Tuesday, February 13, 2018

கர்த்தரும் கந்தனும்!

-தூத்துக்குடியின் மக்கள் ஒற்றுமைப் பண்பாடு சு.வெங்கடேசன்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாநில மாநாட்டினை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமைக் கருத்தரங்கில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் சு. வெங்கடேசன் தூத்துக்குடியின் பண்பாட்டு வரலாற்றில் மதங்களைக்கடந்து இன்றளவும் நிலைபெற்றுள்ள மக்கள் ஒற்றுமைப் பண்பாட்டினை விளக்கினார்.அந்த உரையின் அம்சங்கள் வருமாறு:

14 பாய் மரங்கள்

17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் 400 டன் பொருட்களை ஏற்றிச்செல்லும் 14 பாய் மரங்களைக் கொண்ட கப்பல்கள் அதிகம் இயக்கப்பட்ட துறைமுகமாக தூத்துக்குடி இருந்துள்ளதை வரலாற்று ஆவணங்களில் இருந்து அறியமுடிகிறது. உந்துவிசை இயந்திரங்கள் பெரிய அளவில் கண்டறியப்படாத அந்தக்காலத்தில், காற்றின் விசையைப் பயன்படுத்தியே கப்பலை திறமையோடு செலுத்தியுள்ளனர். காற்றின் தன்மைக்கு ஏற்ப கப்பலைக் கொண்டு செல்ல 14 பாய்மரங்களை பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பாய்மரத்துக்கும் ஒவ்வொரு பெயர் இருந்துள்ளது. இந்தவகை கப்பல்கள் தான் அன்று மிகப்பெரிய கப்பலாக இருந்துள்ளன. இது தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு குமரிக்கு சென்றுள்ளது; அங்கிருந்தும் உப்பு ஏற்றிக்கொண்டு அரபிக்கடல் பகுதிக்கு திரும்பி கோழிக்கோட்டினை அடைந்துள்ளது; அங்கு உப்பின் பகுதியை இறக்கிவிட்டு ஓடு ஏற்றியுள்ளது; அங்கிருந்து கோவாவுக்கு சென்று உப்பும், ஓடும் இறக்கிவிட்டு எண்ணெய் ஏற்றிக்கொண்டு மீண்டும் வந்த திசையில் திரும்பியுள்ளது. அன்றைய பெரும் வர்த்தகப் பாதையாக இந்த கடல் வழிப்பாதை இருந்துள்ளது. அதேபோல கொழும்புவுக்கும், அந்தமானுக்கும் அவர்கள் சென்றுள்ளனர்.கப்பலில் பொருத்தப்பட்ட14 பாய்மரங்களும், அதனை இயக்கும் திறனும் தொழில்நுட்ப அறிவும்தான் இக்கடல் வழி வர்த்தகத்தின் அடிப்படையாக இருந்துள்ளது. இப்பாய்மரங்களை காற்றின் தன்மைக்கு ஏற்ப ஏற்றி இறக்கி நுட்பத்தோடு கையாளவேண்டும். அவ்வாறு பாய்மரங்களை ஏற்றி இறக்க வலிமைமிகுந்த கயிற்றினை கப்பலோட்டிகள் பயன்படுத்தியுள்ளனர். தூத்துக்குடியில் பனிமயமாதா கோயில் தேரோட்டம் முடிந்த பின்னும், திருச்செந்தூரின் முருகப்பெருமான் கோயில் தேரோட்டம் முடிந்த பின்னும் தேருக்கு பயன்படுத்தப்பட்ட வடத்தை ஏலம் எடுப்பதில் கப்பலோட்டிகளிடம் போட்டாபோட்டி நடந்துள்ளது. 

வடம் என்பது எண்ணற்ற கயிறுகளாலானது. எனவே எல்லா கப்பலோட்டிகளும் இரண்டு தேர்களின் கயிறுகளையும் குறிப்பிட்ட நீளத்துக்கு ஏலம் எடுத்துள்ளனர்.தங்களின் கப்பல்களில் உள்ள 14 பாய்மரங்களில் பனிமயமாதாவின் தேர்க் கயிறும், திருச்செந்தூர் முருகன் கோயில் தேர்க்கயிறும் ஒன்றாவது இருக்க வேண்டும் என்று எல்லா கப்பலோட்டிகளும் ஏலம் எடுத்து பயன்படுத்தியுள்ளனர். வீசும் கடல்காற்றிலிருந்து தாங்கள் தப்பிப்பிழைக்க கர்த்தரும் உதவ வேண்டும், கந்தனும் உதவவேண்டும் என்று தான் எல்லோரும் நினைத்துள்ளனர். “செண்பக வடிவேல் திருமுடிக்கழகு” என்ற வரி கத்தோலிக மீனவர்களின் பாடல்களில் இடம்பெற்றுள்ளதை நாம் பார்க்கிறோம். அதுதான் மக்களின் பண்பாடு. மதங்கள் என்பது வேற்றுமையை விதைக்க அல்ல; நம்பிக்கையை விதைக்கத்தான் என்பதை தங்களின் வாழ்வு மூலமாக எளிய மக்கள் உணர்த்துகின்றனர்.

