Tuesday, February 6, 2018

மோடியை வச்சுக்கிட்டு பக்கோடா கூட . . .

பக்கோடா கூட விற்க முடியாது மோடி



ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற ஒரு தேர்தல் வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை என்ற ஒப்புதல் வாக்குமூலம்தான் “பக்கோடா விற்பது கூட வேலை வாய்ப்புதான்” என்ற  உங்களின் புகழ் பெற்ற அறிக்கையின்  மூலம் உணர முடிகிறது. உங்கள் அமித்ஷா தன் கன்னிப்பேச்சிலும் பக்கோடா விற்பனையைப் பற்றியே பேசி "ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு" என்பதையும் ஜூம்லா என்று நிரூபித்துள்ளார்.

“பக்கோடா விற்பது” என்பது நிச்சயம் இழிவானது அல்ல. ஆனால் உங்கள் அரசு அதைத்தான் வேலை வாய்ப்பு என்று கருதி பெருமைப் படுவது நிச்சயம் இழிவுதான்.

இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புக்களை உருவாக்க இயலாத கையாலாகாத அரசு என்பதை இப்போதாவது உங்களுக்கு வாக்களித்த இளிச்சவாயர்கள் புரிந்து கொண்டால் நல்லது.

பக்கோடா விற்பது கூட வேலை வாய்ப்பு என்று சொல்லியுள்ளீர்கள். அதைக் கூட உங்கள் ஆட்சி கஷ்டமாக்கி விட்டது என்பதாவது உங்களுக்கு புரியுமா?

உங்கள் ஆட்சியில்தான்

பக்கோடாவிற்கான மூலப் பொருட்கள் விலை எல்லாமே மிகக் கடுமையாக உயர்ந்து போயுள்ளது.

பருப்பு விலை எல்லாமே கிட்டத்தட்ட இரட்டிப்பாகி விட்டது. எனவே கடலை மாவு கட்டுப்படியாகாது.

எண்ணெய் விலையெல்லாம் எங்கேயோ போய் விட்டது.

சமையல் எரிவாயு விலையை மாதாமாதம் உயர்த்திக் கொண்டே வருகின்றீர்கள். கெரசினும் இப்போது ரேஷன் கடைகளில் கிடைப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. ரேஷன் கடைகளை வேறு மூடி விடப் போகிறீர்கள்.

வெங்காயத்தின் விலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது. மிளகாயைத் தொட்டாலே நெஞ்சமே எரிகிறது.

எப்படியாவது இதையெல்லாம் வாங்கலாம் என்றால் உள்ள பணத்தை முன்பே செல்லாப் பணம் என்று சொல்லி விட்டீர்கள். போதாக்குறைக்கு ஜி.எஸ்.டி வேறு. வங்கியில் வேறு மினிமம் பேலன்ஸ் இல்லை என்று இருந்த பணத்தையும் சுரண்டி விட்டார்கள்.

உழுபவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட  மிஞ்சாது என்ற கதையாக செய்த பக்கோடா விற்குமா, விற்றாலும் முதலாவது கிடைக்குமா என்ற பிரச்சினை உள்ளது. பக்கோடா ஒன்றும் நீங்கள் விற்கும் பெட்ரோலோ  இல்லை எடுபிடி எடப்பாடி விற்கும் டாஸ்மாக் சரக்கோ கிடையாதே, சொன்ன விலைக்கு அப்படியே வாங்கிக் கொண்டு போக!

உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு ஒரு கொலை கூட செய்ய முடியாது என்று பஞ்ச தந்திரம் படத்தில் கமலஹாசன் சொல்வார். 

அது போல உங்களை எல்லாம் ஆட்சியில வச்சுக்கிட்டு பக்கோடா கூட விற்க முடியாது. 




No comments:

Post a Comment