Saturday, February 22, 2020

முற்றுகைக்கு அணிந்துரை




“முற்றுகை”  நூலிற்கு எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய அணிந்துரையை பெருமிதத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி தோழரே . . .

*அணிந்துரை*



"இன்று பிற்போக்கான கருத்தியலால் பெரும் தாக்குதலுக்கு அதிகமாக  ஆளாக்கப்படுவது வரலாறுதான்

*கே.என்.பணிக்கர்,* வரலாற்றியலாளர்

இன்று உள்ளூர் வரலாறுகளில் துவங்கி தேசத்தின் வரலாறு வரை இந்த அபாயம் நீள்கிறது. கருத்து மோதல்கள், போராட்டங்கள் எல்லாம் நவீன இந்திய நிர்மாணத்தின் பிரிக்க இயலாத பகுதி. அவை குறித்த பதிவுகள், பகிர்வுகள், பார்வைகள் தலைமுறையாய் தலைமுறையாய் எடுத்துச் செல்லப்பட வேண்டியுள்ளது. அத்தகைய முயற்சி ஒன்றை தோழர் எஸ்.ராமன் (பொதுச் செயலாளர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்) செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆயிரத்திற்கும் மேலான கருத்தாழமிக்க பதிவுகளை செய்திருக்கிற அவர் மிகுந்த அக்கறையோடு "முற்றுகை" புனைவு இலக்கியம் மூலம் ஓர் பெருமைமிகு வரலாற்றை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்

*"இலாக்கோ விஜில்"* என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பெருமை மிக்க வரலாற்றில் ஓர் முக்கியமான நிகழ்வு. 1960 களில் இயந்திர மயத்திற்கு எதிராக மாதக் கணக்கில் நீடித்த போராட்டம். கம்ப்யூட்டரை நிறுவ விடாமல் இலாக்கோ கட்டிடத்தை சுற்றி அமர்ந்து இரவும் பகலும் கண்காணித்து தடுத்து நிறுத்திய காவியம். அன்றைய இயந்திர மயத்திற்கும், இன்றைய இயந்திர மயத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. வளர்ச்சியின் தேவை உருவாக்கிய இயந்திர மயம் அல்ல அது. அது மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தால் பல ஆண்டுகளுக்கு எல்..சியில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்காது. பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பிந்தைய பல ஆண்டுகளில் பணி நியமனம் பெற்று எல்..சிக்கு வந்திருக்க இயலாது. எல்..சியே வெளியிட்டுள்ள *"Tryst with trust"* வரலாற்று நூலில் இந்த போராட்டம்  பற்றி எழுதப்பட்டுள்ளது. அதன் வெற்றி பல நடுத்தர வர்க்க வேலை வாய்ப்பு உள்ள நிறுவனங்களில் இயந்திர மயத்தை பல ஆண்டுகளுக்கு தள்ளிப் போட்டுவிட்டது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எதிர்க் கருத்து கொண்டிருப்போர் கூட இதன் தாக்கத்தை இப்படி தங்கள் கோணத்தில் இருந்து "அங்கீகரிக்க" வேண்டியிருந்தது இதன் வெற்றிக்கு சாட்சியம்

இப் போராட்டம், ஓர் தொழிற்சங்கம் எப்படி சமூக பிரச்சினைகளோடு தொழிலரங்க நிகழ்வுகளை இணைக்க வேண்டும்; அதற்கான கருத்துருவாக்கம் விரிந்த தளத்தில் எவ்வாறு நடந்தேற வேண்டும்; அயர்வில்லாமல் நீடித்த களங்களை எப்படி கட்டமைப்பது; அரசியல் முரண்பாடுகளை எவ்வாறு கையாள்வது; இதர நேச சக்திகளை எப்படி இணைப்பது... என்கிற முன்னுதாரணத்தை இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கு தந்த வரலாற்று நிகழ்வாகும்

இனி எஸ்.ராமனின் படைப்பிற்கு வருவோம். இந்த நூலை உருவாக்க இராமன் கொல்கத்தாவிற்கு நேரில் சென்று தரவுகளைத் திரட்டியுள்ளார். இன்னும் இப் போராட்டத்திற்கு வாழும் சாட்சியமாக உள்ள 97 வயதான முன்னோடித் தலைவர் சந்திர சேகர போஸ் அவர்களோடு கொல்கத்தாவில் சந்திப்பை நிகழ்த்தி மணிக் கணக்கில் உரையாடியுள்ளார். "இலாக்கோ விஜில்" நிகழ்ந்த இடம் எப்படி பளபளக்கிற கட்டிடமாக எழுந்துள்ளது என்பதை முகப்பு அட்டை நமக்கு காண்பிக்கிறது. 1960- பிரம்மாண்ட களத்தின் காட்சியும் முகப்பு அட்டையில் உள்ளது. கட்டிடம் மாறியிருக்கலாம், ஆனால் அன்று கட்டப்பட்ட இயக்கம், ஒற்றுமை இன்றும் வலுவோடு உள்ளது. இதை நயத்தோடு, ரசிப்போடு இப் புனைவு நம்மிடம் பேசுகிறது. இந்த புனைவு முழுக்க உண்மைகள், ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்திருப்பதால் நம்பகத்தன்மை சற்றும் சிதையாமல் எங்கும் மனதிற்குள் நெருடாமல் நம்மை அழைத்து செல்கிறது

