Sunday, February 2, 2020

முதல்வர் எச்சரித்தது நடந்தது . . .







கடந்த மாதம் 23 ம் தேதி புதுவை முதல்வர் திரு வி.நாராயணசாமி அவர்களை எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் டி.செந்தில்குமார், பொருளாளர் தோழர் எஸ்.சிவசுப்ரமணியன் மற்றும் புதுவை கிளைகளின் தோழர்களோடு சந்தித்தோம்.

ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி யை அகற்றிட வேண்டும் என்று முக்கியமான ஆளுமைகள் அளித்த கடிதங்களை அவரிடம் சேர்த்து இப்பிரச்சினை குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலில் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டதுதான் அந்த சந்திப்பின் நோக்கம்.

எங்கள் கடிதத்தினை பெற்றுக் கொண்டு ஆவன செய்வதாக உறுதியளித்த அவர் எல்.ஐ.சி யின் செயல்பாடுகள், நிதி நிலைமை பற்றி எல்லாம் விவாதித்தார்.

பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நடந்த அந்த சந்திப்பின் இறுதியில் அவர் சொன்னது முக்கியமானது.

"உங்கள் செயல்பாட்டையும் வலிமையையும் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி நிறுவனத்தின் சொத்து மதிப்பு முப்பத்தி இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்பதை முன்னிறுத்துகிறீர்கள்.  அதை அரசிடம் சொல்லாதீர்கள். இவ்வளவு பணம் உங்களிடம் இருப்பது தெரிந்தால் மோடி உங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து அதனை பறித்துக் கொண்டு சென்று விடுவார். ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் பணம் அத்தனையையும்  சுரண்டி விட்டார்கள்" 

அவர் எச்சரித்ததுதான் இன்று பட்ஜெட் அறிவிப்பாக வந்துள்ளது.

எல்.ஐ.சி யின் நிதியை மத்தியரசு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அதனை பெரும் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயல்கிறது. 

ஆனால் அதனை இன்சூரன்ஸ் குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். எல்.ஐ.சி நிறுவனத்தின் முதல் நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இணைந்து நடத்துகிற முதல் இயக்கமாக பிப்ரவரி நான்கு வெளி நடப்பு வேலை நிறுத்தம் அமையவுள்ளது.

நிர்மலா அம்மையாரின் அறிவிப்பு கல்லறைக்கு செல்கிற வரை இப்போராட்டம் தொடரும்

No comments:

Post a Comment