Tuesday, February 27, 2018

மூன்று முக்கிய பிரச்சினைகள் மீது . . .


தமிழகத்தின் மூன்று முக்கியமான பிரச்சினைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நன்றி - தீக்கதிர் 27.02.2018


தலித் சிறுவன் கொலையை திசை திருப்பும் காவல்துறை
உரிய முறையில் விசாரணை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,பிப். 26-

விழுப்புரம் மாவட்டத்தில் தலித் சிறுவன் கொலையை திசை திருப்பி குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு காவல்துறையே உடந்தையாக இருப்பதாகவும் இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் சமீப காலங்களில், தலித் குடும்பங்கள் மீது கொலை வெறித் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், கொலை என பல்வேறு அராஜக நடவடிக்கைகள் ஆதிக்க சக்திகளால் நடத்தப்பட்டு வருகின்றன. மேற் கண்ட இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விசாரித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரகண்ட நல்லூர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டக்குழு சார்பில் காவல் துறையை கண்டித்து பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனைத் தொடர்ந்து, தற்போது திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்த தலித் குடும்பத்தை சார்ந்த ஆராயி(40), அவரது மகள் தனம் (15), மற்றும் மகன் சமையன் (10) ஆகியோர் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், சிறுவன் சமையன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான். சமையன் உடலிலும், கழுத்திலும் வெட்டு உள்ளதாக கூறப் படுகிறது. உயிருக்குப் போராடிய நிலையில் ஆராயியையும், அவரது மகள் தனத்தையும் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு ஆக்ஸிஜன் இல்லாத நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆராயிக்கும் தனத்திற்கும் தலையிலும் உடலிலும், பலத்த காயங்கள் உள் ளன. தனத்திற்கு கழுத்து எலும்பு உடைந்துள்ளதாக தெரிகிறது.இச்சம்பவம், ஆராயின் மகள் தனத்தின் மீதான பாலியல் வன் கொடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தலித் சிறுவன் படுகொலை மற்றும் அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கொலை வெறித்தாக்குதலுக்குள்ளாக்கப் பட்டதற்கு காரணமானவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து, குற்றவாளிகளுக்கு சட்டப் படி தண்டனை பெற்றுத்தரவேண்டும்.

 மருத்துவமனையில் உள்ள ஆராயி மற்றும் அவரது மகள் தனம் ஆகியோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் அவரது குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தலித் குடும்பங்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்க!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம், அத்தியூர் திருக்கை கிராமத்தில், இருவேறு சமூகத்தை சார்ந்த வாலிபரும், இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனால், அப்பெண் அந்த இளைஞருடன் திருமணம் செய்துகொள்ளும் நோக் கத்தோடு ஊரைவிட்டு சென்றுள் ளார். பெண்ணின் வீட்டார் தேடிச் சென்று பெண்ணை அழைத்து வந்துவிட்டனர்.இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் சாதியைச் சேர்ந்த 200 பேர் பயங்கர ஆயுதங்களுடன், தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து, 60க்கும் மேற்பட்ட தலித் குடும்பங் களை தாக்கியுள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதாரம் ஆகியுள்ளன. இதனால் தலித் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு வன்மையாக கண்டிக்கிறது.பாதிக்கப்பட்ட மக்கள் கிராமங்களுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளது. எனவே, தலித் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகள் மீது வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். உடமைகளை இழந்து தவிக்கும் தலித் மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும். தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து வரும் தலித் மக்கள் மீதான தாக்குதல் களை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள் வதன் மூலம், இத்தகைய மோசமான நிலைக்கு முடிவு கட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

ஐஐடி விழாவில் சமஸ்கிருதப் பாடல்
கே. பாலகிருஷ்ணன் கண்டனம்


சென்னை, பிப். 26-
சென்னை ஐஐடி விழாவில் சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சென்னையில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) திங்களன்று காலை நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதுடன், “மகாகணபதிம்” என்ற சமஸ்கிருதப் பாடல் இசைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பொன். ராதாகிருஷ்ணன் உட்பட அனைவரும் எழுந்து நின்றுள்ளனர். 

