Wednesday, February 7, 2018

சரியாதான் சொல்றாரு மதுரக்காரரு



உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்து மதுரை மக்களை மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கோவிலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று பக்தர்கள் மட்டுமின்றி மதுரை மக்கள் அனைவருமே வலியுறுத்துகின்றனர். ஆனால், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்பதுபோல இந்துத்துவா கூட்டம், தீயை அணைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோதே, பாரத் மாதாகி ஜே என்றும் அறநிலையத்துறையே கோவிலை விட்டு வெளியேறு என்றும் கோஷமிட்டுள்ளது. எச்.ராஜா முதல் இந்துத்துவா தலைவர்கள் பலரும் தங்களது நெடுநாள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முயல்கின்றனர். சில ஊடகங்கள் ஜோதிட சிகாமணிகளின் கருத்து என்ற பெயரில் குட்டையை குழப்பி வருகின்றன. இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்தும் இதன் பின்னுள்ள அரசியல் குறித்தும் கோவில் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வ பணிகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளரும் தமுஎகச பொதுச் செயலாளருமான சு.வெங்கடேசன்....

தீவிபத்தும்-தீயவர் கூச்சலும்...


இது விபத்தா? சதியா? என்று ஆய்வு செய்ய வேண்டுமென எச்.ராஜா கூறியுள்ளாரே...

காவல்துறை உரிய ஆய்வினை செய்யட்டும். அதே நேரம்,இவ்விபத்துக்கு நிர்வாகச் சீர்கேடே காரணம் என மாவட்ட ஆட்சியரின் பெயரில் உடனடியாக ஒரு அறிக்கை வெளியானது. ஆனால், அது மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கைஅல்ல என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. அப்படியென்றால், இந்த அறிக்கையை ஊடகங்களில் வெளியிட்டதுயார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதையும் காவல்துறை கண்டறிய வேண்டும்.

முயற்சி பலிக்காது

திராவிட அறநிலையத்துறையின் வசமிருந்து கோவில்களை மீட்க வேண்டும் என்கிறார்களே எச்.ராஜா, ராமகோபாலன் போன்றவர்கள்...

இது அவர்களுடைய நீண்ட நாள் கனவு. திராவிட அறநிலையத்துறை என்ற வார்த்தையை பயன்படுத்துவதிலிருந்தே அவர்களுடைய முழு வன்மமும் வெளிவருவதை நாம்பார்க்கிறோம். கோவில்கள் கொள்ளைக் கூடாரமாக திகழ்ந்த நிலையில்தான் 1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் பனகல்அரசரால் இந்து அறநிலையச்சட்ட மசோதா அறிமுகப் படுத்தப்பட்டு, 1925 இல் நிறைவேற்றப்பட்டது. இது இந்தியாவுக்கே முன்னோடியான ஒரு முயற்சியாகும். பல லட்சம் ஏக்கர்நிலங்களும் பல நூறு கோடி சொத்துக்களும் கொண்ட இந்து அறநிலையத்துறையை சிறப்பாக அரசு நிர்வகிக்க வேண்டும் என்று சொல்வதை விடுத்து, அரசே வெளியேறு,நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்வது இவர்களதுஆசை. அது ஒருபோதும் தமிழகத்தில் நிறைவேறப் போவதில்லை. ஆன்மீகத் தலங்களையெல்லாம் தங்களது அரசியல்தலங்களாக மாற்ற இந்துத்துவா சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த முயற்சி தமிழகத்தில் பலிக்காது. இந்த தீ விபத்தை முன்னிட்டு கோவில் வளாகத்திற்குள் கடைகள் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கும், கோவிலேஇந்து அறநிலையத்துறையிடம் இருக்கக் கூடாது என்று பாஜகசொல்வதற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டினை மக்கள்நன்கு அறிவர்.

பிரிட்டிஷ் ஆட்சியரின் புதிய நிர்வாகம்

எழுத்தாளர் பத்ரி இந்தக் கோவிலை உள்ளூர் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளாரே....?

மீனாட்சி அம்மன் கோவில் மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது, எண்ணற்ற முறைகேடுகளும் நிர்வாகச் சீரழிவுகளும் ஏற்பட்டதால்தான், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் மதுரை மாவட்ட கலெக்டர் பிளாக் பெர்ன் கோவில்நிர்வாகத்தை ஆதீனத்தின் பிடியிலிருந்து விடுவித்து, புதியதொரு நிர்வாகக் குழுவின் கீழ் கோவில் நிர்வாகத்தைக் கொண்டு வந்தார் . அது, மதுரை மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கோவில் சொத்துகள் இந்த அளவாவது பாதுகாக்கப்பட்டன. அதனால்தான், அவரின் பெயரில்மதுரையில் ஒரு விளக்குத்தூணை அமைத்தபோது, அதில்ஏற்றப்படும் தீபத்திற்கான எண்ணெய் மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து பல ஆண்டுகள் கொடுக்கப்பட்டது என்பது வரலாறு. எனவே, மீண்டும் பழைய நிலைக்கு வரலாற்றை திருப்ப நினைப்பவர்களின் ஆசை நிறைவேறப் போவதில்லை. கோவிலை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும்என்ற கோரிக்கைக்கு பின்னால் இருப்பது ஆன்மீகம்சார்ந்த அக்கறை. கோவிலை விட்டு அறநிலையத்துறையே வெளியேறு என்று சொல்வது இந்துத்துவாவின் அரசியல். இதை பக்தர் களும் ஆன்மீகவாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

நிர்வாகக்குறைபாடா?சிறப்பான செயல்பாடா?

மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக குறைபாடுதான் இந்த விபத்திற்கு காரணம் என இந்துத்துவா அமைப்புகள் கூறுகின்றனவே...

மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினுடைய செயல் பாடுகள் கடந்த பத்துஆண்டுகளாக மிகச்சிறப்பான முன்னேற்றங்களை கண்டுள்ளதை மதுரை மக்கள்நன்கு அறிவர். உதாரணமாக, கோவிலையும் கோவில் சுற்றுப்புறப் பகுதிகளையும் மிகத்தூய்மையாக பராமரித்ததன்காரணமாக நாட்டிலேயே தூய்மையான வழிபாட்டுத் தலம்என்பதற்கான மத்திய அரசினுடைய விருதை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் பெற்றது. இதே விருது 2016 ஆம் ஆண்டு திருப்பதி திருமலை தேவஸ்தானத்து கோவிலுக்கும் வழங்கப்பட்டது. திருப்பதி கோவிலின் வருமானத்தோடு ஒப்பிட்டால், மீனாட்சி அம்மன்கோவிலின் வருமானம் மிக மிகக் குறைவானது. ஆனாலும்,மிகச்சிறப்பாக இப்பணியை கோவில் நிர்வாகம் செய்துள்ளது என்பதன் அடையாளம் தான் இது. 

அதுமட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவிலுக்குள் இருக்கும் பொற்றாமரை குளத்தில் நீரை தேக்கி வைப்பதற்கான வழிமுறை தெரியாமல், டைல்ஸ் கல் பதித்து தேக்கி வைத்திருந்ததையெல்லாம் நாம் பார்த்தோம். ஆனால், இப்போது அதையெல்லாம் எடுத்துவிட்டு, சென்னை ஐஐடி பேராசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில், இந்தப் பகுதியில் உள்ள களிமண்களை அடிநிலமாக வைத்து 12 மாதங்களும் பொற்றாமரைக் குளத்தில் நீர் தேங்கி இருப்பதற்கான ஏற்பாட்டினை இந்த நிர்வாகம் செய்துள்ளது. அதே போல்,தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை புரியும்இக்கோவிலில், தற்காலிக தடுப்புகள் சாலைகளில் இருப்பதைப்போன்று உருவாக்காமல் இதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இது கோவிலில் பரப்பப்பட்டிருக்கும் கல்லினையோ சுவரினையோ சேதாரப்படுத்தாமல் தடுப்பு அமைக்கும் பணியாகும். தமிழக இந்து அறநிலையத்துறை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யப்பட்டுள்ள இதே ஏற்பாட்டையே மற்ற கோவில்களிலும் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோன்று மீனாட்சி, சொக்கநாதரின் இரண்டு கருவறைகளும் காற்றோட்ட வசதி மிகக் குறைவாக உள்ள பகுதியாகும். ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி இங்கே வருவதால் ஏற்படும் அசௌகரியத்தை தடுக்க கோவில் நிர்வாகம் இரண்டுகருவறைகளுக்கும் குளிர்சாதன வசதியை செய்துள்ளது. இதுவெல்லாம், இக்கோவிலினுடைய சிறந்த நிர்வாகத்தினுடைய அடையாளங்கள். குறிப்பாக, கோவில் தக்கார் திரு.கருமுத்துகண்ணன், நிர்வாக இணை ஆணையர் திரு. நடராஜன் ஆகியோரின் செயல்பாடுகள் மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றன.இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி இரவு 10.30 மணிக்குமேல் கோவிலின் வீர வசந்தராயர் மண்டபத்தின் கடைகளில்ஏற்பட்ட தீ விபத்து எல்லோரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது. தீ விபத்து பரவாமல் உடனடியாக தடுப்புப் பணிகளை முடிந்தளவு சிறப்பாக கோவில் நிர்வாகமும் தீயணைப்புத் துறையும் செய்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.

கோவில் நிர்வாகத்தின் இரண்டாண்டு கோரிக்கை
தீ விபத்து ஏற்பட்டதையொட்டி நிர்வாகத்தின் மீது சிலர் குற்றச்சாட்டு எழுப்புவதன் பின்னணியில் இருப்பது என்ன என்று கூற முடியுமா?