குலசேகரப்பட்டினம்

அதேபோல குலசேகரப்பட்டினத்தில் சிதம்பரநாதர் கோயில் இருக்கிறது. அதற்கு நேர் எதிராக சேரமான் பெருமாள் நாயனாருக்கான தர்ஹா இருக்கிறது. அது இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடமாக இருக்கிறது. இந்துக்களின் வழிபாட்டுத்தலமான சிதம்பரநாதர் கோயிலில் இருந்து தர்ஹாவைப்பார்க்கும் வண்ணம் துவார ஏற்பாடுகள் கோயிலில் இருப்பதை பார்க்க முடியும். இந்துக்களும் முஸ்லிம்களும் வழிபாட்டுத்தலங்களை உருவாக்கிக் கொள்ளவோ, அல்லது அதனை வழிபடவோ பேதங்களை ஒரு போதும் உருவாக்கிக் கொண்டதில்லை என்பதை இவ்வழிபாட்டுத்தலங்கள் உணர்த்துகின்றன.

காமநாயக்கன்பட்டி கல்வெட்டு

வீரமாமுனிவர், ஜான் டி. பிரிட்டோ ஆகியோர் பங்குத் தந்தையாக இருந்த காமநாயக்கன்பட்டி தேவாலயத்திற்குள் எட்டையபுரம் மன்னன் தானம் கொடுத்த கல்வெட்டு இருக்கிறது. அக்கல்வெட்டில் தேவாலயத்துக்கான தானம் கொடுத்த விபரங்களை குறிப்பிட்டு இறுதியில் இக்கல்வெட்டினை சேதாரம் செய்தால் “கங்கைக் கரையில் காராம் பசுவினை கொன்ற பாவத்துக்கு உள்ளாவான்” என்று உள்ளது. கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்தில் வைதீக இந்துமதத்தின் நம்பிக்கையின் அடிப்படையிலான கல்வெட்டு இருக்கிறது.

திருமந்திர நகர்

தூத்துக்குடியின் இன்னொரு பெயர் திருமந்திரநகர். இங்குள்ள கடல் ஓசையற்று இருக்கும். அதற்கு காரணம் பார்வதிக்கு சிவன் மந்திரத்தை இங்குவைத்து தான் சொல்லித்தந்தார்; அதற்கு இடையூறு செய்யக்கூடாது என்பதால் இக்கடல் ஓசையற்று இருப்பதாக சைவமத புராணங்கள் சொல்லுகிறது. சைவமத புராணங்கள் சொல்லும் பெயரான திருமந்திர நகர் என்ற பெயரை பனிமயமாதா கோயில் ஆவணங்களிலும், அறிக்கையிலும் பல இடங்களில் நாம் பார்க்கலாம். மதமாச்சரியங்களும் வேறுபாடுகளும் இல்லாமல் வழிபாடுகளும் ஆன்மீகச்செயல்பாடுகளும் எவ்வளவு சிறப்பாக நடந்துள்ளது என்பதன் அடையாளங்கள் தான் இவை.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மதங்கள் பலவாக இருந்தாலும் எல்லைகள் பிரித்துக்கொள்ளாமல் தான் வாழ்வும் வரலாறும் இயங்கியுள்ளன. அந்த மத ஒற்றுமையை, மக்கள் ஒற்றுமையை பிரித்து குளிர்காய நினைக்கும் மதவெறியர்களுக்கு இம்மண்ணில் இடமில்லை என்பதை உணர்த்துவோம். மூன்று மதத்தினையும் பின்பற்றும் நம்பிக்கையாளர்களும், மதச்சார்பற்ற கோட்பாட்டாளர்களும் மக்கள் ஒற்றுமையைக் காக்கும் அரசியல் போராட்டத்தில் ஒன்றிணைந்துகளம் காணவேண்டிய நேரமிது”.


நன்றி - தீக்கதிர் 13.02.2018

No comments:

Post a Comment