பொதுவாக, தமிழகத்தில் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படுவதும், மத்திய அரசு நிறுவனங்களில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், இவை இரண்டும் இல்லாமல் சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற அரசு விழாவில் சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல, கண்டனத்திற்கும் உரியது.அரசு விழாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தினுடைய பாடல் இசைக்கப்படுவது என்பது மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட சவாலாகும். மேலும் இது சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிப்பினுடைய இன்னொரு வடிவமாகும். உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்திய பாஜக அமைச்சர்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து செயல்படுவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. பாஜக ஆட்சியாளர்களின் இத்தகைய சமஸ்கிருத திணிப்பு மற்றும் மதவாதப் போக்கினை இனியும் தமிழ்நாட்டில் அனுமதிக்காத வண்ணம் அனைவரும் குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

கருணை இல்லத்தில் பகீர் மர்மங்கள்
விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர்க! சிபிஎம்

சென்னை,பிப்.26-
பாலேஸ்வரம் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீது விசாரணைநடத்தி உண்மையை வெளிக்கொணரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் வட்டம், பாலேஸ்வரத்தில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்தில், விதிமீறல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் உள்ளதாக தொடர்ந்து பத்திரிகை களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில், வேனில் ஒரு மூதாட்டியும், ஒரு முதியவரும் இருந்ததுடன், காய்கறி மூட்டைகளிடையே ஒரு சடலமும்இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள்அந்த வேனை சாலவாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ள தாகவும் செய்திகள் வெளிவந்துள் ளன. இது குறித்து அரசு அதிகாரிகள் குழு இந்த கருணை இல்லத்தை ஆய்வு செய்ததில், பல விதிமீறல்கள் கண்டறி யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

2017 நவம்பர் மாதத்துடன் அரசு அனுமதி முடிந்து விட்டதாகத் தெரிகிறது. இந்த கருணை இல்லத்தில் இறப்பவர்களின் சடலத்தை சுவற்றில் அமைத்துள்ள சிறு, சிறு பெட்டிகள் போன்ற பிணவறைகளில் வைத்து சிமெண்ட் பூசி அடக்கம் செய்யப் படும் வினோத நடைமுறை பின்பற்றப்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.இக்கருணை இல்லத்தில் 350 பேர் வரை தங்கவைத்திருப்பதாகத் தெரிகிறது. இங்கு இறப்பவர்கள் குறித்த விவரங்களும் காவல்துறை க்கோ, சமூகநலத்துறைக்கோ தெரிவிப்பதில்லை எனவும் கூறுகின்ற னர். இங்கு மர்மமான முறையில்சடலங்கள் அடக்கம் செய்யப்படுவ தால், சடலத்தில் மிஞ்சும் எலும்புகள் விற்பனைக்காக கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. 

இறக்கும் தருவாயில் உள்ள முதி யோர்களுக்கான கருணை இல்லம் என்ற பெயரில் செயல்பட்டாலும், இங்கு 4, 5 வயது குழந்தைகள் முதல்அனைத்துமட்ட வயதினரும் தங்க வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தவர்கள் மீதே காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.எனவே, தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொணர வேண்டும். விசாரணை அறிக்கை அடிப்படையில் கருணை இல்லநிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், இத்தனை முறைகேடுகளுடன் கருணை இல்லம் செயல்பட அனுமதித்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

1 comment:

  1. //விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம், அத்தியூர் திருக்கை கிராமத்தில், இருவேறு சமூகத்தை சார்ந்த வாலிபரும், இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனால், அப்பெண் அந்த இளைஞருடன் திருமணம் செய்துகொள்ளும் நோக் கத்தோடு ஊரைவிட்டு சென்றுள் ளார். பெண்ணின் வீட்டார் தேடிச் சென்று பெண்ணை அழைத்து வந்துவிட்டனர்.இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் சாதியைச் சேர்ந்த 200 பேர் பயங்கர ஆயுதங்களுடன், தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து, 60க்கும் மேற்பட்ட தலித் குடும்பங் களை தாக்கியுள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதாரம் ஆகியுள்ளன. இதனால் தலித் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. //

    Naan indha oorukku arugil ulla giraamathai serndhavan... Indha ooril aathikka saadhiyinar eppodhumey vanmuraiyaalargal dhaan. Ivargal adi dhadikku famous.

    ReplyDelete