Monday, February 3, 2020

எல்லா நீதிபதிகளும் இப்படி இருந்தால்?

எங்கள் அகில இந்திய மாநாட்டை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு கோபால கௌடா துவக்கி வைத்தார். மாநாடு எந்த திசை வழியில் செல்ல வேண்டும் என்பதற்கான சரியான வழிகாட்டுதலாக அவரது உரை அமைந்திருந்தது. அது மட்டுமல்ல, எல்லா நீதிபதிகளும் இவர் போல இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தையும் அவரது உரை உருவாக்கியது. அந்த  உரையை தீக்கதிர் வெளியிட்டிருந்தது. அதனை அவசியம் படியுங்கள். 




அரசியல் சாசனத்தைக் காப்பாற்ற மக்களிடம் பேசுங்கள்.. மக்களைத் திரட்டுங்கள்.


சமூக மாற்றத்திற்கான முன்னணிப் படையாக திகழ வேண்டியவர்கள் தொழிலாளர்கள். இன்று அரசியல் சாசனம் தாக்குதலுக்கு ஆளாகிற நேரம். நீங்கள் பேச வேண்டும். அரசியல்சாசனத்தைக் காப்பாற்ற மக்களைத் திரட்டவேண்டும். உங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கௌடா அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துவக்கவுரையில் வேண்டுகோள் விடுத்தார்.  அவர் தனது உரையில் கூறியதாவது:
அனைவரும் சமம்


இது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடு. நான் 44 ஆண்டுகள் சட்ட மாணவனாக இருந்து வருபவன். வழக்கறி ஞராக, நீதிபதியாக பணியாற்றியுள்ளேன். இந்தியா விடுதலை பெற்று 73 ஆண்டுகள் கடந்துவிட்டன. குடியரசாக அறிவிக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இந்திய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தியுள்ள சமத்துவம் என்ற இலக்கை எட்டியுள்ளோமா? அரசியல் சாசனப் பிரிவுகள் 14, 15 என்ன சொல்கின்றன? குடிமக்கள் அனைவரும் சமம். மதம், சாதி, பாலினம், இனம் என்கிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சமத்துவம் அவர்கள் வாழ்க்கையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அப்பிரிவுகளின் சாரம். ஆனால் 1950 களில் இருந்து இன்று வரை சமூகத்தின் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு அத்தகைய சமத்துவம் கைவசமாகியுள்ளதா? பெண்களுக்கு சமநீதி கிட்டியுள்ளதா? இது இன்றும் கேள்வியாகவே உள்ளது. ஆனால் உங்கள் மாநாட்டை  பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அவையில் சரி பாதியாக பெண்கள் உள்ளனர். இது போன்ற நிலைமை தேசத்தில் உருவாக வேண்டும். 
இதயத்தின் நாளங்கள்


இந்திய அரசியல் சாசனம் இறையாண்மை,சோசலிசம்,மதச் சார்பின்மை, ஜன நாயகம், குடியரசு ஆகிய தூண்கள் மீது எழுப்பப்பட்டிருப்பதாகும். இந்த ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான உள்ளடக்கத்தை கொண்டவை ஆகும். 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் இக்கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர்கள். பிரதமரும், உள் துறை அமைச்சரும் இதற்கு கட்டுப்பட்டவர்கள். இத்தகைய கோட்பாடுகளை யார் மீறினாலும் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். 1973ல் உச்சநீதிமன்றம் கேரள நில சீர்திருத்தங்கள் குறித்த வழக்கில் 13 நீதிபதிகள் அமர்வு “அரசியல் சாசனத்தின் முகப்புரை அதன் அடிப்படை சாரம் ஆகும்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. அது இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை, எல்லா நீதிமன்றங்களை, நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தக் கூடியது. ஒரு பிரிவினரை பிரிக்கக் கூடிய, புறக்கணிக்க கூடிய சட்டம் இருக்க முடியாது. மதத்தின் அடிப்படையில் எந்த பிரிவினரையும் ஒதுக்கி வைக்க முடியாது.1950 களில் அரசியல் சாசன நிர்ணய சபையிலேயே இது குறித்த விவாதம் நடந்தது. ஒரு அமைச்சரே, குடியுரிமைக்கு மதம் அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அங்கு முன் வைத்தார். ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு அதை நிராகரித்தார். இது வரலாறு. நாம் யாருக்கும் குடியுரிமை தருவதை எதிர்க்கவில்லை. ஒரு பிரிவினருக்கு காட்டப்படும் பாரபட்சத்தை மட்டுமே எதிர்க்கிறோம்.
இது எல்லோரின் போராட்டம்


குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டும் போராட வேண்டிய தில்லை. எல்லோரும் கைகோர்த்து போராட வேண்டிய பிரச்சனை. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியமூன்றுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. அவர்கள் காட்டச் சொல்கிற 15 ஆவணங்களில் என்னிடமே எல்லாம் இல்லை. இதுதான் அசாமின் அனுபவம். அங்கு 19 லட்சம் பேர் சட்ட விரோத ஊடுருவல்காரர்கள் என கண்டறியப்பட்டனர். அவர்களில் 12 லட்சம் பேர் இந்துக்கள்தான். ஆகவே இச் சட்டம் இந்துக்களையும் குறிப்பாக தலித்துகள், ஆதிவாசிகளை அதிகமாக பாதிக்கக்கூடியது ஆகும். ஆகவே நாடாளுமன்றம் அரசியல் சாசனம் விதித்துள்ள வரையறைகளை மீறி யுள்ளது. 
‘நான் அதன் அங்கமாக இல்லை’


அரசியல் சட்டப்பிரிவு 370 என்பது இந்திய ஒன்றியத்துடன் காஷ்மீர் இணைக்கப்படுவதற்கான சாசனத்தில் உறுதி அளிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அது பறிக்கப்பட்டுள் ளது. கூட்டாட்சி தத்துவம் தாக்கப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை களில் சிகிச்சை பெற இயலவில்லை. அரசியல் சட்டப்பிரிவு 32ன் அடிப்படையில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டும். ஆனால் ஆட்கொணர்வு மனு போட்டால் - சீத்தாராம் யெச்சூரி உட்பட பலர் நீதி மன்றத்தை அணுகினால், உச்சநீதிமன்றம், நீங்கள் போய் பார்த்து வாருங்கள் என்கிறது. சட்டப்படி தலையிட மறுக்கிறது. உச்சநீதிமன்றம் தனது கடமையை செய்யவில்லை. இன்றைய உச்ச நீதி மன்றத்தின் அங்கமாக நான் இல்லை என மகிழ்ச்சி அடைகிறேன். 
தனியார்மயமும் அரசியல் சாசன விரோதம்


42 வது அரசியல் சாசன திருத்தம் சோசலிசத்தை அடிப்படை கோட்பாடாக முகப்புரையில் இணைத்தது. பொதுத்துறைகளை தனியார் மயமாக்க அரசு முயற்சிப்பது இந்த கோட்பாட்டிற்கு மாறானது. முதலாளித்துவ சமூகம் முன்வைக்கிற ‘சோசலிசம்’ பாட்டாளி வர்க்க ஆட்சி அல்ல என்பதை நான் அறிவேன். ஆகவே எனக்கு பிரமைகள் ஏதுமில்லை. ஆனால் சோசலிசத்தை அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடாக முன் வைக்கிற ஒரு தேசத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது அக் கோட்பாட்டிற்கே விரோதமானது. எல்.ஐ.சி 1956ல் உருவான போது 156 அலுவலகங்கள் இருந்தன. இன்று நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கான அலுவல கங்களாக  விரிவடைந்துள்ளன. மக்களின் சேமிப்புகள் தேச நிர்மாணத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பங்கு விற்பனை யின் நோக்கம் என்ன? சோசலிசத்தை அரசியல் சாசன அடிப்படைக் கோட்பாடாக பிரகடனப்படுத்தி விட்டு தனியார்களுக்கு மக்கள் சொத்துக்களை தாரை வார்ப்பதை எப்படி ஏற்க முடியும்?

ரிசர்வ் வங்கியின் காப்புகளில் இருந்த 1.75 லட்சம் கோடிகள் இந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளன. இத் தொகை தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? 1.55 லட்சம் கோடிகள் கார்ப்பரேட்டுகளுக்கு, மோட்டார் வாகன தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஏழை எளிய மக்கள் பொருளாதார பாதையில் ஓரம் கட்டப்படும் போது அவர்கள் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு தீவிர வாதத்திற்கு இரையாகிறார்கள். 

