Thursday, February 22, 2018

“மய்யத்தில் அவர்” அதிர்ச்சியில்லை, ஆதங்கம்தான் . . .




மக்கள் நீதி மய்யத்தின் மேடையில் தோழர் பாரதி கிருஷ்ணகுமாரைப் பார்த்த தகவலை சில தோழர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும் ஒருவர் தொலைபேசி வாயிலாகவும் கூறினார். எங்கள் வேலூர் கோட்டச் சங்க மேடைகளில் பல முறை அவரை பயன்படுத்தியதால் வந்த தகவல் அது.

எங்கள் கோட்டச் சங்க மாநாடுகளின் ஒரு பகுதியான “மக்கள் ஒற்றுமை கலை விழா” வில் உரை வீச்சுக்கு யாரை அழைப்பது என்ற விவாதம் வருகையில் பி,கே வை அழைக்கலாமே என்று ஆலோசனை வருவதும், வேண்டாமே தோழர் என நான் மென்மையாய் மறுப்பதும் ஒரு ஏழெட்டு வருடங்களாக நடந்து கொண்டே இருக்கிறது.

ஏன்?

கொஞ்சம் பின்னோக்கி போகிறேன்.

1998 ம் வருடம் அது. இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக வேலூர் கோட்டை மைதானத்தில் கலை இரவு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் புதுகை பூபாளம் குழுவின் கலை நிகழ்ச்சிகள், ஞான.ராஜசேகரன் இயக்கி இசை ஞானியின் இசையில் வெளி வந்த குறும்படம் “ஒரு கண், ஒரு பார்வை” இவற்றோடு இரண்டு உரை வீச்சுக்கள். தோழர் பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் தோழர் நந்தலாலா.

இருவரின் உரைகளையும் முதல் முறையாக கேட்கும் வாய்ப்பு அப்போதுதான் கிடைத்தது. மெய் சிலிர்த்துப் போனேன். பரவசமடைந்தேன் இப்படி எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  மூன்று இணைச்செயலாளர்கள் மட்டும் அந்த கலை இரவில் கலந்து கொண்டிருந்தோம். நான், தோழர் ஏ.நாராயணன், தோழர் வி.ஆர்.ராதாகிருஷ்ணன்.  அந்த வருடம் முதல் முறையாக எங்கள் கோட்ட மாநாடு வேலூருக்கு அப்பால் புதுவையில் நடைபெறுவதாக இருந்தது. நாமும் ஏன் கலை இரவு நடத்தக்கூடாது என்று மூவரும் விவாதித்து தலைவர், பொதுச்செயலாளரிடம் அனுமதி வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு தோழர் பாரதி கிருஷ்ணகுமார், தோழர் நந்தலாலா இருவரிடமும் பேசி அவர்களின் நாட்களை உறுதி செய்தோம்.

பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஒப்புதலும் கிடைத்தது. புதுவையில் நடைபெற்ற கலை இரவில் தோழர் நந்தலாலா பேச தொடங்குகிற வரை தோழர் பி.கே வரவில்லை. சரி, அவர் வரவில்லை போல என்று ஏமாற்றத்துடன் மனதைத் தேற்றிக் கொண்ட நேரத்தில் வந்தார். இடி முழக்கமாய் அமைந்த அவரது உரையில் மயங்கிய எம் தோழர்கள் உடனடியாய் அவரது ரசிகர்கள் ஆனார்கள்.

அதற்குப் பிறகு ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் என்று அவர் எங்கள் கலை விழா மேடையில் முழங்குவார். அந்த சமயத்தில்தான் அவர் வெண்மணி சம்பவத்தை “ராமையாவின் குடிசை” என்று ஆவணப்படத்தை தயாரித்தார்.  நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளுக்கான தொகையை எங்கள் கோட்டத் தோழர்களிடம் வெளியீட்டிற்கு முன்பே பெற்று அனுப்பினோம். தோழர்கள் என்.சங்கரய்யா, என்.வரதராஜன், ஜி.ராமகிருஷ்ணன், கமலஹாசன், இயக்குனர்கள் பாரதிராஜா, பாலு மகேந்திரா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட வெளியீட்டு விழாவில் நானும் தோழர் ஏ.நாராயணனும் அதற்காக மட்டுமே சென்னை சென்று கலந்து கொண்டோம்.

