரு வருத்தம் மட்டும்தான் என் மனசை அறுக்குது!'' என்றார் .மா.பா.

சற்றுநேர மௌனத்துக்குப் பிறகு, ''அப்ப போலீஸ்காரன் எங்களை அடிக்கிறப்ப நாலு அடிதான் வலிக்கும். மீதி நாப்பது அடி பொத்து பொத்துனு சத்தம்தான் கேட்கும். இப்ப பேப்பர்களில் வர்ற செய்திகளைப் பார்த்தா ஒவ்வொரு வரியும் வலி தருது. இதுக்குத்தானா இத்தனை வருஷம் சிறைப்பட்டோம், அடிபட்டோம், குடும்பம் பெருசு இல்லை... நாடுதான் முக்கியம்னு அலைஞ்சோம்?’னு வருத்தமா இருக்கு.

சாதிச் சண்டைங்கிறான், மதக் கலவரம்கிறான், சொத்து குவிச்சிட்டாங்கங்கிறான். அரசியல்ல ஆலமரங்கள்கூட காளான்கள்கிட்ட அண்டி நிக்குது

ஒண்ணு மட்டும் சொல்றேன்... அதிக சொத்தும் பணமும் சேர்ந்தா, அது சனியன் பிடிச்சது மாதிரி. எனக்கு இருந்த சொத்துக்களைப் பிரிச்சு சொந்தபந்தங்களுக்குக் கொடுத்திட்டு, பென்ஷன் பணத்தில் நிம்மதியா இருக்கேன். எனக்கு புள்ளகுட்டி இல்லைங்கிற குறைகூட இல்லை. எல்லாருமே என் புள்ளைங்கதானே!'' என்கிறார் .மா.பா.

விடை பெறும் முன் கைகூப்பி வணங்கினேன். தனது இடது கையால் என் கையை அழுத்திப் பிடித்து, தனது வலது கை முஷ்டியை உயர்த்தி .மா.பா-வின் உதடுகள் பெருமிதம் பொங்க உச்சரித்தன.

''ரெட் சல்யூட்!'

No comments:

Post a Comment