Friday, February 28, 2020

வக்கீலாக இருக்கையிலேயே . . .

கிரிமினல் கூட்டாளிகளால் வஞ்சிக்கப்பட்ட நீதிபதி முரளிதர் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் எழுதிய நெகிழ்ச்சியூட்டும் பதிவினை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அவசியம் முழுமையாக படிக்கவும்




முளையிலேயே விளையும் விதம் காட்டிய உண்மையான மாண்புமிகு நீதிபதி எஸ்.முரளிதர்.

அநேகமாக அது 90களின் ஆரம்பம். அப்போது நான் ஸ்பிக்கில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலை கிணறு என்கிற கிராமத்தில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை பயன்படுத்திக் கொண்டு காவல்துறை தலித் மக்கள் மீது கடுமையான வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்டது.

இதன் மீது செய்யப்பட்ட எந்த முறையீடுகளையும் அப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் செவி சாய்க்க மறுத்துவிட்டது. வேறு வழியின்றி அந்த மக்கள் அந்த ஊருக்கு அருகே பரமன்குறிச்சி என்கிற கிராமத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்த தோழர் பாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்து இருக்கிறார்கள்.

அவர் இந்தப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டால்தான் நியாயம் கிடைக்கும். எனவே அவர்களை சென்று பாருங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளராக இப்போது மத்தியக்குழு உறுப்பினராக இருக்கும் தோழர் பி.சம்பத் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரை வந்து சந்தித்த பிறகு கட்சியின் மாவட்ட தலைமை முழுவதும் அந்த கிராமத்திற்கு சென்று விவரங்களை சேகரித்தனர். அந்த மக்கள் சொன்ன விபரங்கள் தோழர்களை மனம் பதைக்கச் செய்திருக்கிறது.

பின்னர் மாவட்டக்குழு செயலாளராக பணியாற்றிய தோழர் இசக்கிமுத்து, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் தேவபிரகாஷ், மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் சங்கர கோமதி, செயலாளர் தோழர் ஆர்.மல்லிகா, மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த தோழர் என்.வெங்கடேஷ், திருச்செந்தூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக மதிக்கப்பட்ட தோழர் பி.கே.பொன்னையா, ஒன்றிய செயலாளர் தோழர் பன்னீர்செல்வம், தோழர் ஜெயபாண்டியன், தோழர் கிறித்துவராஜ் உள்ளிட்ட தோழர்கள் அந்தப் பிரச்சினையில் முழுமையாகத் தலையிட்டனர்.

அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் பாப்பா உமாநாத்தும் அந்த கிராமத்திற்கு வந்திருந்தார்.


இந்தப் பிரச்சனையை தோழர் மல்லிகா பெயரில் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள். உச்சநீதிமன்றம் அப்போது அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரை சட்ட உதவிக்காக நியமித்தது. அந்த வழக்கறிஞர் மிகத் திறமையாக வாதாடினார். அதன் காரணமாக முதலில் முனிராம் என்கிற ஐஏஎஸ் அதிகாரி விசாரணைக்காக நியமிக்கப்பட்டார். அவர் முழுக்க முழுக்க காவல்துறைக்கு ஆதரவாகவும் அந்த மக்களுக்கு எதிராகவும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த வழக்கறிஞர் முனிராமின் அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்றும் இன்னொரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டுமென்றும் வாதாடினார். உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது.

அதன் பிறகு பாஸ்கரதாஸ் என்கிற ஐஏஎஸ் அதிகாரி விசாரணைக்கு நியமிக்கப்பட்டார். அவரும் முனிராம் ஐஏஎஸ் போலவே ஒரு உண்மையை மூடி மறைக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தார். இத்தனைக்கும் இந்த இரண்டு அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். அரசு அதிகாரிகளான பிறகு அவர்கள் அதிகாரத்தின் சாதியாக மாறிவிட்டார்கள். அந்த வழக்கறிஞர் அந்த அறிக்கையிலிருந்தமோசடிகளை அம்பலப்படுத்தி வேறொரு அதிகாரியை நியமிக்க வேண்டுமென வாதாடி அது வெற்றியும் பெற்றன.

