Wednesday, February 7, 2018

ரீல் அந்து போச்சு மோடி

மதுரை மீனாட்சியம்மன் ஆலய தீ விபத்து குறித்து தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் பேட்டியை காலையில் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

இப்போது இன்னொரு மதுரைக்காரரின் பதிவு. ஜெய்ட்லியின் கடைசி பட்ஜெட்டில் உள்ள பொய்களை தோரணம் கட்டி தொங்கவிட்டுள்ளார் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவரும் எங்கள் பொருளாதார ஆசானுமான தோழர் இ.எம்.ஜோசப்.



விரிவான கட்டுரை. அவசியம் முழுமையாக படியுங்கள்.


பொய் நெல்லைக் குத்தி பொங்கலிடும் பட்ஜெட்!   


  
இ.எம் ஜோசப் 

அவர்கள் சரியாகச் சொல்வார்கள், ஆனால் பொய் சொல்வார்கள். இது என்ன குழப்பம்? ஒரே நேரத்தில், இரண்டும் எப்படி சாத்தியம்? ஆம். அவர்கள் தகவலைச் சரியாகச் சொல்வார்கள். ஆனால், எதார்த்தத்தில் உண்மையை மறைப்பார்கள்.   கேளுங்கள் இதோ! 

“இந்தியாவில் விமானப் பயணம் மிகவும் மலிவானது. ஆட்டோ ரிக்சா பயணத்தை விட மலிவானது.” இதைச் சொல்லியிருப்பவர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா. இதைக் கேட்டவுடன், நாளையிலிருந்து எல்லாரும் விமானத்தில் பயணம் செய்யலாம் போலத் தோன்றுகிறது அல்லவா? அதை அவர் விளக்குகிறார். விமானத்தில் கிலோ மீட்டருக்கு ரூ.5 மட்டுமே. ஆட்டோவிற்கு ரூ. 8 முதல் 10 வரை கொடுக்க வேண்டும். 

இப்போது புரிகிறதா? இதைப் புரிந்து கொண்டால், இவ்வாண்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் பட்ஜெட் உரையினையும் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அது அடிப்படையில் அத்தகையதே. இல்லாவிட்டால், புள்ளி விவர உலகிலிருந்து எதார்த்த உலகிற்கு வருவதற்குள் மண்டை காய்ந்து விடும்.  

ஜும்லா! பக்கோடா! 

இவை எல்லாம் நாம் எழுதிய வார்த்தைகள் அல்ல. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்ந்து குடும்பத்திற்கு ரூ.15 லட்சம், இளைஞர்களுக்கு ஆண்டொன்றிற்கு 2 கோடி வேலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியான ஆதரவு விலை என்ற வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயிற்று என்று கேட்ட போது, அதுவெல்லாம் தேர்தல் ஜும்லா ( தேர்தல கால ஜம்பப் பேச்சு)  என்றார் பா.ஜ.க தலைவர் அமித் ஷா. 

இன்று சில இளைஞர்கள் தள்ளு வண்டியில் பக்கோடா விற்கிறார்களே, அதுவும் நான் வாக்குறுதி அளித்த வேலைகளில் ஒன்று தானே என அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்  பிரதமர் மோடி. 

ஊழியர்களிடம் பிஎஃப் பிடித்து விட்டு, அதையும் தாங்கள் கட்ட வேண்டிய பங்கினையும் ஈ.பி.எஃப்.ஓ (EPFO) வில் கட்டாத  பல முதலாளிகளும், காண்டிராக்டர்களும் இருந்த நிலையில் தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் வெடித்தன. அதன் பின்னணியில், 1.4.2009 ஏப்ரல் முதல் 31.12.2016 வரை, ஊழியர்களின் வைப்பு (பிராவிடண்ட்)  நிதியினை, ஈ.பி.எஃப்.ஓ வில் செலுத்த வேண்டும், செலுத்தி விட்டால், தாமதம் மன்னிக்கப்படும், இல்லை எனில் நடவடிக்கை என அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, சம்மந்தப் பட்டவர்கள்  82,01,533 ஊழியர்களுக்கான பணப்பிடித்தத்தினை சென்ற ஆண்டு செலுத்தினர். இப்படிச் செலுத்தப்பட்ட 7 ஆண்டுகள் 9 மாதத்திற்கான எண்ணிக்கையினை வைத்துக் கொண்டு, சென்ற ஆண்டு மட்டும் 70 லட்சம் புதிய வேலைகள் உருவாகின என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். ஈ.பிஎஃப்.ஓ புதிய பதிவுகள் என்றால், புதிய வேலைகள் தானே என்றும் பேசி வருகிறார். இந்த சாமர்த்தியம் யாருக்கு வரும்?    