ஓர் "பிளாஷ் பேக்" ஆகத் துவங்கும் இக் கதை நிகழ் கால கேள்விகளை வரலாற்றோடு இணைப்பது சிறப்பு. 1960 களில் இயந்திரமயத்தை எதிர்த்து வெற்றி கண்ட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் 1990 களில் நவீன தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொண்டது ஏன்? என்ற வினாவே அது. அன்று களம் கண்ட அசோக் பானர்ஜி என்கிற பாத்திரம் இது குறித்து போஸ் பாபுவிடம் எழுப்புவதாக துவங்குகிறது. அன்று விரிவாக்கத்தின் பின்புலத்தில் அல்லாது கொணரப்பட்ட இயந்திரமயத்திற்கும் 1990 களில் வளர்ச்சியும், போட்டியும் உருவாக்கிய தேவை அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நவீன தொழில் நுட்பத்திற்குமான வித்தியாசத்தை இப் படைப்பு அருமையாக விளக்குகிறது.

1994 ல் இன்சூரன்ஸ் துறையில் பன்னாட்டு மூலதனம், தனியார்களை அனுமதிக்க வேண்டுமென்று வழங்கப்பட்ட மல்ஹோத்ரா குழு பரிந்துரைகள் ஐந்தாண்டுகள் தள்ளிப் போடப்பட்டதால் அந்த கால அவகாசம் எல்..சி தன்னை தொழில் நுடப ரீதியாக தயார் செய்ய பயன்படுத்திக் கொண்டது என முன்னாள் எல்..சி சேர்மன் ஒருவரே 2006 எல்..சி பொன்விழா மலரில் எழுதியதை இங்கு இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். (ஐந்தாண்டுகள் தள்ளிப்போனதற்கான .... வின் போராட்டம் தனி அத்தியாயமாக வேறு வாய்ப்பில் பகிரப்பட வேண்டும்). போராட்ட வளர்ச்சி- நவீன தொழில் நுட்பம்- உபரி- மேலும் வளர்ச்சி- உபரியை உள் வாங்குதல் என்ற புதிய அனுபவத்தை இதன் மூலம் எல்..சி 1990 களுக்கு பிந்திய 20 ஆண்டுகளில் காண்பித்தது. இருப்பினும் முதலாளித்துவ சமூகம் பிக் டேட்டா, செயற்கை அறிவூட்டல் போன்று அடுத்தடுத்து நகரும் வேளையில்  தொழிற்சங்கமும் தனது எதிர் வினையை காலத்திற்கேற்ப வழி வகுக்க வேண்டி இருக்கும். " அதீத இயந்திர மயம் வேலைகளை பறிக்கும்; தேவைக்கு குறைவான இயந்திர மயம் தொழிலையே பாதிக்கும்" என்ற உலகமயப் போட்டிச் சூழலுக்கு ஏற்ப அணுகுமுறைகள் அமைய வேண்டியுள்ளன.

1960 களில் இப் பிரச்சினையை முதன் முதலில் சங்கத்திற்குள் விவாதத்திற்கு கொண்டு வந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு. திண்டுக்கல் ஆர். நாராயணன் தகவல்களோடு இது குறித்த தரவுகளை திரட்டி . ... வின் அவையில் தோழர் ஆர்.கோவிந்தராஜன் முன் வைத்தார் என்பதே அது

எஸ்.இராமனின் இப் படைப்பு இலாக்கோ விஜில் இயக்கத்தை உணர்ச்சிபூர்வமாக மட்டும் நம்மோடு பேசவில்லை. அரசியல் பின் புலத்தோடு ஆழமாக உரையாடுகிறது. எல்..சி தேசிய மயமான வரலாற்றையும் அது தொட்டுச் செல்கிறது

தொழிற்சங்கத் தலைமையின் காதுகள் ஊழியர்களின் குரல்களை கேட்பதாகவும், அவர்களின் உரையாடல்கள் ஊழியர் கேள்விகளுக்கு விடை அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதை 1965 டிசம்பர் 7,8 டில்லி கருத்தரங்கத்திற்கான ரயில் பயணம் குறித்த சித்தரிப்பின் மூலம் அழகாக எடுத்துரைத்துள்ளார்

இயந்திரமயம் உருவாக்குகிற அபாயங்களை வேலையின்மை என்கிற சமூகப் பிரச்சினையோடு இணைத்ததால் விரிந்த சமூக ஆதரவை இந்த போராட்டம் பெற முடிந்தது.