அதன் பிறகு, அப்போது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த திரு ஓ.வெங்கடாச்சலம் அவர்கள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். திரு ஓ.வெங்கடாச்சலம் மிக நேர்மையாக விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்திற்கு ஒரு பரிந்துரையை அளிக்கிறார்.

அதிகாரம் கையில் இருப்பதால் காவல்துறையை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் நடத்தலாம் என்று அன்றைக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் முடிவு செய்ததை கடுமையாக விமர்சித்திருந்தார். அதோடு கூட அப்போது எஸ்பியாக இருந்த அசுதோஷ் சுக்லா நேரடியாக அவருக்கு இந்த வன்முறைகளில் தொடர்பில்லை என்றபோதும் அவர் உட்பட 83 காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்களை அவர் வைத்திருந்தார். தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இவர்கள் திருந்தும் வரை அவர்களை நியமிக்க கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 23 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். அந்த ஊருக்கு சாலை வசதி கூட இல்லை. எனவே அந்த சாலைகளை மேம்படுத்த 28 லட்ச ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். அந்த கிராமத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் புகுந்து யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்கிற நிலைமை இருந்ததை கவனத்தில் கொண்டு யாரையேனும் கைது செய்ய வேண்டுமென்றால் அந்த கிராமத்திலுள்ள போஸ்ட் மாஸ்டர் தலைமை ஆசிரியர் ஊர் தலைவர் உட்பட 5 பேர் கொண்ட குழுவின் அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அவர் செய்திருந்தார்.

அந்தப் பரிந்துரைகள் முழுவதையும் தனது திறமையான வாதத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தின் ஆணையாக அந்த வழக்கறிஞர் பெற்றுத் தந்தார்.

வழக்கு நடந்து கொண்டிருந்தபோது அந்த வழக்கறிஞர் எந்த பணமும் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே வழக்கு முடிந்த பிறகு அந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள் தங்களுக்கு கிடைத்த இழப்பீட்டில் 10 சதவீதத்தை வசூலித்து சுமார் இரண்டரை லட்ச ரூபாயை அவருக்கு அனுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கொடுத்துவிட்டார்கள். அந்த பணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு அனுப்பி இருந்தது. அந்த வழக்கறிஞர் அந்தப் பணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கடிதத்தோடு திருப்பி அனுப்பி இருந்தார். மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுத் தருவதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு அளித்ததற்காக அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்து, அந்த பணத்தை அப்படியே திருப்பி அனுப்பி இருந்தார்.


அந்த இளம் வழக்கறிஞர் தான் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து அவசர வழக்கின் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். தவறு செய்த பாஜகவினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற ஆணைகளைப் பிறப்பித்த திரு ஐஏஎஸ்.முரளிதர்.

நேர்மையான நீதிபதிகளை இன்றைக்கு சங்பரிவார் தேடித்தேடி வேட்டையாடுகிறது. தங்கள் கருத்துக்கு, தங்கள் சதிக்கு ஒத்துப்போகாதவர்களை எல்லாம் விரட்டி விரட்டி வேட்டையாடும் இந்தக் காலத்தில் தன்னுடைய நேர்மையை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறார் நீதிபதி எஸ்.முரளிதர்.

பாதிக்கப்பட்ட மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத போதும் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக வாதாடியதோடு அதற்காக எந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளாத அந்த நீதிபதிதான், தில்லி சங்பரிவாரின் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி வழங்க வேண்டும், வெறுப்புப் பேச்சின் மூலம் வன்முறைக்கு வித்திட்ட பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டு என ஆணையிட்டதற்காக இப்போது பஞ்சாப்புக்கு மாற்றப்பட்டிருக்கும் நீதிபதி எஸ்.முரளிதர்.

நீதிபதி எஸ்.முரளிதர் அவர்களின் நேர்மைக்கும் ஏழை எளிய மக்களின் பால் அவர் கொண்டிருந்த பேரன்பிற்கும் நமது பாராட்டுக்கள். அவருக்கு ராயல் சல்யூட்.

No comments:

Post a Comment