இத்தகைய ஜும்லா – பக்கோடா பின்னணியில் தான் இன்றைய இந்திய பட்ஜெட்டைப் பார்க்க வேண்டும். 

பட்ஜெட் வாக்குறுதிகள்!  

அரசு ஏழை மக்கள் அனவருக்கும் காஸ் சிலிண்டர்கள், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, கழிவறைகள், வீடற்றவர்களுக்கு வீடுகள், இவை எல்லாவற்றையும் விட 10 கோடி குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு, விவாயிகளுக்கு உற்பத்திச் செலவின் அடிப்படையில் ஒன்றரை மடங்கு ஆதரவு விலை, கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடன், இளைஞர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புக்கள் என்பவை எல்லாம் இன்றைய பட்ஜெட் வாக்குறுதிகள். இவற்றை எல்லாம் தேசியக் கூட்டணி அரசு எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதே இப்போது நம் முன் நிற்கும் கேள்வி.    

நிதி எங்கே? 

கடந்த ஆண்டில்மட்டும் இந்தியாவில் உருவாகிய கூடுதல் செல்வ உற்பத்தியில் 73 சதவீத மதிப்பினை நாட்டின் ஒரு சதவீத உயர் தட்டினர் தங்களதாக ஆக்கிக்  கொண்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து பெருமளவில் வரி வசூலிக்க முடியும். எனினும், அவர்களிடம் கூடுதல் வரி வசூலிக்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வரிச் சலுகையினையும் இந்த பட்ஜெட் அறிவித்திருக்கிறது. 

கடந்த ஆண்டிலேயே ரூ. 50 கோடிக்கு குறைவாக விற்பனை செய்யும் கம்பெனிகளுக்கு கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.250 கோடி வரை விற்பனை செய்யும் கம்பெனிகளுக்கும் அது விரிவு படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, வரி 30% என்று பெயரளவில் இருந்தாலும் ரூ.500 கோடிக்கு மேல் இலாபம் ஈட்டும் கம்பெனிகள் செலுத்தும் வரி 23.94% மட்டுமே என நிதி அமைச்சரே  ஒப்புக் கொள்கிறார். இது தவிர சென்ற ஆண்டில் விதித்த வரிகளை வசூலிக்காமல் விட்டதில்  பெரு முதலாளிகள் பெற்ற சலுகை ரூ.1,65,000 கோடி. இவ்வாறு வரி விதிப்பினைத் தவிர்த்தும், விதித்த வரிகளை வசூலிக்காமலும் விட்ட பின்னர், படாடோபமாக அறிவித்த திட்டங்களுக்கு பணத்திற்கு எங்கே போவது?

வெட்டுவதைத் தவிர வேறு வழி?

