Sunday, February 11, 2018

தேரோடு நின்றது நெருப்பு



“சத்துவாச்சாரி கோயில் தேர் எரிந்தது”

எங்கள் பகுதியாக இருந்தாலும் இந்த செய்தியை முகநூல் வழியாகவே அறிந்து கொண்டேன்.

பெங்களூர் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள “சாலை கங்கையம்மன்”  கோயிலின் தேர்தான் எரிந்து போனது.

சத்துவாச்சாரியில் ஏற்கனவே ஒரு கங்கையம்மன் கோயில் உண்டு. வருடம் ஒரு முறை நடக்கும் திருவிழாவின் போது “ கங்கையம்மன்  சிரசு ஊர்வலம்” என்று நடைபெறும்.

எங்களது தெருக்களுக்கும் சிரசு ஊர்வலம் வர வேண்டும் என்று ஒரு சமுதாயத்தினர் கேட்க, கோயிலை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சமுதாயத்தினர் மறுக்க

நாங்களே எங்களுக்கென்று ஒரு கோயில் கட்டிக் கொள்கிறோம் என அந்த சமுதாயத்தினர் உருவாக்கிக் கொண்டதுதான் “சாலை கங்கையம்மன்” கோயில். 

இரண்டு கோயில்களும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வராத கோயில்கள் என்பது ஒரு தகவல்.

தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட போது சாலை கங்கையம்மன் கூட சாலை விரிவாக்கத்திற்காக தனது இடத்தை இழந்து மாற்று இடத்துக்கு மாற வேண்டியிருந்தது இன்னொரு தகவல்.

இரண்டு சமுதாயத்தினருமே அடிப்படையில் எளிய உழைப்பாளி மக்கள்தான். ஆனாலும் அவர்களுக்குள் முரண்பாடுகள். இந்த  இரண்டு கங்கையம்மன் சிரசுகளும் சத்துவாச்சாரியில் இருக்கிற தலித் மக்கள் தெருவுக்களுக்குச் செல்லாது என்பதும் ஒரு முக்கியத் தகவல்.

கோயில்களை அறநிலையத் துறையிடமிருந்து மீட்க வேண்டும் என்ற பெயரில் ஹெ.ராசா வகையறாக்கள் கலவரத் தீயை பரவச் செய்யும் முயற்சியில் ஈடுபடும் சூழலில் சாலை கங்கையம்மன் கோயில் தேர் எரிந்தது என்ற செய்தி கவலையளித்தது.

ஆனால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் ஊர் அமைதியாகவே இருக்கிறது என்பது நிறைவளிக்கிறது.  காவிகள் உள்ளே புகுந்து குழப்பம் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.


No comments:

Post a Comment