“ராமையாவின் குடிசை” யின் தாக்கத்தால் வெளியீட்டு விழா முடிந்த இரண்டு மாதங்களிலேயே நடைபெற்ற மகளிர் மாநாட்டில் உரையாற்ற அவரை அழைத்திருந்தோம். எப்போதும் போல சிறப்பாக பேசினார். அதன் பின்புதான் அதிர்ச்சியே.

மாநாடு முடிந்த பின் அவர் கேட்ட பயணச் செலவுக்கான தொகை என்பது அது வரை அவர் பெற்றுக் கொண்டிருந்த தொகை போல பல மடங்கு அதிகம் என்பது மட்டுமல்ல, அதிலே அவர் மிகவும் கறாராக இருந்தார். இது நாள் வரை நாங்கள் பார்த்திருந்த தோழர் பி.கே இவர் இல்லை என்ற அதிர்ச்சியிலிருந்து வெளி வர பல நாட்கள் ஆனது.  

இடைப்பட்ட காலத்தில் அவர் “ராமையாவின் குடிசை” யை விற்பதற்காக கூடுதல் பிரதிகள் அனுப்பியிருந்தார். ஆனால் அவை அனைத்தையும் விற்க இயலவில்லை. ஏனென்றால் முன்பே அதனை விரிவாக எங்கள் தோழர்களிடம் எடுத்துப் போயிருந்தோம். அதற்கு வேறு கடிந்து கொண்டார். தோழமை உணர்வு என்பது மங்கிப் போய் வணிகம் என்பது மேலோங்கியிருந்தது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

அதற்குப் பிறகும் கூட தோழர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளித்து இரண்டு முறை அவரை அழைத்தோம். ஒரு முறை ஒப்புக் கொண்டு அழைப்பிதழ் அச்சடிக்கும் வேளையில் முடியவில்லை என்று மறுத்து விட்டார். இன்னொரு வருடம் அழைப்பிதழைப் பெற்ற பின்பு அந்த தேதியில் வேறு நிகழ்ச்சி உள்ளதை மறந்து தேதி கொடுத்ததாக கூறி விட்டார்.

அதன் பின்புதான் அவரை அழைத்து ஏன் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்று அழைப்பதில்லை.

எனக்குத் தெரிந்து அவர் பல வருடங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலோ  அல்லது தமுஎகச அமைப்பிலோ  உறுப்பினராக இல்லை, இருப்பினும் தமுஎகச மேடைகளில் பேசிக் கொண்டிருந்தார். வேலூர் சிப்பாய் புரட்சியை முன்னிட்டு வேலூர் தமுஎகச நடத்திய ஒரு நிகழ்வில் அவர் பேசியது கிட்டத்தட்ட “அரைத்த மாவுதான்”. புதிதாய் எதுவுமில்லை.  

இந்த வருடம் வெண்மணி சென்று விட்டு வெண்மணி ஆர்ச் அருகில் மற்ற தோழர்கள் வருவதற்காக காத்திருந்த போது அங்கிருந்து ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் கை காண்பித்து விட்டு போனார். இது நாள் வரை அவர் மேடைகளில் பேசிக் கொண்டிருந்த விஷயங்களுக்குத்தான் “Bye” சொல்லி விட்டு போயுள்ளார் என்பது அப்போது தெரியவில்லை.

அமைப்பில் பல வருடங்களாக இல்லாத ஒருவர் வேறு ஒரு அமைப்பில் இணைந்தது குறித்து கொஞ்சம் கூட அதிர்ச்சியாகவே இல்லை.

என்ன? இது நாள் வரை பேசிய இடதுசாரித் தத்துவங்களுக்குப் பதிலாக “மய்யக் கொள்கைகளை” பேசப் போகிறாரே என்ற ஆதங்கம்தான் உள்ளது.

அரசியலில் இதெல்லாம் சகஜம்தானோ?



5 comments:

  1. பாரதி கிருஷ்ணகுமார் என்பவர் யார்? நிஜமாகவே அந்த பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவர் ஒரு சிறந்த பேச்சாளர். ஆவணப்பட இயக்குனர். ஒரு திரைப்படமும் இயக்கியுள்ளார்.

      Delete
  2. சங்கர் வைFebruary 22, 2018 at 8:08 PM

    இந்த பதிவை முன்னரே தாங்கள் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் தோழர். எங்களுக்கு ஏற்கனவே இருந்த எண்ணம் வேறு அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. எழுதுவதற்கான அவசியமே இப்போதுதானே வந்தது தோழர்.
      சரி, அப்படி உங்கள் மனதில் இருந்த எண்ணம் என்ன?

      Delete
  3. அறம் மறந்த மனிதர்கள்...

    ReplyDelete