Friday, February 23, 2018

ஓடிப் போன போலீஸிற்கு ஒரு பாட்டு

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!

செ.முத்துக்கண்ணன்,
செந்தொண்டர் படைத் தலைவர், சிபிஐ(எம்)


“கற்றுக்கொள், பிரச்சாரம் செய், ஸ்தாபனமாக்கு” - என்றார் ஜெர்மனி தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி தலைவர் வில்லியம் லீப் னெஹ்ட். 

அத்தகைய மகத்தானவர்களின் வார்த்தைகளைத் தாங்கி உழைக்கும் மக்களின் உரிமை போராட்டத்தின் திட்டமிடும் திருவிழாவாக பேரெழுச்சியோடு நடந்தேறியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு.மாநாட்டின் நிறைவாக மாநிலம் முழுவதும் இருந்து, பயிற்சி பெற்ற இளம் தோழர்களின் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு பிப்ரவரி 20 செவ்வாயன்று மதியம் 3.30 மணிக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கொடியசைத்து துவக்கி வைக்க மிடுக்கோடு நடைபோடத் துவங்கியது.

மாவட்ட வாரியாக தோழர்கள் அணி, அணியாக நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுப்பாட்டோடு, ராணுவ மிடுக்கோடு கம்பீர அணிவகுப்பை நடத்தினார்கள். அமைதியான முறையில் ஆனால் அதிர வைக்கும் நடையோடு நடந்த அந்த இளம் தோழர்களைக் கண்ட போது, தொப்பை வளர்த்த சில காவலர்களுக்கு கோபம் பிறீட்டு கிளம்பியுள்ளது. ‘மக்களின் நண்பன்’ என்று காவல் நிலையங்களில் எழுதி வைத்துவிட்டு எப்போதும் மக்களின் விரோதியாக செயல்படுவதையே வாடிக்கையாக கொண்டவர்களோ - என சந்தேகப்படும்படியான நபர்களாக அங்கே தமிழக காவல்துறையின் கறுப்பு ஆடுகள் சிலர் நடந்து கொண்டனர். 

அமைதியாக நடந்த செந்தொண்டர் அணிவகுப்பினை சீர்குலைக்கும் நோக்கோடு காத்திருந்த அந்த கண்கொத்திப் பாம்புகளுக்கு சிறு வாய்ப்பு ஏற்பட்டது. பேரணிக்கு இடையூறாக இரண்டு சக்கர வாகன ஓட்டி ஒருவரும், நான்கு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரும் செல்ல முற்படும்போது, கண்ணியமிக்க செந்தொண்டர்களின் அணிவகுப்பை சாலையோரத்தில் இருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்த மாணவர் அமைப்பின் தலைவர்களில் ஒருவர், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம், சில நிமிடங்கள் பொறுங்கள்; அணிவகுப்பின் இந்தக் குழு நகர்ந்தவுடன் நீங்கள் செல்லலாம் என பவ்வியமாகச் சொல்லி புரிய வைத்துள்ளார்.



அப்போது வந்த காவல்துறையின் இளம் ஆய்வாளரும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஓரமாக நகர்ந்துகொண்டார்.ஆனால் தன்னை சினிமா கதாநாயகனாக நினைத்துக் கொண்ட காவல் உயர் அதிகாரியான உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் என்பவர், கண்ணுக்கு கறுப்புக் கண்ணாடி, காதில் மாட்டிக்கொள்ள ப்ளுடூத், கையில் காப்பு வளையம் என நிழல் ‘ஹீரோவாக’ வந்து, அங்கே என்ன நடந்தது என்று தெரியாமல் வில்லத்தனத்தில் ஈடுபட்டார். சினிமா பாணியில் கையால் மாணவர் சங்கத் தலைவரைத் தாக்க முற்படும் போது உடன் வந்த அடிவருடி காவலர்களும் தங்கள் பங்கிற்கு தாக்க ஆரம்பித்துள்ளனர். 

இதனைக் கண்ணுற்ற, செந்தொண்டர் அணியில் வந்த இளம் தோழர்கள் நியாயம் கேட்டு, தாக்குதலை தடுக்க சென்றுள்ளனர். அப்போது, மேற்படி ஹீரோ செல்வநாகரத்தினம் அந்த இடத்தில் ஓட்டல் முன்பு போடப்பட்டிருந்த விறகுக் கட்டைகள் மற்றும் சென்ட்ரிங் பலகைகளை உருவி எடுத்து தாக்க ஆரம்பித்து, தனது காவலர்களையும் விறகு கட்டைகளை எடுத்து தாக்க சொல்லியுள்ளார். 

தாக்கிய அந்த காவலர்களுக்கு தெரியாது யாரை தாக்குகிறோம் என்று...தமிழகத்தில் சுனாமி தாக்கியபோதும், வர்தா, ஒக்கி புயல்கள் தாக்கியபோதும், மழை வெள்ளம், வறட்சி காலங்களில் தமிழகம் தாக்குண்டபோது களத்தில் பணியாற்றியவர்களின் வாரிசுகள் என்று!கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களோடு சேர்ந்து மக்களுக்கு விரோதமாக கூட்டுக் களவாணித்தனத்தில் ஈடுபட்ட காவல்துறைக்கு தெரியாது... அணிவகுப்பில் வந்தவர்கள் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் போதைக்கும் எதிரான போராட்டத்தில் வீரமரணமடைந்த சோமு, செம்பு, அமல்ராஜ், கோபி, சந்துரு, ஆனந்தன், குமார், லீலாவதி போன்ற ஒப்பற்ற தியாகிகளின் வாரிசுகள் என்று! 