குற்றச்சாட்டின் அடிப்படை கோவில்களுக்குள் வணிக நிறுவனங்கள் நடத்துவது சம்பந்தப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வணிக வளாகங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இதே கோவில் நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது என்பதை இன்று நாம் கவனிக்க வேண்டியுள்ளது. கோவில்களுக்குள் இருக்கும் இக்கடைகளால் கடந்த பல ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறவர்கள் பணம் சம்பாதித்து வருகிறார்கள். எனவே, கடைகளை அகற்றவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆட்சியாளர்கள் செவி சாய்த்ததே கிடையாது. குறிப்பாக, கோவில் என்பது ஆன்மீகம்,வரலாறு, பண்பாடு, கலை அனைத்தும் சம்பந்தப்பட்ட இடம்.ஆனால், வணிக வளாகங்களை கோவில்களுக்குள் அமைப்பதன் மூலம் மிகச்சிறந்த கலை பொக்கிஷங்களை மக்கள் பார்க்க முடியாமல் செய்கிற வேலை பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது.

மக்கள் கோரிக்கை

குறிப்பாக, புதுமண்டபம் தமிழகத்தினுடைய கலை பொக்கிஷங்களில் ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் முதல் அருங்காட்சியகம் இங்கே தான் துவங்கப்பட்டது. திருமலை மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த மண்டபம் தமிழகத்தின் சிற்பக் கலைக்கு நிகரற்ற எடுத்துக்காட்டாகும். ஆனால், இன்று அம்மண்டபத்திற்குள் நுழைகிற ஒரு மனிதன் ஒரு சிற்பத்தைக் கூட முழுமையாக காண முடியாதச் சூழல் நிலவுகிறது. அனைத்தும் வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள்ளும் புதுமண்டபத்திற்குள்ளும் இருக்கிற கடைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக மதுரை மக்களினுடைய கோரிக்கையாகும். ஆனால், இதை எந்த அரசும் கடந்தகாலத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில்தான்,இப்பொழுது நடந்திருக்கிற விபத்தினை முன்னிட்டாவது, மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளும் புதுமண்டபத்திற்குள்ளும் இருக்கிற கடைகள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். நமது கலைப் பொக்கிஷங்களும் ஓவியங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். நூறு வணிகர்களின் லாபத்திற்காக ஆயிரம் ஆண்டுகால வரலாறு சிதைவதை நாம் அனுமதிக்க முடியாது. அதே நேரத்தில், இதை பயன்படுத்தி அரசியல் லாபம் அடைய நினைப்பவர்களுக்கு நாம் இடம் தந்து விடக் கூடாது.

அமைச்சர்களின் மௌனம்...

தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுத்து மேலும் தீ பரவாமல் அணைத்தது நல்லது. ஆனால், அதற்குப் பிறகாவது அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்துவது, கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பது என்ற முறையில், தமிழக அமைச்சர்களின் பேச்சுக்களும் கருத்துக்களும் அமையவில்லையே? எனவே, இதன் பின்னணியில் பலருக்கும் லாபம் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறதே...

தீ விபத்து பரவாமல் போராடி உடனடியாக கட்டுக்குள் கொண்டுவந்ததை நாம் பாராட்ட வேண்டும். குறிப்பாக, வீர வசந்தராயர் மண்டபத்தின் தொடர்ச்சிதான் ஆயிரங்கால் மண்டபம். அதில் உள்ள கலை வேலைப்பாடுகள் யாவராலும் வியக்கக்கூடியது. வீர வசந்தராயர் மண்டபத்தைவிட காலத்தால் மிகப் பழமையானது. தற்போது தமிழக தொல்லியல் துறையினுடைய அருங்காட்சியகம் ஒன்றும் அதற்குள் இருக்கிறது. அங்கெல்லாம் தீ பரவாமல் போராடி கட்டுக்குள்கொண்டுவந்த தீயணைப்புத்துறையினரை நாம் பாராட்டத்தான் வேண்டும். அதே நேரத்தில், இதனுடைய தொடர்ச்சியாகவாவது, கோவிலுக்குள் இருக்கும் வணிக வளாகங்களை அப்புறப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எந்தவொரு அமைச்சரும் கூறாதது ஏன் என்றகேள்வி எழுகிறது. இவ்வணிக வளாகங்களின் வருமானத்திற்கும் இவர்களுக்கும் இருக்கும் உறவு என்ன? என்பதுதொடர் கேள்வியாக இருக்கிறது.

உண்மை பரிகாரம்

தீ விபத்து குறித்து பல தொலைக்காட்சிகளில் ஜோதிட நிபுணர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் உளறுவதைப் பற்றி....
இந்தப் பிரச்சனையில் கருத்துச் சொல்ல வேண்டியவர்கள்தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும்தான். விபத்து நடக்கப்போவதாக எந்த ஜோதிடரும் கணித்துச் சொல்லவில்லை. ஏதாவது நடந்தால், பரிகாரம் என்ற பெயரில்காசு பார்க்கிற வேலை நெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்தப் பிரச்சனையில் ஜோதிடர்கள் விலகி நிற்பதே உண்மையான பரிகாரமாக இருக்கும்.

நன்றி -தீக்கதிர் 07.02.2018

No comments:

Post a Comment