Saturday, February 17, 2018

ஓடி வரும் கோழிக்கால்கள்...ஓடிப்போன நீரவ் மோடிக் கால்கள்...

எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதி இன்றைய தீக்கதிர் நாளிதழில் பிரசுரமான கட்டுரை





இரண்டு பரபரப்பான தகவல்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. 

அமெரிக்க கோழிக்கால்களின் இறக்குமதிக்கு இருந்த கடைசித் தடையும் நீங்கிவிட்டதாம். இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை இதற்கான சான்றிதழ்களில் இருந்த சிக்கல்களையெல்லாம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் மருந்து ஆணையத்திடம் பேசி முடித்துவிட்டதாம். இது குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா எழுப்பியிருந்த தகராறு முடிவுக்கு வருகிறது.இம்முடிவு உள்நாட்டு கோழிவணிகத்திற்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. ஒரு ஆண்டிற்கு இந்தியாவில் 35 லட்சம் டன்கள் கோழிச்சந்தையில் புழங்குகிறது. ஒருகிலோ கோழி ரூ.160 எனில் ரூ.5600 கோடி பெறுமான சந்தை என்றால் பாருங்களேன். இதில் 40 சதவீதச் சந்தையை அமெரிக்க இறக்குமதி கைப்பற்றக்கூடும் என அத்தொழிலைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். (இந்து பிசினஸ் லைன் - பிப்ரவரி 16, 2018). அதாவது ரூ.2280 கோடி சந்தைக்கு அமெரிக்கா கோழிகளுக்கு வழி திறந்து விடப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் இந்திய மக்களைத் தாக்கியபோது இறக்குமதி மீது கடும் நிபந்தனைகளை இந்தியா விதித்திருந்தது. அமெரிக்க உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்வாணையத்திற்கு இந்தியாவை இழுத்தது. அதற்குப் பின்னர் இரண்டு முறை இந்தியா நிபந்தனைகளை சற்று தளர்த்தியது. அதையும் அமெரிக்கா ஏற்காமல் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அதன் விருப்பத்திற்கேற்ப சான்றிதழ் நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.“ இந்தியாவிற்குள் நடந்து வரும் அமெரிக்க கோழிக்கால்கள் ” என்பது இந்து பிசினஸ் லைன் செய்தித் தலைப்பு.

அடுத்து, ஓடிப்போன நீரவ் மோடியின் கால்கள் பற்றிய செய்தி. 11300 கோடி மோசடி பஞ்சாப் நேசனல் வங்கியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த வங்கி கொடுத்த “ உத்தரவாதக் கடிதங்கள் ” அடிப்படையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியனவும் கடன்களைக் கொடுத்துள்ளன.விஜய் மல்லய்யாவைப் போலவே இப்போது நீரவ் மோடியும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. இம்மோசடி குறித்து ஜூலை 26, 2017 அன்றே பிரதமர் அலுவலகத்திற்கு புகார்கள் போயிருக்கின்றன என்றும் செய்திகள் கூறுகின்றன.சாதா கோழிகள் இறக்குமதியாகின்றன. தங்கக் கோழிகள் தப்பி ஓடுகின்றன.

இழுக்காத இன்ஜினும்... நகராத பெட்டிகளும்...