அரசின் செலவு  ஜி.டி.பி மதிப்பில் 13.2 சதவீதத்திலிருந்து 13% ஆகக் குறைக்கப்படுகிறது. 
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடு 1.15% லிருந்து 1.08% ஆகக் குறைக்கப்படுகிறது. 
சுகாதாரத்திற்கான மொத்த ஒதுக்கீடு, 0.32% லிருந்து 0.29% ஆகக் குறைக்கப்படுகிறது. 
பா.ஜ.க தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி (மின்சாரம்) திட்ட ஒதுக்கீடு ரூ.5,400 கோடியிலிருந்து ரூ.3,800 கோடியாகக் குறைக்கப் படுகிறது.
கல்விக்கான மத்திய அரசின் ஒதுக்கீடு 0.49% லிருந்து 0.45% ஆகக் குறைக்கப்படுகிறது. 
பாலின பட்ஜெட் 0.68% லிருந்து 0.65% ஆகக் குறைப்பு. 
எஸ்.சி துணைத் திட்ட ஒதுக்கீடு 2.32%க்கும் கீழ், எஸ்.டி க்கு 1.6%க்கும் கீழ். அந்தப் பிரிவு மக்களின் எண்ணிக்கைக்கு உரித்தான பங்கு மறுக்கப் பட்டிருக்கிறது.  
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தைற்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை. சென்ற ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.55,000 கோடி அப்படியே தொடர்கிறது. கிராமப்புற நெருக்கடியும் வேலையின்மையும் அதிகரிக்கும் நிலையிலும் இத்திட்டம் உதாசீனப் படுத்தப்படுகிறது. 
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, தேசிய குடி நீர் திட்டம், ஸ்வச் பாரத் மிஷன், தேசிய சுகாதார மிஷன், உள்ளிட்ட பல திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப் பட்டுள்ளன.  

இது தவிர, இவ்வாண்டு பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனை மூலம் ரூ.80,000 கோடி திரட்டவும் அரசு முடிவு செய்துள்ளது. இப்படி முன்னோர் சேர்த்து வைத்த  சொத்தினை விற்றாலும் தீராது என்ற நிலையில் இந்த நலத்திட்ட வெட்டுக்கள் நிகழ்ந்திருக்கின்றன.   

இப்படி ஏழை மக்களின் திட்டங்களை கைகழுவும் அதே வேளையில், மாத ஊதிய நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகை வழங்குவது போல இந்த பட்ஜெட் ஒரு தோற்றத்தை உருவாக்கியது. ரூ.40,000 வரை வருமானத்திலிருந்து  கழித்துக் கொள்ளலாம் (STANDARD DEDUCTIONS) எனக்  கூறியது. ஆனால், ஏற்கனவே ரூ.34,200 வரை கழித்துக் கொள்ளலாம் என்று இருந்த சலுகையினைப் பறித்து விட்டது. என்ன தந்திரம் பாருங்கள்!    

பொய் நெல்!

ஒரு புறம் வருமானத்தை பெருக்க முடியாமல், இருக்கும் திட்டங்களை வெட்டிச் சுருக்கி வரும் நிதி அமைச்சர், புதிய சில அறிவிப்புக்கள் என்ற பெயரில் பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிடும் வேலையினைத் தொடங்கி விட்டார். அவரது அறிவிப்புக்கள் இதோ! 

இந்த ஆண்டில் 1.88 கோடி புதிய கழிப்பறைகளும்,51 லட்சம் வீடுகளும் கட்டித் தரப்படும். 
10 கோடி குடும்பங்களுக்கு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அமலாக்கப்படும். 
2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.  
இவ்வாண்டில் 70 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்படும்.    

இலக்குகள் பயனளிக்குமா? 

விவசாயிகளுக்கு   கட்டுப்படியாகும் ஆதரவு விலை உண்மையிலேயே கட்டுப்படியானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. இது குறித்து விவசாயிகள் ஆணயத்தின் தலைவாராக இருந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், ஆணையம் பரிந்துரைத்த அடிப்படையில் தான் ஆதரவு விலை இருக்குமா என்ற ஐயப்பாட்டினை எழுப்பியுள்ளார். உற்பத்திச் செலவில் குடும்ப உழைப்பு கணக்கில் கொள்ளப்படுமா என்பதும் தெளிவாக இல்லை. நிலைமை இவ்வாறு இருக்கும் போது வருமானம் இரண்டு மடங்கு ஆவது எப்படி? 

