பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு நேற்று முடிந்தது. எத்தனை மணிக்கு முடிவுகள் வெளியானாலும் அவர்களுக்கான பணியிடம் என்ன என்பதை முடிவு செய்து விடுவோம் என்று தொழிலுறவு மேலாளர் சொன்னதால் அலுவலகத்திலேயே சங்கப் பொறுப்பாளர்கள் காத்திருந்தோம். அது வழக்கமான நடைமுறைதான். பதவி உயர்வு முடிவுகள் வெளி வந்து பணியிடங்களை இறுதிப்படுத்தி அதற்கான ஆணை வெளி வந்தவுடன் வீட்டிற்கு கிளம்புகையில் இரண்டரை மணி ஆகி விட்டது. நள்ளிரவு இரண்டரை மணி.
நம்ம ஏரியா நாய்த் தொல்லைக்காக ஆட்டோவிலேயே வீட்டிற்கு போகலாம் என்றால் கோட்ட அலுவலகக் கிளையின் செயலாளர் தோழர் கங்காதரன், "நான் உங்களை வீட்டில் விட்டு விட்டுப் போகிறேன். நாய்கள் என்ன செய்கிறது என்று பார்ப்போம்" என்று சொல்ல அவர் கொடுத்த தைரியத்தில் அவர் வண்டியின் பின் அமர்ந்து புறப்பட்டேன்.
அலுவலகத்திலிருந்து வீடு வருகிற வரை வழி எங்கும் நாய்கள் மயமே. அந்த காலத்தில் பத்து அடிக்கு ஒரு ஜெயலலிதா கட் அவுட் இருக்கும். அந்த கட் அவுட்டிற்கு ஒரு போலீஸ் காவல் இருப்பார். அது போல பத்தடிக்கு ஒரு நாய்.
வீடு வரும் வரையில் எண்ணிக் கொண்டே இருந்தேன். சரியாக நாற்பது நாய்கள். "பாவம் களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள், பிழைத்துப் போகட்டும்" என்று அமைதியாக இருந்து விட்டன.
இன்று காலை அலுவலகம் வந்ததும் தோழர் கங்காதரன் சொன்னார்.
"ஐம்பத்தி மூன்று"
நான் புரியாமல் பார்த்தேன்.
உங்கள் வீடு வரை நாற்பது.
என் வீட்டிற்கு போகிற வரையில் ஐம்பத்தி மூன்று.
மேனகா காந்தி உள்ளிட்ட ப்ளூ க்ராஸ், பீட்டா ஆட்களை வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் நள்ளிரவில் நடக்க வைக்க வேண்டும்.
பின் குறிப்பு : படம் பழையதுதான்.
No comments:
Post a Comment