இப்போது ஓலமிடுகிறதே தமிழக காவல்துறை, பொறுமை காத்திருக்கலாம் என்று... என்ன பொறுமை, யாருக்குப் பொறுமை...?அடி வாங்கியவர்களைப் பார்த்து, அத்துமீறிய காவல் கூட்டம் பொறுமை - பொறுமை என்று ஓயாமல் உபதேசம் செய்கிறார்கள். பொறுமையாய் காத்திருந்த காலத்தில் என்னசெய்தார்கள்... மன்னிப்புக்கேட்பதாக நாடகம் ஆடிவிட்டு, அடிபட்ட தோழர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளார்கள். உலகை அழிக்க நினைத்து கடைசியில் செங்கொடியின் மீது கை வைத்துப் பார்த்தான் அயோக்கியன் ஹிட்லர்; அவன் துவக்கிய யுத்தத்தை அவனது கோட்டையிலேயே முடித்து செங்கொடியை ஏற்றிய சரித்திரம் படைத்தது செம்படை என்ற வரலாற்றை அறியாதவர்கள் காவல்துறையின் இந்த புல்லுருவிகள். 

உலகமே கொந்தளிப்பில், முதல் உலகப்போருக்கான முஸ்தீபில் இருந்த தருணத்தில் கூட யுத்தத்திற்கு எதிரான சமாதான முழக்கத்தை பிரகடனப்படுத்தியவர்கள் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட்டுகள். இந்த வரலாறு செந்தொண்டர்களுக்குத் தெரியும் என்பதால் உண்மையில் தூத்துக்குடியில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்ததோடு மட்டுமல்ல, காவல்துறையினரையும் பாதுகாத்தது செம்படையே! 

இளம்செந்தொண்டர்களுக்கு இருந்த அந்த உயர்ந்த மனிதாபிமானம், மனிதநேயம் கூட வயதான அந்த காவலர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படாதது இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு முறையின் கொடூரத்தை தோலுரித்துக் காட்டியது.செந்தொண்டர் ஒருவரை சுற்றி வளைத்து தாக்கியபோதும், வேடிக்கை பார்த்த 4 வயதுக் குழந்தையின் மீது ஒரு காவலர் வீசிய மரக்கட்டை தாக்குதலில் மண்டை உடைந்ததும் கண்ட அந்த இடத்தில் இருந்த பெண்கள் ஆண்களுக்காக காத்திருக்கவில்லை. காக்கிச்சட்டை போட்டவர்களா நீங்கள்; இவ்வளவு பெரிய எண்ணிகையில் வந்தவர்களை உங்களால் என்ன செய்ய முடியும் என்று காவலர்களிடம் நியாயம் கேட்டு முழக்கங்களையும், உரிமைக்குரலையும் உயர்த்திய போது காவல்துறைக்கு புரிந்திருக்கும் நாம் கைவைத்தது தேன்கூட்டில் என்று!

அடிக்க அடிக்க அடிவாங்க நாங்கள் தவறு செய்யவில்லை; உரிமைக்கான பிரகடனம் வெளியிட ஊர்வலமாய் வந்தவர்கள் நாங்கள்; அரசியல் உணர்வுள்ள தொழிலாளர்கள் அடிதடி போராட்டம் நடத்தக்கூடாது என 1899 அன்றே தோழர் லெனின் எங்களுக்கு போதித்திருக்கிறார்; இனி ஒரு அடி விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என்று இளம் தோழர்கள் எச்சரித்த போது காவல்துறை அடங்கியிருக்க வேண்டும். ஆனால் அடாவடியைத் தொடர்ந்த காரணத்தால், அதை நிறுத்த அவர்களின் கையில் இருந்த விறகுக் கட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டிய கட்டாயம் செந்தொண்டர்களுக்கு ஏற்பட்டது. 

இப்போதும் உரக்கச் சொல்கிறோம், தமிழகக் காவல்துறைக்கு... 

கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்காக மட்டுமல்ல, இந்த சமூகத்தை அனைவருக்குமானதாக மாற்றி அமைக்க விரும்புபவர்கள். மகத்தான மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்கள். எனவேதான் காவல்துறையின் சதித்திட்டத்தை முறியடித்து அமைதியை நிலை நாட்டினார்கள். தூத்துக்குடியை அமைதியாக அனைவரும் நேசிக்கும் பூமியாக காவல்துறையின் தாக்குதலுக்குப் பின்னும் பாதுகாத்தார்கள். 

செல்வ நாகரத்தினம் போன்ற அதிகாரிகளுக்குச் சொல்வோம்... 

பாவேந்தரின் மொழியில் சொல்வோம்...

ஆடுகின்றாய் உலகப்பா! 
யோசித்துப்பார்!    ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பாரப்பா!தேடப்பா ஒருவழியை என்று சொன்னேன்.   
செகத்தப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்,
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்   உதையப்பர் ஆகிவிட்டால், ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர்ஆய்விடுவார் உணரப்பாநீ!


நன்றி - தீக்கதிர் 23.02.2018

No comments:

Post a Comment