இந்து பிசினஸ் லைன் (பிப் 14,2018 ) தலையங்கம் மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான ஒதுக்கீடுகள், திட்டங்கள் குறித்து எழுதியுள்ளது. இதோ அதன் சாரம்...இரண்டாவது ஆண்டாக ரயில்வே பட்ஜெட் தனியாக அல்லது பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.2லட்சம் கோடி வருவாய் தினமும் 2கோடி பயணிகள் என இயங்குகிற ஓர் பெரும் நிறுவனம் குறித்த குவி கவனமும், ஆழமான விவாதமும் இல்லாமல் போய்விட்டது.2018 பட்ஜெட்டில் ரயில்பாதை இரட்டிப்பு (Doubling) அகலப்பாதை விரிவாக்கம் (BG conversion) நவீன கோச்சுகள் போன்ற மூலதனச் செலவுகளுக்கு ரூ. 1.48 லட்சம் கோடிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ரூ. 53060 கோடிகளே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதம் வெளிக்கடன்கள்தாம். இது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் (2017) ஒதுக்கப்பட்ட ரூ. 55000 கோடிகளை விடக் குறைவு. இதைவிட முக்கியமான தகவல் ஒன்று உண்டு. சென்ற ஆண்டு பட்ஜெட்டில் ரூ.55000 கோடி ஒதுக்கப்பட்டாலும் உண்மையில் செலவழிக்கப்பட்ட அல்லது திருத்திய மதிப்பீடு ரூ. 44000 கோடிகளே. ஒதுக்கிய தொகையைக் கூட செலவழிக்க இயலாத அளவிற்கு ரயில்வே செயல்பாடு இருக்கிறது. தலையங்கத்தின் சாரம் இவ்வளவு காரமாக உள்ளது. ஆகவே பட்ஜெட் ஒதுக்கீடு மட்டும் பிரச்சனை அல்ல. ஒதுக்கப்பட்ட தொகைகள் அந்நோக்கங்களுக்காக உண்மையில் ஒதுங்குமா என்பதும் பிரச்சனை. இரயில்வே முதலீடுகளுக்கு பணம் இல்லை, ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் தேவை என்றெல்லாம் கண்ணீர் வடிப்பவர்கள் இருப்பதைக்கூட செலவழிக்க முடியவில்லை என்பதே யதார்த்தம்.

உண்மை தெரிஞ்சாகனும் சாமி...

பட்ஜெட்டில் விவசாய விளை பொருட்களுக்கு அடக்க விலைகளுக்கு மேல் 50 சதவீதம் வரை குறைந்த பட்ச ஆதார விலை தரப்போவதாக ஆரவாரமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இவர்கள் பறக்க விட்ட கலர் பலூன் மறுநாளே காற்று இறங்கிவிட்டது. 2006-ல் இத்தகைய விலை நிர்ணயத்தைப் பரிந்துரைத்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கே சந்தேகம் எழுந்து விட்டது. நான் பரிந்துரைத்த அதே அளவுகோலின் அடிப்படையில்தான் விலை நிர்ணயமா? என்று கேட்டிருக்கிறார். ஏனெனில் இவருடைய பரிந்துரையைத்தான் அமலாக்குவோமென்பது பி.ஜே.பியின் தேர்தல் வாக்குறுதி.

அது என்ன அளவுகோல்!

மூன்று கணக்குகள் உள்ளன.

ஏ 2 (A2) : இது உழுவதிலிருந்து அறுவடை வரை ஆகிற விவசாய செலவுகள்

ஏ2 + எப்.எல்(A2 + FL) : இது மேற்கூறிய விவசாயச் செலவுகளோடு கூலி வாங்காமல் செலுத்தப்பட்ட குடும்ப உழைப்பின் ( Family labour - FL) மதிப்பையும் சேர்ப்பது

சி2 (உ2) : மேற்கூறிய ஏ2 +எப்.எல் மதிப்பிற்கு மேல் விவசாய நிலத்திற்குரிய வாடகையின் மதிப்பு, அதில் செய்யப்படும் மூலதனத்திற்கான வட்டி ஆகியவற்றையும் சேர்ப்பது.

எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின்படி இந்த மூன்றாவது அளவுகோலின் அடிப்படையிலேயே - அதாவது சி2 + 50 சதவீதம் ஆதார விலையாகத் தரப்படவேண்டும். 

உதாரணத்திற்கு இப்பட்டியலைக் கவனித்தால் தெரியும்.நெல் தவிர மற்ற விளைபொருட்களின் சந்தை விலைகள் தற்போதைய அரசின் கொள்முதல் விலைகளைக் காட்டிலும் குறைவாக உள்ளன. எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை ஏற்றால் என்ன தர வேண்டுமென்பதைப் பாருங்கள்! 


அதனால்தான் அவரின் கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லையோ!இப்படி விலை நிர்ணயித்தால் மட்டும் போதாது. அது விவசாயிகளின் கைகளில் போய்ச் சேருவதற்கு கொள்முதல் நடைபெறாவிட்டால் விவசாயிகளுக்கு அந்த பள்ளம் எப்படி ஈடுகட்டப்படும்? அரிசியும், கோதுமையும் கூட பொது விநியோகத்திற்காக கொள்முதல் செய்யப்படும். வேர்க்கடலை கொள்முதல் எப்படி சாத்தியமாகப் போகிறது? விலை ஈடு என்றால் இடைத்தரகர்கள் நுழைய மாட்டார்களா? உண்மை தெரிஞ்சாகனுமே!



No comments:

Post a Comment