கல்விக்கான ஒதுக்கீட்டினை சுருக்கி விட்டு, எஸ்.டி மக்கள் வாழும் பிரதேசங்களில், அதற்கான கட்டமைப்பினை உருவாக்காமல் ‘ஏகலைவா’ நவோதயா பள்ளிகள் என்பது சாத்தியமா? கல்வியைப் பொறுத்த அளவில், கேரளா ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இந்தக் கல்வி ஆண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட்ட உயர் கட்டமைப்புக்களின் பயனாக 1.4 லட்சம் குழந்தைகள் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளிலிருந்து மாற்றல் சான்றுகளைப் பெற்று அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கிறார்கள். இவ்வாண்டும் 4,775 பள்ளிகளில் கம்ப்யூட்டர்களை உள்ளடக்கிய 45,000 உயர் தர (ஹை டெக்) வகுப்பறைகள் என்ற வகையில், அவற்றுக்குரிய ஒதுக்கீட்டுத் தொகையும் அம்மாநில பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்தகைய தெளிவான அறிவிப்புகள், ஒதுக்கீடுகள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இல்லை.     

அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல் இவ்வாண்டு மத்திய பட்ஜெட்டின் மிகப் படாடோபமான அறிவிப்பு.  10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு. அரசு அறிவித்திருக்கும் மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்திற்கு ஆண்டொன்றிற்கு குறைந்த பட்சம் ரூ.1.25 லட்சம் கோடி பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும் என வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஆனால், இதற்கான கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு எதுவும் இல்லை. இப்போது, அது ரூ.10,000 கோடியாக இருக்கும் எனவும் அதில் ரூ.4,000 கோடியினை மாநிலங்கள் தர வேண்டும் எனவும் நிதி அமைச்சர் பேட்டி அளித்திருக்கிறார். ரூ.1.25 லட்சம் கோடி இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு ரூ.10,000 எப்படி ஈடாகும் என்பது இன்று நம் முன் நிற்கும் ஆகப் பெரிய கேள்வி. 
வாதத்திற்காக இவை எல்லாம் நடக்கப் போகிறது எனக் கூட வைத்துக் கொண்டாலும், அது ஏழை மக்களின் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகாது. ஏனெனில், அவர்களின் பிரச்சினை வேறு. 

மருத்துவ சேவை மூன்று நிலைகளைக் கொண்டது. நோய் அடையாளங்களோடு பக்கத்தில் உள்ள மருத்துவரிடம் செல்வது முதல் நிலை. அவர் குணப்படுத்த முடியா விட்டால், ஸ்பெஷலிஸ்டுகளிடம் வெளி நோயாளியாகச் சென்று சிகிச்சை பெறுவது இரண்டாம் நிலை. அதிலும் குணம் அடையாவிட்டால்,  மருத்துவ மனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை பெறுவது மூன்றாம் நிலை. அரசின் மருத்துவக் காப்பீடு முன்றாம் நிலை சிகிச்சையினை மட்டுமே மையப்படுத்துகிறது. அது மிக முக்கியம் எனினும், முதல், இரண்டாம் நிலையில் மருந்து, பரிசோதனைகள் மற்றும் மருத்துவர் கட்டணத்திற்காக கையிலிருந்து செலவழிக்கும் பணமும் (OUT OF POCKET EXPENSES) அவர்களின் முக்கிய பிரச்சினையாக உள்ளது.  குடும்பங்களின் மொத்த மருத்துவச் செலவில் இந்தச் செலவு மட்டும் 67%.  இந்தக் காரணத்தின் அடிப்படையில் மட்டுமே 7% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப் பட்டிருக்கிறார்கள் எனில், பிரச்சினையின் ஆழத்தினைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? இன்று, பல லட்சம் ருபாய் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கே, இன்று இது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.    