டெல்லி கருத்தரங்கில் 1965 ல் பங்கேற்ற மூன்று தலைவர்கள் (ஜோதி பாசு, பேரறிஞர் அண்ணா, எச்.என். பகுகுணா ஆகியோர்) பிற் காலத்தில் முதல்வர்களாக அடுத்த சில ஆண்டுகளிலேயே அமர்ந்தார்கள் என்பது இவ் வியக்கம் எவ்வளவு உயர் கவனத்தை அரசியல் அரங்கில் பெற்றது என்பதற்கு சான்று. காங்கிரசின் அன்றைய "இளம் துருக்கியர்", பிற் காலத்தில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்த சந்திரசேகர் அவர்கள் வங்க தேர்தல் பிரச்சாரத்தில் இயந்திர மயத்தை ஆதரிக்க இயலாமல் பின் வாங்கியதும் இன்னொரு சாட்சியம். சுவையாக இத்தகைய தகவல்கள் இலக்கிய நயம் சிதையாமல் இதில் விரவிக் காட்சியளிக்கின்றன. ஜோதிபாசு அவர்கள் விஜில் இயக்கத்திலேயே கலந்து கொண்டதும் இபக்கத்தின் வீரியம், வீச்சுக்கு உதாரணம்

மாதக் கணக்கில் நடைபெற்ற விஜில் போராட்ட களம் எப்படி பயிலரங்குகளாக மாறின என்பதை அசோக், நாகேன் சௌத்திரி உரையாடல்கள் விவரிக்கின்றன. துர்க்கா பூஜைதானே வங்கத்தின் தீபாவளி. மாதக் கணக்கில் தொடர்ந்த இலாக்கோ விஜில் போராட்டத்திற்கு இடையில் துர்க்கா பூஜை வருகிறது. களத்திலே அது கொண்டாடப்படுவது உணர்ச்சிபூர்வமானது. ராமனின் விவரிப்பும் அருமை

கொல்கத்தா நகர தொழிற்சங்கங்களின் பிணைப்பு இந்த போராட்டத்திற்கு பெரும் பலமாக இருந்தது. துறைமுகத்தில் இருந்தும், தொலைத் தொடர்பு துறையில் இருந்தும் கிடைத்த தகவல்கள் எதிர் வியூகத்தை அறியவும், உடைக்கவும் பயன்பட்டன. எல்லாத் தரப்பு தொழிலாளர்களும்- அமைப்பு சார் துறைகள் துவங்கி துப்புரவு தொழிலாளர் உள்ளிட்டடர்ன் போட்டு இலாக்கோ விஜிலில் அமர்ந்ததும் பரவசப்படுத்துகிற நிகழ்வு

கொல்கத்தாவில் நடைபெற்ற முத்தரப்பு மாநாடு பற்றிய விவரிப்புகள் பிரமிப்பை உண்டாக்குகின்றன. அரசு தரப்பில் தொழிலாளர் அமைச்சர், .... தரப்பில் சரோஜ் சவுத்ரி, சுனில் மைத்ரா ஆகியோர் பங்கேற்ற கூட்டம். அதில் சுவாரசியமான தகவல் உண்டு. பெரும் தொழிலதிபர்  ஜே.ஆர்.டி. டாட்டா அந்த முத்தரப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தார். அது குறித்த உரையாடல்கள் அரசியல் ஆழ்த்தோடு விவரிக்கப்பட்டுள்ளன. எல்..சி சேர்மனின் அதிகார தோரணை, தொழிற்சங்கத் தலைவர்களின் உறுதியான பதில்கள் வரலாறு குறித்த பெருமிதம் தருபவை. சந்திரசேகர போஸ் அவர்களின் பகிர்வுகளின் தாக்கம் அதில் வெளிப்படுகிறது

ஜோதிபாசு துணை முதல்வராக அமர்ந்தவுடன் போராட்டம் முடிவுக்கு வருகிறது. இடதுசாரி அரசு, தொழிற்சங்கப் போராட்டத்திற்கு எதிராக காவல் துறையைப் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலையை எடுத்த பின் புலத்தில் எல்..சி நிர்வாகத்திற்கும் வேறு வழியில்லை.

இவ் வரலாறை கற்பனை வளத்தோடு மெய்த் தன்மைக்கு பங்கம் வராமல் சொல்லியிருப்பது இராமனின் வெற்றி. அவரின் எழுத்து சுகமான வாசிப்பை தருகிறது. 22 அத்தியாயங்கள் 80 பக்கங்கள் என்று விரிகிற நூல் அலுப்பு தட்டாமல் நம்மோடு கைகோர்த்து பயணிக்கிறது

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் விசாகப்பட்டினம் மாநாட்டையொட்டியும், எல்..சியில் 8000 புதிய ஊழியர்கள் உள்ளே வரும் வேளையிலும் இது அச்சாகி வருவது பொருத்தமான நேரம்

வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் முன் முயற்சிக்கும், தமிழக கோட்டங்களின் ஒத்துழைப்பிற்கும் பாராட்டுக்கள்

தோழர் எஸ்.ராமனின் அரும் பணிக்கு வாழ்த்துக்கள்.

அணிந்துரை எழுதுகிற வாய்ப்பிற்கு மனம் நிறைந்த நன்றி.

*.சுவாமிநாதன்*

துணைத் தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு
சென்னை.

No comments:

Post a Comment