Wednesday, February 14, 2018

பிப்ரவரி 14 வேண்டாமென்றாலும் கூட ?????


காவிக்கூட்டத்திற்கு ஓர் அன்பு வேண்டுகோள்

பிப்ரவரி மாதம் பதினான்காம் நாள் வந்தாலே உங்கள் அட்டூழியத்திற்கு அளவில்லாமல் போய் விடுகிறது.

காதல் மீதும் காதலர்கள் மீதும் காதலர் தினம் மீதும் ஏன் உங்களுக்கு இப்படி ஒரு வெறுப்பு?

ரோமாபுரிப் பாதிரியார் வாலண்டைன் கொல்லப்பட்ட நாளை, அன்னிய நாட்டைச் சேர்ந்தவர் நினைவாகக் கொண்டாடப்படுவது உங்களுக்கு உவப்பில்லையென்றால் நீங்களே ஒரு நாளை கண்டுபிடிக்கலாமே!

சிக்காகோ நகரத்துத் தொழிலாளர்கள் செங்குருதி சிந்திய நாள் உலகெங்கும் உழைப்பாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுவதை, தேவலோகத் தச்சன் விஸ்வகர்மாவின் பிறந்த நாளன்றுதான் இங்கே தொழிலாளர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று மாற்ற முயற்சி செய்தீர்களே !

செப்டம்பர் ஐந்தாம் நாள் கொண்டாடப்படுகிற ஆசிரியர் தினத்தை வியாசர் பிறந்த நாளன்றுதான் அனுசரிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தீர்களே!

அது போல காதலர் தினத்திற்கும் ஒரு மாற்றைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யலாமே!

எங்கள் நம்பிக்கைதான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்லி

பாபர் மசூதியை இடித்தீர்கள்.

சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்க விடாமல் இன்று வரை தடுத்து வருகிறீர்கள்.

நீங்கள் நம்பிக்கையாக கருதுகிற இதிகாச புராணங்களிலேயே காதலுக்கு என்று தனி இடம் உள்ளதே!

அதிலே ஏதேனும் ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு நீங்களும் காதலர் தினத்தை கொண்டாடலாமே!

கொஞ்சம் நினைவு படுத்தவா?

எண்­ணரு நலத்­தினால் இனை­யள்­நின்­றுளி
கண்­ணொடு கண்­ணினை கவ்வி ஒன்­றையொன்(று)
உண்­ணவும் நிலை­பெ­றாது உணர்வும் ஒன்­றிட
அண்­ணலும் நோக்­கினான் அவளும் நோக்­கினாள்.

என்று கம்பர் அழகு தமிழில் பரவசப்பட்டு எழுதினாரே, அந்த நாள் எதுவென்று அறிந்து அந்நாளை தேர்ந்தெடுக்கலாமே?

ரங்க மன்னாரை “கைத்தளம் பற்ற கனாக் கண்டேன் தோழி” என்று ஆண்டாள் காதலில் கசிந்துருகிய மார்கழி மாதம் கூட பொருத்தமானது அல்லவா?

புள்ளி மேயாத மானாம் வள்ளியின் கரம் பற்ற வேடனாய், வயதில் முதியவனாய் தானும் வேடம் அணிந்து தன் அண்ணனையும் உருமாற்றிய முருகனிடம் கேட்டால் தக்கதொரு நாள் கிடைக்காதா என்ன?

“சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து திரியும் சிவனோ என் மருமகன்” என்ற தந்தை தட்சனை புறம் தள்ளி கயிலை நாதனோடு தாட்சாயணி சென்ற நாள் கூட சரியான நாள்தானே?

சங்கிலி நாச்சியார் மீது கொண்ட காதலை தெரிவிக்க சுந்தருக்காக சிவனே தூது போனதை சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் படிக்கவில்லையா நீங்கள்?

சுபத்திரையின் காதலை நிறைவேற்ற அர்ஜூனனை சன்னியாசி வேடத்தில் தங்க ஆலோசனை வழங்கிய கண்ணனே ஒரு காதல் மன்னன்தானே!

இப்படி இன்னும் ஏராளமாய் அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே பிப்ரவரி 14 உங்களுக்கு உவப்பில்லையென்றாலும் ஏதாவது ஒரு நாளை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

காதலைக் கொண்டாடுங்கள்.
காதலர் தினத்தையும் கொண்டாடுங்கள்


1 comment:

  1. Super comrade.appreciable n inevitable examples on their belief.

    ReplyDelete