முதல் நிலை இரண்டாம் நிலை மருத்துவ சேவைக்கான கட்டமைப்புக்களை சரி செய்யாமல் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் அரசு சுகாதார மையங்களில் 11 சதவீத மையங்களில் மட்டுமே உரிய வசதிகள் உள்ளன. ஆனால், அவற்றிற்கான ஒதுக்கீடோ, சராசரி ரூ.80,000 மட்டுமே. இதை மட்டும் வைத்து என்ன செய்ய முடியும்? இந்த 1.5 லட்சம் மையங்களிலும் உரிய எண்ணிக்கையில், டாக்டர்கள், செவிலியர்கள், மற்றும் பிற ஊழியர்கள் என்று நியமனம் செய்தால், மக்களும் பயன் பெறுவர், பல லட்சம் வேலைகளும் உருவாகும் என்பதை எவரும் எளிதில்  கற்பனை செய்ய முடியும். 

அரசின் காப்பீட்டுத் திட்டத்தால், ஏழை மக்களின் அடிப்படைப் பிரச்சினை  தீராது. மாறாக, இன்சூரன்ஸ் கம்பெனிகளின் லாபம் மட்டும் பன்மடங்கு பெருகும் எனத் தெரிகிறது. பட்ஜெட் அறிவிப்பினைத் தொடர்ந்து, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பங்குச் சந்தை மதிப்பு உயர்ந்திருப்பது, இந்த உண்மையைத் தானே படம் பிடித்துக் காட்டுகிறது? 
(தீக்கதிர் – 07.02.2018)

இத்திட்டம், அந்நிய இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும், தனியார் மருத்துவ மனைகளுக்குமே அதிகம் பயன்படப் போகிறது. இந்தியாவில் மருத்துவ சேவைக்கு  ஒழுங்காற்று ஆணையம் எதுவும் இல்லாத நிலையில் அது தான் நடக்கப் போகிறது. 

சமையல் காஸ் இணைப்பில், இலவசமாகக் கிடைக்கும் காஸ் அடுப்புக்கள், அரசுப் புள்ளி விவரங்களில் இணைப்புக்களின் எண்னிக்கையினை உயர்த்தியுள்ளன. ஆனால், அவர்களில் கணிசமானோர் மீண்டும் சிலிண்டர் கேட்டு வாங்குவதில்லையாம். சிலிண்டர் விலை ஏறிக் கொண்டே செல்கையில், அதை ஏழை மக்கள் எப்படி வாங்குவார்கள்? மொத்தத்தில், மக்களைப் பரவசப்படுத்தும் இந்த பட்ஜெட் அறிவிப்புக்கள் மக்களுக்கு பயனளிக்கப் போவதில்லை.     

செய்ய வேண்டியது என்ன?   
மக்களின் வாங்கும் சக்தி குறைந்து அதனால் உள் நாட்டுச் சந்தையில் கிராக்கி முடங்கி வரும் நிலையில், அந்நியச் சந்தையும் சுருங்கி ஏற்றுமதியும் பாதிக்கப்பட்ட நிலையில், வேலைகள் எங்கு உருவாகும்? பல முனைகளில் அரசு பொது முதலீடுகளை அதிகரிக்காமல் அது சாத்தியமில்லை. கொள்ளை லாபம் ஈட்டும் கார்ப்பரேட்டுகள், உயர் செல்வந்தர்கள் மீது கூடுதல் வரி விதிக்காமல் இது சாத்தியமில்லை. அதை எல்லாம் செய்யாமல் வேலைகள் எங்கிருந்து வரும்? 

இந்நிலையில் உரிய ஒதுக்கீடுகளும் திட்டங்களும் இல்லை எனில், இந்த பட்ஜெட் மற்றொரு ஜும்லாவாக, மற்றொரு பக்கோடாவாக மாறுவதை எவரும் தடுக்க முடியாது. 

நன்றி - தீக்கதிர் 07.02.2018

1 comment:

  1. மோடியின் படஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கும் ஜெயலலிதாவின் 101 விதியின் கீழ் அறிவிக்கப்படும் போலி திட்டங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

    ReplyDelete