நீங்கள் முன்னணிப் படை


ரஷ்யாவில் புரட்சியை வழி நடத்திய வி.ஐ.லெனின் “ தொழிலாளர் வர்க்கமே தேச மக்களின் முன்னணிப் படை” என்றார். இந்தியதொழிலாளர்களும் அக்கடமையை விடுதலை இயக்கத்தின் போதும், விடுதலைக்கு பின்னரும் ஆற்றிய பாரம்பரியம் கொண்டவர்கள். இன்று தொழிலாளர் சட்டங்களும் எதிர்மறை மாற்றங்களுக்கு ஆளாகின்றன. நாடாளுமன்றத்தில் இன்று 233 தொழிலதிபர்கள் எம்.பிக்களாக உள்ளனர். தொழிலாளர்களின், விவசாயிகளின் பிரதிநிதிகள் இல்லை. யார் அங்கு இருக்க வேண்டும் என்ற படிப்பினையை நாம் உணர்வதோடு மக்கள் மத்தியிலும் எடுத்துரைக்க வேண்டும்.இன்று அரசியல் சாசனம் சிதைக்கப்படு கிறது. அதற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் வீதிகளில் போராடு கிறார்கள். 60 பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் எழுச்சியோடு வீதிகளுக்கு வந்துள்ளனர். இச் சட்டம் செல்லாது என்று நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட வேண்டும். தேசம்,ஜனநாயகம், அரசியல் சாசனம் பாது காக்கப்பட வேண்டும் என்பதற்கான கருத்தை மக்களின் உணர்வாக மாற்றுவதில் நீங்கள் முன் வரிசையில் நிற்க வேண்டும். 
யார் துக்டே துக்டே?


போராட்டங்களில் ஈடுபடுபவர்களை “துண்டு துக்காணிகள்” (துக்டே துக்டே கும்பல்) என்று ஆட்சியாளர்கள் வசை பாடுகிறார்கள். நாம் அல்ல துக்டே துக்டே கும்பல். யார் அரசியல் சாசனத்தை சிதைக்க துடிக்கிறார்களோ அவர்களே “துக்டே துக்டே கும்பல்” ஆவார்கள். இம் மாநாடு வங்காள விரிகுடாவின் கரையில் நடைபெறுகிறது. நானும்உங்களை வேண்டுகிறேன். அலைக் கழிக்கும் கடலில் நீந்துங்கள். எதிர் வினை ஆற்றுங்கள். தேசத்தை காப்பாற்றுங்கள்.இவ்வாறு நீதிபதி கோபால் கௌடா வேண்டுகோள் விடுத்தார். 
4000 பேர் பேரணி


முன்னதாக விசாகப்பட்டினம் வீதிகளில் 4000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. வழியெங்கும் சி.பி.எம், சி.ஐ.டி.யு, ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர், மாணவர் சங்கம், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவன ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பொது மாநாட்டிற்கு அமானுல்லா கான் (தலைவர், ஏ.ஐ.ஐ.இ.ஏ) தலைமை தாங்கினார். நரசிங்க ராவ் (சி.ஐ.டி.யு), பிரதீப் பிஸ்வாஸ் (இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்), அனீஷ் பாபு (பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம்), ராஜ் குமார் (எல்.ஐ.சி முதல் அதிகாரிகள் சங்கம்), வினய் பாபு (தேசிய காப்பீட்டு களப்பணியாளர் கூட்டமைப்பு), அசோக் திவாரி (அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ஷனர் சங்கம்) ஆகியோர் உரையாற்றினார்கள். வி.ரமேஷ் (பொது செயலாளர், ஏ.ஐ.ஐ.இ.ஏ) நன்றி கூறினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் வேணுகோபால், குன்னி கிருஷ்ணன், எம்.கிரிஜா, பி.பி.கிருஷ்ணன், டி.செந்தில்குமார், ஜி.ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர்.விசாகப்பட்டினம் இன்சூரன்ஸ் ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தேறின.

No comments:

Post a Comment