Thursday, February 6, 2020

அவர் ஒலித்தது அநீதியின் குரல்


தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் இன்னொரு அற்புதமான நாடாளுமன்ற உரை 

அநீதியின் குரல்!
குடியரசுத்தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆற்றிய உரை;

குடியரசுத் தலைவர் அவர்களுடைய உரையில் " குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் தேசத்தந்தை காந்தியினுடைய கனவை நாங்கள் நினைவாக்கி இருக்கிறோம் " என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும். உண்மையில் குடியுரிமைச் சட்டத்தைப் போல ஒரு கொடுமையான சட்டத்தை அன்றைய தென்னாப்பிரிக்காவினுடைய காலனிய அரசு கொண்டு வந்தது. அதற்குப் பெயர் “ஆசியவாசிகள் குடியேற்றச் சட்டம்” . ஆசியாவிலே இருந்து குடியேறிய மக்களின் குடியுரிமையை பறிக்கிற மிகக் கொடுமையான அந்தச் சட்டத்திற்கு எதிராகத் தான் அண்ணல் காந்தி முதன்முதலில் போராட்டக் களத்திலே குதித்தார்; சிறைக்குச் சென்றார். எனவே இந்தக் குடியுரிமைச் சட்டத்தினை கொண்டு வந்ததன் மூலம் காந்தியின் கனவை நீங்கள் நிறைவேற்றவில்லை , மாறாக இந்தியாவில் வெறுப்பை விதைக்கிற கோட்சேவின் கனவைத் தான் நீங்கள் நிறைவேற்றி இருக்கிறீர்கள்.'
அன்று காலனியவாதிகளுக்கு எதிராக மக்கள் போராடினார்கள் . இன்றைக்கு காலனியவாதிகளுக்கு துணைநின்ற உங்களை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள் . மக்கள் தான் காந்தியின் கனவை நினைவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் இந்த அவைக்கு குறிப்பிடுகின்றேன்.

அதேபோல "இந்த மக்களவை மகத்தான மாண்புகளோடும் புதிய சட்டங்களை இயற்றுகிறது என்றும், ஜனநாயகத்தில் இந்த மக்களவை ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது" என்றும் குடியரசுத் தலைவர் அவர்கள் தனது உரையிலே குறிப்பிட்டார். மிகவும் வேதனையானது, எந்த மாண்பு இந்த மக்களவையிலே கடைபிடிக்கப்பட்டது ?

முதல் கூட்டத் தொடரில் நிலைக்குழுக்களோ, ஆலோசனைக் குழுக்களோ அமைப்பதற்கு முன்பே ஒரு கூட்டத் தொடரையே நீங்கள் நடத்தி முடித்தீர்கள் . சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட சட்டங்களை இயற்றினீர்கள் . 

இரண்டாவதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற எந்த ஒரு மசோதாவின் நகலும் முறைப்படி முன்பே உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உறுப்பினர்களின் கைகளில் மசோதாக்கள் கொடுக்கப்படும் முன்பே மசோதாக்களை தாக்கல் செய்கிறீர்கள் . இது தான் ஜனநாயக மரபா? இதுவரை இயற்றப்பட சட்டங்களில் எதிர்கட்சிகளின் எந்த ஆலோசனையையாவது நீங்கள் செவிமடுத்திருக்கிறீர்களா? 

எதிர்கட்சி மட்டுமல்ல இன்றைக்கு சமூகத்திலே இருக்கிற பல ஊடகவியலாளர்கள் , அறிஞர்களுடைய எந்தக் கருத்தாவது இந்த அவையில் ஆளுங்கட்சியால் செவிமடுக்கப்பட்டிருக்கிறதா? கண்மூடித்தனமான மெஜாரிட்டியால் இந்த நாட்டைக் கூறுபோடுகிற சட்டங்களைத் தான் நீங்கள் இயற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் இங்கே கவனப்படுத்துகிறேன் .

குடியரசுத் தலைவர் அவர்ளே நாட்டுக்காக , மக்களுக்காக போராடுபவர்களை வன்முறையாளர்கள் என உங்கள் உரையில் வர்ணிக்கிறீர்கள் . உண்மையில் வன்முறையாளர்கள் யார் ? கொடிய வன்முறைக்கான வித்தைத் தூவியவர்கள் எல்லாம் நீங்கள் இந்த உரையை நிகழ்த்திய போது உங்கள் கண்களுக்கு நேரெதிரே தான் உட்கார்ந்திருந்தார்கள். போராடுபவர்களை சுட்டுத் தள்ளுவோம் என்று சொன்ன மத்திய இணையமைச்சர் , நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது உங்களுக்கு நேர் எதிரேத் தான் உட்கார்ந்திருந்தார். 

போராடுகிற மக்களை இந்த நாட்டை விட்டே அப்புறப்படுத்துங்கள் என்று சொன்ன உறுப்பினர்கள் உங்களுக்கு எதிரேத்தான் உட்கார்ந்திருந்தார்கள். போராடுபவர்களை பலி தீர்ப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் டில்லியிலே இருந்து மிக அருகிலே தான் இருக்கிறார். உண்மையில் இவர்கள் தான் வன்முறையாளர்கள். ஆனால் இவர்களை உங்கள் ஆட்சியினுடைய அலங்காரங்களாக , அடையாளங்களாக நீங்கள் முன் வைக்கிறீர்கள் . 

ஆனால் அதற்கு மாற்றாக கொடுமையான தாக்குதலுக்கு உள்ளான பொழுதும் மண்டை உடைக்கப்பட்டு , கை முறிக்கப்பட்ட பிறகும் உங்களின் வன்முறையை எங்களின் கருத்துகளின் மூலம் எதிர்கொள்வோம் என்று சொன்ன "ஆய்ஷே கோஷ் " தான் உண்மையில் இந்த நாட்டின் ஜனநாயகத்தின் அடையாளம் . தோட்டாக்களையும் , துப்பாக்கிகளையும் மலர்கொத்துகளைக் கொண்டு எதிர்கொண்டு வந்திருக்கிற மாணவர் சங்கத்தினுடைய போராளிகள் தான் இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தின் அடையாளம் . இருநூறுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இன்று போராட்டத்தை முன்னடத்திக் கொண்டிருக்கிற இந்தியாவின் புதிய நம்பிக்கையான மாணவர்கள் இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தின் அடையாளம் என்பதை இன்றைக்கு நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன் .

மேதகு குடியரசுத் தலைவர் அவர்களே உங்களது உரையில் படிந்திருந்தது நீதியின் குரல் அல்ல ; அநீதியின் குரல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

1 comment:

  1. Pride of Tamilnadu.Thanks to Madurai people.placing beautiful arguments to defend democracy.red salute to com.su.ve.

    ReplyDelete